Daily Archives: பிப்ரவரி 1, 2012

How to make Badri Seshadri a Tamil Nadu politician?

பத்ரியை பதிவுலகில் அறியாதவர் இலர். அவரை தமிழக அரசியல்வாதி ஆக்குவது எங்ஙனம்?

1. வண்ணச் சொக்காயை விட்டு வெள்ளை சட்டை; அரைக்கால் டவுசரை விட்டு, கரை வேட்டிக்கு மாறவேண்டும்.

2. புதிய தலைமுறை, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சன் செய்திகளில் வரவைத்துக் கொள்ள வேண்டும்.

3. அதன் தொடர்ச்சியாக புதிய சேனல் துவங்க வேண்டும்.

4. குஷ்பு போல் புரட்சிகரமான கருத்துகள் சொன்னால் போதாது; திருமா போன்றவர்களிடமிருந்து மிரட்டல்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

5. நல்ல தமிழில் பேசுவதிற்கு பதிலாக பக்கா லோக்கல் தமிழில் பண்பாட்டுடன் உரையாட வேண்டும்.

6. அலைக்கற்றை, அயோத்தியா என்று இதுவரை எழுதியவற்றை அழித்துவிடவேண்டும்.

7. அழித்தவுடன், அதன் துணுக்குகளை வெகுசன ஊடகங்களான விகடன், குங்குமத்தில் வரவைக்க வேண்டும்.

8. தமிழ் பேப்பரை மாலை நாளிதழாக்கி மாயவரத்தாரையோ மருதரையோ மாஸ் தலைப்பு தூண்டில் உற்பத்தியாளராக்கி தேநீர் நிலையங்களில் சூடு பறக்க வேண்டும்.

9. ’அரசியல்வாதி ஆவது எப்படி’ என்று புத்தகம் அச்சிடக் கூடாது.

 

10 Reasons why Koodankulam Nuclear Power Plant is opposed

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இணையத்தில் தேடினால், ‘Whats the worst that could happen’ என்று விளக்கும் பதிவுகள் முதலில் தென்படுகின்றன. அவற்றில் இருந்து என் புரிதல்:

1. கேரளாவிற்கு அருகில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு போல் பிரச்சினைக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் இடம் தோதுப்படாது.

2. ராஜீவ் காலத்திலேயே கையெழுத்திட்டதால், தற்போதைய எம்.பி.க்களுக்கு கையூட்டு கிட்டவில்லை.

3. இலங்கையில் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத சக்திகள் அடக்கப்பட்டுவிட்டாலும், பாகிஸ்தானில் இருந்து முஜாஹிதீன் யாராவது கள்ளத் தோணியில் வெடிகுண்டு போடுவார்கள்.

4. இந்த மாதிரி பயங்கரவாதக் குழுக்களும், அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவமும், ராணுவத்திடமிருந்து மக்களை பாதுகாக்க காவல் படையும் குவிவதால், நிலநடுக்கம் ஏற்படலாம்.

5. முன்னாடி லெமூரியா கண்டம் இருந்ததே இன்னும் ருசுப்படவில்லை. இந்த லட்சணத்தில் குமரிக் கண்டமும் திராவிடர்களுக்கு இல்லாமல் சுனாமிக்கு இழக்கலாமா!

6. தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களுக்கும், போராட்டக்குழுவுக்கு தலைமையேற்றுள்ள உதயகுமார் அவர்களுக்கும் முறையே 54 கோடி ரூபாயும், உதயகுமார் அவர்களுக்கு 1.5 கோடி ரூபாயும் வந்தது வெறும் முன்பணம் மட்டுமே. முழுப்பணம் இன்னும் பட்டுவாடா ஆகவில்லை.

7. இப்போதாவது தினசரி 550 ரூபாய் கிடைக்கிறது. மின் உற்பத்தி துவங்கி விட்டால், இந்த வருவாயும் நின்றுவிடும். தேர்தலும் இல்லாத தரிசு காலத்தில், கூட்டத்தில் நிற்போரின் தினப்படியை கொடுக்கவிடாமல், வாயில் அடிப்பது நன்றாக இல்லை.

8. உலகமே இன்னும் கொஞ்ச நாளில் இருளில் மூழ்கிவிடும். அப்போது தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க, இப்போதில் இருந்தே பழக்கப்படுத்தும், சூரிய ஒளியை மட்டும் நம்பி வாழவைக்கும் திட்டம்.

9. வைகோ போன்ற பேச்சாளர்களுக்கு பேச, உணர்ச்சி உரை ஆற்ற ஒரு விஷயம் குறைந்து போகும் அபாயம்.

10. நெய்வேலியில் இன்னும் கரி இருக்கிறதே! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் இருக்கிறதே!! இலையில் இருந்து எண்ணெய் கொடுக்க ராமர் பிள்ளை கண்ட அறிவியல் தமிழ்நாட்டில் அணுசக்தி எதற்கு!!!