Tag Archives: Nasser

தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

  1. படம் பிடித்திருந்ததா? – ஓம்; ஆம்! ஆமாங்க…
  2. ஏன்? – காக்கி சட்டை, மகாநதி, புன்னகை மன்னன் என பல முக்கிய கமல் படங்கள் அவ்வப்போது தெரிந்தாலும், இது புத்தம்புதிய ‘நாயகன்’
  3. முதல் பாதி எப்படி? – உச்சஸ்தாயி. அழுத்தம். பாசாங்கற்ற பளிச்.
  4. இரண்டாம் பாதி? – தக் லைஃப் இரண்டிற்காக பாக்கி வைக்காமல் எடுத்ததற்கு ஷொட்டு
  5. ஏமாற்றிய தருணங்கள் – நாசர் நடிப்பு/கதாபாத்திரம்; நாலு பேரால் நினைவில் வைக்க முடியாத வசனம்; அண்ணன் – தங்கை பாசமலர்
  6. உற்சாக தருணங்கள் – பாலைவனம், பனிவனம், டெல்லிவனம், அலைவனம் என கேமிரா; ரீங்கரிக்கும் பொருத்தமான இசை; நான் எப்பொழுதாவது சொல்வேன் என்று நினைத்திரவே இராத: ‘சிம்பு அவர்களின் நடிப்பு!’
  7. த்ரிஷா – 96 போன்ற குப்பை படங்களில் பொம்மையாக வந்தவர் சும்மா ராணியாக ஜொலிக்கிறார்.
  8. பாடல்கள் – பாதிப் பாடல் மட்டுமே வெள்ளித் திரையில். மீதி அடுத்த அராஜக வாழ்க்கையில்
  9. பிடிக்கவில்லை என்பவர்கள் – நன்றாயிருக்கிறது என்றால் கண்ணியவான் வேசம் போய்விடுமோ என்னும் பயம் கொண்டவர்கள்
  10. மொத்தத்தில் – கமல் ரசிகன் என்றால் கண்ணிலேயே நிற்கும். மணி ரத்னம் விரும்பி என்றால் மனதில் லயிக்கும். பூமர் என்றால் ரசிக்கும்.

தக் லைஃப் – குறியீடுகள்

1. டெல்லி ராஜ்ஜிய போட்டிகள்:
– இந்திரா காந்தி x சஞ்சய் காந்தி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – ராஜீவ் காந்தி
– சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ராகுல் காந்தி
– அசோக் செல்வன் – ஜெயப்ரகாஷ் நாராயண்
– நாசர் – லால் பகதூர் சாஸ்திரி
– ஜோஜு ஜார்ஜ் – மொரார்ஜி தேசாய்
– மகேஷ் மஞ்சரேகர் – ஜனாதிபதி நிக்சன்
– த்ரிஷா – மாருதி சுஸூகி
—-

2. ஈடிபஸ் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

3. ஏகலைவன் – சிம்பு
உயிர் போன்ற கட்டைவிரலைக் கேட்பார் துரோணர்.
வளர்ச்சியையும் திறமையையும் கண்டு அச்சம் கலந்த பொறாமை கொள்வார் அர்ச்சுனர் கமல்.
மாறாப்பற்றைப் போன்ற அடிமைத்தனத்தை எதிர்பார்ப்பார் கமல் என்னும் ஆசான்.
—-

4. ஒரே பெண்ணை ராமனும் விரும்புகிறார்.
பத்து தல அசுரனும் நாடுகிறார்.
அவர் –> த்ரிஷா.
ராவணன் என்னும் சிம்பு, சீதையை சிறையெடுக்கிறான்.

5. புராணத்து சீதையை நிஜ வாழ்வில் த்ரிஷா என்னும் நட்சத்திரத்தின் குறியீடு.
இது உங்களைக் குழப்பலாம்.
கமல்தனமாக யோசியுங்கள்.
விண்ணைத் தாண்டி வந்த மன்மதன் அம்பு எவ்வாறு இரு முரடர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது?
—-

6. சீஸர் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

7. அபிமன்யு – கமல்
துரியோதனன் (சிம்பு)
துரோணாச்சாரியார் (நாசர்)
கர்ணன் (ஜோஜு ஜார்ஜ்)
கிருபர் (பகவதி பெருமாள் (அ) பக்ஸ்)
துச்சாதனன் (அர்ஜுன் சிதம்பரம்)
பீஷ்மர் (இளங்கோ குமாரவேல்)
—-

8. மகாபாரதம் என்றாலே வெண்முரசு.
ஜெயமோகன் போன்ற இலக்கிய பிதாமகர் பாத்திரத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர்!
அவரின் அண்ணன் போன்ற சுந்தர ராமசாமி ஆக நாஸர்.
அவரின் மகன் போன்ற வழித்தோன்றல்களை நாயக்கரே உருவாக்குகிறார்.
சதானந்த் போன்ற சாநி… மன்னிக்க… எதிரணிக்காரர்களுக்கும் விஷ்ணுபுரம் விருது கொடுத்து நேசக்கரம் கொடுக்கிறார்.
நாயக்கரைத் தவிர அவரின் அடிப்பொடியை நாடி, அமரன் பக்கம் வெகுஜனம் சாயும் போது விமர்சன மழையைப் பொழிகிறார்.
அப்படி என்றால், ‘இந்திராணி’ யார்? – சாகித்ய அகடெமியா? ஞானபீடமா??

9. ரொம்ப யோசிக்காதீங்க – இது நவீன ‘வீரபாண்டிய கட்டபொம்மன்

10. அதுவும் இல்லை – சிலப்பதிகாரம் + மணிமேகலை
– கோவலன் – த்ரிஷா
– கண்ணகி x மாதவி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – கவுந்தி அடிகள்
– கருணாநிதி – மணிமேகலை
– அட்சய பாத்திரம் – தமிழ் நாடு
– நெடுஞ்செழியன் – பார்வையாளர் ஆகிய நீங்கள்
– கோப்பெருந்தேவி – வாசிக்கும் தாங்கள் தான்!

ராஜேஷ் சந்திரா: அமெரிக்காவும் அயல்நாடுகளும் – வளைகுடா நாடுகளுடனான உறவு

முந்தைய இடுகையின் தொடர்ச்சி:

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

லெபனான், பாலஸ்தீனத்தில் அமெரிக்கா எப்போதுமே முற்றும் கோணல். இஸ்ரேல் பேச்சையும், அராஃபத்தையும் நம்பி இழந்தவை ஏராளம். ஹமாஸை தீவிரவாத இயக்கமாகவே பார்த்து அதை மேலும் வளர்த்தது இதில் அடங்கும். அராஃபத்தை விட கட்டுக்கோப்பானவர்கள் ஹமாஸ். அரசியலிலும், பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் மக்கள் தேவையைக் கவனிப்பதில் ஹமாஸ் முதலிடம்.

அராஃபத்தும் அவருடைய ஜால்ராக்களும் பணத்தை வாங்கி தங்களை வளப்படுத்திக் கொண்டது மட்டும் மிச்சம் (இதில் மூன்றாம் உலக நாடுகளில் அராஃபத்துக்குக் கிடைத்த கதாநாயக அந்தஸ்து மிகவும் நகை முரணானது).

இஸ்ரேலுக்கும் அராஃபத்தை அமெரிக்கா ஆதரிப்பது வசதியாக இருந்தது. விலைப் போகக் கூடியவர். ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பது இந்த வகையில் சாத்தியமாக இருந்தது.

ஹமாஸ் தீவிரவாததிற்கு ஒன்றும் குறைந்ததில்லை. ஆனால் அவர்களை ஜனநாயகத்திற்குத் திருப்பாதது இன்றும் அமெரிக்கா மத்தியக் கிழக்கில் கொடுக்கும் விலை.

ஹமாஸ் இலங்கை விடுதலைப் புலிகளைப் போன்றவர்கள்.

ஹெஸ்பொல்லா என்னைப் பொறுத்தவரை எடுப்பார் கைப்பிள்ளை. இன்று இரான், நாளை சிரியா என ஆடை மாற்றிக் கொண்டிருக்கும். ஆனாலும் இஸ்ரேலை லெபனானில் மண் கவ்வ வைத்ததில் இவர்கள் பங்கு அதிகம்.

மேற்சொன்ன இரண்டும் அமெரிக்காவைப் பற்றி நல்லதாக நினைக்கப் போவதில்லை. அதற்கு சரித்திரமே 1900-க்குப் பிறகு திருப்பி எழுதினால்தான் உண்டு. மாற்றம் கொண்டு வரவேண்டியவர்கள் மிதவாத மக்கள். சோகமான விஷயம் என்னவெனில் பொது மக்களும் அரசியல் நிலையாமையில் மிகுந்த கசப்பில் இருக்கிறார்கள்.

மத்தியக் கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரை மக்களாட்சி என்பது அங்கே எண்ணை கிடைக்கும் வரை வராது (எண்ணெய் தீர்ந்தவுடன் அங்கே ஆட்சி செய்ய ஒன்றும் இருக்காது). Pseudo மக்களாட்சி நடக்க வாய்ப்புண்டு. ஒமான் போன்ற நாடுகள் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிகாரம் முழுக்க ராஜா கையில். ஆனாலும் அது ஒரு விதத்தில் நல்லதுதான். இதன் தொடர்ச்சி மேலும் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்.

4. இஸ்ரேல்: யூதர்களின் தேர்தல் நிதி காணிக்கை; ஊடக ஆதிக்கம்; ஆளுமை நிறைந்த பதவிகள் — இவற்றை தாண்டி மஹ்மூத் அகமதிநிஜாதுடன் அமெரிக்க அதிபர் உரையாடுவதால் மட்டும் இங்கே என்ன மாற்றம் விளைந்துவிடும்? புஷ், க்ளின்டன்கள் எவ்வாறு இந்த பிரச்சினை நாட்டை கையாண்டார்கள்?

1979-ல் ஷா வெளியேறியதிலிருந்து அமெரிக்கா இரானை ஜென்ம விரோதியாகத்தான் பார்க்கிறது. இதில் இஸ்ரேலின் பங்கு தேவைப்படவில்லை. அகமதிநிஜாத் தன்னை ஒரு தைரியமான தலைவராகக் காட்டிக் கொள்ள தடாலடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

  • யூதப் படுகொலைகளை ஆராயும் மாநாடு,
  • இஸ்ரேலை ஐரோப்பாவிற்கு விரட்டுவது

என கானல் நீர் கனவில் அரபு மக்களைத் திருப்தி படுத்தும் வரை இவரோடு அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை.

இவரின் ஒரு நேர்காணலை கொஞ்ச நாட்கள் முன் தொலைக் காட்சியில் காண நேர்ந்தது. அபத்தமான பதில்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசுவது என்று அரசியல் கோமாளியாகக் காட்சி அளித்தார்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் இராக்-இரான் யுத்தத்தில் அமெரிக்காவின் ஆயுதங்கள் இஸ்ரேல் மூலமாக இரானுக்கு அனுப்பப்பட்டது. எல்லாம் சகஜம்.

மற்ற நாடுகளை தன் வான் படையைக் கொண்டு மிரட்டும் அமெரிக்கா இதுவரை இரானுடன் மோதுவதில் பெரிதும் தயக்கம் காட்டுகிறது.

புஷ், கிளிண்டன்களின் இரான் கொள்கை ரேகனின் அடியொற்றி எடுக்கப்பட்டவை. அதாவது சும்மா சலம்புவது, பின் இரானிடமிருந்து எண்ணையை வாங்கிக் கொள்வது.

5. கல்வியை முன்னிறுத்தும் கத்தார், பஹ்ரைன் போன்ற மேற்கத்திய குடாநாடுகள்; நட்பு கொஞ்சமும் எண்ணெய் நிறையவும் கொண்ட சவூதி அரேபியா, குவைத் போன்றவர்கள்; முதலாளித்துவத்தை முன்னிறுத்தி வியாபாரத்தை கவனிக்கும் அமீரகம் – அடுத்த அமெரிக்கா இங்கே ஒளிந்திருக்கிறதா? அல்லது USSR பதுங்கி இருக்கிறதா? இரண்டும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஆனால் பன்மடங்கு பலம் வாய்ந்த புலி நித்திரை கலைக்குமா?

கல்வியை முன்னிறுத்தினாலும் மக்களின் சமூக வாழ்க்கை முன்னேறியுள்ளதா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக எனக்குத் தெரிந்தவரை, பெண்கள் அங்கே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருக்கிறது. நகரங்கள் முன்னேறிய முகம் காட்டினாலும் சிறு கிராமங்களை இந்த வளர்ச்சிகள் அடைகின்றதா என்பதே சந்தேகம்.

நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஏற்கெனவே OPEC மூலமாக இனந்திருக்கின்றன. ஆனால் ஒன்றியமாக இணைய அனவரையும் கவர்ந்த ஒரு தலைவர் வேண்டும் (நாசர் போல). ஆனால் இந்த குறு மன்னர்கள் அதை யோசிக்கவில்லை. தேவையும் இல்லை என நினக்கிறார்கள். எண்ணை, மதம் இவர்களை இணைத்தாலும் மத உட்பிரிவுகளை (ஷியா, சுன்னி மற்றும் வஹாபி) இவர்களால் வெல்ல முடியவில்லை (வெல்ல வேண்டுமா என்பது வேறு). அது நடக்கும் வரை ஒன்றினைந்த மாகாணங்களாக ஆக இயலாது.

அமெரிக்கா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

பொருளாதாரம்? நிச்சயமாக இல்லை. முன்பே சொன்னது போல் எண்ணை இல்லையெனில் பொருளாதாரம் இல்லை.

படைபலம்? இல்லை. இயற்கை வளம்? கேள்விக் குறிதான்.

அரசியல் பலம்? குரான் வழி ஆட்சி நடப்பதால் இவைகள் இணைய வாய்ப்பு உண்டு. ஆனால் அரசியல் முதிர்ச்சி அடைய மத வழி அரசியல் மட்டும் போதாது.

பி.கு.: ஒரு கேள்வி தோன்றியது…ஏன் மேற்கத்திய ஊடகங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளை இன்னும் அலாவிதீன், அலிபாபா காலத்திலேயே பார்க்கின்றன என்று…பின் யோசித்ததில் அந்தக் கோணத்தில் படிக்க வேண்டியது நிறைய, இந்த வலைப் பக்கத்திற்கு பொருந்தாது மற்றும் அது சக நண்பர்களோடு விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று.

ராஜேஷ் சந்திரா