எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…
எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.
சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.
ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.
இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.
எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.
சரி… வாசகர் கடிதங்களைப் பார்ப்போம்…
- https://www.jeyamohan.in/144522/
- https://www.jeyamohan.in/144463/
- https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.
இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.
கதை விமர்சனத்திற்கே வந்து விடுகிறேன்: https://www.jeyamohan.in/142864/
கதையை வாசித்துவிடுங்கள்.
தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.
இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.
விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.
கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.
கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.
ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.
தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.