எனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.
அமெரிக்காவும் என்னைப் போலத்தான்.
ஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.
கூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.
இப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.
இந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும்? எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்?
சில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:
எண்ணெய் & எரிவாயு
சவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.
எது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.
வாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.
முப்பரிமாண அச்சு
1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.
எனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.
இன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.
உடல்நலம் & மரபியல்
ஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.
அது இருக்கட்டும்.
இருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.
எனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.
உங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.
செயற்கை உயிரியல்
மனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
காருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.
சுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.
இவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.
தண்ணீர்… தண்ணீர்
அடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.
கரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.
இறுதியாக…
நானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.
அதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
சிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.
பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை
பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.
எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.
இப்பொழுது கேள்விகள்:
1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?
2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?
3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?
4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)
5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?
6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?
7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?
8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?
9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?
10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆசிரியர், ஆய்வு, ஆராய்ச்சி, கல்வி, சம்பளம், சொல்வனம், ஜெயமோகன், திறமை, படிப்பு, பதில், பொறியியல், மாணவன், வேலை, Colleges, Comments, Compensation, Education, Employment, Engg, Engineering, Feedback, Jobs, Opportunities, Professors, Reply, Research, salary, Students, Study, Teachers, Tech, Technology, Thesis, University