ஆளப் போவது யார்? 2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மி…


ஆளப் போவது யார்?

2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மிக முக்கியமான வருடம். தமிழக சட்டசபை தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இரண்டு காரணங்களினால் இந்த தேர்தல் மிக முக்கியமானதாகிறது.

ஒன்று ஜெயிக்கப் போகும் கட்சி / தலைவர்கள் தான் தமிழகத்தினை 2010 வரை ஆளுவார்கள். 2010 என்பது மானுட வாழ்வியலிலும், உலக அமைப்பிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாய் அமைந்துவிடும். இப்போதே நிறைய சமூக மாற்றங்கள், அறிவியல் தொழில்நுட்பம் என ஆரூடங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, தமிழகத்தினை 2010 வரை ஆளப்போவது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி தமிழகத்தினை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பது பில்லியன் டாலர் கேள்வி.21-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் நிலையென்ன? எப்படி வளர்ச்சியடைய போகிறோம்? மாறி வரும் உலக பொருளாதார சூழலையும், அரசியல் கோட்பாடுகளையும் தமிழகம் (முக்கியமாக சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை) எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? தமிழகம் இந்தியாவிலேயே முதலீட்டுக்கு சாதகமான மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. இதைப் எப்படி ஆள வரப்போகிறவர்கள் தக்கவைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

இரண்டாவதாக, தமிழகத்தின் மூத்தக் கட்சியான தி.மு.க.வின் தலைவரான கருணாநிதிக்கு வயதாகிக் கொண்டேப் போகிறது. அ.தி.மு.கவிலோ ஜெயலலிதாவிற்கு பின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் கிடையாது. திராவிட அரசியலின் கடைசி தேர்தலாக இது இருக்குமா ? இந்த இரண்டு திராவிட பாரம்பரிய கட்சிகளைத் தாண்டி, பா. ம.க, விடுதலை சிறுத்தைகள், கொஞ்சமாய் ம.தி.மு.க, விஜயகாந்தின் தே.தி.மு.க போன்றவைகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க வும் கம்யூனிஸ்டுகளும் தமிழகத்தின் தலையெழுத்தினை மாற்றி எழுதும் சக்தியினை பங்குப் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் நடக்காமல் போனாலும், அடுத்த தேர்தலுக்கு போகும் போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சாத்தியங்கள் இருக்கிறதா? இது தாண்டி, இந்தியாவெங்குமே பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, அரசியல்வாதிகளை பின்னி பெடலடெக்கும் ஊடகங்கள், தகவல் பெற்றறியும் மசோதா, தகவல் தொழில்நுட்ப,அதிநவீன தொழில்களின் முன்னேற்றம் என்று ஹை-வோல்டேஜில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சமமான குரல்கள் தமிழகத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. யார் வந்தாலும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வலைப்பதிவுகள் சமீபத்தில் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

இந்த முக்கியமான தேர்தலை சமூக மாற்றத்தினை உள்ளடக்குவதில் ஒரு சிறு முயற்சியாக “தேர்தல்2006” என்கிற கூட்டு வலைப்பதிவினை தொடங்கி இருக்கிறேன். ஜனவரி தொடங்கி பேச ஆரம்பிக்கலாம். எப்போது தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரியாமல் இருந்தாலும், அடிப்படை கேள்விகளையும், அரசியல் விளளயாட்டுகளையும் அலச அரம்பிக்கலாம். 234 தொகுதிகளை தொகுதிவாரியாக அலச முடியும். தமிழகமெங்கும் விரவியிருக்கும் வலைப்பதிவாளர்கள் அவரவர்கள் இடத்தின் நிலவரத்தினை பதியலாம். சாதாரணமாய் தினமும் சந்திக்கும் பல்வேறு மக்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். தமிழகம் யார் தலைமையில் ஆள வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ரோட்டில் சர்வசாதாரணமாக பார்க்கும் மக்கள் தான் எஜமான்கள். அவர்கள் நினைத்தாலேயொழிய மாற்றங்கள் வாராது. இந்த வலைப்பதிவு தேறும் பட்சத்தில், இதனை கல்லூரிகளுக்கு எடுத்து செல்லலாம். என்னளவில் ஊடகங்களில் இருக்கும் தொடர்புகளைக் கொண்டு நிருபர்களிடமிருந்து சேதிகள் சேகரிக்க முனைகிறேன். நாளைய தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான வெளியை உருவாக்கி விவாதிக்க சொல்லலாம். அவரவர் இடங்களிலிருந்து நிலவரங்களை பதியலாம். சென்ற தேர்தலை நான், அரவிந்தன் மற்றும் சில நண்பர்கள் இணையத்தில் முழுமையாக தொகுத்திருந்தோம். tamil.net இல் பங்கு பெற்றிருந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த முறை அந்தப்படை பெருகட்டும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் / தமிழகத்தின் அரசியலில் ஆர்வமிருக்கும் எவரும் இதில் பங்கு பெறலாம். தமிழகத்தில் என்னென்ன இருக்கவேண்டும், என்ன மாறுதல்கள் வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்தினை வற்புறுத்துங்கள். இதில் யார் வேண்டுமெனாலும் சேர்ந்து கருத்துக்களை பகிரலாம். நீங்கள் எந்த சார்பு நிலை வேண்டுமானால் இருக்கலாம்.(கலைஞர் தான் உலகின் உன்னதமான தலைவர், புரட்சி தலைவி போன்ற தலைவி சூரிய குடும்பத்திலேயே இல்லை, திருமா/ தலித் அரசியல் இல்லாமல் தமிழகமில்லை, மருத்துவர்.இராமதாஸ் இருக்குமிடம்தான் தமிழகத்தின் அசைக்கமுடியாத சக்தி ) எவ்விதமான கருத்தாங்களையும் முன்வைக்கலாம். தி.மு.க/அ.தி.மு.க, தலித், தமிழ் தேசியம், நக்சல்பாரி, உலகப்பொருளாதாரம், விடுதலைப்புலிகள் ஆதரவு / எதிர்ப்பு, ஈழத்தமிழர் வாழ்க்கையும் தமிழக அரசியலும், வாக்கு போடவேண்டுமா / வேண்டாமா, தேர்தல் முறைகளில் வேண்டிய மாற்றங்கள் என்ன, நேர் /எதிர் / குறுக்கு / உள்குத்து அரசியல், மூன்றாம்/நான்காம்/பத்தாம் அணி என்று எந்த தலைப்பிலும் எழுதலாம். மிகவும் சீரியஸாக எழுத வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை. பகடி, நையாண்டி, நகைச்சுவை என பல்வேறு முகங்களில் தமிழக அரசியலை ஆராயலாம். நானே ஒரு “கொள்கை / தேர்தல் அறிக்கை generator” தயார் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையினை எழுத சிரமபடும்போது நாம் உதவலாம் என்ற நல்லெண்ணம் தான் 😉 மற்றபடி இதை ஒரு மிக முக்கியமான மாற்று ஊடகமாகவும் மக்களின் குரலாகவும் மாற்றுவதென்பது மக்களின், நண்பர்களின், வலைப்பதிவர்களின் கையில் (அல்லது கீபோர்டில்) இருக்கிறது.

7 responses to “ஆளப் போவது யார்? 2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மி…

  1. Unknown's avatar சுதர்சன்.கோபால்

    இது ஒரு நல்ல முயற்சி.

    தேர்தலன்று ஓட்டுப் போட மாட்டார்களாம்;ஆனால் நல்ல ரோடுகள் வேண்டும்,முறையான குடிநீர் வசதி வேண்டும் என்று கோஷம் போட மட்டும் தவற மாட்டார்களாம்.இதை எங்கே சென்று முறையிடுவது???

    இப்படி வாக்களிக்காதவர்கள் பட்டியலில் பெரும்பான்மையானவர்கள்,தகவல் தொழில்நுட்ப அலையடித்து பட்டணக் கரை சேர்ந்தவர்கள்.ஆகவே மக்களே முதலில் உங்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பாருங்கள்.தமிழகத் தேர்தல் ஆணையத்தின்
    இணையதளத்தில் தேடுபொறி வசதி இணைக்கப்பட்டுள்ளது(http://eroll.tn.nic.in/).இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    விவரங்கள் சரியாக இல்லையெனில் சரி படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைக் காலம் கடக்கும் முன்பாகச் செய்து முடியுங்கள்.இதெற்கெல்லாம் மேலாகத் தேர்தல் நாளன்று உங்கள் வாக்குரிமையைப் பதிவு செய்யத் தவற வேண்டாம்.

    ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் “வாக்களித்தல்” என்னும் தங்களது அடிப்படை உரிமையினை நிறைவேற்றுவதில் இருந்து தவறுதல் கூடாது.

  2. நாராயண்,

    நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

    கூடவே தினசரி செய்திகள் திரட்டியாக – தமிழக தேர்தல் சம்பந்தப்பட்ட
    செய்தித்தலைப்புகளையும், அதன் இணைய சுட்டிகளையும் தினமும் கொடுக்கும்படி
    ஒரு பதிவு இடலாம். அதாவது ‘இன்றைய ரவுண்டப் – 2-ஜனவரி- 2006’ என தலைப்பில் தினசரிகள், வாராந்தரிகள், வாரம் இருமுறை இதழ்களிலிருந்தும், இணையத்தில் இல்லாத மற்ற இதழ்களிலிருந்தும் சில பத்திகளை எடுத்திட்டு அதற்கு சுட்டி கொடுக்கலாம். இது உங்கள்/இங்கு பங்களிப்போர் கருத்துகள் தவிர பெரும்பான்மை மீடியாவின் போக்கையும் சுட்டிக் காட்ட உதவும்.

    தேர்தல் நாள் அறிவிப்பானவுடன் – ஒரு கவுண்ட் டவுன் கவுண்டர் தெரியச்செய்யலாம்.
    http://www.assembly.tn.gov.in/elect2001/default.htm தளத்திலிருந்து விபரங்கள் எடுத்து இயம்பலாம்.

    – அலெக்ஸ் பாண்டியன்.

  3. நன்றி அலெக்ஸ் இதை ஆவண செய்ய முயற்சிக்கிறேன். உங்களின் மின்னஞ்சல் முகவரியினை தாருங்கள். நீங்களும் பங்குப் பெற்று கருத்துக்களை சொல்லுங்கள், நன்றாக இருக்குமென்பது என் எண்ணம்.

  4. Unknown's avatar மாயவரத்தான்...

    //அ.தி.மு.கவிலோ ஜெயலலிதாவிற்கு பின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் கிடையாது. திராவிட அரசியலின் கடைசி தேர்தலாக இது இருக்குமா ? //

    ம்…திராவிட அரசியலுக்கான கடைசி தேர்தல் 67க்கு முன்பேயே முடிந்து விட்டது.

    உங்களுடைய கேள்வி திராவிடம் என்று பெயரில் வைத்துக் கொண்டு களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளைப் பற்றி என்றால், “இல்லை” என்று கூறலாம். எம்.ஜி.ஆர். இருக்கும் போது அவருக்கு பிறகு என்று யாரையாவது நினைத்து பார்த்ததுண்டா? இன்றைக்கு அ.தி.மு.க.வில் தலைமை எப்படி எம்.ஜி.ஆருக்கு மாற்றாக ஆக முடிந்தது?

    தி.மு.க.வை பொறுத்த வரையில் கஷ்ட காலம் தான். வைகோ ஒரு சீரான பாதையில் பயணிப்பது அதை கருத்தில் கொண்டு தான் என்று திட்டவட்டமாக நம்பலாம்.

    மற்றபடி, போன தேர்தலின் போது அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் எந்தவித கெட்ட பெயரும் இல்லை. அப்படியிருப்பினும் மக்கள் ஏன் அ.தி.மு.க.வை தேர்ந்தெடுத்தார்கள் என்று ஒழுங்கான அலசலை இப்போது யாராவது செய்தால் அது வரப் போகும் தேர்தலுக்கான மக்களின் பிரதிபலிப்பை கொஞ்சமாவது தொட்டுக் காட்டுவதாக அமையலாம்.

  5. Unknown's avatar சுந்தரவடிவேல்

    பயனுள்ள முயற்சி. நன்றி.

  6. Unknown's avatar குழலி / Kuzhali

    //போன தேர்தலின் போது அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் எந்தவித கெட்ட பெயரும் இல்லை. அப்படியிருப்பினும் மக்கள் ஏன் அ.தி.மு.க.வை தேர்ந்தெடுத்தார்கள் என்று ஒழுங்கான அலசலை இப்போது யாராவது செய்தால் அது வரப் போகும் தேர்தலுக்கான மக்களின் பிரதிபலிப்பை கொஞ்சமாவது தொட்டுக் காட்டுவதாக அமையலாம்.
    //
    கூட்டணி கணக்கு தான்….

  7. Unknown's avatar குழலி / Kuzhali

    நல்ல முயற்சி பாராட்டுகள்…

குழலி / Kuzhali -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.