தமிழோவியத்தின் பிறந்தநாள்

ஞாயிறு மதியம் இரண்டு மணி இருக்கும். உண்ட களைப்பு. கொஞ்சம் ‘சியஸ்டா’வாக சின்னத்திரை ஓடினாலும், கண்மூடும் நேரம். செல்பேசி பாட ஆரம்பித்தது. ‘எவண்டா இவன்… இந்த நேரத்தில…’ என்னும் சோம்பேறித்தனத்துடன் எடுத்தால் ‘தமிழோவியம்’ கணேஷ் சந்திரா. கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடமாக சனி, ஞாயிறுகளில் என் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தாலே தமிழோவியமாகத்தான் இருக்கணும் என்று எண்ண வைக்குமளவு, விடாது பங்களிக்க வைக்கிறார்.

அவர் என்னை படுத்துவதால், நானும் அவரை நிறையவே வைவதுண்டு.

பொறுமையாக நான் சொல்லும் புலம்பல்களைக் கேட்டுக் கொள்வார். என்னுடைய நூற்றியெட்டு அட்வைஸ்களை பதின்மூன்றாவது தடவையாக காதில் போட்டுக் கொள்வார். புதிய தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டால், அந்த டெக்னாலஜி, தமிழோவியத்தில் எப்படிக் கொண்டு வரலாம் என்று யோசிப்பார். மதிக்காமல், மிஸ்ட் கால் ஆக்கினாலும், விடாக்கண்டராக பிடித்து விடுவார்.

விளம்பரங்களின் ஆயுள்காலமாக நூறு தடவை பார்வையில் படுவதை சொல்வோம். வலையகத்தின் டெம்ப்ளேட்டிற்கு ஆறு மாதம். இந்த மாதிரி மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு உண்டான ‘பெஸ்ட் ப்ராக்டிஸசை’ தமிழோவியம் தொடர்ந்து செயலில் காட்டுகிறது. வார்ப்புருவை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண்ணுக்குக் குளிர்ச்சியாக மாற்றி வருகிறது. பழைய பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றி வைத்திருக்கிறது.

எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதுடன் நிற்காமல், அதன்மேல் சென்று தொடர்ச்சியாக அவர்களின் படைப்புகளைத் தொடர ஊக்குவிக்கிறது. நான்கு வருடங்களாக அசராமல் செயல்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் வலைப்பதிவு நடத்துகிறேன். பல சமயங்களில் ‘மயக்கமா கலக்கமா’ என்று உணர்ந்ததுண்டு. போற்றுவார் போற்றும்போது மனது றெக்கை கட்டிப் பறந்தாலும், தூற்றுவார் நாக்கின் மேல் பல் அருவாள் போட்டு குத்தும்போது ‘I have got better things to worry about’ என்று ஏறக்கட்டிவிட்டு, பெப்ஸி… சாரி ‘ஆச்சி உங்கள் சாய்ஸ்’ உமாவின் தொலைபேசியை முயற்சிக்கவும், குடும்பத்துடன் நியு ஜெர்ஸியின் உள்ளரங்கு விளையாட்டு பார்க் செல்லவும், நெட்·ப்ளிக்ஸின் ஆதிகால ஹாலிவுட் படங்களும் இக்கால ஸ்பானிஷ், இத்தாலிய, ப்ரென்ச் படங்கள் பார்த்தும் நேரம் கழிக்க மனம் எண்ணும்.

அவ்வாறு எல்லாம், மனம் கலங்காமல், தொடர்ச்சியாக வடிவிலும், உள்ளடகத்திலும், பல்சுவையிலும் மேம்படுத்தலுடன் தமிழோவியம் செயல்பட்டு வருகிறது. அவ்வாறே தொடர்ச்சியாக மேலும் வளரவேண்டும்.

‘கஜினி’யில் சஞ்ஜய் ராமசாமி சொல்வது போல் ‘தமிழோவியம் சிறப்பாக பெரிய அளவில் பேசப்படும் என்று சொன்னால் தன்னம்பிக்கை; அது என்னால் மட்டும்தான் முடியும்னு சொன்னா தலைக்கனம்’. எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு மதியமும் என்னுடைய தொலைபேசி சிணுங்காமல் இருப்பதும், தமிழில் இணைய எழுத்துக்கள் பேசப்படுவதும், வலையில் தமிழ்நுட்பம்தான் சிறந்த தொழில்நுட்பம் என்று கருதப்படுவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

தமிழோவியத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

– பாஸ்டன் பாலாஜி


|

Martina Hingis 

Martina Hingis Posted by Picasa

நந்தவனத்தில் ஹின்ஜிஸ்

Martina Hingis
அடிபட்டு, ஓய்வு விளையாட்டு

Martina Hingis of Switzerland against Maria Vento-Kabchi of Venezuela at the WTA Mondial Australian Photo: Getty Images
ஆஸ்திரேலியன் ஓபனில் மீண்டும் மார்டினா


|

Martina Hingis of Switzerland celebrates victory i…

Martina Hingis of Switzerland celebrates victory in her her match against Maria Vento-Kabchi of Venezuela at the WTA Mondial Australian Women’s Hardcourts at the Royal Pines Resort on the Gold Coast, Australia.
Photo: Getty Images
 Posted by Picasa

Sideways

சைட்வேஸ் ::

ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைத்திருந்தார்கள். எனவே, குறைவான எதிர்பார்ப்புகளுடன் பார்க்க ஆரம்பித்தேன்.

நாயகனுடன் ஒன்ற முடிகிறது.

‘கவலை யாருக்கு இல்ல?
அதக் கடந்து போவணும் மெல்ல!’

என்று வரும் ‘ஆதி’யின் லேலாக்குப் பாடல் போல, தத்துவத்தை போட்டு உடைக்காமல், உள்ளர்த்தமாக சொல்கிறார்கள்.

நானும் வலைப்பதிவு வைத்திருக்கிறேன். வேலை பார்க்கும் ஒவ்வொரு நாளும் ஏதாவது எழுதுகிறேன். எழுதியது பிரமாதமாக இருக்கும் என்னும் மிதப்புடன் தமிழ்மணம், திண்ணை-களில் சமர்ப்பிக்கிறேன். நண்பர்களும் படித்துவிட்டு தோளில் தட்டிக் கொடுக்கிறார்கள். ‘நகுதற் பொருட்டன்று’ என்று நினைப்பவர்கள் புத்தகம் போடுமாறும், பத்திரிகைகளில் எழுதுமாறும், சி# 2005 படிக்குமாறும் எடுத்துரைக்கிறார்கள்.

சைட்வேஸ் நாயகன் மைல்ஸ், ஓர் எழுத்தாளன். எழுத்தில் சோபிக்காததில், திராட்சை ரசத்தில் குளித்தெழுகிறான். தன்னைவிட சிறந்த, மது விமர்சகன் கிடையாது என்பது போல் குடிக்கிறான்.

மூழ்காத ஷிப்பான ஃப்ரெண்ட்ஷிப்புக்கு எடுத்துக்காட்டாக ஜாக் வருகிறான். மைல்ஸுக்கு உற்சாகமுண்டாக்க முயற்சிக்கிறான். அடுத்த வாரம் நடக்கப் போகும் ஜாக்-கின் திருமணத்தை முன்னிட்டு கல்லூரி தோழர்கள் இருவரும் சிற்றுலா சென்று திரும்புவதுதான் திரைப்படம்.

எழுத்தாளன் மைல்ஸ் wine connoisseur-ஆக நினைப்பது போல், துணை நடிகன் ஜாக்-கிற்கு ஸ்திரீ என்றால் ‘ரெடி’ என்று அலைகிறான். தங்களின் கவலைகளை மறக்க, தேர்ந்தெடுத்த தொழிலில் சோபிக்காததை கண்டுகொள்ளாமல், ஸைடு வாங்குகிறார்கள்.

மைல்ஸ் சொல்லும் படத்தின் உயிர்நாடி வசனத்தைக் கொண்டு, ‘சைட்வேஸ்’ தலைப்பின் குறியீடாக ‘pinot noir’ என்னும் வைன் வகையை சொல்லலாம்:

‘அந்த விதமான திராட்சையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம். சரியான நேரத்தில் பறிச்சுடணும். தோல் பதம் சரியா இருக்கணும். கொஞ்சம் பிசகினாலும் சுவை குன்றிப் போயிடும். எதைப் போட்டாலும் ஒப்பேத்துற Cabernet போல் இல்ல pinot noir. எப்பவுமே கவனிச்சுப் பார்த்துகணும். அது விளையறதுக்குன்னு இடம் இருக்கு. எல்லாராலேயும் வளர்க்க முடியாது. எவனுக்கு Pinot-வின் முழு வீச்சும் உணர முடியுதோ, அவனால்தான் கலக்கலா கொண்டுவர முடியும். அப்படி வந்த திராட்சையின் சுவையும் மணமும் – காலாகாலத்துக்கும் மனசுக்குள்ள புதைஞ்சு போயி, மீண்டும் மீண்டும் ஏங்க வைக்கும்!’

உப்பு பெயராத விஷயம் கூட கற்பனையாளன் கையில் எவ்வாறு சிக்குண்டு கிங்காங் விஸ்வரூபமாகிறது என்பதற்கு காட்டாக ‘மாயா’ வர்ஜீனியா சொல்லும் இடம்:

‘Wine என்பதற்கு உயிர் இருக்கே! இந்த திராட்சைகள் எப்படி வளர்க்கப்பட்டது? மழை பெஞ்சுதா? வெயில் அதிகமா? அந்த வருஷம் வெள்ளம் வந்ததா? இந்த திராட்சையை யார் அறுத்தார்கள்? எப்படி பாதுகாத்தார்கள்? நாள்பட்ட சரக்கு என்றால், அவர்களில் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள்? நீங்க வைத்திருக்கும் 61′ செவால் வைன் இப்பொழுது முதிர்ந்து, இன்னும் கொஞ்சம் நாளில் தன்னுடைய உன்னதத்தை இழக்கும் என்கிறார்கள். நாம என்னிக்கு இந்த பாட்டிலை திறக்கிறோமோ, அதற்கு ஏற்றபடி, இதன் சுவை மாறுகிறதே! நமது அனுபவங்களைக் கொண்டு வெளிப்பாடுகள் மாறுவது போல், வைனுக்கும் உயிர் இருக்கிறதோ!’

நாயகர்கள் இருவருக்கும் தங்களின் பாதை பக்கவாட்டில் செல்வதை உணர்வதில்லை. தாங்கள் இருக்கும் ஃபேண்டஸி உலகம் உறைக்கவில்லை. தங்களின் நண்பன் இடித்துரைத்தாலும் கோபம் மட்டுமே வருகிறது.

புத்தாண்டு பிறப்பதைக் கொண்டாடப் பிடிக்கிறது. கடந்த வருடம் நடந்ததையெல்லாம் பழைய ஏட்டிலே ஒதுக்கிவிட்டு விடலாம். புதிய கோப்பையிலே, புதிய அனுபவங்களிலே பழசை புறந்தள்ளி, புதுசாக வாழ்க்கையைத் தொடங்க நினைக்கிறார்கள்.

மாற்றுப்பாதையில் செல்வதே அனுதினம் நடக்கும் பாதையாக முடியாது?!

தொடர்புடைய சுட்டி: கீற்றுக்கொட்டாய்


| |

கூட்டணிக் கூட்டல் கணக்குகள்

முத்து தனது பதிவில் சொன்னது போல் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னைகள் இருக்கும் என்று தோன்றுகிறது. சென்ற இரு தேர்தல்களில் நிகழ்ந்த பங்கீடுகளைப் பார்வையிட்டால் இது தெளிவாகிறது.

இந்தத் 2006ஆம் வருடத் தேர்தலைப் பொறுத்தவரை சரியான மற்றும் சுலபமான ஒப்பீடு 2001ஆம் வருடத் தேர்தலோடுதான் என்றாலும், ஒரு பார்வைக்காக 1996 நடந்த தொகுதிப் பங்கீட்டை வைத்துக் கொள்ளலாம். தமிழகக் கூட்டணிகளில் இன்று முக்கியப் பங்குதாரர்களாக இருப்பவர்கள் இக்கட்சிகள்: திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இடது சாரிகள், மற்றும் (போனால் போகிறதென்று) பாஜக. 1996-ஆம் ஆண்டு அவை கீழ்க்கண்டவாறு போட்டியிட்டன:

மொத்த இடங்கள்: 234

திமுக கூட்டணி:

திமுக: 182
தா.ம.க: 40
சிபிஐ: 11 (? – இவர்கள் கூட்டணியில் இருந்தார்களா என்பதை ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை)

அதிமுக கூட்டணி:

அதிமுக: 168
காங்கிரஸ்: 64

தனித்து:

பாமக: 116
மதிமுக: 177
பாஜக: 143
சிபிஐஎம்: 40

2001-ஆம் ஆண்டுத் தேர்தலில் இரண்டு காங்கிரஸ்களும் ஒன்றாய் இருந்ததால், வரப்போகும் தேர்தலுடன் ஒப்பிடுவதற்குப் பொருத்தமாக இருக்கிறது. இதில் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள்:

திமுக கூட்டணி:

திமுக: 183
பாஜக: 21

அதிமுக கூட்டணி:

அதிமுக: 141
காங்கிரஸ்: 46 (காங்கிரஸ்: 14, தாமக: 32)
பாமக: 27
சிபிஐ: 8
சிபிஐஎம்: 8

தனித்து:

மதிமுக: 211

வரும் தேர்தலின் கூட்டணி நிலவரம் 2001-ஆம் ஆண்டு தேர்தலின் தலைகீழாக இருக்கிறது. பாமக, மதிமுக, காங்கிரஸ், இடது சாரி ஆகியவை திமுக கூட்டணியில் உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால், பாஜக அதிமுக கூட்டணியில் ஒண்டிக் கொள்ளலாம். அதிமுகவுடன் வேறு எந்தக் கட்சியும் இல்லை.

ஆனால், இத்தனைக் கட்சிகளை உள்வாங்கிக்கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் அஜீரணக் கோளாறு உண்டாகலாம். தொகுதிப் பங்கீடு செய்வதில் திமுக சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இவ்வாறு உள்ளது:

1. திமுக தனித்து ஆட்சி அமைக்கவே விரும்பும். தனித்து ஆட்சி அமைக்க குறைந்தபட்சத் தேவை 118 இடங்கள். இத்தனை இடங்களில் வெற்றி பெற திமுக போட்டியிட வேண்டியது எவ்வளவு என்று தீர்மானிக்க வேண்டும். 1996-இல் வெற்றி பெற்ற போது 182 இடங்களில் போட்டியிட்டு 173 இடங்களில் வென்றது. 2001-இல் தோல்வியுற்ற போது 183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக 180-க்குக் குறைவான இடங்களிலேயே போட்டியிட முடியும். ஆயினும் எந்த அலையும் இல்லாத இந்தத் தேர்தலில் 118 இடங்களில் வெல்ல குறைந்தபட்சம் 150 இடங்களிலாவது போட்டியிட வேண்டியிருக்கும் என்பது என் கணிப்பு.

2. காங்கிரஸ்: சென்ற தேர்தலில் 46 இடங்கள், அதற்கு முந்தைய தேர்தலில் (தாமக) 40 இடங்கள். இம்முறை இவர்கள் நாற்பது இடங்களுக்காவது கடுமையாக வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

3. பாமக: சென்ற முறை 27 இடங்களோடு திருப்திப்பட்டுக் கொண்டவர்கள், கண்டிப்பாக அதை விட அதிகம் கேட்பார்கள். விடுதலை சிறுத்தைகளுக்கும் அவர்கள் பங்கு கொடுக்க வேண்டியிருக்கும். நாற்பதுக்குக் குறைவாக இவர்களை திருப்தி செய்ய முடியுமா என்பது சந்தேகம்.

4. மதிமுக: இவர்கள் ஒரு wild card. சென்ற இரு முறையும் தனித்துப் போட்டியிட்டவர்கள். சென்ற பாராளுமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டு ஜெயித்தவர்கள். தனது அரசியல் செல்வாக்கின் மீது வைகோ வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஈடாக இந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க முடியுமா என்பது கேள்வி. இவர்கள் ஒரு இருபதேனும் எதிர்பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது.

5. இடது சாரிகள்: மொத்த குத்து மதிப்பாக ஆளுக்குத் தலா ஐந்தென்று இவர்களுக்கு ஒரு பத்து தொகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆகக் கூடி, 150 + 40 + 40 + 20 + 10 = 260. ஆனால் இருப்பதோ 234 தொகுதிகள்.

தன்னிடமிருந்து ஒரு பத்தைப் பிடுங்கி, காங்கிரஸிடமிருந்து ஒரு பத்தைப் பிடுங்கினாலும் போதாது. பாமகவிடம் கை வைத்தால் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி விடுவார்கள். வைகோ ஏற்கனவே கொஞ்சம் முறைப்பாக இருக்கிறார். மேலும் இவை தவிர சில இதர உதிரி கட்சிகளும் உள்ளன. தென்மாவட்டத் தொகுதிகள்/வட மாவட்டத் தொகுதிகள் பிரச்னைகள் வேறு. ஆகையால் பல கட்சிகள், கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் கருணாநிதியின் விசாலமான இதயத்தில் கிடைக்கும் இடத்துடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் இன்னமும் தீவிரமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

என் வீட்டில் வாக்காளர் பெயர் சரிபார்க்கும்போது அடையாள அட்டை வழங்குவது பற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்றுமட்டும் சொன்னார்கள்.

இப்பொழுது நடைமுறையில் இருப்பது – ஏதாவது புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை எடுத்துக்கொண்டுதான் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லமுடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க நான் சென்றபோது நானும் என் மனைவியும் வாகன ஓட்டுநர் அடையாள அட்டையைப் பயன்படுத்தினோம். பலரும் ரேஷன் கார்டுகளைக் கொண்டுவந்திருந்தனர். ஆனால் ஒரு கணவன் – மனைவி கூட்டணி கையில் எந்த அடையாள அட்டையையும் கொண்டுவரவில்லை.

வாக்குச்சாவடி அதிகாரிகள் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுத்தனர். ஆனால் கட்சி ஏஜெண்டுகள் அனைவருமே (கட்சி வித்தியாசமின்றி) அவர்கள் இருவரையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு கோரினர். குடும்பத் தலைவர் தான் இனி வீடுவரை சென்று அடையாள அட்டை எதையும் எடுத்துவர முடியாது என்று ‘பிகு’ செய்தார். ஆனால் நல்லவேளையாக வாக்குச்சாவடி அதிகாரிகள் அவருக்கு அனுமதி தரவில்லை. அவர் வாக்களிக்காமல் வீடு திரும்பினார்.

விதிகளை பொருட்படுத்தாமல்தான் நாம் நம் நாட்டை மோசமாக்கியிருக்கிறோம்.

அடுத்த நான்கு மாதங்களில் தேர்தல் ஆணையத்தால் அனைவருக்கும் அடையாள அட்டையைக் கொடுக்க முடியுமா?

நாடாளுமன்றத் தேர்தலின்போது அடையாள அட்டை வைத்திருந்த பலரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை. ஒருமுறை பெயர் வாக்காளர் பட்டியலில் வந்துவிட்டால் அத்துடன் வேலை முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்கக்கூடாது.

வாக்களிப்பது நமது உரிமை, அதைக் கேட்டுப்பெறுதல் வேண்டும்.

(பி.கு: தமிழ்நாடு, பாண்டிச்சேரியுடன் அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவையும் தேர்தலுக்குச் செல்கின்றனவாம்.)

மேலோட்டமாக பார்த்தோமென்றால்…….

தமிழக தேர்தலில் முக்கியமான தலைவலி தி.மு.க தலைவருக்குத்தான் என்பது தெளிவாக தெரிகிறது. ராமதாஸ் ஏற்கனவே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவேண்டும் என்றால் அது நாங்கள் இல்லாமல் முடியாது என்று கூறிவிட்டார்.

வைகோ கெளரவமாக சொல்லிக்கொள்ளும்வகையில் தங்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டுக்கள் எண்ணிக்கை இருக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.இதுவெல்லாம் ஒரு வகையிலான பிளாக்மெயில் என்பது தமிழகஅரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

காங்கிரஸை சமாதானப்படுத்துவது சுலபம். இங்கே துள்ளிக்கொண்டு இருப்பார்கள்.ஆனால் மாறனை விட்டு 10,ஜன்பத்தில் பேசி சரி பண்ணிவிடலாம். கம்யூனிஸ்ட் கட்சிகளை சமாதானப்படுத்துவதும் கடினமில்லை.

இவர்களுடன் ஒப்பிட்டால் அம்மாவுக்கு பிரச்சினை அதிகமில்லை. அதிகம் பேருக்கு சீட்டு கொடுக்கவேண்டிய சூழ்நிலையில்லை. ஆட்சிக்கும் பெரிதான கெட்டபெயர் இல்லை என்றுதான் சொலலவேண்டும். தேர்தலுக்காக கடந்த ஒரு வருடமாக தயாராகி வருகிறார் என்று சொல்லலாம.

தேர்தல் தேதிகள்

இன்று தேர்தல் கமிஷன் கூடி தமிழக, பாண்டிச்சேரி, அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேதிகளை ஆராய்கிறார்கள். மே மாதத்தோடு அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலம் முடிகிறது. தேர்தல் தேதிகளை கல்லூரி,பள்ளிகளுக்கு பாதிப்பு இல்லாத ஒரு நாளினை மே மாதத்தின் பிற்பகுதியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.

ஆளப் போவது யார்? 2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மி…

ஆளப் போவது யார்?

2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மிக முக்கியமான வருடம். தமிழக சட்டசபை தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இரண்டு காரணங்களினால் இந்த தேர்தல் மிக முக்கியமானதாகிறது.

ஒன்று ஜெயிக்கப் போகும் கட்சி / தலைவர்கள் தான் தமிழகத்தினை 2010 வரை ஆளுவார்கள். 2010 என்பது மானுட வாழ்வியலிலும், உலக அமைப்பிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாய் அமைந்துவிடும். இப்போதே நிறைய சமூக மாற்றங்கள், அறிவியல் தொழில்நுட்பம் என ஆரூடங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, தமிழகத்தினை 2010 வரை ஆளப்போவது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி தமிழகத்தினை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பது பில்லியன் டாலர் கேள்வி.21-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் நிலையென்ன? எப்படி வளர்ச்சியடைய போகிறோம்? மாறி வரும் உலக பொருளாதார சூழலையும், அரசியல் கோட்பாடுகளையும் தமிழகம் (முக்கியமாக சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை) எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? தமிழகம் இந்தியாவிலேயே முதலீட்டுக்கு சாதகமான மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. இதைப் எப்படி ஆள வரப்போகிறவர்கள் தக்கவைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

இரண்டாவதாக, தமிழகத்தின் மூத்தக் கட்சியான தி.மு.க.வின் தலைவரான கருணாநிதிக்கு வயதாகிக் கொண்டேப் போகிறது. அ.தி.மு.கவிலோ ஜெயலலிதாவிற்கு பின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் கிடையாது. திராவிட அரசியலின் கடைசி தேர்தலாக இது இருக்குமா ? இந்த இரண்டு திராவிட பாரம்பரிய கட்சிகளைத் தாண்டி, பா. ம.க, விடுதலை சிறுத்தைகள், கொஞ்சமாய் ம.தி.மு.க, விஜயகாந்தின் தே.தி.மு.க போன்றவைகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க வும் கம்யூனிஸ்டுகளும் தமிழகத்தின் தலையெழுத்தினை மாற்றி எழுதும் சக்தியினை பங்குப் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் நடக்காமல் போனாலும், அடுத்த தேர்தலுக்கு போகும் போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சாத்தியங்கள் இருக்கிறதா? இது தாண்டி, இந்தியாவெங்குமே பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, அரசியல்வாதிகளை பின்னி பெடலடெக்கும் ஊடகங்கள், தகவல் பெற்றறியும் மசோதா, தகவல் தொழில்நுட்ப,அதிநவீன தொழில்களின் முன்னேற்றம் என்று ஹை-வோல்டேஜில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சமமான குரல்கள் தமிழகத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. யார் வந்தாலும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வலைப்பதிவுகள் சமீபத்தில் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

இந்த முக்கியமான தேர்தலை சமூக மாற்றத்தினை உள்ளடக்குவதில் ஒரு சிறு முயற்சியாக “தேர்தல்2006” என்கிற கூட்டு வலைப்பதிவினை தொடங்கி இருக்கிறேன். ஜனவரி தொடங்கி பேச ஆரம்பிக்கலாம். எப்போது தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரியாமல் இருந்தாலும், அடிப்படை கேள்விகளையும், அரசியல் விளளயாட்டுகளையும் அலச அரம்பிக்கலாம். 234 தொகுதிகளை தொகுதிவாரியாக அலச முடியும். தமிழகமெங்கும் விரவியிருக்கும் வலைப்பதிவாளர்கள் அவரவர்கள் இடத்தின் நிலவரத்தினை பதியலாம். சாதாரணமாய் தினமும் சந்திக்கும் பல்வேறு மக்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். தமிழகம் யார் தலைமையில் ஆள வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ரோட்டில் சர்வசாதாரணமாக பார்க்கும் மக்கள் தான் எஜமான்கள். அவர்கள் நினைத்தாலேயொழிய மாற்றங்கள் வாராது. இந்த வலைப்பதிவு தேறும் பட்சத்தில், இதனை கல்லூரிகளுக்கு எடுத்து செல்லலாம். என்னளவில் ஊடகங்களில் இருக்கும் தொடர்புகளைக் கொண்டு நிருபர்களிடமிருந்து சேதிகள் சேகரிக்க முனைகிறேன். நாளைய தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான வெளியை உருவாக்கி விவாதிக்க சொல்லலாம். அவரவர் இடங்களிலிருந்து நிலவரங்களை பதியலாம். சென்ற தேர்தலை நான், அரவிந்தன் மற்றும் சில நண்பர்கள் இணையத்தில் முழுமையாக தொகுத்திருந்தோம். tamil.net இல் பங்கு பெற்றிருந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த முறை அந்தப்படை பெருகட்டும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் / தமிழகத்தின் அரசியலில் ஆர்வமிருக்கும் எவரும் இதில் பங்கு பெறலாம். தமிழகத்தில் என்னென்ன இருக்கவேண்டும், என்ன மாறுதல்கள் வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்தினை வற்புறுத்துங்கள். இதில் யார் வேண்டுமெனாலும் சேர்ந்து கருத்துக்களை பகிரலாம். நீங்கள் எந்த சார்பு நிலை வேண்டுமானால் இருக்கலாம்.(கலைஞர் தான் உலகின் உன்னதமான தலைவர், புரட்சி தலைவி போன்ற தலைவி சூரிய குடும்பத்திலேயே இல்லை, திருமா/ தலித் அரசியல் இல்லாமல் தமிழகமில்லை, மருத்துவர்.இராமதாஸ் இருக்குமிடம்தான் தமிழகத்தின் அசைக்கமுடியாத சக்தி ) எவ்விதமான கருத்தாங்களையும் முன்வைக்கலாம். தி.மு.க/அ.தி.மு.க, தலித், தமிழ் தேசியம், நக்சல்பாரி, உலகப்பொருளாதாரம், விடுதலைப்புலிகள் ஆதரவு / எதிர்ப்பு, ஈழத்தமிழர் வாழ்க்கையும் தமிழக அரசியலும், வாக்கு போடவேண்டுமா / வேண்டாமா, தேர்தல் முறைகளில் வேண்டிய மாற்றங்கள் என்ன, நேர் /எதிர் / குறுக்கு / உள்குத்து அரசியல், மூன்றாம்/நான்காம்/பத்தாம் அணி என்று எந்த தலைப்பிலும் எழுதலாம். மிகவும் சீரியஸாக எழுத வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை. பகடி, நையாண்டி, நகைச்சுவை என பல்வேறு முகங்களில் தமிழக அரசியலை ஆராயலாம். நானே ஒரு “கொள்கை / தேர்தல் அறிக்கை generator” தயார் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையினை எழுத சிரமபடும்போது நாம் உதவலாம் என்ற நல்லெண்ணம் தான் 😉 மற்றபடி இதை ஒரு மிக முக்கியமான மாற்று ஊடகமாகவும் மக்களின் குரலாகவும் மாற்றுவதென்பது மக்களின், நண்பர்களின், வலைப்பதிவர்களின் கையில் (அல்லது கீபோர்டில்) இருக்கிறது.