அமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை


நன்றி: விஜயபாரதம்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் நிலவிய எண்ணத்தைப் போக்கி அமெரிக்கா என்பது தகுதியையும் திறமையையும் மதிக்கும் ஒரு நாடு என்பதை காண்பித்துள்ளார். திறமையுள்ள எவருமே அவ்ருக்குத் தகுதியான பதவியை அடைய நிறம், இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை அவரது வெற்றி காட்டியுள்ளது.

47 வயதாகும் பராக் ஒபாமா உலகப் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலையில் சட்டம் பயின்ற ஒரு புத்திசாலியான வழக்கறிஞர். அவரது மனைவி மிச்சயில் ஒபாமாவும் அந்தப் பல்க்லையில் சட்டம் பயின்றவரே. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

சட்டம் பயின்று பல லட்சம் சம்பள வருமானம் வரும் வாய்ப்பு இருந்தாலும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து தனது அபாரமான பேச்சாற்றலாலும், கூர்மையான மதியினாலும், தெளிவான சிந்தனையினாலும் மக்கள் மற்றும் தனது கட்சியினரின் ஆதரவையும் பெரு மதிப்பையும் பெற்று வந்து 8 ஆண்டுகளுக்குள் நாட்டின் மிக உச்சமான பதவியை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கிறார். அமெரிக்க மக்களின் இந்தத் தேர்வு உலக நாடுகளிடையிலும் அமெரிக்கா மீதான ஒரு நம்பிக்கையும், நன் மதிப்பையும் ஈட்டியிருக்கிறது.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க இயலாத ஒரு கனவு நனவாகி இருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ப்ராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகவே நின்று விடுகிறது.

அமெரிக்காவில் மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன.

ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டட்ங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன.

இதில் ஜனாதிபதியை நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை உறுப்பினர்களின் ஓட்டு என்ற கணக்கில் ஒவ்வொரு மாநிலத்த்திலும் எந்த வேட்பாளர் ஜெயிக்கிறாரோ அவருக்கு அந்த எண்ணிக்கை வழங்கப் பட்டு இறுதியில் அதிக பிரதிநிதித்துவ எண்ணிக்கப் பெறும் வேட்பாளர் வெல்கிறார். ஒட்டு மொத்தமாக அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் யார் ஜெய்க்கிறார்களோ அவர்களுக்கு 55 ஓட்டுக்கள், ஃப்ளோரிடா மாநிலத்தில் ஜெயிப்பவருக்கு 27 வாக்குகள் என்று மொத்தம் யார் 270 வாக்குகளை மாநிலவாரியாகப் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப் படுகிறார்கள்.

அப்படி பல மாநிலங்களில் அதிக ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 364 எலக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநித்துவ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் ஒபாமா.

மேலும் ஒட்டு மொத்த மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் 52 சதவிகிதம் பெற்று சாதனை படைத்து ஒரு மெஜாரிட்டி ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார்.

மந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தகுதியும் திறமையும், அனுபவமும் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் படுவார்கள்.

காங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

செனட்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் 57 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 251 இடங்களையும் பெற்று ஏறக்குறையப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருக்கிறார்கள்.

ஜனாதிபதியும் ஜனாநாயக் கட்சியின் வேட்பாளரே. தனது கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பதால் தான் நினைக்கும் திட்டங்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் வாங்குவது ஓரளவுக்கு ஒபாமாவுக்கு வசதியாக இருக்கும் என்பது அவருக்கு அனுகூலமான ஒரு நிலைமையாகும்.

அமெரிக்காவில் ரிபப்ளிக்கன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி என்ற இரு பெரும் கட்சிகள் இருக்கின்றன. இவை போக ஒரு சில சிறு கட்சிகளும் உள்ளன. அவர்களுக்கு ஒரிரு சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.

டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமாவும், ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெயின் என்பவரும் போட்டியிட்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுகின்றன.

இரண்டு கட்சியிலும் ஜனாதிபதிக்குப் போட்டியிட விருப்பம் உள்ள அனைவரும் அவர்களது உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு சில இடங்களில் பொது மக்களும் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம்.

அப்படி இரண்டு கட்சிகளிலும் யார் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார்களோ அவர்கள் அந்தந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுகிறார்கள். ஆகவே திறமையும். தகுதியும், ஆளுமையும், ஆதரவும் செயல் திட்டங்களும், பிரச்சாரத்திற்கான பண பலமும் உடையவர்களே இறுதி வரை போட்டியிட்டு வேட்பாளருக்கான தகுதியை அடைந்து அந்தந்தக் கட்சிகளால் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக நிறுத்தப் படுகிறார்கள்.

ஒரு பெரிய மாநாட்டை நடத்தி இரண்டு கட்சிகளும் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளரை அறிவிக்கின்றன. அந்த மாநாட்டின் பொழுது ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். அதன் பிறகு இரண்டு கட்சியின் வேட்ப்பாளர்களும் மக்களிடம் சென்று, மாநிலம் மாநிலமாகச் சென்று தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவித்து ஆதரவு கேட்க்கிறார்கள்.

மக்களும் அவர்களது தகுதி, திறமை, கொள்கைகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, தத்தம் சார்புள்ள கட்சி ரீதியாகவோ அல்லது யார் சிறந்த வேட்பாளர் என்பதை பகுத்தறிந்தோ தங்கள் ஓட்டுக்களை அளிக்கின்றனர்.

ஜான் மெக்க்யின் சார்ந்துள்ள ரிபப்ளிக்கன் கட்சி தீவிரமான கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற மத ரீதியான கொள்கைகளைக் கொண்ட கட்சி.

ஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி சற்று ப்ரந்த மனமுள்ள லிபரல் கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியானது கருக்கலைப்புக்கு எதிரானது,. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. ஓரினத் திருமணத்தை எதிர்ப்பது. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி.

டெமாக்ரடிக் கட்சி லேசான இடதுசாரி கட்சி எனலாம். தொழிற்சங்கத் தொழிலாளர்கள், வெள்ளையரல்லாத இனத்தவர்கள் போன்ற பரவலான ஆதரவைப் பெற்றக் கட்சி. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை என்றும் சற்றே லிபரலான கொள்கைகள் உடைய கட்சி.

ரிபப்ளிக்கன் கட்சிக்கு பெரும்பாலான மத்திய, தெற்குப் பகுதிகளில் பலத்த ஆதரவு உள்ளது. டெமாக்ரடிக் கட்சியினருக்கு கடற்கரையோர கிழக்கு, மேற்கு மாகாணங்களில் பலத்த ஆதரவு உள்ளது.

இவை போக இரண்டு கட்சியினருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் பலத்த வேறு பாடுகள் உள்ளன.

பொருளாதாரக் கொள்கையில் ரிபப்ளிக்கன் கட்சி அரசாங்கத்தின் செலவுகளும், வரிகளும் குறைந்து இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையது,டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும், கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற கொள்கையும் உடையது.

இந்த முறை வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிக்கும் வேறுபாடுகள் இருந்தன.

ஈராக்கில் இன்னும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், ஈரானுடன் அடுத்துப் போருக்குப் போய் அடக்க வேண்டும் என்றும் ஜான் மெக்கெயின் மற்றும் அவரது ரிபப்ளிக்கன் கட்சி உறுதியாக நின்றது. ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்பதிலும், ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் தாலிபான்களை ஒடுக்க வேண்டும் என்பதிலும், பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருக்கும் தாலிபான்களையும் பின்லாடனையும் ஒழிக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.

கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும், சுற்றுச் சூழல் விஷயங்களிலும் இரு வேட்பாளர்களும் பெரிதும் வேறு பட்டனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தோண்டி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பது மெக்கெயின், பெல்லன் நிலைப்பாடாகவும், மரபுசாரா மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செலுத்தி பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு பிடித்து அதன் மூலம் அரேபிய நாடுகள் மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைப் போக்குவேன் என்பது ஒபாமாவின் நிலைப்பாடாகவும் இருந்தது.

ஜான் மெக்யென் தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரப் பெல்லன் எனப்படும் அலாஸ்கா மாநிலத்து கவ்ர்னரையும் (நமது முதல்வர் போன்ற பதவி) ஒபாமா தன் துணை வேட்பாளராக ஜோ பைடன் என்னும் செனட்ட்ரும் வெளியுறவுக் கொள்கையில் ப்ழுத்த அனுபவம் உள்ளவரையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.

சாராப் பெல்லன் ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தும் கூட அவரது அனுபவின்மையும், பொது அறிவின்மையும் அவரது பேட்டிகளில் வெளிப்பட்டு அவ்ர் ஒரு மோசமான தேர்வு என்ற செய்தி மக்களிடம் பரவி விட்டது. பெல்லனின் தேர்வு மெக்கெயினின் வெற்றியை மேலும் பாதித்தது.

இரண்டு கட்சியினரின் மாநாடுகளும் பிரமாண்டமாக நடை பெற்றன. டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். இளைஞர்களும் முதல் முறை ஒட்டுப் போடுபவர்களும் அதிக அளவில் காணப் பட்டனர்.

மாநாட்டுக் கூட்டம் பல இனங்களும் கலந்த ஒரு வண்ணக் கலவையாக இருந்தது. மேடையிலும் நிறைய ஆப்பிரிக்க அமேரிக்கர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் பேசினார்கள். இது எல்லா தரப்பினரையும் கவர்ந்த ஒரு கட்சி என்பது நிரூபணமாகியது.

மாறாக ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையோ, லத்தீன் அமெரிக்கர்களையோ லென்ஸ் வைத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. பன்முகத்தன்மையின்றி சுத்தமாக இல்லாமல் தூய வெள்ளையாக மட்டுமே காட்சியளித்தது.

மாநாட்டில் கூடிய கூட்டம் தவிர இரண்டு ம்நாட்டுக்களையும் பல மில்லியன் மக்கள்
டெலிவிஷனில் கண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் அரசியல் கட்சி மாநாடுகள் பொது தொலைக்காட்சிகளில் (கட்சி சார்பு டி விக்களில் அல்ல) முழு நிகழ்ச்சிகளும் காண்பிக்கப் படுவது இல்லை. அப்படியே காண்பிக்கப் பட்டாலும் இத்தனை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் கண்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பது ஒரு முக்கியமான வேறுபாடாகும். அமெரிக்கத் தேர்தலில் பங்கு பெறும் ஆர்வமுள்ள கட்சி சாராத நடுநிலை மக்கள் அனைவரும் டி வி யில் நடக்கும் அரசியல் விவாதங்கள், டி வி யில் கான்பிக்கப் படும் பேச்சுக்ள் ஆகியவற்றை வைத்தே தங்கள் தேர்வை முடிவு செய்கிறார்கள்.

சார்பு நிலைகள் இருந்தாலும் டி வி க்கள் அமெரிக்க ஜன்நாயகத்தில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. மாநாட்டுப் பேச்சு, டெலிவிஷன் விவாதம், நேரடியாக மக்களைச் சந்த்தித்து ஓட்டுச் சேகரித்தல் ஆகிய பிரச்சார உத்திகளை இரு வேட்பாளர்களும் பின்பற்றினார்கள். இருந்தாலும் பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சார உத்திகளிலும் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருந்தார். இணையத்தையும், ஃபேஸ் புக், பாட்காஸ்ட், டெக்ஸ்ட் செய்திகள், டிவ்ட்டர் செய்திகள், ப்ளாகுகள், யூட்யூப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை மிகத் திறமையாக தன் வெற்றிக்கு ஒபாமா பயன் படுத்திக் கொண்டது அவரது திட்டமிடலையும், நுட்பத்தையும் காட்டுகின்றன.

தொழில்நுடபத்தைத் தன் தேர்தலுக்கு மிக வலிமையாகப் பயன் படுத்திக் கொண்டதன் மூலம், இணையம் மூலமாகவே கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர் நிதி குவிக்க முடிந்திருக்கிறது. அதைக் கொண்டு லட்சக்கணக்கான டெலிவிஷன் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுத்து மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே முன் எப்பொழுதும் இருந்திராத அளவுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் தன் தொண்டர்களாகச் சேர்த்து அவர்களை ஒருங்கிணைத்துத் தேர்தல் நாள் அன்று ஓட்டுச் சாவடிக்கு மக்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்கு முதன் முறை வாக்காளர்களும், இளைஞர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்தனர். அவர்களை மிகத் திறமையாகப் பயன் படுத்திக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவையும் நட்பையும் வளர்த்துக் கொண்டது ஒபாமாவின் அபரிதமான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவின் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 64 சதவிகித வாக்காளர்கள் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.

டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் ஒபாமாவின் பேச்சுக்கள் அனைத்துமே அபாரமாக இருந்தது. இந்த இளம் வயதில் இந்த இடத்தை இவர் எப்படி எட்டினார் என்பதன் ரகசியம் அவரது அற்புதமான பேச்சாற்றலில் இருப்பது புரிந்தது. அவரது பேச்சில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை பட்டியலிட்டார்.

ஈராக்கில் இருந்து படைகளை விலக்கி ஆப்கானிஸ்தானத்திற்கு படைகளை அனுப்புவேன், பாக்கிஸ்தானிற்குள் ஒளீந்திருக்கும் பின்லாடன் குழுவினரை அழிப்பேன். ஈரானுடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்துவேன். இன்னும் பத்தாண்டுகளில் சுத்தமாக மிடில் ஈஸ்டின் எண்ணெய்க்காக காத்திருக்கும் நிலையை மாற்றுவேன், அமெரிக்காவில் மாற்று எரிபொருள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சித் தொகையை அதிகரித்து கண்டு பிடிப்புகள் மூலமாக எரிபொருள் தன்னிறைவை ஏற்படுத்துவேன், புஷ்ஷினால் இன்று ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியைப் போக்குவேன் என்று தான் செய்யப் போவதைப் பட்டியலிட்ட ஒபாமா, புஷ்ஷின் மோசமான ஆட்சியினால் அமெரிக்கா இன்றிருக்கும் நிலமையை விளக்கினார்.

எட்டு வருட ஆட்சி போதும் அது இனியும் வேற்று ரூபத்தில் தொடர வேண்டாம் எயிட் இஸ் எனஃப் என்ற கோஷத்தினை எழுப்பினார்.

பேசிய அனைவரும் எதிர் கட்சி வேட்பாளரான ஜான் மெக்கயினுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். அவரது ராணுவ அனுபவத்தையும், தியாகத்தையும் வெகுவாகப் போற்றினார்கள். அனைவரும் அவரை மிகவும் மரியாதைக்குரிய நண்பர் என்றே விளித்தார்கள். அப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் புஷ்ஷின் மடத்தனமான ஆட்சிக்கு ஆதரவு அளித்ததையும் 90% புஷ்ஷின் தீர்மானங்களை மெக்கயின் ஆதரித்ததினால் அவர் ஒரு புஷ்ஷின் நீட்சியே ஆகவே அவருக்கு ஓட்டளிப்பதும் புஷ்ஷின் ஆட்சியைத் தொடர வைப்பதும் ஒன்றே என்ற ஒரே குற்றசாட்டை மட்டும் மீண்டும் மீண்டும் அனைத்துப் பேச்சாளர்களும் பேசினார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சி கூட்டங்களில் ஒபாமா மீது அவரது நடுப் பெயரை வைத்து சந்தேகங்கள் கிளப்பட்டன. அவருக்கு இருந்த ஒரு சில அறிமுகங்களை வைத்து அவர் மீது தீவீரவாதச் சந்தேகமும் வீசப் பட்டன. ஏராளமான தனி நபர் தாக்குதலுக்கு உள்ளானாலும் கூட அவற்றையெல்லாம் மிக அமைதியான புன்னகை தவழும் முகத்துடனும், தீர்க்கத்துடனும், மன உறுதியுடனும் பொறுமையுடனும் ஆத்திரப் படாமல் எதிர் கொண்டது அவர் மீது மக்களுக்குப் பெருத்த மரியாதையை உருவாக்கி அவரது வெற்றிக்கு வித்திட்டது.

இந்திய அரசியல்வாதிகள் பேச்சுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் பேச்சுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்த தெளிவின்மை. அவை பற்றிய அக்கறையின்மையும் எப்படியாவது மக்களைத் தங்கள் வசீகரமான பேச்சுக்களால் கவர்ந்தால் மட்டும் போதுமானது என்ற அலட்சியமும் பொதுவான அம்சமாக விளங்குகிறது.

ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் முக்கியமாக தவிர்க்க விரும்பிய இரண்டு பெயர்கள் புஷ் மற்றும் சென்னி. அவர்கள் மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருந்தனர். அந்த அளவுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தவிர்க்க முடிவு செய்தனர்.

ரிபப்ளிக்கன் கட்சியில் பேசிய அனைவரும் மீண்டும் மீண்டும் மெக்கெயின் வியட்நாம் போரில் சிறைப் பிடிக்கப் பட்டதையும் அவர் அங்கு அனுபவித்த சித்ரவதைகளையும் அவரது மன உறுதியையும் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிப் போரடித்தார்கள். சொன்னதையே பல விதங்களில் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சியின் இரண்டு வேபாளர்களும் திறமையாக, அலங்காரமாக,கவர்ச்சியாகப் பேசினார்கள் பெரும் வரவேற்பை பெற்றார்கள். ஆனால் மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் பேசத் துணியவில்லை.

அவர்கள் குறி அமெரிக்காவில் எண்ணெய் தோண்டுவதிலும், வரி விலக்குக் கொடுப்போம் என்பதிலும், ஒரீன திருமணத்தைத் தடுப்போம், அபார்ஷனைத் தடுப்போம் என்பதில் மட்டுமே இருந்தன. வேலையின்மை, ரிசஷன், டாலர் மதிப்பிழப்பு, வீடுகள் மதிப்பிழந்து உருகும் மிக அபாயகரமான நிலமை, பண வீக்கம் போன்ற எதையுமே பேசத் தயாராக இல்லை. மெக்கெயின் மீண்டும் ஈராக்கில் ஆக்கிரமிப்பைத் தொடருவோம் என்றே பேசிக் கொண்டிருந்தார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரான பெண்மணியோ அபார்ஷனை ஒழிப்பேன் அலாஸ்காவில் எண்ணெய் தோண்டுவேன் என்றார்..

மாநாடுகளைத் தொடர்ந்து இரு வேட்பாளர்களும் நேருக்கு நேரான விவாதங்களில் மூன்று முறை கலந்து கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள்,வெளிநாட்டுக் கொள்கைகள், மருத்துவ நலன், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர். இவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பப் பட்டன.

மூன்று விவாதங்களிலுமே ஒபாமா தன் தெளிவான பேச்சாற்றலாலும், திட்டங்களை எடுத்துச் சொல்லும் திறத்தினாலும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடாமலும் மிக அமைதியாக ஆனால் வலுவாக தன் நிலையை எடுத்த்து வைத்ததினால் விவாதங்களின் பொழுதே நடுநிலை வாக்களர்களின் மனக்களையும் கவர்ந்து அவர்களின் ஆதரவினைப் பெற்றார்.

மெக்க்யின் தனது கோபத்தைக் காண்பித்தது மூலமாகவும், மீண்டும் மீண்டும் போர் போர் என்று மக்களின் பிரச்சினைகளைப் பற்றி போசாததினாலும், புஷ் ஏற்படுத்திய கெட்ட பெயரினாலும், மிக மோசமான பொருளாதார நிலைக்கு அவர் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி புஷ்ஷின் திறமையின்மை காரணமாகக் கருதப் பட்ட்தாலும் விவாதங்களின் பொழுதும், பிரச்சாரங்களின் பொழுதும் மக்களைக் கவராமல் போய் தொடர்ந்து பிண்டடைந்தே இருந்தார்.

இறுதியில் ஒபாமாவின் செயல் திடங்களும், பேச்சாற்றலும், கண்னியமான தன்மையும், அறிவும், அவருக்கு அப்ரிதமான வெற்றியைப் பெற்றுத் தந்தன. மெக்கெயினின் தெளிவில்லாத கொள்கைகளும், திறமையில்லாத அவரது துணை ஜனாதிபதி தேர்வும், அவரது கட்சியின் ஆட்சியில் நேர்ந்த பொருளாதாரத் தேக்கமும் அவருக்குக் கடும் தோல்வியை ஏற்படுத்தின.

பரபரப்பான தேர்தல் முடிந்து, மகத்தான வெற்றி பெற்று வரும் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க ஒபாமா காத்திருக்கிறார். இடைப் பட்டக் காலத்தில் அவரது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கண்டு வைத்து ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவசர கால அடிப்படையில் நிலமை மேலும் மோசமாவதற்குள் தீர்வுகள் கொடுக்க வேண்டும்.

ஒபாமாவின் வெற்றியினால் அமெரிக்க இந்திய உறவில் பெருத்த மாறுதல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒபாமா தன் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இந்தியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்காகவே தெரிந்தார். நம் அரசியல்வாதிகள் கூட அனுதாபம் தெரிவிக்க மறந்த ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் மறைவுக்கு ஒபாமா அனுதாபம் தெரிவித்தார்.

நம் அரசியல்வாதிகள் கூட வாழ்த்துத் தெரிவிக்க மறுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ராசியின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு சிறிய அனுமன் உருவத்தை தன்னுடனே எப்பொழுதும் வைத்திருந்தார். தனக்கு ஆன்ம பலமும் தன்னம்பிக்கையும் அந்த அனுமன் உருவம் வழங்குவதாக நம்பிக்கைக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதிய்தவியைத் துர்பிரயோகம் செய்து இந்தியாவின் மீது தீவீரவாதத் தாக்குதல் நடத்தப் பய்ன் படுத்துவதாக பாக்கிஸ்தானை வெளிப்படையாகக் கண்டனம் செய்திருந்தா.

ஆனால் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் வேலைகள் வெளியேற்றம் செய்யப் படுவதைத் தடுக்க உள்நாட்டில் வேலை வாய்ய்பு ஏற்படுத்தும் நிறுவங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பி பி ஓ மற்றும் ஐ டி நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மிகுந்த அளவிலான பாதிப்பாக அவை இருக்காது. மற்றபடி இந்திய அமெரிக்க நல்லுறவு தொடரவே வாய்ப்புகள் உள்ளன.

அமெரிககவின் மிக மோசமான பொருளாதார நிலமையும், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலை இழப்புக்க்களும், முழுகிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களும், மதிப்பை இழந்து வரும் பங்குச் சந்தையும் மிகவும் கடுமையான சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக பதவியேற்கவிருக்கும் ஒபாமாவிற்கு இது மிகவும் சோதனையான பணி காத்திருக்கின்றது.

உலக அளவிலும் ஈரானின் அணு ஆயுதத் தாயாரிப்பு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டூழியங்கள். ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை என்று மிகவும் சிக்கலான சவால்கள் அவருக்குக் காத்திருக்கின்றன. பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்கும் உடனடியான அவசர பணி அவரை எதிர் நோக்கியுள்ளது. எப்படி இத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறார் என்று அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமே அயர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் எதிர் நோக்கியுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்றுத் திருப்பு முனைத் தேர்தல் இந்தத் தேர்தல். 50 வருடங்களுக்கு முன்பாகக் கூட வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்த அடிமை இனத்தில் பிறந்த ஒருவரால் தன் திறமை, அறிவு, ஆற்றல் மட்டுமே வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடிந்திருக்கும் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது அமெரிக்காவில்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அடையாளம் தெரியாமல் இருந்த ஒரு கருப்பின சமூக சேவகர் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆம், மாற்றம் வந்தே விட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்கப் பட்ட பொழுது அவர்களது அடிமை விலங்கு சட்ட ரீதியாக மட்டுமே விலக்கப் பட்டிருந்தது.

ஆனால் இன்றோ மனோ ரீதியாகவும் கூட தலைக்கு மேலே இருந்த கண்ணாடிக் கூரை நொறுங்கி, இடம் விட்டு, வானம் ஒன்றே எல்லை என்று வழி விட்டிருக்கிறது. இது எழுச்சி மிக்க ஒரு மாறுதலே. அவர் மீது ஒட்டு மொத்த அமெரிக்காவும், நிற வேற்றுமை, இன வேற்றுமை மத வேற்றுமை இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த அபரிதமான நம்பிக்கையை அவர் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் போகிறார் என்பது பொருத்திருந்து காண வேண்டிய ஒன்று. ஆனால் இந்த மாற்றம் மக்களிடையே குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடமும், வெள்ளையர் அல்லாத பிற மக்களிடமும் ஏற்படுத்தி இருக்கும் எழுச்சியும், நம்பிக்கையும், எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையும் மகத்தானது. அந்த நம்பிக்கையே இந்த அதிபர் தேர்தல் ஏற்படுத்திய மிக முக்கியமான மாறுதல்.

ஒபாமாவினால் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் பொருளாதார மாற்றத்தைக் கொணர முடியாமல் போகலாம் ஆனால் அவரது தேர்வு மக்களிடையே எழுப்பி இருக்கும் மன எழுச்சியும் நம்பிக்கையுமே அவர் கொணர்ந்த முக்கியமான மாற்றம். அந்த மாபெரும் மாற்றத்தை உலகமே வியந்து வரவேற்கிறது அமெரிக்கா மீது உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு வித கசப்பையும், அவநம்பிக்கையையும், அச்சத்தையும் கூட இந்த மாற்றம் ஓரளவுக்குப் போக்கக் கூடும் என்னும் பொழுது இது உலக அளவிலும் கூட ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே..

நம்மைப் போன்ற ஒரு சாதரணர் அமெரிக்காவின் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மத்ய வர்க்க அமெரிக்கர் மனதிலும் உருவாக்கியுள்ளது இவரது வெற்றி. குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க இனத்திற்கு இவரது வெற்றி மாபெரும் தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

தனது நிறத்தை முன் வைத்து இவர் எந்த விதப் பிரச்சாரமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் ஆற்றலையும் திறமையையும் மட்டுமே முன் வைத்து பிரச்சாரம் செய்தார். இவரது வெற்றியின் மூலம் அமெரிக்காவின் நிற வேற்றுமை ஒரே இரவில் மாயமாக மறைந்து போய் விடாது. இருந்தாலும் அமெரிக்கர்கள் நேற்றை விட இன்று சற்றே நிறத்தை மறந்து நெருக்கமாக வந்திருக்கிறார்கள் என்பதையே இந்த மாற்றம் உணர்த்துகிறது.

தனது திறமையினாலும், புத்தி கூர்மையினாலும், தான் தேர்வு செய்துள்ள அனுபமிக்க மந்திரிகளினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒரு மாற்றமுள்ள அனைத்துத் தரபபாரின் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்ற ஒரு அமெரிக்காவையும் அதன் மூலம் உலக அமைதியையும் நல்லிணத்தையும் ஏற்படுத்துவார் என்று நம்புவோம். அதற்கான சக்தியை அவருக்கு ஆண்டவன் அளிக்க வாழ்த்துகிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.