Monthly Archives: மே 2024

குற்றுழிஞை

ஏன் காவ்யா மாறன் தனியே, தன்னந்தனியே அமர்ந்து சன்ரைசர்ஸ் ஆட்டங்களை ரசிக்கிறார்?

ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்கவும்:

1. அப்பா கலாநிதி படம் எடுத்துக் கொண்டிருப்பதால்
2. ஹைதராபாத் பிரியாணியில் மற்றவர்கள் எல்லாம் பங்கு கேட்பதால்
3. ஸ்டெல்லா மேரீஸ் பொண்ணுங்களே இப்படித்தான்… இதுவே இராணி மேரி ஆகவோ எத்திராஜாகவோ பெண்கள் கிறித்துவக் கல்லூரியாகவோ இல்லாமல் போனதால்
4. கண்ணா பன்றிங்க தான் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும் என ஜெயிலர் சிவாஜி பன்ச் பேசியதால்
5. ஆந்திரப் பிரதேசம் வேண்டுமென்றால் தெலுங்கானா எனப் பிரிந்து போயிருக்கலாம். ஹைதராபாத் என்றைக்கும் கொல்ட்டிகளின் ஒரே தலைநகரமாக இருப்பதால்
6. கூட வர பிசினாறிகளுக்கு எல்லாம் விமானத்தில் பயணச்சீட்டு எடுத்து இந்தியா எங்கும் சுற்றிக் காண்பிக்க விரும்பாததால்
7. அணியில் வேண்டுமானால் பதினொன்று பேர் ஆடலாம். எல்லோர்க்கும் தலைவி ஒருத்தியாக புதிய அம்மாவாக உருவாவதால்
8. தேர்தல் நேரம் – உறவினர் முக ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி அவர்களும் பிரச்சாரத்திலும் பதற்றத்திலும் இருப்பதால்
9. அதுதான் இராசி என்பதால்… அப்பொழுதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜெயிக்கும் என்பதால்

பத்தாவது காரணத்தை பின்னூட்டத்தில் சொல்லவும்

ஒரு தானாகி மலைதல் (குற்றுழிஞை)

https://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213665.htm#:~:text=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88)

சில்வானம் – சிறுதனம் – சேடி

ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றால் இரண்டு விஷயம் நினைவிற்கு வருகிறது.

ஆர்.டி. மாதாந்தரியில், காசே கொடுக்காமல் நீங்கள் சந்தாதாரர் ஆகலாம் என்னும் துண்டுச் சீட்டு எப்பொழுதும் வரும். நயா பைசா முன் பணம் கொடுக்காமல், சென்ற வருடத்தின் எல்லா இதழ்களையும் வி.பி.பி. அஞ்சல் மூலம். பெற்றுக் கொள்ள வசதி உண்டு. நான் எண்பதுகளின் துவக்கத்திலேயே, திருட்டு வி.சி.டி. கிடைக்காதா என கற்பனை நுட்பத்தை, வீட்டில் இருந்தே தேடியவன்.

குடும்பத்தில் உள்ள பெரியோருக்கும் பெற்றோருக்கும் தெரியாமல், அந்தத் தபால் தலை தேவையில்லாத மடலை போஸ்ட் செய்து, தபால்காரரும் பொதியோடு வந்தார். அம்மா கையில் விழுந்தோ கத்தியில் மிரட்டியோ அவரை அதை அனுப்பித்தவருக்கேத் திரும்ப அனுப்ப வைத்தார்,

அன்று கற்றுக் கொண்ட பாடம்: எங்காவது முகவரி கொடுத்தால் – உன் சொந்த முகவரியைத் தராதே. எவராவது பெயரைக் கேட்டால், புனைப்பெயரைச் சொல்லு.

பணம் இல்லாமல், இந்த உலகில் எதுவும் கிடைக்காது என்பது இன்னொரு தரிசனம்.

அடுத்த தரிசனம் – நடிகை ஸ்ரீதேவிக்கு முந்தைய காலழகிகள்.

ஆனி ஃப்ரெஞ்ச் என்றொரு விளம்பரம் வரும். எல்லோரும் நல்ல கதையைக் கத்தரி போட்டு சேகரத்தில் வைப்பார்கள். எழுத்தாளர் அனுராதா ரமணன் என்றால் தினசரி நாளிதழில் வரும் செய்திகளை சேமிப்பேன் என்பார். எனக்கு சாடின் துணியில் வலக்காலை நீட்டி இடக்காலை தலைக்கு முட்டுக் கொடுத்து, பட்டென்று மயிர் நீக்கும் குழைமப் பெண்மணிகளின் சாந்தமான மோவாய் தாங்கிய மோனப் புன்னகை – சில்வானம்.

அதுதான் என் ரீடர்ஸ் டைஜஸ்ட். மழைக்கு ஒதுங்கியது போல் இன்னும் அந்த விளம்பரங்களின் பின் பக்கங்களை வாசிக்க வைத்திருப்பேன்.

ஆத்தா நீ காதழகி
அம்மா நீ காலழகி 

https://youtu.be/APjlA_ZBI8U?si=MEezCEvnuh_SP64v

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் யார்?

ஜிம் சைமன்ஸ் மறைந்துவிட்டார்.

தமிழ் ஊடகங்களில் லங்காஸ்ரீ மட்டுமே கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் அஞ்சலிக் குறிப்பில் இருந்து:

“கணிதம் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையால் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜிம் சைமன்ஸ் (Jim Simons).
31 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள ஜிம் சைமன்ஸ் உலகின் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
வர்த்தகம் குறித்த முடிவுகளுக்கு கணினி சிக்னல்களை பயன்படுத்தி முன்னோடியாக திகழ்ந்ததால் ”Quant King” எனும் பெயரால் ஜிம் சைமன்ஸ் அழைக்கப்பட்டார்.”

https://news.lankasri.com/article/world-richman-jim-simons-dies-at-86-1715378169

நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணத்தை கணித ஆராய்ச்சிக்காக களத்தில் குவித்தவர். கணிதவியல் ஆராய்ச்சியாளர்கள், கணக்கில் ஆர்வம் கொண்டோர் என அனைவரையும் சொகுசாக ஒன்று சேர்த்து மாநாடுகளை நடத்தியவர். ஸ்டோனி ப்ரூக் பல்கலையில் SCGP (Simons Center for Geometry and Physics), நியு யார்க் நகரில் சைமன்ஸ் மையம், Mathematical Sciences Research Institute (MSRI) என்று அழைக்கப்பட்ட Simons Laufer Mathematical Sciences Institute (SLMath); தொழில்நுட்பத் துறையிலும் அறிவியல் ஆய்வு என உலகின் அனைத்து ஆராய்ச்சிகளையும் இலவசமாகக் கொடுக்கும் arXiv தளத்திற்கு பல பில்லியன்கள்; மாக்மா ஒப்பந்தம்; AMS-Simons மானியங்கள்; சைமன்ஸ் இணைவாக்க நிதிநல்கை; குவாண்டா சஞ்சிகை (Quanta); கணக்கை சுவாரசியமாகச் சொல்லிக் கொடுக்கவும் புதிய விஷயங்களை விளக்கவும் Numberphile யூடியுப் கன்னல்; Math for America; தேசிய கணித அருங்காட்சியகம்; சைமன்ஸ் வானாய்வகம்

உதவித் தொகைகளை பட்டியல் போட்டால் பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் கூட ‘எச்சில் கையால் காகத்தை விரட்டுவது’ போல் தோன்றிவிடும்.

ஆய்வு மாணவர்களிடம் புழங்கும் நகைச்சுவையைக் கேட்டிருப்பீர்கள்: வேறெந்தத் துறையைக் காட்டிலும் வடிவகணிதம் சார்ந்த ஆராய்ச்சி முடித்தவருக்குத்தான் சராசரியாக அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும். சைமன்ஸ் மூன்று பில்லியன் சம்பாதிக்கிறார். மற்ற எல்லோரும் வருடத்திற்கு அறுபதாயிரம் டாலர் வாங்குவோம்.

“Be guided by beauty. I really mean that. Pretty much everything I’ve done has had an aesthetic component, at least to me. Now you might think ‘well, building a company that’s trading bonds, what’s so aesthetic about that?’ But, what’s aesthetic about it is doing it right. Getting the right kind of people, and approaching the problem, and doing it right […] it’s a beautiful thing to do something right.”

Jim Simons

தி.மு.க.வும் லவ்வர் திரைப்படமும்

”லவ்வர்” திரைப்படத்தைக் குறித்து பக்கம் பக்கமாக நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள்.

பட்டியல் கொஞ்சம் பெரிய பட்டியல்: சுரேஷ் கண்ணன் மட்டும் ஐந்தாறு தடவை; அபிலாஷ் இரண்டு, மூன்று முறை; அரவிந்த் வடசேரி; ச.ந. கண்ணன்; ஹரன் பிரசன்னா கொஞ்சம் காண்டாகி இருக்கிறார்; சுகுணா திவாகர்; தாமிரா ஆதி; அய்யனார் விஸ்வநாத்; விஷ்வக்சேனன்; பிரபு தர்மராஜ்; தமிழினி கோகுல் ப்ரசாத்; பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் யமுனா இராஜேந்திரன் (நாலந்து வரிகள்தான்); சௌம்யா ராகவன்; தனுஜா ஜெயராமன்; ப்ரீதம் பீதாம்பரம்; தமிழ்ப்பிரபா; சிவகுமார் வெங்கடாசலம்

இவர்களின் விரிவான பார்வையைத் தாண்டி என்ன புதியதாய் எழுதி விட இயலும்?

முன்னெல்லாம் விகடன் மதிப்பெண் போட்டால் சரியாக இருக்கும் என்பார்கள்.
இப்பொழுது வெ. சுரேஷோ ஹரன் பிரசன்னாவோ சுரேஷ் கண்னனோ சொன்னால் சரியாக இருக்கும் எனலாம்.

லவ்வர் நல்ல படம். தமிழில் இந்த மாதிரி தரமான சம்பவங்கள் எப்பொழுதாவது மட்டுமே நிகழும். வசனம், கதாபார்த்திரம், இடம், சூழல், என எல்லாம் களை கட்டும் படம்.

எல்லா பிம்பங்களையும் இரு வேறு பார்வையால் உடைக்கும் ஆக்கம்:
1. பெண்கள் பின்னாடி போகும் ஆண் என்றால் அந்தக் காரணம் மட்டுமே.
2. கல்லானாலும் காதலன்; புல்லானாலும் புருஷன் என்பது ஆணுக்கும் பொருந்தும்.
3. கல்லூரி காலத்தில் ‘மின்னலே’ என ‘அலைபாயுதே’ மணம் புரிந்து ஐந்தாண்டுகள் ஆனால் என்ன நடக்கும்?
4. தம் அடித்தால் கெத்தாக இருக்கும்; ஆனால், ஜம்மென்று மலையேறுவது எல்லாம் நாக்கு தள்ளும்.
5. 96 மாதிரி கல்லூரி மீள் சந்திப்பிற்கு வருவோருக்கு எல்லாம் ஒரே குறிக்கோள்: ‘நீ நல்ல, பெரிய ஆளாயிட்டியா? உன்ன விட எனக்கு சம்பளம் ஜாஸ்தியா?’
6. அர்ஜுன் ரெட்டி, அனிமல், வரிசையில் படம் எடுத்தால் பெண்களும் ரசிப்பார்கள்

7. படமே ஒரு பெரிய குறியீடு:

  • அ) மணிகண்டன் – திராவிடக் கட்சிகள்
  • ஆ) கௌரி ப்ரியா – தமிழக மக்கள் / வாக்காளர்கள்
  • இ) சாஃப்ட்வேர் நிறுவனத்தில் அவளுடைய மேலாளராக (அல்லது டீம் லீடர்) – அண்ணாமலை
  • ஈ) அலுவலகக் குழு – பா.ஜ.க.
  • உ) ‘அம்மா’ கீதா கைலாசம் – சசிகலா (புருஷனும் சரியில்லை; பையனும் ஆதரவில்லை)
  • ஊ) ’அப்பா’ சரவணன் – இராகுல் காந்தி (எல்லோருக்கும் சம பங்கில் லட்சங்களைப் பிரித்துக் கொடுக்கிறார்)

இந்த பின் நவீனத்துவ புரிதலுடன் அச்சுறுத்தல், பயம், ஆசை, சொத்து, உல்லாசம் எல்லாவற்றையும் இன்னொரு தடவை பாருங்கள்!

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?