Category Archives: Tamil Blog

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்

தமிழில் கடித இலக்கியம் பிரபலம்.
கி.ரா.வுக்கு கு. அழகிரிசாமி எழுதிய கடிதங்கள், அம்பேத்கரின் கடிதங்கள், வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்து, பகிரங்கக் கடிதங்கள், கழக உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள் என்று பெரிய பட்டியல்.

அது போல் சமூக ஊடகங்களில் வெளியான சுவாரசியமான உரையாடல்கள், பின்னூட்டங்கள், கவுண்ட்டர் கொடுத்து போடும் அதிரடி பதில்கள் – போன்றவற்றை வருடா வருடம் ஒருவர் தொகுத்து நூலாக்க வேண்டும்.

விகடன் வலைபாயுதே போல் தெரிந்தவர்களை மட்டும் கவனிக்காமல், (எந்தப் பத்திரிகை) வலைப்பேச்சு போல் தற்கால வம்புதும்புகளை செய்தித் துணுக்கு போல் சேகரிப்பதோடு நிற்காமல்…

அந்தந்த வாரத்தில் வலைஞர்களை

  1. கொதிப்புயரச் செய்து கொந்தளிக்க வைத்த நிகழ்வுகளுக்கான பன்முகப் பார்வை
  2. கவனம் பெற்ற நூல்; விமர்சனத்திற்குள்ளான புத்தகம்
  3. மீம்; கிண்டல் படங்கள்; கேலிச் சித்திரங்கள்
  4. நாலே வார்த்தையில் நறுக்குத் தெறித்தது போன்ற பின்மொழி
  5. வாதங்கள், பிரதிவாதங்கள்; காரசாரமான கருத்து வசனங்கள்
  6. கம்பீர் முதல் கவின் வரை – பிரமுகர் தகவல் குறித்த முத்துகள்
  7. மாமல்லன் போல் ஒரு சிக்கலை மட்டும் ஒரு தரப்பில் இருந்து கையில் எடுக்காத நடுநிலை ஸ்ட்டேஸ் க்வோ மொண்ணைத்தனம்

ஒரு வருடத்திற்கு ஒரு வெளியீடு.
கிண்டில் + அச்சு நூல்.
அதிக பட்சம் 250 பக்கங்கள்.
தமிங்கிலம் – எனவே ஆங்கிலமும் பரவலாக எட்டிப் பார்க்கும்.

பிரிட்டானிக்கா, மலையாள மனோரமா இயர் புக் எல்லாம் அந்தக் காலம்.
இந்தத் தொகுப்பு ஜென்-ஆல்ஃபா, ஜென்-Z காலம்.

தலைப்பிற்கான உரை : 
செப்புதலையும் வினாவுதலையும் வழுவாமற் போற்றுக. (நன்றி: தமிழ் எண்ணம்: தொல்காப்பியரின் ‘வினாவும் செப்பும்’: கருத்தாடல் நோக்கு )

கோடை மறைந்தால் இன்பம் வரும்

நியூ ஜெர்சி ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூ விழா அமர்க்களமாக நடந்தது. பழனி ஜோதி சிறப்பான அறிமுகம் செய்து துவங்கி வைத்தார். நான் சற்றே தாமதமாக வந்ததால் (ஐந்தாறு நிமிடங்கள்) ஜெயமோகன் உடன் அமர்ந்திருந்தவர் யார் என்று நிகழ்ச்சி நடக்கும் போது தெரியவில்லை. அதன் பின்னர் அவருடன் அறிமுகம் செய்து கொண்டேன். நிகழ்ச்சியில் முழுவதும் இளைஞர்களும் இளைஞிகளும் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு கதைகள்… பல்வேறு பார்வைகள் … சுருக்கமாக, வித்தியாசமாக, அதேசமயம் பொருத்தமாக இருந்தது. ஜெயமோகன் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி பதில்களை நடத்தினார். வழக்கமான திரள் புத்தி கேள்விகள் பெரியோரிடம் இருந்து வந்தன. இளைய தலைமுறையினரிடம் இருந்து அப்படிப்பட்ட வினாக்கள் எதுவும் இல்லாமல், ஆழமாக புத்தகம் தொடர்பாக அந்த கதா மாந்தர்களில் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையில் எழுந்த நேர்மையான வினாக்கள் – எளிமையாக பகிரப்பட்டன

மிக நிறைவான நிகழ்வு. இதை கச்சிதமாக நடத்தியதற்கு பழனி ஜோதி மற்றும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் குழுவிற்கு பாராட்டுக்கள். இது எளிமையான காரியம் அல்ல… எவ்வளவு பேர் வந்தார்கள் என்று எண்ணவில்லை. 100+ பேர் இருப்பார்களோ!? அரங்கம் நிறைந்து வழிந்தது. பலரும் இழுத்துப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். மாயா வழக்கம் போல் அமைதியாக ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். இளா கொஞ்சம் விவகாரமான கோணங்களில் சுட்டுக் கொண்டிருந்தார்.

நெல்லை விஜய், வேல் முருகன், பாஸ்டன் நவீன் என்று நியு இங்கிலாந்து மக்கள் சூழ சென்றது பயணத்தை சுவாரசியமாக்கியது. அங்கே பல அறிந்த முகங்கள். புதிய அறிமுகங்கள். நெடுங்காலமாக இணையத்தில் மட்டுமே பேசி வந்த தமிழ் சசி. விவசாயி இளா. காரைக்குடி சுபா. காண்ட்ராரியன் ஏகே அரவிந்தன் கன்னையன். டாக்ஜட்ஜ் துவங்கி அமர்க்களமாய் வீடியோக்கள் நடத்தும் தினேஷ் ஜெயபாலன். திண்ணை துக்காராம் அம்மா கிச்சனுக்கு வந்திருந்தார். நெடுங்கால சொந்தமான பிரபு சின்னத்தம்பி கலகலப்பாக்கி பழைய சிகாகோ நினைவுகளை மீட்டெடுத்தார்.

ஜெயமோகன் 20 ஆண்டுகள் முன்பு பார்த்தபடியே இருக்கிறார் என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருந்தார் … புகைப்படங்களில் பார்த்ததை வைத்து! நேரிலும் அவ்வாறே… மிக இயல்பாக ஆதுரத்துடன் கட்டித்தழுவி வரவேற்று அன்போடு பழகினார்

அதன் பின்னர் நாங்களே எங்கள் அனைவரையும் மஹேஸ் பழனிஜோதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட அங்கேயும் ஒரு 30 /40 பேர் குழுமியிருப்போம். சபை களை கட்டியது. சூடான பருப்பு வடை அல்லது அதற்குப் பேர் மெதுவடையா . கரக்… மொறுக் உள்ளே தள்ளினோம். தேநீர். ஆளுக்கு முருக்கு பாக்கெட் வேறு.

நியுயார்க் லிட் ஃபெஸ்ட் களப்பணிக்கு முன்னோட்டம். மிக சிறப்பாக செயல்பட்டு உதவினார்கள். கதவுக்குப் பக்கத்தில் சத்தம் வராமல் பார்த்துக் கொண்டது முதல் அனைத்தையும் பார்த்துப் பார்த்து பம்பரமாக இயங்கிய செயல்வீரர்கள்!!

வழக்கம்போல் ஆசான் என்ன கேள்வி கேட்டாலும் அநயாசமாக விடையளித்துக் கொண்டிருந்தார். இதில் என்ன அதிசயம்!? எப்பொழுதும் போல் முன்னரே அறிந்தது தான் … என்றாலும் என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. மதியம் ஒரு மணியிலிருந்து முக்கியமான விழா . அது நான்கு மணி அளவில் நிறைவுகிறது. அதன் பின் இன்னொரு இரண்டரை மணி நேரம்… பல்வேறு தலைப்புகள்… சுவாரசியங்கள் … நெருக்கமான தகவல்கள்… இலக்கிய அலைதல்கள் என்று எல்லா இடங்களுக்கும் எப்பொழுதும் இவரால் அட்சய பாத்திரம் போல் காமதேனு போல் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க முடிகிறது!

தத்துவ முகாமை தவறவிட்டதை நினைத்து இப்பொழுதும் வருந்தி பொறாமை கொள்ளும் தருணம்

டேய்… அவனா நீ

என்னோட பள்ளித் தோழனை 96 படம் மாதிரி இருபதாண்டு கழித்து பார்த்த போது நடந்த உரையாடல்.

“பொழுதுபோக்கிற்கு என்னடா பண்றே!?”

“எழுத்தாளரா இருக்கேண்டா…”

“அச்சச்சோ… உங்கிட்ட கவனமா இருக்கணுமே! எத எடுத்தாலும் ஆராஞ்சுண்டு, எதிலும் குத்தம் கண்டுபிடிச்சுண்டு, எல்லாவத்தையும் காமாலக் கண்ணோடு பாக்கிறவனா நீயு!”

“அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவில் சொல்ல முடியாதுடா! அலுவலில் கூட இப்படி பாக்கிறவங்கள QAனு சொல்லி மரியாதையா டெஸ்ட்டர், குவாலிடி அஷுயூரன்ஸ், பிசினஸ் அனலிஸ்ட்னு சொல்லிண்டு இருக்கோமே?”

“என்ன வேணா சொல்லிக்க மச்சீ… நீங்க எல்லாம் கிட்டத்தட்ட சைக்கோ! வாழ்க்கைய எப்படி அனுபவிக்கணும்னு தெரியாம திண்டாடற ஜென்மங்கதான் எழுத்தாளராத் திரியுது!”

”டேய்… ஏண்டா இந்த கொலவெறி?”

“நான் ஃபேஸ்புக்கில் ஆரம்பிச்சு அந்துமணி வர பாத்துட்டேண்டா! எல்லோரும் கோணப் பார்வை பாக்கிறேன்… என்னது கேவலமாப் போகும்னு யோசிக்கிறேனு பைத்தியமா ஆக்கி; சகாக்களை பயமுறுத்தி; பார்க்காத நீலிய பொண்டாட்டியா ஆக்கி; அமாவாசக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போட்டு தீவிரவாதம் துவங்கி டைவோர்ஸ் வரை… நம்ம சிக்கலுக்கு சிரிப்புத் திருடன் சிங்காரவேலுவாக சித்தரிக்க வேண்டியவங்க — சாஹித்ய அகாடெமி ஆசையில் சின்னாபின்ன அச்சுபிச்சு சித்தாளாக சீரியசாக்கி வைக்கிறாங்க!”

”அதுதாண்டா… அடையாள நெருக்கடி. உனக்கு என்ன பிரச்சினை என்று அறிந்து கொள்ள உதவ நல்ல கட்டுரைகளையும் கதைகளையும் என்னால் பரிந்துரைக்க முடியும்.”

“வேணாண்டா…”

“வெறுமனே சூப்பர் சிங்கர், பிக் பாஸ், ரீல்ஸ் பார்க்காம, சமூகச் சிக்கல்களையும் குடும்பப் பிரச்சினைகளையும் தனி மனித உரிமைகளையும் உணர, அறிய, புரிந்து கொள்ள… நாங்க வேணும்!”

“வேணாண்டா…”

“பொது புத்தி, திரள் மந்தை, கூட்ட மந்தி அறிவிலித்தனத்தில் இருந்து அறிவார்ந்த தளத்திற்கு மாற்றும் கடமை எனக்குண்டு தோழா! தமிழ்ச் சமூகமே ராம்ஜி யாஹூ ஆக மாறும் போது பத்ரித்தனமாக நாங்கள் தேவை”

பரட்டையை சப்பாணி பளாரென்று அடித்துவிட்டான்.

“அண்ணாத்த… சப்பாணிகளுக்கு மயிலு கிடைக்கிறார்கள். ஆனால், இருபதாண்டு கழித்து இங்கிலீஷ் விங்லிஷ் அஜீத் கிடைப்பார்களா என்னும் இருத்தலிய யதார்த்தவாத மாந்திரீக அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம் இது நண்பா”

அவன் அழ ஆரம்பித்து விட்டான்.
லிட்ஃபெஸ்ட்டுக்கு வர ஒப்புக் கொண்டு விட்டான்.

முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்

சாட்ஜிபிட் உதவியுடன்: “New Yorker satire” பாணியை வைத்து, மிகவும் ஏமாற்றமளித்த சென்னை இளம் தலைமுறை 25 பேர்” என்ற தமிழ் பதிப்பு — அதே சிரிப்பும், நுணுக்கமான சாடலும், சென்னையின் வாசனையுடன் 👇

1. பாலா கிருஷ்ணன், 28

“டெக் கல்சர் நல்லா இருக்கு”னு சொல்லி பெங்களூரு போறேன்‌ன்னு சொன்னார். இன்னும் வேளச்சேரி ட்ராஃபிக்குல்தான் “ரிமோட் லைஃப் ரொம்ப சாந்தமா இருக்கு”னு ட்வீட்டிட்டு இருக்கார்.

2. திவ்யா நாராயணன், 25

லாக்டவுன்ல வீட்டிலேயே கேக் விற்க ஆரம்பிச்சாங்க. இப்போ இன்ஸ்டாகிராமுக்காக மட்டும் பேக் பண்ணுறாங்க.

3. அஷ்வின் ராஜ், 24

“ஸ்டார்ட்அப் ஐடியா”ல வேலை செய்றேன்‌ன்னு சொல்றார். அந்த “ஐடியா” ஒரே கூகிள் ஷீட் தான்.

4. கீர்த்தனா சுப்ரமணி, 26

“நமஸ்தே”னு டாட்டூ போட்டாங்க. அது Comic Sans ஃபாண்ட்ல இருக்குது.

5. பிரவீன் ஐயர், 27

“ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர்”ன்னு சொல்றார். Anytime Fitness (தி.நகர்) ஜிம்முல மிரர் செல்ஃபி தான் போஸ்ட் பண்ணுறார்.

6. ஸ்ருதி ரமேஷ், 23

பயோல “இன்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட்”னு எழுதுறாங்க. ஆறு மாதத்துக்கு ஒரே முறை மெரினா ஓப்பன் மைக் கலந்துகொல்றாங்க.

7. ஆகாஷ் ஸ்ரீனிவாசன், 29

மூணு நாள் வீகன் ஆனார். இப்ப எல்லா பார்ட்டியிலயும் ந்யூட்ரிஷன் அட்வைஸ் தர்றார்.

8. மீனா கிரிஷ், 25

“UX designer”ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. Pongalக்கு அப்புறம் Figma ஓப்பன் பண்ணவே இல்ல.

9. ஹரிஷ் குமார், 28

சென்னை கோவில்கள் பற்றிய “ஹெரிடேஜ் வ்லாக்” ஆரம்பிச்சார். இரண்டாவது எபிசோடுக்கு முன்னாடியே நிறுத்திட்டார் — “எடிட்டிங் ரொம்ப ஸ்பிரிட்சுவல் ஆச்சு”னு சொன்னார்.

10. சாந்த்யா அருள், 24

பாண்டிச்சேரில 10 நாள் சைலன்ட் ரிட்ரீட் சென்றார். அதைப் பற்றி அடுத்த ஆறு மாதம் சத்தமா பேசினார்.

11. அஜய் வரதன், 27

IIT கலாசார நிகழ்ச்சிகளில் கிட்டார் வாசிப்பார். “ஆல்பம் வருது”ன்னு மூன்று வருடமா சொல்லிக்கிட்டே இருக்கார்.

12. தீபிகா ராமன், 25

HR-ல வேலை. “My passion is people”ன்னு சொல்றாங்க. எல்லா ஈமெயிலிலும் “dear”னு தொடங்கும்.

13. சுரேஷ் மேனன், 26

ஐடி வேலையை விட்டுட்டு ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆனார். பெரும்பாலும் உறவினரின் கல்யாணங்களில் தான் “பெர்ஃபார்ம்ஸ்.”

14. ப்ரீதி சந்திரன், 28

“சஸ்டெயினபிள் ஃபேஷன் லேபல்” ஆரம்பிச்சாங்க. டிசைன்ஸ்: “upcycled vibes.”

15. நவீன் ராஜ், 29

2011லிருந்து ஒரு CSK மேட்ச் கூட தவறவிட்டதில்ல. “தோனியிடமிருந்து லைஃப் கைடன்ஸ் தேவை”னு இன்னும் சொல்லிக்கிட்டே இருக்கார்.

16. ஹரிணி மோகன், 24

Chai and Chillன்னு பாட்காஸ்ட் ஆரம்பிச்சாங்க. கடைசியாக வெளியான எபிசோடு – 2022.

17. கார்த்திக் சுப்பு, 27

LinkedIn-ல “எப்படி தோல்வியை ஏற்க கற்றுக்கொண்டேன்”ன்னு போஸ்ட் போட்டார். 12 லைக்ஸ் — அதிலும் 10 பேரு கல்லூரி ஃப்ரெண்ட்ஸ்.

18. நந்தினி ஐயர், 25

மனோதத்துவம் படிச்சாங்க. இப்போ இன்ஸ்டாகிராம்ல “inner child healing with semiya payasam”னு ரீல்ஸ் பண்ணுறாங்க.

19. அரவிந்த் ஆர், 29

“டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி” ஆரம்பிச்சார். ஒரே கிளையன்ட் — அவங்க சொந்த ஸ்டார்ட்அப்.

20. பிரியா டி, 26

அடையார கஃபேகளில் புகைப்படம் எடுத்து “Work mode ☕✨”னு கேப்ஷன் போடுறாங்க.

21. மனோஜ் பாலாஜி, 23

“ஃப்ரீலான்ஸ் ஃபிலிம் மேக்கர்”ன்னு சொல்றார். அவங்க ஃபிலிம் நீளம் — 57 விநாடி.

22. வித்யா கிருஷ்ணன், 27

“அமைதி வேணும்”னு சொல்லி OMR-க்கு குடிபோயிருந்தாங்க. இப்போ டெலிவரி ஸ்லோன்னு தினமும் புகார்.

23. சஞ்சய் தோமஸ், 25

தாடி வளர்த்துக்கிட்டு “டீப்” ஒன் லைனர்ஸ் எழுத ஆரம்பிச்சார். பயோவில் “Lost but learning.”

24. ஐஸ்வர்யா ஆர், 28

2019-ல நாவல் எழுத ஆரம்பிச்சாங்க. இன்னும் Chapter 1: Prologue (Draft 7).

25. கோகுல் கிரிஷ், 26

“AI தான் ஃப்யூச்சர்”ன்னு சொல்றார். “AI”னு என்னன்னு கேட்டா “அதான் ChatGPT மாதிரி”னு சொல்லி விலகிடுறார்.

—-

நான் தெரிந்தது!

நீங்கள் தெரிகிறீர்களா?

தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

  1. படம் பிடித்திருந்ததா? – ஓம்; ஆம்! ஆமாங்க…
  2. ஏன்? – காக்கி சட்டை, மகாநதி, புன்னகை மன்னன் என பல முக்கிய கமல் படங்கள் அவ்வப்போது தெரிந்தாலும், இது புத்தம்புதிய ‘நாயகன்’
  3. முதல் பாதி எப்படி? – உச்சஸ்தாயி. அழுத்தம். பாசாங்கற்ற பளிச்.
  4. இரண்டாம் பாதி? – தக் லைஃப் இரண்டிற்காக பாக்கி வைக்காமல் எடுத்ததற்கு ஷொட்டு
  5. ஏமாற்றிய தருணங்கள் – நாசர் நடிப்பு/கதாபாத்திரம்; நாலு பேரால் நினைவில் வைக்க முடியாத வசனம்; அண்ணன் – தங்கை பாசமலர்
  6. உற்சாக தருணங்கள் – பாலைவனம், பனிவனம், டெல்லிவனம், அலைவனம் என கேமிரா; ரீங்கரிக்கும் பொருத்தமான இசை; நான் எப்பொழுதாவது சொல்வேன் என்று நினைத்திரவே இராத: ‘சிம்பு அவர்களின் நடிப்பு!’
  7. த்ரிஷா – 96 போன்ற குப்பை படங்களில் பொம்மையாக வந்தவர் சும்மா ராணியாக ஜொலிக்கிறார்.
  8. பாடல்கள் – பாதிப் பாடல் மட்டுமே வெள்ளித் திரையில். மீதி அடுத்த அராஜக வாழ்க்கையில்
  9. பிடிக்கவில்லை என்பவர்கள் – நன்றாயிருக்கிறது என்றால் கண்ணியவான் வேசம் போய்விடுமோ என்னும் பயம் கொண்டவர்கள்
  10. மொத்தத்தில் – கமல் ரசிகன் என்றால் கண்ணிலேயே நிற்கும். மணி ரத்னம் விரும்பி என்றால் மனதில் லயிக்கும். பூமர் என்றால் ரசிக்கும்.

தக் லைஃப் – குறியீடுகள்

1. டெல்லி ராஜ்ஜிய போட்டிகள்:
– இந்திரா காந்தி x சஞ்சய் காந்தி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – ராஜீவ் காந்தி
– சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ராகுல் காந்தி
– அசோக் செல்வன் – ஜெயப்ரகாஷ் நாராயண்
– நாசர் – லால் பகதூர் சாஸ்திரி
– ஜோஜு ஜார்ஜ் – மொரார்ஜி தேசாய்
– மகேஷ் மஞ்சரேகர் – ஜனாதிபதி நிக்சன்
– த்ரிஷா – மாருதி சுஸூகி
—-

2. ஈடிபஸ் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

3. ஏகலைவன் – சிம்பு
உயிர் போன்ற கட்டைவிரலைக் கேட்பார் துரோணர்.
வளர்ச்சியையும் திறமையையும் கண்டு அச்சம் கலந்த பொறாமை கொள்வார் அர்ச்சுனர் கமல்.
மாறாப்பற்றைப் போன்ற அடிமைத்தனத்தை எதிர்பார்ப்பார் கமல் என்னும் ஆசான்.
—-

4. ஒரே பெண்ணை ராமனும் விரும்புகிறார்.
பத்து தல அசுரனும் நாடுகிறார்.
அவர் –> த்ரிஷா.
ராவணன் என்னும் சிம்பு, சீதையை சிறையெடுக்கிறான்.

5. புராணத்து சீதையை நிஜ வாழ்வில் த்ரிஷா என்னும் நட்சத்திரத்தின் குறியீடு.
இது உங்களைக் குழப்பலாம்.
கமல்தனமாக யோசியுங்கள்.
விண்ணைத் தாண்டி வந்த மன்மதன் அம்பு எவ்வாறு இரு முரடர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது?
—-

6. சீஸர் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

7. அபிமன்யு – கமல்
துரியோதனன் (சிம்பு)
துரோணாச்சாரியார் (நாசர்)
கர்ணன் (ஜோஜு ஜார்ஜ்)
கிருபர் (பகவதி பெருமாள் (அ) பக்ஸ்)
துச்சாதனன் (அர்ஜுன் சிதம்பரம்)
பீஷ்மர் (இளங்கோ குமாரவேல்)
—-

8. மகாபாரதம் என்றாலே வெண்முரசு.
ஜெயமோகன் போன்ற இலக்கிய பிதாமகர் பாத்திரத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர்!
அவரின் அண்ணன் போன்ற சுந்தர ராமசாமி ஆக நாஸர்.
அவரின் மகன் போன்ற வழித்தோன்றல்களை நாயக்கரே உருவாக்குகிறார்.
சதானந்த் போன்ற சாநி… மன்னிக்க… எதிரணிக்காரர்களுக்கும் விஷ்ணுபுரம் விருது கொடுத்து நேசக்கரம் கொடுக்கிறார்.
நாயக்கரைத் தவிர அவரின் அடிப்பொடியை நாடி, அமரன் பக்கம் வெகுஜனம் சாயும் போது விமர்சன மழையைப் பொழிகிறார்.
அப்படி என்றால், ‘இந்திராணி’ யார்? – சாகித்ய அகடெமியா? ஞானபீடமா??

9. ரொம்ப யோசிக்காதீங்க – இது நவீன ‘வீரபாண்டிய கட்டபொம்மன்

10. அதுவும் இல்லை – சிலப்பதிகாரம் + மணிமேகலை
– கோவலன் – த்ரிஷா
– கண்ணகி x மாதவி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – கவுந்தி அடிகள்
– கருணாநிதி – மணிமேகலை
– அட்சய பாத்திரம் – தமிழ் நாடு
– நெடுஞ்செழியன் – பார்வையாளர் ஆகிய நீங்கள்
– கோப்பெருந்தேவி – வாசிக்கும் தாங்கள் தான்!

What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words

ப்ராம்ப்ட் எஞ்ஜினியரிங்-கில் தோற்றவர் யார்?

அ) கும்பகர்ணன் – நித்தியத்துவம்

ஆ) பஸ்மாசுரன்

இ) பலராமன்

ஈ) ஹிரண்யகசிபு

எல்லாமே சரி.

என்னையும் சேர்க்கலாம்.

நண்பர்களை சந்திக்கும் எவருமே கணி-அரட்டை பொறியியலில் இருந்து தப்பித்தவர்கள்.

சென்ற வாரம் தோழர்களை அழைக்கும் காலம்.

நல்விருந்துகளில் பிராம்ப்ட் என்பதை எவ்வாறு தமிழில் வார்த்தையாக்கலாம் என்னும் வினா எழுந்தது.

Prompt Engineering எனப்படுவது

1. வல்லே வார்த்தை

(நாலடியார்: நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்

தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.)

2. வீச்சுக்குறிப்பு (பரோட்டா அல்ல; சொல்லும் பொருளும் ஒலியும் ஒளியும்)

3. நெருக்கனல் (நெருப்புடா… நெருங்குடா பார்ப்பம்)

4. கிண்டு (கிண்டக் கிண்டக் கிடைக்கும்)

5. ஒல்லைப்பாடம் (விரைவில் ஒப்பிக்கும் பாடம்)

போஸ்டர்தான் நட்பும் கொண்டாட்டமும்.

உங்கள் ஆதரவு என்றும் தேவை!

பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா

த்ரிஷாவையும் நயன் தாரா போன்றோரை அழைப்பதை கிண்டல் செய்தது அந்தக் காலம்.
துரை முருகனாரையும் நக்கீரன் கோபாலையும் அழைப்பதை எண்ணிக் கூனிக் குறுகுவது இக்காலம்.

நடிகைகளைக் கொண்டாடுவதில் நேர்மை இருக்கிறது.
பதவியில் இருக்கும் தலைவரை வரவழைப்பதில் டிரம்ப் தனம் இருக்கிறது.

இது டிரம்ப்பிஸ்தான்.
உண்டியலும் அதிகாரமும் அமெரிக்கா.
இலாவணமும் அரசியலும் தமிழர் தேசி?

இன்றைய தேதியில் மாற்று சந்திப்புகள், மாபெரும் ஒருங்கிணைப்புகள், இந்திய கருத்தரங்குகள் நிறைய நடக்கின்றன.
வருடந்தோறும் நடக்கும் தமிழ்நாடு ஃபவுண்டேஷன் ஒரு புறம்.
அடுத்த ஆண்டு நடக்கப் போகும் ஜெயமோகனின் அமெரிக்க இலக்கிய விழா மாநாடு இன்னொரு புறம்.
செவ்வியல் நடனம், கர்னாடக சங்கீதம் என பாரம்பரியக் கலைகளுக்கென்றே க்ளீவ்லாண்டில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை.

இந்தியாவில் த.க.இ.பெ அழைக்கும் பேச்சாளர்கள் கூட தமிழர் சந்திப்புக்குப் பொருத்தமானவர்கள்.

அமெரிக்க இந்தியர்/தமிழர் என்று இன்னொரு பட்டியல் போட்டால்…
செந்தில் ராமமூர்த்தி
கால் பென்
பூர்ணா ஜெகன்னாதன்
மிண்டி காலிங்
கார்த்திக் முரளீதரன்
அனுக் அருட்பிரகாசம்
வி.வி. கணேசநாதன்
எழுத்தாளர் எஸ் சங்கர்

எத்தனை பொருளியல் வல்லுநர்கள்!
எம்புட்டு அசல் பேராசியர்கள்!!
ரகரகமான சிந்தனையார்கள்!!!
புனைவு எழுத்தாளர்கள்…
கருத்தாளர்களை விட்டு கிரீடதாரிகளைக் கொண்டு வருவது ஆப்பிள் ஃபோன் இருக்கும் போது ஓப்போ நாடுவது.

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.

மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.

மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.

சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,

அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.

‘பாரதி யார்’ @ பாஸ்டன்

பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்!
அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!!
டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும்.

மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது?

அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு எழக்கூடாது.
பாரதியார் பற்றித்தான் எல்லாம் தெரியுமே என்று பாக்கி 25% சதவிகிதத்தினர் ‘பாரதி சின்னப் பயல்’ ஆக தங்களை எண்ணுகிறார்கள் என்னும் விமர்சனம் சொல்லக்கூடாது.
ஞாயிறு பின் மதிய வேளையில் – சாப்பிட்டோமா… தூங்கினோமா! என்று ஓய்வு வேளையில் இந்த அரங்கப் புயலைக் கொணர்ந்தோம் என்னும் ஏற்பாட்டு புலம்பல்களைப் பகிரக் கூடாது.

இதை எழுதுவதால் பாஸ்டன் தமிழர் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்னும் முன் முடிவு.
நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கமோ; தமிழ் மக்கள் மன்றமோ; மாஸசூஸட்ஸ் தமிழ் அமைப்புகளோ; தமிழ்ப் பள்ளிகளோ; சிஷு பாரதி ஆசிரியர்களோ – எல்லோருமே ‘நல்லா நடக்கட்டும்!’ என வாழ்த்தினார்களே தவிர, நுழைவ்வுச்சீட்டையோ, தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ முடுக்கிவிட்டு அலைகடலென திரளாமல் ஐபிடிவி.யில் அரதப் பழசான ‘கயல்’, ‘இdli சட்னி காபி’ என்று நெடுந்தொடர் பிக் பாஸாக உதாசீனாம் செய்தது பின் விளைவு.

புலம்பல் போதும்.

இரமணன் வந்தார்; Isaikkavi Ramanan
நியூ ஜெர்சி தமிழர்கள் அரங்கேறி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் என துணை நின்றார்கள்.
தமிழ் மக்கள் மன்ற அறங்காவலர்களும் அமைப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை கரம் பற்றி கூட நடந்தார்கள்.

நன்றி டி.எம்.எம். Tamil Makkal Mandram, USA
பாரதியை எங்களுடன் கர்ஜிக்கவிட்ட இசைக்கவிக்கு நன்றி.
பிராட்வே அரங்கை உருவாக்கிய எஸ்.பி. கிரியேஷன்சுக்கு நன்றி. SB Creations / Raman Sbs
அவரை பாஸ்டனுக்கு அழைத்து நாடக நடிகர்களை உபசரித்து என் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்ட ரமணனின் மகன் ஆனந்திற்கு அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி நன்றி.

சரி…. நாடகம் எப்படி?

இரமணன் எழுதிவிட்டார்.
இணையத்திலும் கிடைக்கிறது.

அந்த நிகழ்வு முடிந்தவுடன், நம்மவர், என்னிடம் கேட்ட கேள்வி: “வீடியோ கிடைக்குமா?”

இந்த மாதிரி கொண்டாட்டம் எல்லாம் மனதிற்கு விரும்பியவர்களுடன் நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சி.
தமிழர்கள் எதையும் திருட்டி விசிவி-யில் பார்த்து ரசிப்பவர்கள்.
அவர்களுக்கு இந்த மனநிலை வாய்க்குமா!
அந்த அரங்கிற்குள் பாராதியார் காலத்திற்கு சென்றிருப்பார்களா!?
அப்படியே அவரின் எண்ணங்களுக்குள், பாடல்களுக்குள், வசன கவிதைகளுக்குள் தங்களை மீட்டெடுப்பார்களா!

இருநூறு டாலர் கொடுத்து (நியூ யார்க்கில்) லயன் கிங் பார்ப்பார்கள்.
வேட்டையனுக்கு (ஒருவருக்கு) 28$ கொடுப்பார்கள்.
இளையராஜாவின் திரைப் பாடல்களை ரஞ்சனி – காயத்ரி பாடினால் ($50) காசு கொடுத்து லயித்துக் கேட்பார்கள்.

அவர்களிடம் எட்டயபுரத்துக்கும் காசிக்கும் புதுச்சேரிக்கும் திருவல்லிக்கேணிக்கும் அழைத்துச் செல்கிறோம் என்றால் – ‘நாங்களே போயிக்கிறோம்!’ என்று ஒதுங்கி விடுகிறார்கள்.
’என் பையன்…’, ‘என் மகள்…’, என் குடும்பம் என்று ரத்தமும் சதையுமாக தங்களின் வழித்தோன்றலின் தத்தக்கா பித்தக்கா ஆட்டத்தை ரசிப்பர்வகள், – பாரதிதாசன், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி. என்றால் எதற்கு அந்த ஆளையும் அவரின் விழுமியங்களையும் இலட்சியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்… என ஜகா வாங்குகிறார்கள்.

’பாரதி யார்’ நாடகம் என்பதை விட அனுபவம்.
பாரதியாரின் வாழ்வு; பாரதியின் நியாயங்கள்; பாரதியின் பாடல்கள்; பாரதியின் சொற்றொடர்கள்; பாரதியின் எண்ணங்கள் – ஏற்கனவே நீங்கள் சீனி. விசுவநாதனாக இருந்தாலும் பாரதியைக் கண் முன்னேக் கொணரும் மகா காவ்யம்.
’பாரதி யார்’ அரங்க அனுபவம் என்பது சொல்லால் எழுதப்பட்டு புரிந்து கொள்வது அல்ல. அந்த அரங்கத்தில் பல்வேறு பார்வையாளர்களருடன் ஒருங்கிணைந்து இலட்சியப் பாதையில் பயணிக்க உறுதி மொழி கொள்வது.

அடுத்த முறை இது போன்ற வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது.

ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. இந்தச் சார்பு நிலையினால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் சமூகத்தின் அசல் அகநிலைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு இலக்கியம் கதைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் தேர்வுகளையும் கலாச்சாரத் தாக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை மறுவடிவமைப்பதற்கும் மறுவரையறை செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும்.

சொல்வனத்தின் 331-ஆம் இதழ் அப்படியான செயலூக்கம் நிறைந்த தமிழக வாசகர்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-331/

1. டோபையாஸ் ஓல்ஃப் எழுதிய ‘கணப்பின் ஒளி’: தமிழில் மைத்ரேயன்
2. சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய ‘வான வேடிக்கை’ : தமிழில் – அனுராதா க்ருஷ்ணசுவாமி
3. அருண் கொலட்கர் எழுதிய கவிதைகள்: தமிழில் – ஆர் சீனிவாசன்
4. ஆண்டன் செகாவ் உத்வேகத்தில் அசல் தமிழ்க்கதை – வார்ட் நம்பர் 6 நிர்மல்
5. ஃபிரெஞ்சுப் படங்களை தமிழில் அறிமுகம் செய்யும் கே.வி. கோவர்தனன்
6. ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-என உலக விஷயங்களை அறிவியல் தகவல்களை சுவாரசியமாக்கும் அருணாச்சலம் ரமணன்
7. ஜப்பானியப் பழங்குறுநூறு 99-100 கமலக்கண்ணன்
8. அரவிந்தரை ‘நீ இவ்வாறு இருப்பதனால்’ என தத்துவமும் பருப்பொருள் சார்பற்றதாகவும் கவித்துவமாகக் கொணரும் மீனாக்ஷி பாலகணேஷ்

மூன்றாண்டுகளுக்கு மேலாக வெண்பாக்களில் அக்கால ஆசிய இலக்கியத்தை கமலக்கண்ணன் ஜப்பானியப் பழங்குறுநூறு என நூறு கவிதைகளாக மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

அவரை வாழ்த்த வாருங்கள்.

இன்னும் நிறைய ஆக்கங்கள்; படைப்புகள். நீங்களும் உங்கள் எழுத்துக்களை அனுப்புங்கள்.

உலகளவில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் அசல் உரையை விட தங்களின் பிறமொழியாக்கத்திற்காக இலக்கிய அங்கீகாரம் பெறுவர். மன்டோவிற்கும் டோபியாஸ் வுல்ஃப்-க்கும் செகாவிற்கும் டாட்டி-க்கும் இதெல்லாம் புகழாரம்.