அழிந்து போகும் பழங்கால கலைவடிவம்: முப்பாட்டனுக்கு முந்தைய காலத்து பழக்கம். தேவதாசியர்கள் அபிநயித்து நடத்திக் காட்டிய கலை வடிவம். இன்று முனைவர்களும் பேராசிரியர்களும் நாடக ஆர்வலர்களும் வைணவப் பெருந்தகைகளும் ஒன்று சேர்ந்து மறுபடி மீட்டெடுத்து இருக்கிறார்கள்.
நடனம் + இசை + செவ்வியல்: எண்பது வயது தேவதாசியிடம் இருந்து செவிவழிப் பாடல்களை செம்மையாக்கி, விடிய விடிய பன்னிரெண்டு மணி நேர கூத்து வடிவத்தை இரண்டு மணித்துளிகளாக சுருக்கி, பொருத்தமான அரங்க வல்லுநர்களைக் கோர்த்து, நடிக்க வைத்து, முற்றிலும் இலவசமாக பரவசமாக்கினார்கள்.
தேவதாசி + பெண்ணியம்: ஆண் வேடத்தையும் பெண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாயக நம்படுவானுக்கும் நாராயணனுக்கும் நம்பிக்கும் பெண்களே ஹீரோவாக வேடம் கட்டுகிறார்கள். வாழ்வில் அனுதினமும் அரக்கர்களை தரிசிப்பதால், வில்லன் பிரும்ம ராக்கதனுக்கு, அசல் ஆண் அரங்கேறுகிறார்.
விஐபி: ‘கண்டு கொண்டேன்’² வில்லி அனிதா ரத்னம், கூத்துப்பட்டறையின் நிறுவனர்களில் ஒருவரான நா.முத்துசாமி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, நாடகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த பேராசிரியர் ராமானுஐன், இராமானுஜர் ஆவணப்படம் உண்டாக்கிய அண்ணாமலை, ‘சென்னைஆன்லைன்.காம்’ அண்ணாகண்ணன் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரிவாக கானா பிரபா மாதிரி அளவளாவ ஆசை மட்டுமே; சரக்கில்லை.
நாடக விமர்சனம்: நடுவில் ஜெட்-லாக் பழிபோடலினாலோ அல்லது ‘அகோ வாரும் பிள்ளாய்’ உரையாடலினாலோ அல்லது ஒரே மாதிரி அபிநயப் பாடல்களினாலோ கொஞ்சமாய் கண் சொருகியது உண்மை.
எது தூள் + ரசனை ஜோர்?
ஜனரஞ்சகமாக பல்வேறு கதாபாத்திர அறிமுகங்கள் எவ்வாறி மேடை ஏறும், எங்ங்னம் கொணரப்படும் என்பதை சொன்னார்கள்.
திருக்குறுங்குடி திரு வடிவழகிய நம்பித் திருக்கோவில் கைங்கர்யமான
கைசிக புராண நாடகம்
பிறவித்துயரிலிருந்து ஈடேற எளிதான வழி எது எனப் பூமாதேவி கேட்க, இசைத்தொண்டே வழி என்று ஸ்ரீவராகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியது கைசிக புராணம். இதைக் கேட்ட பூமாதேவி ஆண்டாளாக அவதரித்து பூமாலையுடன் பாமாலையும் சூட்டி திரு அரங்கனை மணந்தார்.
ஸ்ரீ வராக புராணத்தில் உள்ள இந்த புராணத்தை கார்த்திகை மாதம் சுக்லபட்ச கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி காலையில் வைணவக் கோயில்களில் ஸ்ரீ பராசர பட்டர் வியாக்கியானத்துடன் பாராயணம் செய்து வருகிறார்கள். கைசிக ராகத்தின் பலனைச் சிறப்பித்துக் கூறுவதால் கைசிக புராணம் என்று பெயர் பெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரிக்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திர கிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடியில் நம்படுவான் சரிதம் நடைபெற்றதால் அப்பதியிலுள்ள வடிவழகிய நம்பி சன்னதியில் கைசிக ஏகாதசியன்று இந்நாடகம் நடித்துக்காட்டும் கைங்கர்யமாக நடைபெற்று வருகிறது.
மீட்டுருவாக்க முயற்சி
ஐநூறுக்கும் மேலான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாடகம் அதன் முழுவலிமையையும் இழந்து நின்றது. சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள், நம்பி போன்ற பாரம்பரியக் கலைஞர்களின் கைங்கர்ய உள்ளம் ஓரளவேனும் நடைபெறும் அளவில் இம்மரபைக் காத்து வந்தது.
திருக்குறுங்குடி நம்பி திருக்கோவில் பொறுப்பில் டிவியெஸ் (TVS) குடும்பத்தினர் பங்கேற்றதும் அக்குடும்பத்தில் ஒருவரான நாட்டிய வல்லுநர் திருமதி. அனிதா ரத்னம் அவர்களது உதவியும், முயற்சியும் இந்நாடகத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது.
திரு நாராயண அய்யங்காரின் தத்துவார்த்த ஆலோசனை, பேராசிரியர் சே இராமானுஜத்தின் ஆய்வு மற்றும் வழிகாட்டல், கலைமாமணி பா. ஹேரம்பநாதனின் வடிவாக்கம் ஆகியவை நம்பி திருக்கோவிலில் பத்து ஆண்டுகளாக இத்திருசேவையைத் தொடர வழி செய்துள்ளன.
நம்படுவான் சரிதம்
பாணர் குலத்தில் பிறந்த சிறந்த வைணவ பக்தரான நம்படுவான் தினசரி இரவில் திருக்குறுங்குடி நம்பியை இசையால் பாடிப் புகழ்வதை தமது கைங்கர்யமாகக் கொண்டவர்.
கார்த்திகை மாதம் சுக்கில பட்சம் கைசிக ஏகாதசியன்று நம்படுவான் உண்ணாது உறங்காது விரதங்காத்துப் பெருமாளை சேவிக்க இரவில் வரும்போது, பிரம்ம ராக்ஷசன் ஒருவனால் வழி மறிக்கப்படுகிறார்.
கொன்று தின்று பசி தீர்த்துக் கொள்ள வந்த அந்த ராஷசனிடம், தான் பெருமாளை சேவித்து விட்டுத் திரும்பி வருவதாகப் பல சத்தியங்கள் சொல்லியும் ஏற்காதபோது, பெருமாள் மீதே சத்தியம் செய்து அனுமதி பெறுகிறார்.
பெருமாளைப் பாடி பிரியாவிடை பெற்றுத் திரும்பும் போது வடிவழகிய நம்பியே கிழவராக வந்து சோதிக்க எண்ணி, இராட்சனிடம் திரும்பிப் போகாமல் தப்பித்துச் செல்லும்படி நம்படுவானிடம் கூறுகிறார். ஆனால் நம்படுவானோ சத்தியம் தவறாமல் இராஷஸனிடமே மீண்டும் வருகிறார்.
ஆனால் ராக்ஷஸன் அவரை உண்பதற்குப் பதில் அவரது புண்ணியத்தில் குறிப்பாக கைசிக ராகத்தில் பெருமாளைப் பாடிக் கிடைத்த புண்ணியத்தில் எள்ளளவாவது தருமாறு கெஞ்சுகிறான். அந்தணர் காலத்தில் சோம சர்மாவாக பிறந்த அந்த இராக்கதன் அகந்தையால் யாகத்தில் மந்திரத்தைத் தவறாகச் சொன்னதால் இராட்சனாக சபிக்கப்பட்டான்.
சாப விமோசந்த்திற்காக நம்படுவானின் கைசிக ராகப் புண்ணியத்தைப் பெறக் காத்திருப்பதாகக் கூறி நம்படுவானின் அடிகளில் விழுந்து வணங்குகிறான். நம்படுவானும் இரக்கப்பட்டு தனது பாட்டின் பலனைத் தந்து அவனுக்கு விமோசனம் கொடுத்து நம்பியின் திருவடிகளை அடையச் செய்தார்.
மீட்டுருவாக்கத் திருத்தொண்டும் பங்கேற்பும்
அரங்கில் நம்படுவான் கைவாரம்: கலைமாமணி குரு பி ஹேரம்பநாதன் நம்படுவான்: முனைவர் சுமதி சுந்தர்
திருமதி எம் ராஜகுமாரி பிரம்மராட்சஷன்: திரு எஸ். கோபி நம்பிக்கிழவர்: குமாரி எம்.ஏ. அருணோதயம் துணைப்பாத்திரங்கள்: குமாரி. தமிழ்மதி, குமாரி ஜோதி
இசையில் நட்டுவாங்கம்: திரு எச் ஹரிஹரன் பாட்டு: திருமதி எஸ் லலிதா
திருமதி எஸ் பானுமதி குழல்: திரு என் கிரீஷ்குமார் மிருதங்கம்: திரு என் ஆர் மணிகண்ட தீட்சிதர் நாதஸ்வரம்: திரு அருண்குமார் தவில், சுத்தமத்தளம்: திரு டி செந்தில்குமார்
வல்லுநர் ஆலோசனையில் தத்துவம்: திரு உ.வே திருநாராயண ஐயங்கார் அரங்க இயல்: கலைமாமணி நா முத்துசாமி பனுவல்: முனைவர் ம வேலுசாமி இசை: பேராசிரியர் ம வைத்தியலிங்கம்
முனைவர் அரிமளம் பத்மனாபன்
ஆவணப்படுத்துதலில்
முனைவர் கு. முருகேசன்
திரு எஸ் ஏ கன்னையா
நிர்வாக ஒருங்கிணைப்பு: திரு ஆர் நாகராஜன்
திரு ஜி ராஜமாணிக்கம் உதவி: திரு ஜி விஜயகுமார்
வடிவமைப்பு: கலைமாமணி பி ஹேரம்பநாதன்
வழி நடத்துநர்: பேராசிரியர் சே இராமானுஜம்
கலையாக்க ஆலோசகர் மற்றும் தாளாளர்: கலைமாமணி திருமதி அனிதா ரத்னம்
சென்ற வருடம் சென்னையில் ‘சாக்லேட் கிருஷ்ணா‘ தரிசனம். அதிலே வந்தவர் கிரேசி மோகனும் மாது பாலாஜியும். அந்த முப்பதாண்டு கால மேடை அனுபவத்திற்கு நிகரான நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ் குழு.
எஸ் வி சேகர் நடித்து சுந்தா இயக்கிய ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது‘ நாடகம். அன்றைய மதராஸில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். கைக்குழந்தை இருந்தால் மொசைக் தரை பாழாகி விடும் என்று நிராகரிப்பார்கள். அதற்குப் பதிலாக வளர்ந்த குழந்தை இருந்தாலோ, வயசுப்பயன், பிரும்மச்சாரி சேஷ்டை என்று புதிய காரணம் கண்டுபிடிப்பார்கள். வீடு வாங்குவதற்கோ ரொக்கத் தொகை கொண்டு கிரயம் முடிக்கவேண்டும். திவாலாகும் சிட்டி பேங்கும், கூவிக் கூவி வீட்டுக்கடன் தரும் ஐசிஐசிஐயும் உதயமாகாத எண்பதுகளில் கிரேசி மோகனால் எழுதப் பட்டது.
இவ்வளவு சிரமதசையில் வாடகை வீடு கிடைத்தால், அதை எவராவது காலி செய்வார்களா?
இதுவே எண்பதுகளின் சூப்பர்ஹிட் நாடகத்தின் கரு. அதை அமெரிக்காவிற்கு ஏற்றபடி Enfamilம், மில்லேனியத்திற்கு ஏற்றபடி ஸ்வைன்ஃப்ளுவும் கொண்டு உற்சாகம் கொப்புளிக்க படைப்பு மெருகேற்றி இயக்கியுள்ளார் குரு.
வளைகுடாவில் வின்டோஸ் வெளியானால் கூட அராபிய மொழியில் வெளியாகும். அதே போல் அமெரிக்காவில் அசலில் இருந்த கபாலி கோவில் தெப்பக்குளமும், 200 ரூபாய் வாடகையும் அப்படியே வைத்திருப்பதற்கு பதில் பாஸ்டன் காம்ன்ஸையும் டாலர் சோகத்தையும் பாலயோகிக்கு பதில் மகாலஷ்மி கோவிலையும் கொணர்ந்திருக்கலாம். அன்றும் இன்றும் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்வதுதான் நகைச்சுவை நாடகத்தின் சோக மெஸேஜ்.
தமிழக சபாக்களில் நாடகம் பார்த்தால் முசுடுக்களையும் சிரிக்க வைக்க சில உபாயம் கையாள்வார்கள். முக்கியமான வசனத்தை சொன்னவுடன் ‘டொய்ங்ங்ங்ங்…’ என்று சத்தம் ஒலிக்கும். இன்னொரு விலா நோகவைக்கும் உரையாடல் முடிந்தவுடன் ‘ட்ட்டுர்ர்ருக்க்க்…’னு பிறிதொரு சவுண்ட் கொடுப்பார்கள். அதெல்லாம் பாஸ்டனில் கொடுக்காததாலோ என்னவோ, சிரிப்பு மழை பொழியாமல் அமைதி காத்தார் பார்வையாளர். அடுத்த முறை ஒரு கை ஓசையாக cue தந்தால் நாங்களும் இரு கைத்தட்டலாக புன்னகைப்போம் என்று நம்புகிறேன்.
ஸ்டேஜ் ஃப்ரென்ட்சிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர்களின் அரங்கப் பொருளின் பொருத்தமும் நிறைவான மேடை அமைப்பும். அது ஏனோ, இந்த தடவை, ரொம்ப எளிமையாக, நாட்டு நடப்பை பிரதிபலித்தது. அமெரிக்காவில் recession என்றால் ஸ்டேஜ் ப்ரென்ஸும், ஸ்டேஜை குறைத்து விட்டார்கள்.
சாது சங்கரனின் நீண்ட தலைமுடியை வெட்டுவது கூட ஒரு டெனன்ட் கமான்ட்மென்ட் ஆக்கலாமே என்று நாடகத்தில் வருவதால் நிஜமாகவே கூந்தலை வளர்க்குமளவு கமிட்மென்ட் கொண்ட மோகன்; மீசையை முறுக்கி விட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டே வீட்டு சொந்தக்காரராகவே ஆன ஆதிகேசவன் ஆகிய இருவரும் டாப் க்ளாஸ். குறையே சொல்ல இயலாத இயல்பான நடிப்பு.
எஸ் வி சேகர் ஏற்று நடித்த பத்து என்னும் பத்மநாபன் பாத்திரத்தில் வந்த குருவும் ஹீரோ அய்யாசாமியாக வாடகைக்கு வந்து வீட்டை ஆக்கிரமிக்கும் இரமணி – இருவரும் தேவையானதை செய்துச் சென்றார்கள்.
எஸ் வி சேகரின் ஏற்ற இறக்கங்களையும், நீட்டமான பத்திரிகை ஜோக்குகளையும் வெகு சாதாரணமாக சம்பாஷணையில் நுழைக்கும் சாமர்த்தியமும் பத்துவாகிய குருவிடம் கிடைக்கவில்லை. ஒரிஜினலில் அவர் சடாரென்று சென்னை மொழி பேசுவார்; அங்கிருந்து கிண்டல் மொழிக்கு தாவுவார். அவ்வளவு ஈடுகட்டாவிட்டாலும், குருவால் இன்னும் நிறைய முடிந்திருக்கும் என்பது ‘ரகசிய சினேகிதியே‘ போன்றவற்றால் தோன்றியது.
அந்த மாதிரி அய்யாசாமி இரமணியும் வந்திருக்கும் உள்ளூர் கூட்டத்திற்கு இந்த அளவு நடித்தால் போதும் என்பது மாதிரி went through the motions. பாஸ்டனில் ஜே கே ரித்திஸ் படம் போட்டால் கூட ஹவுஸ் ஃபுல்லாக்கும் தமிழர்கள், இந்த மாதிரி நேரடி மேடை நிகழ்வுகளைக் காண ஏனோ வருவதில்லை.
சில நண்பர்களிடம் நேற்று அழைப்பு விடுத்தபோது கூட ‘இலவசமா?’ என்றார்கள். ‘நீ நடிக்கிறாயா?’ என்றார்கள். பெரும்பாலான நியு இங்கிலாந்துக்காரர்களின் பழக்கதோஷம் இது. தெரிந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் மட்டுமே வருவார்கள். நுழைவுக் கட்டணம் நயாபைசா கிடையாது என்றால் நிச்சயம் நுறு மைல் தாண்டி நிகழ்ச்சி இருந்தாலும் தலைக்காட்டுவார்கள். குழந்தைகளின் திறமையை அரங்கில் செய்து காட்டலாம் என்றால் எப்பாடுபட்டேனும் அட்டென்டன்ஸ் இடுவார்கள். முன்னூறு மைல் தொலைவில் இருந்து பதின்மூன்று பேர் குழு இரத்தமும் சதையுமாக உயிரோட்டமான நாடகத்தை நடித்துக் காட்ட வருகிறார் என்றால் ஏனோ காணாமல் போனவர் ஆகிவிடுகிறார்கள்.
தமிழ்ப்படங்களே தமிழில் தலைப்பு வைத்து வரிவிலக்குப் பெறுவது போல், நாடகத்தின் டைட்டிலை தமிழிலேயே பொருத்தமாக அமைத்திருக்கலாம். வடிவேலுதான் ‘தூக்கிக் காட்டு’வை காமெடியாக்கி, விவேக்கையும் ‘உவ்வேக்’காக தமிழ் சினிமா பாரம்பரியமாக்கி இருந்தால், இங்கும் R rated ஜோக் தூவப்பட்டிருக்கிறது. சிரிப்பை வரவைக்க அடல்ட்ஸ் ஒன்லி தேவையில்லை.
நண்பர் கணேஷ் சந்திரா வில்லன் தோற்றத்துடன் குழந்தைசாமியாக வெகுளியானப் பாத்திரப்படைப்புக்கு வேண்டியதை அளவோடு வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த வருடம் புதியதாக அரங்கேறிய ஆரோக்கியசாமி & நவநீதம், புதுசு என்பதே சொல்ல இயலாதவாறு திருப்திகரமாக நடித்தார்கள். பெருமாள் & ப்ரோக்கர்பரமசிவம் ஆகிய இருவரும் மோசம் இல்லையென்றாலும் opportunities for improvement என்று உடல்மொழியை சொல்லலாம். ‘நஷ்ட ஈடு‘ நாதமுனி & கேடி செல்வராஜ் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை, செப்பனிடச் சொல்ல எந்தக் கருத்தும் இல்லாமல் செவ்வனே செய்திருக்கிறார்கள்.
பெண்கள் இருவரும் இளைய தளபதி விஜய் திரையில் தோன்றும் கணந்தோறும் கையைக் காலை ஆட்டி உதறலை சமாளிப்பது போல் கொஞ்சமாய் அபிநய சரஸ்வதிகளாகி இருந்தார்கள்.
நாடகம் முடிந்து திரும்பும் சமயத்தில் வானத்தைப் பார்க்குமாறு மகள் சொன்னாள். பிடித்தமான பாதி நிலவாக பெரிய அளவில் மேகங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்தார் சந்திரன். அப்படியே அதன் அருகில் பார்த்தால் கண்கூச வைக்கும் மெர்க்குரி விளக்கு வரிசை. ஒவ்வொரு விளக்கைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான விட்டில் பூச்சி. அத்தனையும் அந்த மஞ்சள் ஒளியை மொய்த்துக் கொண்டிருந்தன.
மனிதகுலத்துக்கு மூத்த குலம் ஈக்களின் குலம். ஆதாம் ஏவாளும் மொகஞ்சதாரோவிற்கு வருவதற்கு முன்பே அங்கே எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய பூச்சிக்கூட்டம். அந்தக் காலத்தில் நிலவொளி மட்டுமே ஆதாரம். நிலவைப் பின்பற்றிப் பறப்பவை நேர்க்கோட்டில் பறக்கும். இருட்டின் பயணத்திலும் இலக்கை அடையும்.
ஆனால், இந்தக் கால ஈக்களுக்கு இடைஞ்சல் எக்கச்சக்கம். மெர்க்குரி, சோடியம், வெண்குழல், வடிவேலு, விவேக் விளக்கு என்று ரகவாரியாக வெளிச்சம் தரும் இரவுப் பயணத்தில் திக்கற்ற பார்வதியாக, செயற்கை மொழியில் மோதி மறைகின்றன.
நியூ ஜெர்சி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்களும் அசலான நிலாவை குறிக்கோளாக கொண்டு, கிரேசி/எஸ் வி சேகர் சோடியம் வேபர் மயங்கி தடைப்படாமல் உச்சங்களைத் தொடர விழைகிறேன்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde