Tag Archives: Doordarshan

Mayanti Langer – Indian Cricket Commentators

இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.

வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.

நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.

அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.

ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.

அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.

மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.

கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.

சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

Who is Who in Tamil TV Morning Shows

ஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.

கலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.

சன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.

பொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.

ஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.

பேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.

இதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.