ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.
கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!
மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம், சமாதானம், பொருளியல் – ஒவ்வொரு நாளும் சொல்வனத்தில் சுடச்சுட விரிவான, விவரமான கட்டுரை.
இன்று பணக்காரர்கள் ஏன் மேலும் பெருஞ்செல்வந்தர்களாக ஆகிறார்கள் என்பதை எளிமையாகச் சொன்னவர்களுக்கான விருது குறித்த விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
பரிசு பெற்றவர்களின் கருத்தோடு ஒப்புக் கொள்கிறீர்களா?
ஒரு நாடு உள்கட்டமைப்பைக் திட்டமிட்டு, கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சந்தை விலையைப் பயன்படுத்தினால், அது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது நோபல் பெற்றவர்கள் முன்மொழியப்பட்டதை விட தெள்ளத் தெளிவைக் கொண்டுள்ளது, காலப்போக்கில் என்ன நடந்தது என்பதற்கான உண்மைகளுடன் பொருத்தமாக இருக்கிறது. – பில் கேட்ஸ் பார்வை
பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.
அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.
கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.
திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.
அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்
அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.
இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.
தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,
கூடுதல் கவனம்,
சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்
முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.
உதாரணமாக – S-O-R-R-Y
இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”
தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.
சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?
சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?
சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?
சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?
சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!
கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.
ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.
பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.
பெற்றோர்களுக்கு
பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.
வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.
அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.
ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை
வெந்நீர் சூடு போதுமா?
பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.
சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.
இன்னிக்கு சூடு போதலே என்பார்
இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.
ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.
அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.
அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.
இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.
ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.
ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.
வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…
அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.
அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.
தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.
தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்
தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை
ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde