Tag Archives: ஜனாதிபதி

அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்

எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.

ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.

சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.

–  சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்

–  அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்

–  தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்

அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.

அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.

தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.

பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.

அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!

அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.

அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.

காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.

நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.

போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,

பாபா

Fiction: Zadie Smith: “MOONLIT LANDSCAPE WITH BRIDGE”

ஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.

Van_der_Neer_-_Moonlit_Landscape_with_Bridgeஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.

சிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள்? முடிவுக்கு மிக அருகேவா? அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா? பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.

கதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது? கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.

ஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.

கதையின் உவமைகளும் செழுமையானவை.

தன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.

அமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.

கதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது?

Obama 2nd Term start: State of the Union 2013

நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?

Mitt Romney or Barack Obama: 4 More Days or 4 More Years?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா? அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா?

மிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.

பாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.

அது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.

பராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.

ஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.

கடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.

சென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.

அமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது? தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்?

வங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.

இந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.

ஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.

ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.

இன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.

சரி… யார் ஜெயிப்பார்கள்?

சென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.

இந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.

எனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன!

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.

அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.

இந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:

இந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.

இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

மாலன்

தோழா… தோழா! தோள்கொடு தோழா!

  • இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
  • ‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.
  • ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.
  • டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
  • இந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் டெட் ஸ்டீவன்ஸை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.

ஏன்?

தொடர்புடைய பதிவுகள்:

1. Alaska Senator Stevens Is Guilty Over His Failures to Disclose Gifts – NYTimes.com: Senator Ted Stevens, the Senate’s longest-serving Republican, was found guilty of violating ethics laws for failing to report gifts and services that he was given by friends.

2. U.S. Senator Sarah Palin

3. John McCain calls for Ted Stevens to quit; Sarah Palin doesn’t go quite that far | Top of the Ticket | Los Angeles Times

4. UPDATE: Sarah Palin joins the push for Ted Stevens to resign | Top of the Ticket | Los Angeles Times

கருத்துப் படங்கள்: அமெரிக்க ஜனாதிபதி & தேர்தல் – MAD Mag

மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரினார் ரைஸ்; ஜான் மெகெயின், ஹில்லரி கடவுச்சீட்டுகளும் அத்துமீறப்பட்டுள்ளன

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், யாராவது தனது பாஸ்போர்ட் தகவல் கோப்புக்களைப் பார்த்திருந்தால் தான் மிகவும் கவலையடைந்திருப்பேன் என்று கூறியதாகவும் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. FACTBOX: Obama, Clinton, McCain passport files breached | Reuters

2. FAQ: The passport breach: What exactly is in those records?

3. State Dept. investigating passport-data snooping – USATODAY.com

அமெரிக்க அதிபர் தேர்தல் – எம் மணிகண்டன் (தினமணி)

உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.

அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதால் அவரே உலகிலேயே அதிக வல்லமை படைத்தவராகிறார்.

இவருக்கு நேரெதிர் அமெரிக்காவின் துணை அதிபர். காலையில் எழுந்தவுடன், ‘அதிபர் நலமாக இருக்கிறாரா?’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மீண்டும் தூங்கப் போய்விடலாம் என்று துணை அதிபரின் பணிகளைப் பற்றி நகைச்சுவை யாகக் குறிப்பிடுவதுண்டு. அதிபருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய் செயல்படமுடியாத நிலைக்குப் போனாலோ, அவர் இறந்துபோனாலோ துணை அதிபர், அதிபராவார். இது தவிர, செனட் அவையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற் றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டுமே தற்போது முக்கியக் கட்சிகளாக இருக்கின்றன. மூன்றாவது தேசியக் கட்சி உருவாவதற்கோ, மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறவோ வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இப்போதைக்கு இரு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களே தொடர்ந்து அதிபராகவும் துணை அதிபராகவும் இருந்து வருகின்றனர்.

நாடாளுமன்ற அவைகளையும் இரு கட் சிகளின் உறுப்பினர்கள்தான் நிரப்புகி றார்கள். அரிதாக வேறு கட்சி அல்லது சுயேச்சைகள் இடம்பெறுவதுண்டு.

மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடை முறை மிகவும் சிக்கலானது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

தேர்தல் பிரசாரம்:

அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இரு கட்டங்களைக் கொண் டது. முதலாவது கட்சிகள் நடத்தும் வேட்பாளர் தேர்தலுக்கான பிரசாரம்.

இரண்டாவது, வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டதும் இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பிரசாரம்.

பொதுவாக அதிபராக இருப்பவரோ அல்லது துணை அதிபராக இருப்பவரோதான் அடுத்த தேர்தலுக்கு அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அதிபராக இருக்கிறாரோ அந்தக் கட்சியின் வேட்பாளர் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுவார். அதில் போட்டி இருந்தாலும்கூட, அதில் அவரே வெற்றிபெறுவார். அதிபர் புஷ் இரண்டு முறை பதவி வகித்துவிட்டதாலும் துணை அதிபர் டிக் சீனி போட்டியி டப் போவதில்லை என அறிவித்துவிட்ட தாலும் 2008-ம் ஆண்டுத் தேர்தலில் இந்த நிலை இல்லை.

வேட்பாளர் தேர்தல்கள்:

நமது நாட்டில் நடப்பதுபோல் வேட்பாளர்களைக் கட்சி மேலிடப் பிரதிநிதிகள் மட்டுமே முடிவு செய்வதில்லை. கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்குவகிக்கின்றனர். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சிகளின் மாநிலப் பிரிவு கள் நடத்தும் தேர்தல்களே வேட்பாளர் தேர்தல் எனப்படுகின்றன. ஒரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.

பொதுவாகத் தேர்தல் நடக்கும் ஆண் டின் துவக்கத்தில் இருந்தே வேட்பாளர் தேர்தல்கள் நடக்கின்றன.

வேட்பாளர் தேர்தல்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.
கட்சிகளும் வெவ்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கென இரு கட்சிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வாக்கை ஒதுக்கியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை நிலையானதல்ல. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதுடன், கட்சிகளும் தங்களது விதிமுறைகளின்படி வெவ்வெறு எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஒதுக்குகின்றன. எடுத்துக்காட் டாக, 2008-ம் ஆண்டில் நாடுமுழுவதும் சேர்த்து ஜனநாயகக் கட்சிக்கு 4029 பிரதிநிதிகள் வாக்கு உண்டு. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் 2025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள் வாக்குகள் 2380. வெற்றிபெறுவதற்கு 1191 வாக்குகள் தேவை.
வேட்பாளர் தேர்தல்கள் காகஸ் மற்றும் பிரைமரி என்ற இரு பிரிவுகளைக் கொண் டது. இவற்றுக்கும் உட்பிரிவுகள் உண்டு.
சில மாநிலங்களில் காகஸ் முறையிலிலும் சில மாநிலங்களில் பிரைமரி முறையிலும் வேட்பாளர் தேர்தலைக் கட்சிகள் நடத்துகின்றன. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி காகஸ் முறையில் தேர்தலை நடத்தினா லும் மற்றொரு கட்சி பிரைமரி முறையில் தேர்தலை நடத்தக்கூடும்.

பொதுவாக வேட்பாளர் தேர்தல்கள் முதலில் நடப்பது அயோவா (காகஸ்) மற் றும் நியூஹாம்ப்ஷயர் (பிரைமரி) மாநிலங்களில்தான். இதற்கு எந்தவொரு பிரத்யேகக் காரணமும் இல்லை. ஆண்டுத் தொடக்கத்தில் அயோவாவில் தொடங்கும் வேட்பாளர் தேர்தல்கள் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக நடக்கும்.

இந்தத் தேர்தல்களில் கட்சியின் சார் பில் அதிபர் தேர்தலில் களமிறங்க விரும்புபவர்கள் போட்டியிடுவார்கள். வேட்பாளர் தேர்தலில் பொதுமக்கள் (அல்லது கட்சி உறுப்பினர்கள்) அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்தப் போட்டியாளர்களுக்குப் பிரதிநிதிகள் வாக்கு கிடைக்கும். அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்தல்கள் முடிந்த தும் கட்சிகளின் தேசியக் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் அதிபர் வேட்பாள ரைப் பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.

வேட்பாளர்கள் விவாதம்:

இரு முக்கியக் கட்சிகளும் வேட்பாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்ததும், அவர்கள் இருவ ரும் ஒரே மேடையில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 2 முறையாவது இந்த விவாதம் நடக்கும்.

தேர்தல் நாள்:

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர் மற்றும் துணை அதி பர் ஆகிய இருவருக்குமான தேர்தலாகும்.

இது 220 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. அமெரிக்காவின் அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நாள்காட் டியின் அடிப்படையில் நடத்தப்படுவது சிறப்பம்சம். ஒவ்வொரு லீப் ஆண்டும் நவம்பர் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் (இந்த ஆண்டு நவம்பர் 4) அதிபர் தேர்தல் நடக்கிறது. அரசியல் சட்டப்படி தேர்வாளர் குழு மூலமாகவே அதிபர் தேர்ந்தெ டுக்கப்படுகிறார். எனினும் இந்தத் தேர்வாளர் குழுவினர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதிபர் வேட்பாளருக்கு மாநில வாரியாக மக்கள் செல்வாக்கு இருந்தாக வேண்டும்.

அமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆளுகைக்கு உள் பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற (செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சமம். கொலம்பியா மாவட்டத்துக்கு நாடாளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றபோ திலும் 1964-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தப்படி 3 தேர்வாளர் களைத் தேர்ந்தெடுக்கலாம்.

கட்சியின் மாநிலத் தலைமை தங்களுக்குரிய தேர்வாளர்களை முன்னரே நியமித் துவிடுகின்றன (இதற்கும் மாவட்ட அளவிலான தேர்தல் மற்றும் பிரசாரம் உண்டு). வாக்காளர்கள் எந்தக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சி நியமித்த தேர் வாளர் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும்.

அதாவது வாக்குச் சீட்டில் அதிபர் வேட் பாளரின் பெயருக்குப் பதிலாக அவரது கட்சியின் தேர்வாளர் குழுவினரின் பெயர்களோ அல்லது சுருக்கமாக கட்சிக ளின் பெயர்களோ இருக்கும். வாக்காளர்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் பின்னர் கூடி அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒரு மாநிலத்தின் அதிக வாக்குகளை (சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான) வேட்பாளர் ஒருவர் பெற்று விட்டால், அந்த மாநிலத்தின் அனைத்துத் தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார். உதாரணமாக ஒரு மாநிலத்தின் தேர்வாளர்கள் குழுவின் எண் ணிக்கை 30 என வைத்துக் கொண்டால் அந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் மற்றவர்களைவிட அதிக (அல்லது 50 சதவீதத்துக்கும் அதிக மான) வாக்குகளைப் பெற்றுவிட்டால் அவர் அந்த மாநிலத்தின் 30 தேர்வாளர்க ளையும் பெற்றுவிடுவார் (மெய்ன் மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்கள் மட்டும் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தேர்வாளர்களை ஒதுக்கீடு செய்கின்றன).

தேர்வாளர்கள் அனைவரும் அந்த வேட்பாளரின் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பின்னர் நடக்கும் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். ஒரு கட்சியால் நியமிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதும் உண்டு.

இதைத் தடுப்பதற்கு சில மாநிலங்களில் சட்டம் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் தண்டனை பெற்றதில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடை முறையை உற்று நோக்கினால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுவதும் மக்களின் பெரும்பான்மையான வாக் கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெரியவரும். அதாவது மாநில ரீதியில்தான் அதிபரின் வெற்றி கணக்கிடப்படுகிறதே தவிர, நாட்டின் ஒட் டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் அல்ல.

உதாரணமாக 2000-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான புஷ், நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 47 சதவீதத்தையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜன நாயகக் கட்சி வேட்பாளர் அல்-கோர் 48 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

ஆனால் தேர்வாளர் வாக்குகளின் அடிப்ப டையில் புஷ் வெற்றி பெற்றார்.

அதிபர் தேர்தலை மத்திய அரசு நடத்துவது இல்லை என்பது கவனிக்க வேண் டிய மற்றொரு விஷயம். ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில சட்டத்துக்கும் மத்திய அரசியல் சட்டத்துக்கும் உட்பட்டு வெவ்வேறு முறைகளில் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துகின்றன. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே தேர்தலின் நோக்கம்.

நாடு முழுவதும் 538 தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது நாடாளுமன்ற செனட் அவை (ஒரு மாநிலத்துக்கு 2 உறுப்பினர் வீதம் மொத்தம் 100) உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதிநிதிகள் அவை (மொத்தம் 435) உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொலம்பியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தேர்வாளர்களின் எண்ணிக்கை (3) ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.

தேர்வாளர்கள் கூட்டம்:

மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் வெளியானதுமே அதிபர் யார் என்பது கிட்டத் தட்ட முடிவாகிவிடும். ஏனெனில் எந்த வேட்பாளருக்கு எத்தனை தேர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

தேர்தல் முடிந்த பிறகு, வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழ மைக்கு அடுத்துவரும் திங்கள்கிழமையன்று அந்தந்த மாநிலத் தலைநகரங்க ளில் (கொலம்பியா மாவட்டத்துக்கு வாஷிங்டனில்) கூடுவார்கள். ஆக, 51 இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டங்கள் நடக்கும். வாக்குச் சீட்டு அல்லது வெற்றுத்தாள் மூலமாக அதிபருக்கான வாக்கைத் தேர்வாளர்கள் அளிப்பார்கள். நடைமுறையில் பெரும் பாலான மாநிலங்களில், அனைத்து வாக்குகளும் ஒரே வேட்பாளருக்குச் செல்லும். அதிபர் தேர்தலுக்கான முடிவு அறி விக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதே நடைமுறைப்படி துணை அதிபருக்கான தேர்தலும் நடக்கும்.

மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். சில நேரங் களில் எந்த வேட்பாளரும் 270 வாக்குகளைப் பெறாவிட்டால், அதிபரைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை ஏற்கும். நடைமுறையில் இரண்டு வேட்பாளருக்கு அதிகமானோர் தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது இரு வேட்பாளர்களும் 269 வாக் குகளைப் பெற்றாலோ இந்த நிலை ஏற்படலாம். இதுவரை 1800-களில் இருமுறை மட்டுமே நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ரான் பால் – நியூஸ்வீக்

  1. முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா!
  2. உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!!
  3. அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!)

விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”