Daily Archives: ஜனவரி 23, 2006

ஜனவரி அமுதசுரபி

ஜனவரி மாத அமுதசுரபியில் எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய அந்தக்கால சென்னை நினைவலைகள், பாரதி மணியின் ‘சிரிப்புத்தான் வருகுதையா’ என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அலசல் இரண்டையும் விரும்பிப் படித்தேன்.

மேலும் குறிப்பிடத்தக்க சில பகுதிகள்:

திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
சென்னையில் வரலாறு காணாத வெள்ளம்… உங்கள் கடந்த கால நினைவு? – ஆர். கோபிநாத், ஈரோடு

எம்.ஜி.ஆர். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம் அவரைச் சூழும். 1985-ல் சென்னையில் கடும்மழை பெய்தபோது எம்.ஜி.ஆரின் ராமாபுரம் இல்லத்தை நிஜ வெள்ளம் சூழ்ந்தது. படகில் ஏறிக்குடும்பத்தாரோடு பிரதான சாலை வந்தார். அண்ணாசாலை கன்னிமாரா உணவகத்தில் அறையெடுத்து சில நாட்கள் தங்கினார்.


இந்திரா பார்த்தசாரதி இப்போது ஷேக்ஸ்பியரின் டெம்ப்பஸ்ட் நாடகத்தைத் தழுவித் தமிழில் ஒரு முழுநீள நாடகம் எழுதியுள்ளார். பெயர் சூறாவளி. பிரிட்டிஷ் கவுன்சில் ஆதரவுடன் அதை மேடையேற்ற முயன்று வருகிறார் புதுவைப் பேராசிரியர் ஆறுமுகம்.


விற்பனையில் சாதனை
வானதி பதிப்பகம்வானதி திருநாவுக்கரசு : ஒவ்வொரு நாளும் பதிப்பகம் திறந்தவுடன் வாசகர்கள் கேட்கும் நூல்களான ஸ்ரீ காஞ்சி மகாசுவாமிகள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலைச் சொல்வதா, மூதறிஞர் ராஜாஜியின் இராமாயணம், மகாபாரதத்தைச் சொல்வதா, முக்கூராரின் குறையொன்று மில்லையைச் சொல்வதா, கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தைச் சொல்வதா, சாண்டில்யனின் வரலாற்று நாவல்களைச் சொல்வதா, அமரர் கல்கியின் நூல்களைச் சொல்வதா என்று திகைப்புத்தான் மேலிட்டது. “தெம்புக்குப் படிங்க” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள நூல். தென்கச்சி சுவாமிநாதன் எழுதிய இந்நூல் வாசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

நர்மதா பதிப்பகம்டி. இராமலிங்கம் : அறுபது தமிழறிஞர்களின் வாழ்வை எளிய முறையில் விவரிக்கும் நூல். தமிழ்ப்பிரியன் எழுதிய இரு நூற்றாண்டுகளும் 50 தமிழறிஞர்களும் என்ற நூல்.

நிவேதிதா பதிப்பகம்தேவகி : தா.பாண்டியனின் “நெல்சன் மண்டேலா”, சிட்டியின் “மண்ணாங்கட்டி” நரசய்யாவின் “கடலோடி” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ரசிகமணி டி.கே.சியின் கடிதங்கள் என்ற நூல் எங்களை மிகவும் பரவசப்படுத்திய ஒன்று. ரசிகமணி, அவரது ஆத்ம நண்பரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியும், படைப்பாளியுமான பாஸ்கரத் தொண்டைமானுக்கு எழுதிய பல கடிதங்களின் தொகுப்பு அது.


நீல பத்மநாபனின் எழுத்துலகம் : முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அடுத்தடுத்து வெளிவந்த “தலை முறைகள்” “பள்ளி கொண்டபுரம்” – இரண்டு நாவல்களையும் நேரடியாகவே நூலாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகில் தமக்கென்று ஒரு தனியான இடத்தை உருவாக்கிக் கொண்டவர். நாகர்கோயிலில் பிறந்து, திருவனந்தபுரத்துக்கு இடம் பெயர்ந்த நீல பத்மநாபன். மலையாள மொழிக் கவிஞர் அய்யப்பப் பணிக்கரின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தமைக்காக 2003 ஆண்டுக்கான சாஹித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பாளர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

“தேரோடும் வீதி” என்று பெரிய அளவில் ஒரு நாவலை எழுதினார். அதற்குப் பிறகுதான் நுணுக்கமான விஷயங்களை ஆன்மீக நோக்கில் எழுதிய “கூண்டுக்குள் பக்ஷிகள்” வெயியானது. முதலில் மலையாள மொழியில் “கேரள கௌமுதி” இதழில் தொடராக வந்து நூல்வடிவம் பெற்றது. கடைசியாக எழுதி வெளிவந்த நாவல் “கூண்டுக்குள் பக்ஷிகள்”.

கணிசமான இடைவெளிக்குப் பிறகு இப்போது இவர் எழுதி முடித்திருக்கும் நாவல் “இலையுதிர் காலம்” என்பது. இதுவும் வானதி வெளியீடு.

“கூண்டுக்குள் பக்ஷிகள் நாவலை எழுதிமுடித்த பின்னர் இருக்கும் ‘நான்’ வேறு, அதை எழுதுவதற்கு முன்னால் இருந்த நான்வேறு” என்கிறார் நீலபத்மநாபன். நான்கு ஆண்டுகள் உழைப்பில் அந்த நாவல் உருவானதன் விளைவாய்த் தனக்குள் ஒரு முதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்.

“சக்தியை விரயம் பண்ணாமல் சமநிலையோடு வைத்துப் பார்ப்பதுதான் ஆன்மீகம். நாம் எதிர் வினையாற்றி என்ன ஆகப் போகிறது? நல்லதை கேட்டும் பார்த்தும் மகிழ்வோம் என்கிற திருப்தி வந்துவிட்டது”.


கண.சிற்சபேசன் : ஒரு கெட்ட வழக்கம் உண்டு. ஒருவன் வந்து “ஐயா அவர்களைத் தலைமை தாங்க நான் முன் மொழிகிறேன்” என்பான். அடுத்து மற்றொருவன் வந்து “நான் வழிமொழிகிறேன்” என்பான். இதே முறையில் ஒருவன் வந்து “நான் முன் மொழிகிறேன்” என்றான். அடுத்ததாக ஒருவன் வந்தான்.

சோமசுந்தர பாரதியார் அவனைத் தடுத்து “நிறுத்து, அடுத்து நீ என்ன சொல்லப் போறே. வழி மொழிகிறேன்னு சொல்லப்போறியா. நாங்க வர்ற வழியையே ஒழுங்கா மொழியல. ஊரெல்லாம் சுற்றிக்கொண்டு வருவதற்குள் நாங்க பட்ட பாடு எங்களுக்கில்ல தெரியும். ஒழுங்கா நாகலாபுரம்னு சொல்லாததனால நாலாபுறமும் தேடவேண்டியதாகி விட்டது” என்று ஒரு போடு போட்டார்.


நினைவலைகள்: மறக்க முடியாத அப்பா
பா.திருநாராயணன் (நா. பார்த்த சாரதியின் புதல்வர்) : தன்னுடைய கையேட்டில் அவர் தன்னைக் கவர்ந்த, பாதித்த விஷயங்களைப் பற்றிக் குறிப்பு எடுத்துக் கொள்வார். பின்னாளில் அவைகள் அவருடைய கதைகளில் பிரதிபலிக்கும். அவர் தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர். ஒரு நாள் கூட நாட்குறிப்பு எழுதத் தவறியது கிடையாது.

அகிலன் கண்ணன் (அகிலனின் புதல்வர்) : கோவி மணிசேகரன் குமுதத்தில் மயிலிறகு என்ற சரித்திர நாவலை எழுதிவந்தார். இரண்டு மூன்று இதழ்களைப் படித்து, எழுதிய ஆசிரியரையும் வெளியிட்ட குமுதம் இதழையும் ஒரு வாசகராகப் பாராட்டி கடிதம் எழுதினார். நா.பா. எழுத ஆரம்பித்தவுடனேயே அந்த எழுத்துக்களைக் கூர்ந்து படித்துப் பாராட்டினார். “எங்கே போகிறோம்” என்ற அரசியல் நாவல் தமிழக அரசியல் போக்குகளை விமர்சித்து எழுதப்பட்ட நாவல். காமராஜர், “நம்ம அகிலன்” இப்படி எழுதிவிட்டாரே என்று வருத்தப்பட்டு தந்தையையும் எனது மாமனார் கண.முத்தையா அவர்களையும் அழைத்துப் பேசினார். கலைஞர் இதே நாவலைப் பற்றிப் பேசும் பொழுது எங்களை விமர்சித்து எழுதினாலும் அகிலனின் தமிழின் நடையை ரசித்தோம் என்பது போல் குறிப்பிட்டார்.

ரவிசுவாமிநாதன் (கோமல் சுவாமிநாதனின் புதல்வர்) : பொதுவாக 20 வயதுக்குள் நமக்குள் படிந்த மனநிலை எண்ணங்கள் தான் வாழ்நாள் வரை நீடித்து வரும். இந்தக் கருத்து ஏற்றத்திற்கு முக்கியமாகப் பங்களிப்பவர்கள் பெற்றோர்கள். அவருக்கு முரண்பட்ட கருத்துகளை, அவரிடம் தாராளமாக விவாதிக்கலாம். அது அரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், சினிமா வாகட்டும் ஏன் நம் படிப்பு சம்பந்தமாகட்டும் தனக்கு முரண்பாடான கருத்துக்களைக் கேட்டறிந்து தன் கருத்தை மென்மையாக எடுத்துக் கூறி ஒரு மனோதத்துவ நிபுணர் போல நம்மையே முடிவெடுக்கச் செய்துவிடுவார்.


| |

Tower 35,990 Champagne Glasses 

Tower 35,990 Champagne Glasses Posted by Picasa

ஆங்கிலப் புத்தகங்கள்

புத்தகக் கடையில் ஆற அமர அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டே படிப்பது எனக்கு ரொம்ப விருப்பமான போக்கு. குடும்பம் இந்தியா சுற்றுலா விட்டதால், சனிக்கிழமை முழுக்க பார்டர்ஸ், பார்ன்ஸ் அண்ட் நோபிள் விஜயங்கள். நண்பர்கள் எல்லாம் குழந்தை குட்டிகளுடன் சன் டிவியும், தொலைபேசுதலும், காய்கறி வாங்குதலுமாக உலா செல்ல இருப்பதால் உடன் வர முடியாததற்கு வருந்தியதால், கடையை மூடும் இரவு வரை புத்தகக் கடையிலேயே சென்றது.

நூலகத்தில் பதிவு செய்து புத்தகம் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்பது புத்தகக்கடைக்கு செல்வதன் முதல் காரணம். புது புத்தகங்கள் என்ன வந்திருக்கிறது என்று மேய முடியும். நூலகத்தில் இருந்து வரும் புத்தகங்களை மேலோட்டமாகப் படித்து, நிஜமாகவே ‘நான் படிப்பேனா?’ என்பதை அறிந்து வைக்கவும் புரட்டல்கள் உபயோகப்படுகிறது.

என்னைக் கவர்ந்த புத்தகங்கள்:

1. நிக் ஃப்ளின் (Nick Flynn) – Another Bullshit Night in Suck City: A Memoir – உள்ளூர் நூலகத்திலோ நண்பரிடமோ கடன் வாங்கிப் படிக்க வேண்டும்

2. மெக்ஸ்வீனி’ஸ் (Dave Eggers): Created in Darkness by Troubled Americans : The Best of McSweeney’s Humor Category – அமேஸானில் வாங்க வேண்டும்

3. வில்லியம் ஜே மிட்சல் (William J. Mitchell) – Placing Words : Symbols, Space, and the City – நூலகத்தில் எப்பொழுது கிடைக்கிறதோ, அப்பொழுது அவசியம் படிக்க வேண்டும்.

அனைத்துமே லகுவாக படிக்க முடிகின்றது. இயல்பான நகைச்சுவை, தனித்துவமான பார்வை கொண்டது. கடைசியாக….

4. பெர்னார்ட் லூயிஸ் (Bernard Lewis) – What Went Wrong? : The Clash Between Islam and Modernity in the Middle East

தொலைக்காட்சியில் இவருடைய உரையாடல் சமீபத்தில் பார்த்திருந்ததால், தேடி எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன்.

 • ஆசிய நாடுகளோ, வளைகுடா நாடுகளோ மேற்கத்திய நாடுகளை வீழ்த்த முடியாது. காட்டாக தளபதி நெப்போலியனின் எகிப்து ஆக்கிரமிப்பை பிரிட்டிஷால்தான் அகற்ற முடிந்தது. உள்ளூர் ராஜாவோ, பக்கத்து ஊர் அரசர்களோ ஃப்ரென்ச்சை ஒன்றுமே செய்ய முடியவில்லை. தொடர்ந்து, ஜெர்மனிக்கும் பிரிட்டிஷுக்கும் சண்டை; அமெரிக்காவுக்கும் ருஷியாவுக்கும் போர் என்றுதான் நடந்து வந்திருக்கிறது. இன்றைய சூழலில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுக்குமே பூசல் நிகழலாம்.
 • அமெரிக்கர்களுக்கு சரித்திரத்தின் மீது அக்கறை கிடையாது; தெரியாது. ஏழாம் நூற்றாண்டில் என்ன நடந்தது, இன்று மற்ற பிரதேசங்களில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை.
 • இஸ்லாமிய நாடுகள் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் அரசமைப்பு கொண்டிருக்கிறது. அன்று அரசாங்கத்திடம் பணம் கிடையாது. மக்களிடம் இருந்து கிடைக்கும் வரியை நம்பியதால், மக்களை மதித்து பொதுநலனை கடைபிடித்தார்கள். வருவாயை இன்று எண்ணெய் வாரி வழங்குவதால், குடிமக்கள் மேல் உள்ள சார்புநிலை தவிர்க்கப்படுகிறது.
 • வளைகுடா நாடுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
  1. அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க அதிருப்தி. இதற்கு உதாரணமாக சவூதி அரேபியாவை சொல்கிறார்.

  2. அரசாங்கத்தின் அமெரிக்க எதிர்ப்பு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க ஆதரவு. இதற்கு காட்டாக ஈரானை சொல்கிறார்.

  கடைசியாக அரசும் மக்களும் அமெரிக்க ஆதரவு கொடுக்கும் நாடுகளாக துருக்கி, இஸ்ரேல் இருக்கிறது.

 • அமெரிக்காவின் குறிக்கோள் எல்லாம் எண்ணெய் மற்றும் இஸ்ரேலின் நலன் மட்டும்தான். ஜெருசலத்தையும் பெட்ரோலின் மேல் உள்ள ஊன்றுதலையும் தவிர்க்கும் வரை தீவிரவாதத்தை தொடர்ந்து (அமெரிக்காவே) வளர்த்து வருவார்கள்.

  கொசுறு: அமெரிக்காவின் தேசிய புத்தக வட்டம் இந்த வருடத்திற்கான புத்தகப் பரிந்துரைகளை அறிவித்திருக்கிறார்கள். சுயசரிதைப் பிரிவில் விக்ரம் சேத்தும் (Two Lives) ஆட்டத்தில் இருக்கிறார்.


  |

 • Ajith in and as Paramasivam 

  Ajith in and as Paramasivam Posted by Picasa