புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.
மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.
மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.
சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,
அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.
மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது.
ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. இந்தச் சார்பு நிலையினால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் சமூகத்தின் அசல் அகநிலைக்கு விசுவாசமாக இருக்கிறார்.
மொழிபெயர்ப்பு இலக்கியம் கதைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் தேர்வுகளையும் கலாச்சாரத் தாக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை மறுவடிவமைப்பதற்கும் மறுவரையறை செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும்.
சொல்வனத்தின் 331-ஆம் இதழ் அப்படியான செயலூக்கம் நிறைந்த தமிழக வாசகர்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
1. டோபையாஸ் ஓல்ஃப் எழுதிய ‘கணப்பின் ஒளி’: தமிழில் மைத்ரேயன் 2. சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய ‘வான வேடிக்கை’ : தமிழில் – அனுராதா க்ருஷ்ணசுவாமி 3. அருண் கொலட்கர் எழுதிய கவிதைகள்: தமிழில் – ஆர் சீனிவாசன் 4. ஆண்டன் செகாவ் உத்வேகத்தில் அசல் தமிழ்க்கதை – வார்ட் நம்பர் 6 நிர்மல் 5. ஃபிரெஞ்சுப் படங்களை தமிழில் அறிமுகம் செய்யும் கே.வி. கோவர்தனன் 6. ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-என உலக விஷயங்களை அறிவியல் தகவல்களை சுவாரசியமாக்கும் அருணாச்சலம் ரமணன் 7. ஜப்பானியப் பழங்குறுநூறு 99-100 கமலக்கண்ணன் 8. அரவிந்தரை ‘நீ இவ்வாறு இருப்பதனால்’ என தத்துவமும் பருப்பொருள் சார்பற்றதாகவும் கவித்துவமாகக் கொணரும் மீனாக்ஷி பாலகணேஷ்
மூன்றாண்டுகளுக்கு மேலாக வெண்பாக்களில் அக்கால ஆசிய இலக்கியத்தை கமலக்கண்ணன் ஜப்பானியப் பழங்குறுநூறு என நூறு கவிதைகளாக மொழிபெயர்த்து முடித்துள்ளார்.
அவரை வாழ்த்த வாருங்கள்.
இன்னும் நிறைய ஆக்கங்கள்; படைப்புகள். நீங்களும் உங்கள் எழுத்துக்களை அனுப்புங்கள்.
உலகளவில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் அசல் உரையை விட தங்களின் பிறமொழியாக்கத்திற்காக இலக்கிய அங்கீகாரம் பெறுவர். மன்டோவிற்கும் டோபியாஸ் வுல்ஃப்-க்கும் செகாவிற்கும் டாட்டி-க்கும் இதெல்லாம் புகழாரம்.
டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.
ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி! மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம். ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார். கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார். அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.
நீலத்தில் இத்தனை நிறங்களா!
உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.
டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.
அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.
முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.
சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.
தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.
‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.
வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.
நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.
மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.
எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!
நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )
1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
7. மழைக்காலம் – ஆமிரா
8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
12. மிளகு-81 – இரா. முருகன்
13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதுண்டா? அந்த எளிமையான அனுபவத்தை இந்தப் புனைவு பகிர்கிறது.
சமீபத்தில் பாஸ்டனில் ரமணன் சார் நடிப்பில் எஸ்.பி. க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாரதி யார்’ நாடகம் அரங்கேறியது. அது அற்புதமான காட்சி + உணர்வு + பாக்கியம்!
ஆனால், அதில் கூட இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் போல் சில பல நடந்தன. எனவே, கதை எனக்குக் கவர்கிறது; ரசிக்க வைக்கிறது.
அழகியசிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ சந்திப்பு. ’குவிகம்’ அமைப்பு கூடும் வாசகர் ரசனை கூட்டம். எதற்காக நீங்கள் அந்த அமைப்பின் சபைகளுக்குச் செல்கிறீர்கள்? உங்களுக்கு அவை ஊற்றுக்களமாக அமைகிறதா?
ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!!
பி.கு. #1: கதை எழுதியவரை எனக்குத் தெரியாது. பிகு. #2: கதையை வாசித்து விட்டு கோட்பாடு ரீதியாக வாசிப்பவருக்கு @ஃபாலோயர், @ஹைலைட் எல்லாம் எரிதமாக அனுப்பப்படும்.
நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!
இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.
மருத்துவத்திற்கான நோபல்பரிசு இன்று அறிவிறிக்கிறார்கள்.
இரண்டையும் தெரிந்து கொள்ள சொல்வனம் வர வேண்டுகிறோம்.
நன்றி பேராசிரியர் ரமணன்.
புரதத்தின் எம்ஆர்என்ஏவை மாற்றியமைப்பதன் மூலம் மற்ற புரதங்களை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ (மைஆர்என்ஏ) ஐ அவர்கள் கண்டுபிடித்தனர், புரதத்தின் படியெடுத்தல் அல்ல.
இதற்கு முன்னர், மரபணுக்கள் (புரதங்கள்) பெரும்பாலும் டிஎன்ஏவின் வரிசைமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கருதப்பட்டது, அவை படியெடுத்தல் காரணிகளைக் கட்டுப்படுத்தின.
புரத உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் படியெடுத்தல் காரணிகளைக் காட்டிலும் மரபணு வெளிப்பாட்டின் செயல்பாட்டில் பிற்பகுதியில் இந்த ஒழுங்குமுறை ஏற்படுவதை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கவனித்தனர்.
சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.
வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.
இந்த 318ஆம் இதழைப் பார்த்தால் ஏழு கதைகள் ஏழு மொழியாக்கங்கள்
மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்: 1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்
2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.
3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.
4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.
5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.
கூடவே… யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?
இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்… நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.
சிறுகதை என்றால் அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும் ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும் இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.
இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.
நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?
புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.
312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை: 1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள் 2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).
கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.
உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.
நல்ல மலையாளப் படம் போல் தத்ரூபமான கதை. வெண்முரசு எழுதியதின் மிகுதியில் உருவான சேடி. தத்துவமும் குட்டிக்கதையும் பின்னிப் பிணைந்திருக்கும் பாதை.
கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, ஞானபூமி போன்ற இதழ்களில் படித்திருக்க வேண்டியது; பார்த்தனும் முராரியும் உரையாடுவது; சாந்தமாக நிச்சிந்தையாக நேரம் எடுத்துக் கொண்டு நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருப்பது.
இந்த 310ஆம் சொல்வனம் இதழில் ராமராஜன் மாணிக்கவேல் எழுதிய “கொடை” குறிப்பிடத்தக்க ஆக்கம். வாசியுங்கள்
அவற்றை தலைசிறந்த ஓவியர்கள் கொண்டு வடிவமைப்பது பிரசித்தம். அன்றைய ஆனந்த விகடனுக்கு கோபுலு, மாலி. இதயம் பேசுகிறது வாராந்தரிக்கு மாயா. குமுதம் குழுமத்தில் இராமு, அர்ஸ், மாருதி, வர்ணம் என எல்லோரும் பங்களித்ததாக நினைவு.
வயதானவர்களுக்கு பழைய நினைப்பு எப்பொழுதும் பிளாட்டினம் காலம். தீபாவளி சிறப்பிதழோ புத்தாண்டு மலரோ கொண்டு வந்து, பெரிய புத்தகத்தை வெளியிட்டு, கடைகளுக்கு அனுப்பி வைத்து விட்டால் — நியு யார்க்கர் பதிப்புக் குழு மாதிரி சுருட்டும் விஸ்கியும் பருகாவிட்டாலும், அந்த அச்சாபீஸ் ஊதுபத்தி மணக்க, இதழ் வெளியாக உழைத்த ஒவ்வொருவரும், மகப்பேறை அடைந்த மகிழ்ச்சியோடு அந்த நூலைக் கொண்டாடினார்கள்.
இன்றைய இணையச் சூழலில் ஒரேயடியாக இத்தனை கனமான விஷயங்களைக் கொடுத்தால் எவரும் வாசிக்க மாட்டார்கள். ஒவ்வொரு கட்டுரையாக, தனித்தனி தினங்களில், இந்திய விடுமுறைகளைத் தவிர்த்து, போதிய அளவு முன்னோட்டங்களை சமூக ஊடகங்களில் துளிரவிட்டு, புதன் சாயங்காலமாக வலையில் போட்டால், வாசகர்கள் அள்ளும். அதன் புறகு அந்தப் பதிவிற்கு துணைப் பதிவு, கொசுறு கலவரம், அடுத்த நாள் மீம் என்று விளம்பரங்களையும் விழியங்களையும் உலவ விட வேண்டும்.
இது சமூக பரவல் சித்தாந்தம். இதற்கும் ஓவியர்களுக்கும் என்ன சம்பந்தம்?
ஓவியர்கள் கண்ணைப் பறிக்கும் செப்படி வித்தைக்காரர்கள்; சமூகப் பம்பல்கள் கண்ணில் பட்ட இடமெல்லாம் விதை தூவும் விளம்பரதாரர்கள். சித்திரக்காரர் உங்கள் சிந்தையை நீங்களே அறியாமல் கவர்வார்; சமூகப் பம்பல்காரர் அலறி முகத்தில் அடித்து ஆக்கிரமிப்பார். எழுத்துக்காரரின் ஆக்கத்தை தூரிகை கொண்டு தூண்டில் போடுபவர் அவர். மூச்சு முட்டுமளவு நாமம் அடித்து பட்டை போட்டு எழுத்தையும் சிந்தையையும் மறைப்பவர் மீம்காரர்.
செல்பேசி இருப்பவரெல்லாம் ஒளிப்படம் எடுத்து தள்ளுவது இக்காலம். இந்தக் காலத்தில் நல்ல புகைப்படக்காரரை கண்டுகொள்வது எவ்வளவு கடினமோ… அதை விட கடினம்: நல்ல படக்காரரை கண்டுகொள்வது.
சாட் ஜிபிடி-யோ, பிங் அரட்டை பெட்டியோ, டால்-ஈ, மிட் ஜர்னி, கூகுள் பார்ட் என எந்தப் பக்கம் பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு ஓவியம் தீட்டுகிறது. கைவிரல்களை எண்ணாத வரைக்கும் அசல் படைப்பாளி மாதிரியே பாவ்லா காட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழுக்கும் இந்தியத்திற்கும் புனைவிற்கும் பொருத்தமாக வரைய இருவர் கிட்டி இருக்கிறார்கள்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde