Category Archives: Uncategorized

உள்ளொன்று வைத்து?!



என்னடா பொம்மை போடறவன் புஷ் படத்தைப் போட்டிருக்கானே என்று தூற்ற வேண்டாம். உங்களுக்கு உண்மைய விளம்பவே இந்தப் படம். CTRL+A (CTRL பொத்தானை அமுத்திக் கொண்டே ‘a’ அல்லது Edit மெனுவில் இருந்து Select All) தட்டவும்! உண்மை விளங்கும்… புஷ்ஷின் உண்மையான முகம் விளங்கிச்சா??

நன்றி: படப்புதிர் பக்கங்கள்

வலைப்பூக்கள் நுகர்தல்

1. ஆட்டோகிரா·ப் விமர்சனத்தை அனுபவித்து எழுதியிருக்கிறார் மீனாக்ஸ். மூன்று, நான்கு பதிவுகளை எப்படி மேய்க்கிறார், தமிழை விட ஆங்கிலப் பதிவின் மேல் அதிகப் பரிவு ஏன் என்பதை இன்னொரு நாள் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், படத்தின் குறைகளை, விகடன் போல் இவரும் கண்டுகொள்ளவில்லை. நாலு கேமிராமான் எல்லாம் சாமானியனாகிய என் கண்களுக்குப் புலப்படவில்லை. எங்கோ படித்து, ‘ஆஹா… நான்கு விதமான பதிவு கிடைக்கிறதே’ என்று எல்லாம் படத்தை மறுமுறை பார்த்தபிறகும் பாராட்ட முடியவில்லை.

சேரன் என்னும் கதாசிரியர் நிறைய இடங்களில் சறுக்கியிருந்தார். நல்ல பல தமிழ்ப் படங்களில் இருந்து சுவாரசியமான பிண்ணனிகள் கடன் வாங்கப் பட்டதை விட்டு விடுகிறேன். (கடன் வாங்கியே ஓட்டும் ப்ளா·கில், அவர் ‘இதய’த்தைத் தழுவினார், ‘கிளிஞ்சல்கள்’ சாயல், ‘புது வசந்த’த்தின் தாக்கம் என்று சொன்னால், என்னுடைய காரின் டயரை நானே ப்ங்க்ச்சர் செய்தது போலாகிவிடும்). ஆனால், சேரனிடம் கேடக விரும்பும் ஒரு கேள்வி:

‘ஏன் சார்… உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்களா?’

பள்ளிக் காதலி சௌகரியமாக இருக்கிறாள். ‘பெப்ஸி உங்கள் சாய்ஸில்’ பலர் சொல்வது போல் இல்லத்தரசி. மூன்று குழந்தைகளுக்குத் தாய். (மாமியார் கூட வீட்டில் மிஸ்ஸிங்). பாந்தமான கணவன். பசி, பட்டினி, ஏழ்மையில் ஒன்றும் இல்லை. ஆனாலும், கதாநாயகன் அவளைப் பல வருடங்கள் கழித்து முதன்முறையாக சந்தித்தவுடன் கேட்கிறான், ‘ஏன் இப்படி கஷ்டப்படறே?’

மலையாளக் காதலி பணக்கார சமஸ்தானத்தில் வாக்கப்படுகிறாள். கணவனை வெட்டு குத்தில் இழந்து விடுவதாகக் காண்பிக்கப்படுகிறது. விதவையும் சோக உருவாக தம்பூராவை மீட்டிக் கொண்டு வெறுமனே காலம் தள்ளுவதாக சொல்லப்படுகிறது.

முறுவலரசி ஸ்னேஹாவை கிட்டத்தட்ட கன்னிகாஸ்திரியாகவே ஆக்கிவிட்டார்.

‘ஏன் சார்… உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்களா?’

மலையாளத்தில் மட்டுமே சம்சரிக்கும் லத்திகா, காதல் கைகூடாதபின் திருமணத்திற்குப் பிறகு தமிழில் கதைப்பது, சரஸ்வதியாக/மீராவாகத் தெளிவாக உருவகப்படுத்திய பின்பும் காணபவர்களுக்குப் புரியாதோ என்று வெளிப்படையாகக் காட்சியமைப்பது என்று ஓரிரண்டு கடுப்புகளை கண்டுக்காமல் படத்தோடு நிச்சயம் லயிக்கலாம்.

2. கருணாஸ் மட்டுமே அறிந்த தமிழ் சினிமா பார்க்கும் நல்லுலகில், கருணா குழப்பத்தை உண்டு செய்திருக்கிறார். கிழட்டு நாடோடி மூலம் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டாலும் அவருடைய சிங்கள செய்திகள் சேகரிப்பு இப்பொழுது நல்ல பயனைத் தருகிறது. சொந்தக் கருத்துக்களை இன்னும் கொஞ்சம் விரிவாகவும் (?!) பத்தி பிரித்தும் வெளியிட்டால் என்னுடைய குழம்பிய குட்டைத் தெளியும்.

நன்றி: Aging Wanderer’s Raging Rambles

“இந்தியா எப்போதோ கருணாவினைக் கொண்டு பிளக்கத் திட்டமிட்டுவிட்டது என்பது ஒருவரின் புத்திக்கூமையைப் பகிடி பண்ணுவதுபோல. தன்னைக் கொல்ல ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள், பிரபாகரன் போரைத் தொடங்க இருந்தார் என்ற இருகூற்றுகளும் கருணா சொன்னதிலிருந்து மிகவும் (அவரவர் தேவைக்காகத்) திரிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன (ரோய்ட்டர் இந்தியாவுக்குத் தலைமையகத்தினைக் கொண்டுவந்ததின் கெடுதல் இப்போதுதான் தெரிகின்றது).

பிரபாகரனா, கருணாவா என்பது எனது ஈடுபாடில்லை. இருவரிலும் பிழையும் இருக்கின்றது; இருவரும் ஈழத்தமிழர் நலனுக்கு அவசியமாகவே இருந்திருக்கின்றனர். நேற்றைக்குவரை கேர்ணல் கருணாவாக இருந்தவர் இன்றைக்குத் துரோகி கருணாவாக வன்னித்தமிழ்ப்புலிகள் சார்ந்த செய்தித்தாபனங்களிலே சொல்லப்படுவதும் உருக்காட்டப்படுவதும் நேற்றைக்கு வரை பயங்கரவாதி கருணாவாக இருந்தவர் இன்று பிரபாகரனின் கொடுங்கோன்மையை வெளிச்சொல்லும் பாதிக்கப்பட்ட கிழக்குத்தமிழர்களின் விடுதலைவீரராக இலங்கை இந்தியச்செய்தித்தாபனங்களினாலே உருவகிக்கப்படுவதும் ஈழத்தமிழன் என்றளவிலே எனக்கு ஈடுபாடானதில்லை. ”

3. தமிழ்-வலைப்பூப் பிதாமகர் மாலனின் ‘எது வலைப்பூ’ என்னும் கடிதம் பலருடைய பதிலையும் விவாதத்தையும் தந்திருக்கிறது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று யோசிக்கலாமா என்று யோசித்தபொழுது ஷார்ப்ரீடர் மூலம் பரியின் பதிவை பார்த்த பிறகு, ‘கலங்காமல் (இது செம்புலப் பெயநீர் கலங்கல்…) சொல்லியிருக்கிறார்’ என்று தோன்றியது.

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி

(Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். நான்கு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், ஜெயாவின் ‘சஹானா’வும் சன் டிவியின் ‘அண்ணாமலை’யும் போல மோதிக் கொள்ள, நடுவில் ஸ்டார் விஜய்யின் ‘சலன’மாய் நுழைகிறார் ரால்·ப் நாடெர்.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை, தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்·ப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷ¤க்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் நியு ஹாம்ப்ஷரில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில், ஆல் கோர் தோற்கக் காரணமானவர் நாடெர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் இரு கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

“‘The Buying of the President 2004′” என்னும் புத்தகம் இங்கே சூடாக விற்று கொண்டிருக்கிறது. திண்ணையில் நரேந்திரனின் அறிமுகத்தில் எழுதுவது போல் சராசரி மனிதனின் தேர்தல் நிதியைக் கொண்டு போட்டியிட நிற்கும் எவருக்குமே தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை என்று புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர் நாடர். நாடெருக்கு வோட்டுப் போடக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியில் ஒவ்வொருவரும் அறைகூவுகிறார்கள். அவருக்கு ஈகோ, தான் என்னும் அகங்காரம், புகழ் போதை என்று விதவிதமாக வசவுகள் வருகிறது.

ஆனால், 2000-த்தில் கோர் தோற்பதற்கு நாடெர் மட்டும்தான் காரணம் என்பது மிகத் தவறான வாதம். அமெரிக்காவின் நாற்பத்தி மூன்று மாகாணங்களில் போட்டியிட்ட நாடெருக்குக் கிடைத்த மொத்த வோட்டு என்னவோ மூன்று மில்லியன்தான். ·ப்ளோரிடாவில் புஷ் 537 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடெருக்கு 97.488 வாக்குகள் கிடைத்திருந்தது. நியு ஹாம்ப்ஷைரில் 7,211 வாக்கு அதிகமாகப் பெற்று புஷ் ஜெயித்தார். நாடெருக்கு 22,198 வோட்டு கிடைத்தது. இவை ஆல் கோர் எதிர்ப்பு வாக்குகள்; சுற்றுபுறச் சூழலை வாகன தயாரிப்பளர்களுக்காக விட்டு கொடுத்தது, இணையம் கண்டுபிடித்தது என்று கோரின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் அளித்த ஓட்டு. கிறித்துவத்தின் பிரதிநிதியாக இங்கு பாட் புக்காநன் (Pat Buchanan) பெற்ற ஓட்டுகள் அனைத்தும் புஷ்ஷையே சேர்ந்திருக்க வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் ஐந்து மாநிலங்களில் புக்கானன்+புஷ் ஜோடி, கோர்+நாடெர் பெற்ற வோட்டுக்களை விட அதிகமாகவேப் பெற்றிருக்கும்.

ஒரு சராசரி உழைப்பாளியை விட அந்த நிறுவனங்களின் தலைவர் ஐந்நூறு மடங்கு அதிகமாக சம்பளம் கிடைக்க வைத்துக் கொள்கிறார். இவரை தட்டிக் கேட்க ஒருவர் தேவை. ஈராக் போரை ஆதரித்தாரா இல்லையா என்று புரியாமல் கெர்ரி முழம் நீளத்துக்கு பதில் கொடுக்கிறார். இ(ரு)வரையும் எதிர்கொள்ள திராணியுள்ள ஒருவர் தேவை. ‘ஸ்பெஷல்’ ஆர்வ குழுக்களைத் துரத்துவதாக வாய்கிழித்துக் கொண்டே அவர்களில் சிலரிடம் இருந்து தேர்தல் நிதி பெறுபவர்களை சுட்டி காட்ட ஒருவர் தேவை. அவர் ஜெயிப்பது வேறு விஷயம். ஆனால், அந்த சக்தி அவசியம் மக்களிடம் மாறுதலை உந்தவேண்டும்.

சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும். நமக்கு கோக் பிடித்திருக்கிறதா? சாப்பிடுவோம். மாருதியை விட ஹூண்டாய் கொடுக்கிற காசுக்கு பயனுள்ளதாகத் தோன்றுகிறதா? வாங்கிக் கொள்வோம். வீட்டு ஊறுகாயை விட ‘ருச்சி’யும், அம்மாவால் மசாலா செய்ய முடியாததால் ‘ஆவிட்டா’ மசாலாவுக்கும் தாவுகிறோம். எது சரியெனப் படுகிறதோ, எது சௌகரியமோ, எவை முக்கியமோ, எது நன்றாக உழைக்கிறதோ, அதைத் தேர்வு செய்கிறோம். சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.

நாடெரின் தேர்தல் அறிக்கை ஆசைகள் நிறையக் கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு எட்டு டாலர் மட்டுமே கிடைக்கும் தொழிலாளர்களின் கூலியை பத்து டாலராக்குவது; அலாஸ்காவில் ஆயில் எடுத்து சுற்றுப்புற சூழலைக் கெடுத்த நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு கறப்பது; குழந்தைகளுக்கு சென்சார்

செய்யப்படாத ‘வயசுப் பசங்க’
வட்டுகளும் விருமாண்டி போன்ற வன்முறைப் படங்களும் எட்டமல் தடுப்பது; என்று நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் பாயசம் இடும் எண்ணங்கள்.

ஐரோப்பாவில் இத்தாலி போன்ற பல நாடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள், இந்தியாவில் உள்ளது போல் தேர்தல் களத்தில் மக்களை ஈர்க்கிறது. அமெரிக்காவில் மட்டும் இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செய்யவேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. சில நாடுகளில் உள்ளது போல் ‘ரெண்டாவது சாய்ஸ்’ வேட்பாளர் யார் என்று டிக் போடுவது, பல பேரை போட்டியிட செய்து அதிக வாக்கு பெறும் இருவருக்கு மட்டும் ‘·பைனல்ஸ்’ நடத்துவது என்று புதிய தேர்தல்முறைகளை அறிமுகபடுத்தாமல், ஜனநாயகத்தில் பங்குபெற விரும்பும் ஒருவரை தடுப்பது நியாயம் அல்ல.

தமிழகத்தில் த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. அது போலவே தேர்தல் சீர்திருத்தங்கள் எதுவும் செய்யாவிட்டலும், நாடெர் வாக்காளர்களை திசை திருப்பினாலும், மீண்டும் ஜார்ஜ் புஷ் நான்கு வருடங்கள் வெள்ளை மாளிகையில் தொடர்வது கஷ்டமான விஷயம்தான்.

நாடெரின் நிலையை நினைத்தால் என்.டி.ஆரும் பானுப்ரியாவும் நடித்த தூர்தர்ஷன் தொடர் நினைவுக்கு வருகிறது. கடுமையான தவத்தில் இருக்கிறார் விஸ்வாமித்திரர். நாரதரின் மூலம் தன்னுடைய தலைமைக்கு ஆபத்து வருவதை இந்திரன் அறிகிறான். ஊர்வசி, ரம்பா, திலோத்தமை எல்லோரும் கவர்ச்சி நடனம் ஆடியும் அசைய மாட்டேன் என்கிறார் என்.டி.ஆர். மன்மதனின் துணையோடு மேனகை தவத்தை கலைத்து, விஸ்வாமித்திரரோடு வாழ ஆரம்பிக்கிறாள். ஆனந்தமாக சிற்றின்பத்தில் ஆண்டுகள் செல்கிறது. சகுந்தலையும் பிறக்கிறாள். தன் வலிமையை மீண்டும் பெருக்கிக்கொள்ள முனிவர் தவத்துக்கு செல்ல நினைக்கிறார். வானுலகுக்கு மானிடரை கூட்டிச் செல்ல முடியாததால் மேனகை, குழந்தையை மண்ணுலகத்திலேயே தவிக்கவிட்டு சென்று விடுகிறாள்.

புஷ் என்னும் இந்திரன் மேனகை என்னும் நாடெர் மூலம் போன தேர்தலை வென்றார். சகுந்தலை போல் பொருளாதார, இத்யாதி பிரச்சினைகள் அனாதையாய் இருக்கிறது. கன்வ முனிவராக ஜான் கெர்ரி குழந்தையை தத்தெடுப்பாரா?

நன்றி: தமிழோவியம்

தொலைக்காட்சி பார்க்க ஆசை?

அமெரிக்காவில் சன் டிவி வெற்றியடைய வேண்டும். சன் நியுஸ், ஜெயா, மற்றவர்களும் தொலைபரப்ப ஆர்வத்தைத் தருவதற்கு, சன்னின் இந்தக் படுத்தல்களைப் பொறுத்துக் கொண்டு ‘வணக்கம் தமிழகம்’ போன்ற நிகழ்ச்சிகளை (பதிவு செய்தாவது) பார்க்கலாம்.

‘திராவிடன் டிவி’ போன்று இங்கிருந்தே ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் நமக்குப் பிடித்ததை கொடுக்க வைக்கலாம். ‘மெட்டி ஒலி’ போன்ற தொடர், வாழ்வியல் பதிவுகள். சிலருக்கு அன்னியமாகத் தோன்றினாலும் நமக்கு முந்தையத் தலைமுறையும், இன்றைய பலரும் அது போன்ற கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பார்கள். ‘லஷ்மி’யை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்வீர்களா என்று தெரியாது. ஆனால், சில சீரியல்கள் அவரின் கதாநாயகி அமைத்துக் கொண்ட வாழ்க்கைகளுக்குத்தான் உள்ளாகிறார்கள்.

முதலமைச்சரின் தவறுகளை சுட்டிகாட்டுவதும், நாட்டின் அல்ல விஷயங்களை சினிமாஸ்கோப்பில் எடுத்து வைப்பதும் எல்லா ஊடகங்களும் (இந்தியாவில்) செய்துவருகிறது. எதிர்மறை செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் மாலை முரசு, குங்குமம், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூ.வி. போன்ற பல செய்தித் தாள்கள், பத்திரிகைகளின் வளர்ச்சியாக திருச்சியில் எரிந்த மணக்கூடத்தில் பேட்டி எடுப்பது, சிறப்பு பார்வை என்னும் பெயரில் மக்கள்களின்

புலம்பலுக்கு வடிகால் கொடுப்பதாக உள்ளது.

சிரிக்கும்போது மட்டுமே மனதில் நிற்கும் சிட்காம் ரக நிகழ்ச்சியோ, கொலை/கொள்ளை என்று சகலத்தையும் அலசும் 24 / லா & ஆர்டர்

தொடர்களோ, மருத்துவர்களின், பள்ளி ஆசிரியர்களின், துப்பறியும் சாம்புக்களின், நடிகைகளின், வெள்ளை சொக்காய் வேலைக்காரர்களின்

என விதவிதமான வாழ்க்கைப் பதிவுகளை இந்தியாவிலும் தொலைக்காட்சியில் (ஆங்கிலத்திலாவது) பார்க்க முடியும் என்றே நம்புகிறேன்.

அவற்றை விட்டுவிட்டுக் ‘கோலங்கள்’ பார்க்க தினசரி ரிமோட்டைத் திருகிவிட்டு அழுகிறார்கள் என்றால் எப்படி? லா & ஆர்டரில் தினசரிக் கொலையும் கொலையுடன் கூடிய கொடூர குற்றங்களும் அரங்கேறும்; ‘வெஸ்ட் விங்’கில் உலக பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்று காண்பிக்கப் படும்; அனேகமாக டிஸ்னியில் ஆரம்பித்து காமெடி செண்ட்ரல் வரை கார்ட்டூன் முதற்கொண்டு ஃப்ரெஞ்ச் கிஸ்களும் செய்முறை காட்டப்படும்; ஈஎஸ்பிஎன் போன்ற விளையாட்டி நிகழ்ச்சிகள் கூட சில சமயம் (தமிழ்ப் பண்பாடு) குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அல்லாத ஜானட் ஜாக்ஸன் நிகழ்ச்சி, ஊக்கப் படுத்துகிறேன் என்று குட்டை ஸ்கர்ட் அணிவகுப்பு, சுவாரசியபடுத்துகிறோம் என்று முக்கிய வீரர்களின் கைகலப்பு என்று இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும்.

தமிழ்நாட்டில் குடும்ப விஷயங்கள் மட்டுமே (விரும்பிப் பார்க்கப் படுவதால்) தொடர்ந்து அலசுகிறார்கள். அவற்றைப் பார்க்காமல் டிஆர்பியை குறைக்ககும் வழியை யோசிக்கலாம்.

சன் பிடிக்காவிட்டால் பிபிசி, என்பிசி, ஏபிசி என்று வேறு எங்காவது செல்லலாம். சிஎன்எனில் தாலிபான் எதிர்ப்பு நிலை மட்டுமே காட்டுகிறார்கள்; அமெரிக்காவின் சாதனைகள் மட்டுமே காட்டி ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார்கள் என வருந்தலாம். அழுவாச்சி நெடுந்தொடர்கள் பிடிக்காவிட்டால் நல்ல படங்களாக நெட்·ப்ளிக்ஸில் எடுத்து வரவழைத்துக் கொள்ளலாம்.

பெண் வெளிப்பாடுகள் – யாழினியன்

ஆறாம்திணை:

‘பெண் வெளிப்பாடுகள் 2001’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கொன்றை 14.04.02 இல் ‘கங்கு’ அமைப்பினர் சென்னை சோழமண்டல ஓவியர் கிராமத்தில் நடத்தினர். இன்று பெண்ணியம் சமூக வெளிசார்ந்த கருத்தாக்கமாக, செயல்பாடு மற்றும் சிந்தனை மட்டங்களில் தொழிற்படுவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாகிவிட்டது. ஆனால் படைப்புத் தளங்களில் பெண் வெளிப்பாடுகள் அமையப் பெற்றிருப்பினும் அவை குறித்து பாராமுகம் காட்டும் போக்கை சுட்டிக்காட்டினார், அ. மங்கை.

ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘வனதேவியன் மைந்தர்கள்’, பா. விசாலத்தின் ‘உணர்வும் ஒளிர்கவென்று’ என்று இரு நாவல்களை ஒருங்கே ஓர் கட்டுரையாக இரா. தமிழரசி படித்தார். இரு நூல்களை அறிமுகம் செய்யும் நோக்கு மையப்பட்டிருந்தது.

கிருஷாங்கினி தொகுத்த ‘பறந்தல் அதன் சுதந்திரம்’ எனும் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பை மதுசூதனன் விமரிசனம் செய்தார். இத்தொகுப்பில் உள்ள கவிதையாக்க முறைமை பற்றிய சிரத்தைக்கு போவதற்கு தடையாக தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் உள்ள தவறுகளை விரிவாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஈழத்துப் பெண்களின் கவிதைகளை மூலப் பனுவலுடன் ஒப்பிட்டு தொகுப்பில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தினார். எழுத்துப்பிழை, வரிகள் பல இல்லாமை, கவிதையின் அரைவாசி இல்லாமை, கவிஞர்களின் ஆள்மாறாட்டம் என பல தவறுகளை சுட்டிக்காட்னார். ஓர் தொகுப்பாக இதனைப் பார்ப்பதில் உள்ள சிக்கல்களையும் தெளிவு படுத்தினார்.

வீ. அரசுவை தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘பெண்ணியமும் பாரதியும்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை அரங்க மல்லிகா விமரிசனம் செய்தார். தொகுப்பில் புதிதாக ஏதும் சிந்தனை வெளிப்படவில்லை. பலமுறை முன்பு கூறிய கருத்துக்கள் தான் கட்டுரைகளில் உள்ளன என்றார்.

அடுத்து அ. மங்கை எழுதிய ‘பெண் – அரங்கம் – தமிழ்ச்சூழல்’ எனும் நூலை அருணன் விமரிசனம் செய்தார். சில கட்டுரைகளில் கேள்விகளாக மட்டும் விரிந்து செல்லும் தன்மையை சுட்டி காட்டினார்.

நன்றி: சென்ற வார சென்னை (இப்பொழுது… போன வருட சென்னை?)

என்னைக் காணவில்லையே…



கடவுச் சொல் தொகுப்பான், குக்கீ, என்று பல வகையில் பல இடங்களில் உள்நுழையும் பயனர் சொல்களையும், பதிவர் பெயர்களையும், அவற்றின் கடவு வார்த்தைகளையும், கடவுச்சொல் மறந்து போனால் ‘ரகசியக் கேள்வி’யையும் கேள்விக்கான சங்கேத பதிலையும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்குள் தாவு தீர்ந்து போகும் என்னைப் போன்றஅனைவருக்கும் அர்ப்பணம். நன்றி: பிக்கிள்ஸ்

பொன்மொழிகள் – போடுங்கம்மா ஓட்டு

TheStar.com: ஹமீத் கர்சாய் பெரிய மனதாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். மகளிர் தினத்தை இவ்வளவு சிறப்பாக நையாண்டி செய்ய முடியாது. “அன்பு சகோதரர்களே! உங்கள் மனைவியையும் (அல்லது மனைவிகளையும்) சகோதரிகளையும் ஓட்டளிக்கப் பதிவு செய்யுங்கள். அவள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடுங்கள்; ஆனால், ஓட்டளிக்க அனுமதியளிப்பது முக்கியம்”.

ஆஃப்கானிஸ்தாலுள்ள நூறு லட்சம் வாக்காளர்களில், இதுவரை பதின்மூன்று லட்சம் மட்டுமே வாக்காளர் அட்டை பெற்றிருக்கிறார்கள். இதில் கால் பங்கு மட்டுமே பெண்மணிகள்.





Madras Talkies presents ... A Mani Ratnam Film ... Aaiytha Ezhuthu ... Official Website... coming soon..


சிஎன்என்: ஹஃப் – 6 எனப்படும் ஷாஹீன் – 2 ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்திருக்கிறது. முன்பு புது டில்லி அல்லது பம்பாய் வரையிலுமே தாக்கும் திறன் கொண்ட (435 மைல்) ஹஃப் – 4-ஐ விட, சென்னை/கொல்கதா வரை (1250 மைல்) சென்று அணுகுண்டை விட்டுவிடும் திறன் கொண்டவை.



ஸ்டேட்ஸ்மேன் – மன்னிப்போம்… மறப்போம்: காங்கிரஸை விட பிஜேபி அரசு முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்ததாக மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசேன் “நாங்கள் கூட செல்பேசி வைத்துக் கொள்கிறோம்” என்கிறார். பிஜேபி அடுக்கும் சாதனை பட்டியல்.

* ஹஜ் உதவித்தொகை

* முஸ்லீம் ராஷ்டிரபதி

* இந்தியா பாகிஸ்தானிடையே மேம்பட்ட உறவு

மக்கள் மறக்கவேண்டியதை ஸ்டேட்ஸ்மான் பட்டியலிடுகிறது:

* குஜராத் நிணைவுகள்

* உணர்ச்சிகளைத் தூண்டும் நரேந்திர மோடியின் சொற்பொழிவுகள்

மகளிர் – கலை… விளையாட்டு… சமூகம்

கல்கி – 01.02.2004

‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் நாயகி அபர்ணா, அமெரிக்க அழகிப் போட்டியில் ‘மிஸ் ஃபோட்டோ ஜெனிக்’ ஆகத் தேர்வு பெற்றவர். அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அண்ணி என இவரது குடும்பமே கல்விப் பணியில் இருக்கிறது. “சென்னை, திருச்சி, துபாய் ஆகிய பகுதிகள்ல மொத்தம் பதினான்கு ஸ்கூல் நடத்தறோம். நானும் அந்தத் துறைக்கு வரணும்னுதான் வீட்ல எல்லோருக்கும் ஆசை. லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டிருந்தேன். கேமராவுக்குப் பின்னால் நிற்கிற படைப்பாளிக்கான படிப்பு”



– அப்பு (அபர்ணாவை விரட்டிய பேய்!)




அபர்ணாவின் முழு பேட்டியையும் துரத்திய பேயையும் அறிய கல்கி – 01.02.2004 பார்க்கலாம்.


டென்னிஸ் உலகின் மகளிருக்கான பிரிவில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிம் கிளிஸ்டெர்ஸ். சென்ற ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓப்பனின் இறுதி சுற்றையும், ஆஸி. ஓப்பன் மற்றும் விம்பிள்டனின் அரையிறுதிச் சுற்றையும் அடைந்தவர் (ஏனுங்க அம்மணீ… ஒண்ணுத்திலும் கோப்பையை தூக்க மாட்டேன்றீங்க?!)

வரும் ஒலிம்பிக் பந்தயத்தில் இவர் கலந்து கொள்ளப் போவதில்லையென்று அடம் பிடிக்கிறார். காரணம் பதக்கம் அவர்கள் நாட்டுக்குத்தான் (என்பதாக இருக்கலாம்). பெரும் தொகையும் கிடைப்பதில்லை. இவர் மணக்கவிருக்கும்

ஆஸ்திரேலிய டென்னிஸ் சாம்பியனான லேட்டன் ஹெவிட்டும், ஏதென்ஸில் கலந்து கொள்ளப் போவதில்லையாம்.



– குல்லூ (அடம் பிடிக்கிறார் க்ளிஸ்டெர்ஸ்)


“உலகத்திற்கு சேவை செய்யவும், ஆன்மிக ஞானத்தைப் பரப்புவதற்கும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது இரண்டு இளம் வயதினராவது முன் வந்தால், சமாதானமும் அன்பும் அனைவரும் ஒரே குடும்பம் என்னும் உணர்வும் நிறைந்த புதிய உலகை நாம் உருவாக்கிவிடலாம்” என்று அருளுரைக்கிறார் அம்ருதானந்தமயி. அப்படியொரு பக்குவம், ஆன்மிக நாட்டம், தன்னலம் நினையாத பெருமனம் எல்லோருக்கும் வாய்க்க இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.

சின்ன வயதிலேயே வீட்டில் ‘அம்மா’ காசு திருடியதுண்டு. எந்த வீட்டிலாவது யாராவது பசித்திருந்தால் கதாமணிக்குப் பொறுக்காது. தாயாரின் உண்டியல் பணம் அங்கு இடம் மாறிப் பசி தீர்க்கும்.

ஏழைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் ‘அமிர்தகுடீரம்’ முக்கியமானது. வரும் பத்தாண்டுகளில் நாடெங்கிலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுகிற குறியீடு. இதுவரை உருவாகியிருப்பதில் புனேயில் உள்ள அமிர்தகுடீரம்தான் பெரியது; 1750 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது.

இன்னும் ஆதரவற்ற பெண்களுக்காக உதவும் மாதாந்திர உதவித் திட்டம் ‘அமிர்த நிதி, ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கான ‘அமிர்த நிகேதன்’, அன்பு இல்லம் என்கிற பெயரில் ‘முதியோர் இல்லம்’ என்று சிறு சிறு திட்டங்கள் ஒரு புறம்.

“இந்த உலகமே உங்களுடைய குடும்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை அறியாமல், நீங்கள் உங்களது இடது கையைக் காயப்படுத்தி விட்டால், உடனே உங்களது வலதுகை, இடதுகைக்கு உதவ முன் வருகிறது. ஏனெனில்,

அந்தக் கையும் உங்களது உடலின் அங்கமே என்னும் உணர்வு உங்களுக்கு உள்ளது. இதே போன்ற ஐக்கிய உணர்வோடு, உலகத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவ வேண்டும்” என்கிறார் அம்மா.



– பாலன் (வேறென்ன வேண்டும்?)




அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்… 🙂

தென்றல் – புத்தம் புது பாட்டு

நன்றி: Yahoo! Groups : Vaali

மற்றும் ராகா

புஷ்பவனம் குப்புசாமி:(திரையில் லாரென்ஸ்)

வணக்கம் வணக்கம் வணக்கம்

நான் வாழும் பூமிக்கு வணக்கம்

இருக்கோ இல்லையோ தெரியாது

ஓரு வேலை இருந்தா சாமிக்கும் வணக்கம்

குத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்

உச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்

பரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்

நான் பறை போடத் தோலு தந்த மாட்டுக்கும் தான் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்

கோரஸ் 1:

புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே

ஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே

தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே

ஏன் நெத்தியிலே இடி இடிக்கும் (அல்லது) கிடுகிடுக்கும் தாண்டவக்கோனே

பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே

ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே

பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே

ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே

ஹேய்…

கோரஸ் 1

ஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து

தாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு

ஆ மஞ்சுவிரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி

தங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு

என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆலமரப் பொந்துக்குள்ள

ஆதியில புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே

என் பச்சகிளி அது பறந்த பின்னே

நான் ஒத்த கிளி நாளை செத்த கிளி

தந்தன… தந்தன…

ராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க

பாஞ்சு புடிச்சானே பாலயத்தான் – அந்த ரங்கசாமி

நேத்து நனவாக நாளை கனவாக

இன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா

வந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு

போகும் தேதி எந்த தேதி, ஊரில் யாரும் சொன்னதுண்டா

போகும் தேதி என் போல் கண்டார் உண்டா

அதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா

எஸ்.பி.பி.: (திரையில் பார்த்திபன்)

பறை பறை பறை…

விலங்கு விரட்ட பிறந்த பறை

கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை

கடைசி தமிழன் இருக்கும் வரை

காதில் ஒலிக்கும் பழைய பறை

வீர பறை, வெற்றி பறை, போர்கள் முடிக்கும்,

புனித பறை ,

கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா

விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா

இது விடுதலை இசை, புது வீறு கொள் இசை

வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை

பு.கு. : (வசன கவிதை)

என் பாட்டன் முப்பாடன்களோடு போயி சேரப் போறேன்

இப்ப நான் மறுபடியும் அம்மா கர்ப்பப் பையிலே படுத்துகிட்டேன்

எல்லாரும் அம்மவோட வயித்துக்குள்ளே இருக்குறப்போ தெரியுமாமே

ஓரு இருட்டு, அது இப்ப எனக்குத் தெரியுது

கதகதப்பா இருக்கு, நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா

பத்திரமா பாத்துக்கங்க என் பறையை…

என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவக்கோனே

என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவக்கோனே

செய்திகளிலும் வலைப்பதிவுகளிலும் மகாமக முழுக்கு

என்னுடைய ஷார்ப்ரீடர் ஆர் எஸ் எஸ் செய்தியோடை பட்டியலை வலையேற்றி உள்ளேன். குமரகுரு கொடுத்த தமிழ் வலைப்பக்கங்கள் பட்டியலையும் ஸ்லேட்டின் opml கோப்பையும் இணைத்து இன்னும் கொஞ்சம் ஹிந்து ஸ்டேட்ஸ்மான் தேடிப்பிடித்து குருவியாய் சேர்த்த பட்டியல். இவ்வளவு செய்திகளும் படித்தால் வேலையும் பார்க்க இயலாது; சொந்த வலைப் பதிவும் செய்ய முடியாது; உருப்படியாக கிரகிக்கவும் முடியாது போல் மலைப்பாக இருக்கிறது. எனவே, எல்லாவற்றையும் கீழிறக்கி சேர்த்துக் கொள்வதற்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துவிட்டு இணைத்துக் கொள்ளுங்கள்!