Tag Archives: பெற்றோர்

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி – தமிழ்ப் பள்ளி கொண்டாட்டங்கள்

பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.

அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.

கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.

திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.

அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்

அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.

இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.

தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,

கூடுதல் கவனம்,

சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்

முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.

உதாரணமாக – S-O-R-R-Y

இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”

தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.

சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?

சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?

சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?

சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?

சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!

கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.

ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.

பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.

பெற்றோர்களுக்கு

பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.

வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.

அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.

ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை

வெந்நீர் சூடு போதுமா?

பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.

சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.

இன்னிக்கு சூடு போதலே என்பார்

இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.

ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.

அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.

அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.

இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.

ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.

ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.

பக்குவமாக ஆடிக் கறக்கும் மாட்டை ஆடியும் பாடிக் கறக்கும் மாட்டை பாடியும் கறக்க வேண்டும்.

அமெரிக்க வாழ்க்கை என்பது வானவில் போன்றது.

அதில் ஆங்கிலம் ஒரு வண்ணம்.

வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…

அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.

அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.

தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.

தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்

தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை

ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!

Cultural identity, family relationships & the complexities of Intergenerational Communication

கதைசொல்லி சீனத்து பாட்டி. அவளுக்கு பிழையற்ற ஆங்கிலம் வாராது. எனவே, அவளின் கொச்சை மொழியிலேயே சம்பவங்களைச் சொல்கிறாள். அவளின் அமெரிக்க மகளின் பார்வையில், அந்தப் பாட்டி மோசமான குழந்தை காப்பகர். பாட்டிக்கு மாப்பிள்ளை புருஷ லட்சணமாக வேலைக்குப் போகவில்லையே என்னும் அங்கலாய்ப்பு. பொண்ணாக பொட்டி பாம்பாக பேத்தியை வளர்க்க எண்ணும் இறுமாப்பு.

முழுக்கதையும் சொல்லப் போவதில்லை. #சொல்வனம் இதழில் வாசியுங்கள்.

அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.

இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:

  1. “Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
  2. “The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
  3. “The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்

எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.

#Solvanam தளத்தில் படிக்கலாம்

Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.

Vicky Donor: Hindi Movie Intro: Life as a Sperm donor after Marriage

இந்தியாவின் #1 மூலதனமான மக்கள்தொகை பிரச்சினையை இந்திப்படம் ’விக்கி டோனர்’ விவாதிக்கிறது. தில்லி டாக்டர்கள் தமிழக காளிமுத்துகள் போல் ரொம்ப காலமாகவே பிரபலம்.

விவாகரத்து ஆனவர்களை மருமகளாக ஆக்குவதில் பெற்றோர் காட்டும் பக்குவம்; திருமணங்களில் ஈகோவும் இனக்கவர்ச்சியும்; மன அழுத்தம் காரணமாக பாலியல் சிக்கல்; முதிர்கன்னியை மணப்பதால் மகப்பேறு இல்லாமை; கவலை இல்லா வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் இடையே உள்ள paradox; தத்து எடுப்பதில் உள்ள அசூயை; ஆற்றல் மிகுந்த நல்ல விந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்; மரபணு சார்ந்து கிடைக்கும் பாரம்பரிய திறமையா அல்லது வளர்ப்பதின் மூலமே வெற்றித் திருமகனை உருவாக்க முடியுமா என்னும் விவாதம்…

இவ்வளவு விவகாரமான விஷயங்களை அலசினாலும், ரொம்பவே அலட்டிக்காமல், அதிகம் அழுவாச்சி சிந்தாமல் நகைச்சுவையுடன் எதார்த்தமாக சொல்லிச் சென்றார்கள். படத்தின் வெற்றிக்கு சேலம் சிவராஜ் – அன்னு கபூர் அவசியமான காரணம்.

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை

நன்றி: Pajama Diaries