Daily Archives: ஜனவரி 27, 2006

பிஸினஸ் மாடல்கள்

எனக்கு ஐடியா கொடுக்கத்தான் தெரியும். செயல்படுத்த அறியேன். தோன்றியதில் சில

1. ஃபீட் லவுன்ஜ் போன்ற தளங்கள் தமிழ்மணம்/தேன்கூடு போன்ற சேவைகளுக்கு மாதந்தோறும் ஐந்து அமெரிக்க வெள்ளிகளை சந்தாவாகக் கட்ட சொல்கிறார்கள். படிப்பதற்கு காசு கேட்டால் தமிழ் வாசகர்கள் (விகடன் போன்ற பெத்த பெயராக இல்லாவிட்டால்) கொடுக்கமாட்டார்கள்.

படிக்க வைப்பதற்கு பணம் கேட்கலாம். ஒரு மாதத்திற்கு உங்களுடைய வலைப்பதிவை தமிழ் வலைவாசலில் காட்டுவதற்கு ஐந்து டாலர் (அல்லது 250 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கலாம். வருட சந்தா என்றால் தள்ளுபடியாக ஐம்பது டாலர் கேட்கலாம்.

2. பின்னூட்டங்களில் வரும் அல்லாத வார்த்தைகளை நீக்குவதற்கான நிரலியை விற்கலாம். ஆங்கிலத்தில் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான செயலிகள் இருக்கிறது. அதே போல் தமிழிலும் கொண்டு வரலாம். வோர்ட்பிரெஸ் போன்றவற்றில் டேஞ்சரான சொற்களை நாமே தட்டச்சி இவை வந்தால் தடுத்துவிடவும் என்று சொன்னால், அவை வரும் மறுமொழிகள் நிராகரிக்கப்படும்.

நிரலியை நிறுவியவுடன் ஆட்டோமேடிக்காக புகழ்பெற்ற வசைப்பாடுகள் பின்னூட்டங்களில் தேடப்படும். அவசியம் என்றால் நாமே அதிகப்படியான அல்லது விடுபட்ட வன்சொற்களை நிரலிக்குக் கற்றுக் கொடுக்கலாம். ப்ளாக்ஸ்பாட்டுடன் எளிதில் இணைந்து செயல்படுவது அவசியம்.

3. தமிழில் தேட வேண்டும் என்றால் ரோமனைஸ்ட் ஆங்கிலத்தில் அடித்தால் போதுமானது என்று சொல்லுமாறு தேடுபொறி அமைக்கலாம். ரா ஷுகர் போன்ற niche தேடுபொறிகளின் காலம் இது.

அந்த நிரலியே கொடுக்கப்பட்ட சொற்றொடருடன் தேவையான விகுதிகளை சேர்த்துக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ‘ஐஸ்வர்யா’ என்று தேடினால் ‘ஐஷ்வர்யா’, ‘ஐஸ்வரியா’, ‘ஐஸ்வர்யாவின்’ போன்ற உபரிகளையும் கொண்டு வர வேண்டும். உலக அழகியா அல்லது லஷ்மியின் மகளா அல்லது அஷ்டலஷ்மிகளில் ஒருவரா அல்லது ரஜினிகாந்தா என்று வினவாமல், அனைத்து முடிவுகளையும் க்ளஸ்டி போல் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.

பாமினி, டிஸ்கி, யூனிகோட், டாப்/டாம் என்று பல எழுத்துருக்களில் மாற்றிக் கொண்டு தேடி, அனைத்து முடிவுகளையும் ஒருங்கிணைத்துத் தரும். மின்-மடலாடற் குழுமங்கள், வலைப்பதிவுகள் என்று பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் advanaced options-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம்.

4. தமிழில் குறும்படங்களும் விவரணப்படங்களும் பெருமளவில் வெளிவருவதாக ‘நிழல்’ போன்ற பத்திரிகைகள் சொல்கிறது. ஆங்கிலத்துக்கு ‘இண்டி’ சர்க்யூட் இருப்பது போல் இவற்றுக்கு வலையில் பெரும் வரவேற்பு இருக்கும். மாத சந்தாவைக் கட்டினால் எத்தனை படம் வேண்டுமானால் பார்க்கலாம் என்னும் ஏற்பாட்டின் மூலம் பட ஆர்வலர்களையும் புதுப்பட முயற்சிகளையும் கைகோர்க்க வைக்கலாம்.

குறைந்த நேரங்களே ஓடும் படங்கள் என்பதினால் அகலபாட்டை, 56 கேபிபிஎஸ் போன்ற பிரச்சினைகள் பெரிதும் தலைதூக்காது. திருட்டுப் விசிடியையும் ஒரே முகவரியையே பலரும் பயன்படுத்துவதையும் தடுக்க, ஐ-ட்யூன்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்.

5. சூடாக அலசவேண்டிய, உலகளாவிய மற்றும் துறைசார்ந்த விஷயங்கள் இருந்தாலும், எழுத்தில் கொண்டுவரக் கூடியவர்களைக் காணவில்லை என்று பத்திரிகைகள் அங்கலாய்க்கும். எழுத்தாளர்கள் கிடைத்தாலும் புத்தகங்களாக முழுவீச்சோடு முடிப்பதில்லை என்று பதிப்பகங்கள் அலுத்துக் கொள்ளும்.

வலைப்பதிவுகளிலும், இணையப் பத்திரிகைகளிலும் இதுவரை வெளியிட்ட அத்தனை கட்டுரை, கதை, கவிதை என்று எல்லா மேட்டர்களையும் ஒருங்கிணைத்து டேட்டாபேஸ் உருவாக்கலாம். எவர் எதை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பதை அனுமாணித்து, பதிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பாலமாக செயல்படலாம்.

இரு பக்கத்திலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அச்சுத் தேவையையும் எழுதும் தாகத்தையும் பொருத்தி விட்டு இடைத்தரகராக விளங்கலாம்.


| |

கருத்து கார்ட்டூன்

தமிழ் திரைப்பட உலகம்:
வலைப்பதிவுகளைக் குறிக்கவில்லை!

FoxTrot by Bill Amend
நன்றி: FoxTrot by Bill Amend


கிளம்பிட்டாங்கய்யா…கிளம்பிட்டாங்கய்யா…
தமிழ்மணத்தைக் குறிக்கவில்லை!

Heart of the City
நன்றி: Heart of the City


| |

தமிழ்மணம்

கருத்து ஃபிலிம்: இன்றைக்கு காமிக்ஸ் பக்கங்களைப் புரட்டும்போது ‘மதர் கூஸ் & க்ரிம்மை‘ப் பார்த்தவுடன் தற்போதைய தமிழ்மண சூழல்தான் நினைவுக்கு வந்தது.

Mother Goose & Grimm

ஓ மோஸஸ்…. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ!

படம் கொடுத்தவர்: Mother Goose & Grimm Comics Page


| |

தமிழகத்தில் கம்யூனிசம் மலருமா?

தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதால் முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் என் பார்வையில் அலசலாம் என்று இருக்கிறேன். முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இப்போது தி.மு.க கூட்டணியில் உள்ளன.எப்போதும் பி.ஜே.பிக்கு எதிர் அணியில் இருப்பது தான் அவர்கள் தற்காலத்திய கொள்கை என்பதால் அவர்கள் தி.மு.க கூட்டணியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி இடம்பெறாமல் போனால் அதே சமயம் தி.மு.க வும் கணிசமாக தொகுதிகளை இவர்களுக்கு தராமல் போனால் இவர்கள் கூட்டணி மாற்றிக்கொள்ளகூடும்.

1989 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்து கணிசமாக தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் போட்டியிட்டு வென்றது எனக்கு நினைவிருக்கிறது(சுமார் 17 என்று நினைக்கிறேன்).இதில் மார்க்ஸிஸ்ட் தான் பிக் பிரதர். இந்திய கம்யூனிஸ்ட் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக என்ன வித்தியாசம் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.

தேர்தல் களத்தை பொறுத்தவரை மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு பி.ஜே.பி எதிர்ப்பு என்பதை தவிர மற்ற எந்த கொள்கையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவ்விரு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொள்கையை பரப்புவது, கட்சியை வளர்ப்பது என்பதை பற்றியெல்லாம் இவர்கள் அக்கறை கொள்வதில்லை. நண்பர் சந்திப்பு தன்னுடைய ஒரு அலசலில் தி.மு.க அ.தி.மு.க போன்ற கட்சிகளில் இளைஞர்கள் சேருவதில்லை என்பது போல கூறினார். அவர் கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருக்கலாம்.ஆனால் இக்கால இளைஞர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தான் சேருகிறார்கள் என்றால் அது பகல் கனவுதான்.

இது தொடர்பாக அவர்கள் மேல் எனக்கு கணிசமான விமர்சனங்கள் இருக்கின்றன.மக்கள் பிரச்சனைக்காக வீதியில் இறங்கி போராடுகிறவர்கள் அவர்கள் தான்.ஆனால் தேர்தல் என்று வந்தால் ஏதோ ஒரு கூட்டணியில் சேர்ந்து (லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணி சேரக்கூட தயங்குவதில்லை இவர்கள்) ஒன்றோ இரண்டோ எம்.எல்.ஏ சீட் வாங்கினால் மட்டும் பொதுவுடைமை சமுதாயம் மலர்ந்துவிடுமா?

அவ்வளவு எளிமையானவர்கள்,கொள்கை பிடிப்பாளர்கள் தோழர்கள் என்றால் எந்த கூட்டணியிலும் சேராமல் கட்சியை வளர்க்க முயற்சி செய்யலாமே?பதவிதான்(ஒரு சீட்,இரண்டு சீட்தான்) முக்கியம் என்று இருப்பது ஏன்?

தலைவர்களும் அதே பழைய ஆட்கள்தான். எண்பது தொண்ணூறு வயதில் அவர்களாக ரிட்டயர் ஆகும்வரை அதே ஆட்கள்தான்.புதுமுகங்களும் இளைஞர்களும் இங்கெல்லாம் பதவிக்கு வருவது என்பது அரிது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் என்பது ஒரு பாஸிடிவ் விஷயம்.தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விளங்குகிறார்கள்.
(கன்னியாகுமரி,நாகப்பட்டினம்,கோயமுத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில்). நல்லக்கண்ணு போன்ற கக்கன், காமராஜர் ஆகியோருடன் ஒப்பிடக்கூடிய தலைவர்களை கொண்ட கட்சிகள் இவை.

Maxim Kushboo Stuff 

Maxim Kushboo Stuff Posted by Picasa

பிசாசு மொழி

பிசாசு (பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்)

மின்மடல் அனுப்புவது ஒரு கலை. இரண்டு வரி எழுதினவுடன், பலுக்கப் பிழைகளுக்கு கவலைப்படாமல், தங்கிலீஷில் தட்டச்சி, எலிக்குட்டியை ‘Send’ மேல் வைத்து அழுத்த வேண்டியதுதான்.

ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காத இணைய உலகத்தில், முகந்தெரியாத ஒருவரின் கவன ஈர்ப்பைக் கோருவது, வேறு விதிகளை ஆட்டத்திற்கு அழைக்கிறது.

நான் பின்னூட்ட சாதனையாளன் என்று எல்லாரும் அறிவார்கள். மன்ற மைய காலத்தில் ஆரம்பித்து வலைப்பதிவு காலம் வரை மறுமொழிந்தே இலக்கியவாதி ஆகியிருக்கிறேன்.

தன்முனைப்பை விட, எழுத்தார்வத்தை விட, இலக்கிய சேவையை விட, வேலையில்லா அலுவலை விட, இதற்கு பல சுபாவங்கள் தேவை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

1. முடிந்தவரை கடுமையான மொழியைப் பயன்படுத்தவும். அடைமொழிகளில் விளித்தல் நலம். ஆங்கிலத்தில் நான்கெழுத்து சுடுசொற்களை ஆங்காங்கே தெளிக்கவும். (மறந்தும் தமிழில் திட்டக் கூடாது).

2. வன்கருத்தை முன்வைக்கும்போது அந்த நிலைப்பாட்டை நீங்கள் கடைபிடிப்பதற்கான அவசியம் கிடையாது. தமிழ்ப் புத்தாண்டுக்கு வரப்போகும் படங்களையும் ஜெயமோகன் எழுதும் காவியங்களையும் அனைவரும் பார்க்கவும் படிக்கவுமா போகிறோம்? எனினும் விமர்சிக்கலாம்.

3. ஒரு விஷயத்தை ஒருவர் வரவேற்பது பிடிக்கவில்லையென்றால் ‘ரசிகர் மன்றக் கூட்டம்’ என்று கூப்பிடவும். பாராட்டி எழுதுபவர்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் எழுதுகிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ளுங்கள்.

4. எதிர்மறையான் விமர்சனம் என்றால், எழுதியவரை உளவியல் நோய் உள்ளவராக சொல்லுங்கள். நுணுக்கி நுணுக்கி குறை கண்டுபிடித்து பெயர் வாங்கிக் கொள்ளும் கூட்டம் என்று அழையுங்கள்.

5. ஆங்காங்கே பாராட்டுக்களும், சிற்சில இடங்களில் பிழைசுட்டுதலுமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்களின் தேவைக்கேற்ப நல்லதையோ கெட்டதையோ மறைத்துக் கொண்டு, செலக்டிவ் அம்னீஷியாவாக மறந்துவிட்டு, #3 அல்லது #4-ஐக் கொண்டு பின்னூட்டமிடுங்கள்.

6. முழு கட்டுரையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. தொடக்கத்தில் ஒரு வரி ஆட்சேபகரமாக இருந்தாலோ அல்லது மறுமொழிந்தவர்களில் உங்கள் நண்பரின் பதிலை அடியொற்றியோ உங்கள் பின்னூட்டம் அமையலாம். அரைகுறையாக அலசியவுடன் எழும் உணர்ச்சியை உடனடியாக எழுதவேண்டும். யோசித்து எழுதினால் மறந்து போகும் அபாயம் இருக்கிறது.

7. உங்களின் வாதம் எடுபடாத மாதிரி தோன்றினால் ‘எனக்கு தற்போது வேலை அதிகம்’ என்று கூறிவிடுங்கள். கண்ணில் சிக்காமல் பதில் போடாமல் தப்பித்து விடுங்கள். ரொம்பவே தர்மசங்கடமாக இருந்தால் புதுப்பெயரில் உலாவரத் தொடங்குங்கள்.

8. புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்புங்கள். மதம், மொழி, இனம், கட்சி, நாடு போன்றவை எடுபடும். திரியைக் கொளுத்திய பிறகு இருபக்கமும் அடித்துக் கொள்வதை ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும். மறந்துபோய் கூட வாதத்தில் பங்கு கொள்ளக் கூடாது.

9. எளிமைப்படுத்தலை சகித்துக் கொள்ளாதீர்கள். எடுத்துக்காட்டாக ‘வோர்ட்ப்ரெஸ்.காம் இலவசமாக செயல்படுகிறது’ என்றால் அதற்கு முன்னரே நியூக்ளியஸ் இலவசமாகக் கொடுத்தார்களே என்று நுட்பமான ஆதாரங்களுடன் தவிடு பொடியாக்குங்கள்.

வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்.

இந்தப் பதிவிற்கு உதவியவர்: Pills of the American Internet Neighborhood Society (PAINS)

பிசாசு முறைகள் வெற்றியடையாவிட்டால்: Rules for Making Oneself a Disagreeable Companion


| |