Daily Archives: ஏப்ரல் 3, 2021

Best Allegory Novels in Tamil

இந்தக் கேள்வி என்னுடைய வலைப்பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாக வந்திருந்தது:

“i’ve been reading tamil fiction for a couple of years now and your blog has been useful for book recommendations;
can u please make a list of allegorical novels in tamil”

நான் ஏழெட்டு வருடமாக என் வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுதவில்லை என்பது முதல் அதிர்ச்சி. என்னிடம் வந்து கேட்கிறார் என்பது “இன்னும் கூகுள், கோரா போன்ற தேடுபொறிகளும் கேள்வி – விடை வலையகங்களும் வயதிற்கு வரவில்லை,” என்பதை உணர்த்திய முதிர்ச்சி.

எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் வைத்திருப்பது ஒரு கன்சல்டண்ட் மனோபாவம். தனக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு தெரியாதவற்றை உணர வைப்பது இலக்கியவாதி மனோபாவம். இரண்டும் அமையைப் பெற்றவன் நான். சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை.

கூகிள் மூலமாக “தமிழில் அலிகரி கதைகள்” எனத் தேடும்போது என் பதிவு முதல் பத்தில் வந்து நின்றிருக்கும். ஆனால், நான் எழுதும் மேட்டருக்கும் வைக்கும் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது. எம்.ஃபில். மாணவர் குழம்பியிருப்பார். பி.எச்டி. ஆய்வுக்கு எதை எடுப்பது, ஆராய்ச்சிக்கு எப்படி முட்டுக் கொடுப்பது என்று பிரமித்திருப்பார்.

எனவே, அதை முகாந்திரமாக வைத்து #சொல்வனம் தளத்தில் கேள்விக்கு விடையளித்திருக்கிறேன்.

இவற்றை அதிகதைகள் என்று சொல்லலாம். எழுத்தில் சொல்லப்பட்டதற்கு மீறி இன்னும் பலவற்றை உணர்த்துவதால்…

இந்தப் படைப்புகள் நம் எல்லோருக்கும் பழகிய “ஆக்கம்” என்னும் வடிவத்திற்குள் அடங்காதவை. இதற்கு நெடிய பாரம்பரியம் உண்டு. புத்தர், ஈசாப், மஹாபாரதம், அக்பர்-பீர்பால், வேதாளக் கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என நிறைய முன்னோடிகள் உண்டு. இந்தக் கால ஆளூமைகள் என்றால் இத்தாலோ கால்வினோ, ஃபோர்ஹே, காஃப்கா, மிரோஜெக் என அடுக்கிப் போகலாம்.

“நவீனத் தமிழலக்கிய அறிமுகம்” நூலில் ஜெயமோகன் எழுதிய “இலக்கியச் சூழலின் போலி பாவனைகள்” என்பதையும் படித்து விடுங்கள்!