மேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.
“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்!”
“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்!”
”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”
காட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.
பணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்!’ கலாம்.
செய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.
“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்!” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க! இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.
“நீங்க இப்போ கண்விழிக்கலாம்! உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு! ஆனா”.
”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.
“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”
இதைத்தான் Rice Ceiling என்கிறார்களா!?
நேற்றைய கதைக்கு செம வரவேற்பு.
சொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.
“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”
நக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா? அது துரத்தியதா? எப்படி பிழைத்தீர்கள்? என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது!”
“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா? எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்!”
இப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்!”
“இதுதான் இன்றைய தமிழ் உலகமா?” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”
தமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”
ஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”
சொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”
நொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா!”
















Nanjil Nadan meet at New Jersey: Live Report & Commentary by sharpshooting critic Dyno
Thanks: @dynobuoy
http://twitter.com/dynobuoy/status/209440304162545664
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, Commentary, Comments, Critics, Discussions, Dyno, Dynobuoy, Feedback, Forums, Live, Meets, Naanjil Naadan, Nanjil Nadan, NJ, NN, NYC, Opinions, Readers, Report, Tamils, Thamils, Twitter, Writers