சென்ற வருடம் சென்னையில் ‘சாக்லேட் கிருஷ்ணா‘ தரிசனம். அதிலே வந்தவர் கிரேசி மோகனும் மாது பாலாஜியும். அந்த முப்பதாண்டு கால மேடை அனுபவத்திற்கு நிகரான நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ் குழு.
எஸ் வி சேகர் நடித்து சுந்தா இயக்கிய ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது‘ நாடகம். அன்றைய மதராஸில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். கைக்குழந்தை இருந்தால் மொசைக் தரை பாழாகி விடும் என்று நிராகரிப்பார்கள். அதற்குப் பதிலாக வளர்ந்த குழந்தை இருந்தாலோ, வயசுப்பயன், பிரும்மச்சாரி சேஷ்டை என்று புதிய காரணம் கண்டுபிடிப்பார்கள். வீடு வாங்குவதற்கோ ரொக்கத் தொகை கொண்டு கிரயம் முடிக்கவேண்டும். திவாலாகும் சிட்டி பேங்கும், கூவிக் கூவி வீட்டுக்கடன் தரும் ஐசிஐசிஐயும் உதயமாகாத எண்பதுகளில் கிரேசி மோகனால் எழுதப் பட்டது.
இவ்வளவு சிரமதசையில் வாடகை வீடு கிடைத்தால், அதை எவராவது காலி செய்வார்களா?
இதுவே எண்பதுகளின் சூப்பர்ஹிட் நாடகத்தின் கரு. அதை அமெரிக்காவிற்கு ஏற்றபடி Enfamilம், மில்லேனியத்திற்கு ஏற்றபடி ஸ்வைன்ஃப்ளுவும் கொண்டு உற்சாகம் கொப்புளிக்க படைப்பு மெருகேற்றி இயக்கியுள்ளார் குரு.
வளைகுடாவில் வின்டோஸ் வெளியானால் கூட அராபிய மொழியில் வெளியாகும். அதே போல் அமெரிக்காவில் அசலில் இருந்த கபாலி கோவில் தெப்பக்குளமும், 200 ரூபாய் வாடகையும் அப்படியே வைத்திருப்பதற்கு பதில் பாஸ்டன் காம்ன்ஸையும் டாலர் சோகத்தையும் பாலயோகிக்கு பதில் மகாலஷ்மி கோவிலையும் கொணர்ந்திருக்கலாம். அன்றும் இன்றும் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்வதுதான் நகைச்சுவை நாடகத்தின் சோக மெஸேஜ்.
தமிழக சபாக்களில் நாடகம் பார்த்தால் முசுடுக்களையும் சிரிக்க வைக்க சில உபாயம் கையாள்வார்கள். முக்கியமான வசனத்தை சொன்னவுடன் ‘டொய்ங்ங்ங்ங்…’ என்று சத்தம் ஒலிக்கும். இன்னொரு விலா நோகவைக்கும் உரையாடல் முடிந்தவுடன் ‘ட்ட்டுர்ர்ருக்க்க்…’னு பிறிதொரு சவுண்ட் கொடுப்பார்கள். அதெல்லாம் பாஸ்டனில் கொடுக்காததாலோ என்னவோ, சிரிப்பு மழை பொழியாமல் அமைதி காத்தார் பார்வையாளர். அடுத்த முறை ஒரு கை ஓசையாக cue தந்தால் நாங்களும் இரு கைத்தட்டலாக புன்னகைப்போம் என்று நம்புகிறேன்.
ஸ்டேஜ் ஃப்ரென்ட்சிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர்களின் அரங்கப் பொருளின் பொருத்தமும் நிறைவான மேடை அமைப்பும். அது ஏனோ, இந்த தடவை, ரொம்ப எளிமையாக, நாட்டு நடப்பை பிரதிபலித்தது. அமெரிக்காவில் recession என்றால் ஸ்டேஜ் ப்ரென்ஸும், ஸ்டேஜை குறைத்து விட்டார்கள்.
சாது சங்கரனின் நீண்ட தலைமுடியை வெட்டுவது கூட ஒரு டெனன்ட் கமான்ட்மென்ட் ஆக்கலாமே என்று நாடகத்தில் வருவதால் நிஜமாகவே கூந்தலை வளர்க்குமளவு கமிட்மென்ட் கொண்ட மோகன்; மீசையை முறுக்கி விட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டே வீட்டு சொந்தக்காரராகவே ஆன ஆதிகேசவன் ஆகிய இருவரும் டாப் க்ளாஸ். குறையே சொல்ல இயலாத இயல்பான நடிப்பு.
எஸ் வி சேகர் ஏற்று நடித்த பத்து என்னும் பத்மநாபன் பாத்திரத்தில் வந்த குருவும் ஹீரோ அய்யாசாமியாக வாடகைக்கு வந்து வீட்டை ஆக்கிரமிக்கும் இரமணி – இருவரும் தேவையானதை செய்துச் சென்றார்கள்.
எஸ் வி சேகரின் ஏற்ற இறக்கங்களையும், நீட்டமான பத்திரிகை ஜோக்குகளையும் வெகு சாதாரணமாக சம்பாஷணையில் நுழைக்கும் சாமர்த்தியமும் பத்துவாகிய குருவிடம் கிடைக்கவில்லை. ஒரிஜினலில் அவர் சடாரென்று சென்னை மொழி பேசுவார்; அங்கிருந்து கிண்டல் மொழிக்கு தாவுவார். அவ்வளவு ஈடுகட்டாவிட்டாலும், குருவால் இன்னும் நிறைய முடிந்திருக்கும் என்பது ‘ரகசிய சினேகிதியே‘ போன்றவற்றால் தோன்றியது.
அந்த மாதிரி அய்யாசாமி இரமணியும் வந்திருக்கும் உள்ளூர் கூட்டத்திற்கு இந்த அளவு நடித்தால் போதும் என்பது மாதிரி went through the motions. பாஸ்டனில் ஜே கே ரித்திஸ் படம் போட்டால் கூட ஹவுஸ் ஃபுல்லாக்கும் தமிழர்கள், இந்த மாதிரி நேரடி மேடை நிகழ்வுகளைக் காண ஏனோ வருவதில்லை.
சில நண்பர்களிடம் நேற்று அழைப்பு விடுத்தபோது கூட ‘இலவசமா?’ என்றார்கள். ‘நீ நடிக்கிறாயா?’ என்றார்கள். பெரும்பாலான நியு இங்கிலாந்துக்காரர்களின் பழக்கதோஷம் இது. தெரிந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் மட்டுமே வருவார்கள். நுழைவுக் கட்டணம் நயாபைசா கிடையாது என்றால் நிச்சயம் நுறு மைல் தாண்டி நிகழ்ச்சி இருந்தாலும் தலைக்காட்டுவார்கள். குழந்தைகளின் திறமையை அரங்கில் செய்து காட்டலாம் என்றால் எப்பாடுபட்டேனும் அட்டென்டன்ஸ் இடுவார்கள். முன்னூறு மைல் தொலைவில் இருந்து பதின்மூன்று பேர் குழு இரத்தமும் சதையுமாக உயிரோட்டமான நாடகத்தை நடித்துக் காட்ட வருகிறார் என்றால் ஏனோ காணாமல் போனவர் ஆகிவிடுகிறார்கள்.
தமிழ்ப்படங்களே தமிழில் தலைப்பு வைத்து வரிவிலக்குப் பெறுவது போல், நாடகத்தின் டைட்டிலை தமிழிலேயே பொருத்தமாக அமைத்திருக்கலாம். வடிவேலுதான் ‘தூக்கிக் காட்டு’வை காமெடியாக்கி, விவேக்கையும் ‘உவ்வேக்’காக தமிழ் சினிமா பாரம்பரியமாக்கி இருந்தால், இங்கும் R rated ஜோக் தூவப்பட்டிருக்கிறது. சிரிப்பை வரவைக்க அடல்ட்ஸ் ஒன்லி தேவையில்லை.
நண்பர் கணேஷ் சந்திரா வில்லன் தோற்றத்துடன் குழந்தைசாமியாக வெகுளியானப் பாத்திரப்படைப்புக்கு வேண்டியதை அளவோடு வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த வருடம் புதியதாக அரங்கேறிய ஆரோக்கியசாமி & நவநீதம், புதுசு என்பதே சொல்ல இயலாதவாறு திருப்திகரமாக நடித்தார்கள். பெருமாள் & ப்ரோக்கர் பரமசிவம் ஆகிய இருவரும் மோசம் இல்லையென்றாலும் opportunities for improvement என்று உடல்மொழியை சொல்லலாம். ‘நஷ்ட ஈடு‘ நாதமுனி & கேடி செல்வராஜ் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை, செப்பனிடச் சொல்ல எந்தக் கருத்தும் இல்லாமல் செவ்வனே செய்திருக்கிறார்கள்.
பெண்கள் இருவரும் இளைய தளபதி விஜய் திரையில் தோன்றும் கணந்தோறும் கையைக் காலை ஆட்டி உதறலை சமாளிப்பது போல் கொஞ்சமாய் அபிநய சரஸ்வதிகளாகி இருந்தார்கள்.
நாடகம் முடிந்து திரும்பும் சமயத்தில் வானத்தைப் பார்க்குமாறு மகள் சொன்னாள். பிடித்தமான பாதி நிலவாக பெரிய அளவில் மேகங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்தார் சந்திரன். அப்படியே அதன் அருகில் பார்த்தால் கண்கூச வைக்கும் மெர்க்குரி விளக்கு வரிசை. ஒவ்வொரு விளக்கைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான விட்டில் பூச்சி. அத்தனையும் அந்த மஞ்சள் ஒளியை மொய்த்துக் கொண்டிருந்தன.
மனிதகுலத்துக்கு மூத்த குலம் ஈக்களின் குலம். ஆதாம் ஏவாளும் மொகஞ்சதாரோவிற்கு வருவதற்கு முன்பே அங்கே எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய பூச்சிக்கூட்டம். அந்தக் காலத்தில் நிலவொளி மட்டுமே ஆதாரம். நிலவைப் பின்பற்றிப் பறப்பவை நேர்க்கோட்டில் பறக்கும். இருட்டின் பயணத்திலும் இலக்கை அடையும்.
ஆனால், இந்தக் கால ஈக்களுக்கு இடைஞ்சல் எக்கச்சக்கம். மெர்க்குரி, சோடியம், வெண்குழல், வடிவேலு, விவேக் விளக்கு என்று ரகவாரியாக வெளிச்சம் தரும் இரவுப் பயணத்தில் திக்கற்ற பார்வதியாக, செயற்கை மொழியில் மோதி மறைகின்றன.
நியூ ஜெர்சி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்களும் அசலான நிலாவை குறிக்கோளாக கொண்டு, கிரேசி/எஸ் வி சேகர் சோடியம் வேபர் மயங்கி தடைப்படாமல் உச்சங்களைத் தொடர விழைகிறேன்.
தொடர்புள்ள பதிவு:
1. வெட்டிப்பயல்: Tenant Commandments – நான் பார்த்த நாடகம்: “ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட்”
2. New England Tamil Sangam: Chithirai Vizha Drama Photos « 10 Hot
பிங்குபாக்: நிமித்தகாரன்: குறும்படம் | Snap Judgment