கோவில் மடப்பள்ளியின் அருகே கை கழுவ குழாய் போட்டிருப்பார்கள். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிற்பாடு அங்கு கை நனைத்துக் கொள்வது தாத்பர்யம். அந்தக் குழாய் மித்தத்திலேயே பக்தகோடிகளின் குழந்தைகள் வாந்திபேதி முதல் நான்கு மாதம் முன்பு அனுமனுக்கு சாத்திய வெண்ணெய் முதற்கொண்டு எல்லாமும் மிதக்கும். கற்பூர வாசமும் கமழ, திருவாதிரைக் களியும் கிடைக்க, விறுவிறு துளசியும் கிடைக்கும் சன்னிதானத்தில் இறை மணத்திற்கு குறைவே கிடையாது.
வாரணம் ஆயிரமும் மணக்கிறது.
கற்பூர அரூபமாக தந்தையின் பேரன் பாசம். திருவாதிரைக் களி தரும் அசட்டு தித்திப்புடன் குளிர் தென்றலாகிய பக்கத்து வீட்டு சினேகிதி கம் மனைவியின் பாசம். புதினா போன்ற காரசார சுவையும் இல்லாமல் கருவேப்பிலை போல் லோக்கல் சரக்காகவும் இறங்காத இதமான துளசியாக காதலி. மசாலா அதிகமாகி கடமுடா செய்த குழந்தைத்தனமாக புது தில்லி பயணங்கள்.
திரைப்படமோ, எழுத்தோ, ஓவியமோ! எப்பொழுது நிறைவுறுகிறது?
எனக்கு வீட்டுப்பாடம் செய்கின்ற மகள் அதை முடித்துவிட்டால், இந்தப் பதிவின் இறுதி வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும். நடிகருக்கு அடுத்த படம் வரை. இயக்குநருக்கு தயாரிப்பாளரின் நிதிநிலை.
வாரணமாயிரத்தில் கவுதமிற்கு நிறைய பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். இழைப்பதற்கு பதில் இறைத்திருக்கிறார்.
கதாபாத்திரங்கள் எவ்வாறு பார்வையாளனுக்குள் உருவாகிறது?
சம்பவங்களால் நிறைந்தது வாழ்க்கை. திரைப்படம் முடிந்தவுடன் எந்த காட்சிகள் தங்கிப் போகின்றன? பேரனுக்கு கதை சொல்ல முடியாத தாத்தா தெரிகிறார்.
சிம்ரனிடம் வலியுறுத்தப்பட்ட ‘கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்’ நிற்கிறதா?
Movies enact rituals; we know the form; watch 4 variations. Gr8 is the one with free will; சப் குச் சலேகா. but, don’t say that is realistic. – ஸ்னாப்ஜட்ஜ்
திரைப்படங்களில் எனக்குப் பிடித்ததாக மூன்று குணாதிசயங்களை சொல்லலாம்:
- அமைதியாக, ஆர்பாட்டமில்லாத மென் நகர்வு
- நளினமான நடை, கீறல் விழாத வசனம்
- குழப்பமான சங்கதி; ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்க முடியாத விவரிப்பு.
ஓக்லஹோமா குண்டுவெடிப்பு மிகச் சரியான அதிர்ச்சியை (#3) கொடுக்கிறது.
கல்லூரி சகாவிற்கு தினசரி காலை எட்டு மணிக்கு சந்திப்பு உண்டு. உலக வர்த்தக மையத்தின் எண்பதாவது மாடி அலுவலில் போய் உட்காராவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்பான். விதிக்கப்பட்ட 9/11 அன்று மட்டும் வாசற்படித் தடுக்கி விழுந்து விடுகிறான். சிராய்த்த இடத்தில் பேன்ட்டை அவிழ்த்து பேண்ட் – எயிட் போட்டு முதலுதவி முடித்து, மீட்டிங்கைத் தவறவிட்டு போய் சேர்ந்தால், மீட்டீங்கில் இருந்தவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள்.
அன்று மட்டும்! நம்பமுடியவில்லை. நிஜ வாழ்க்கை. விதி?
நளினமான நடை, கீறல் விழாத வசனம் நிறையவே உண்டு. ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த பி சென்டர், சி சென்டர் என்று பிரித்தாளாத சூழ்ச்சி.
இறுக்கமான உள்பொதிந்த திரைக்கதையாகிய #1 மட்டும் மொத்தமாக சறுக்கி சிவாஜியின் சத்தத்தோடு தமிழ்ப்படமாக அரங்கேறுகிறது. அஞ்சல ஆட்டமாகட்டும்; வெறுமனே காதலர் ஆகி உல்லாசபுரியில் சல்லாசம் ஆகட்டும்; இராணுவ வீரனாக வெற்றி வாகை குவிப்பது ஆகட்டும்; வாசனைக்கு மசாலா அல்ல -> மசாலாவிற்கு நடுவில் பருக்கைகளாக சம்பவங்கள்.
டிஸ்னிவோர்ல்டில் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறான கனவுலக நிகழ்வுகள் திரையில் அரங்கேற்றுவது ஸ்லம்டாக் மில்லியனராகும் இந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். எனவே விட்டுவிடுவோம்.
பராக் ஒபாமாவின் தாரக மந்திரம் போல் அப்பா கிருஷ்ணன் நம்பிக்கையாக காலந்தள்ளுகிறார். பில் க்ளின்டன் போல் சகலமும் தெரிந்த அப்பாவின் நிழலில் ஹில்லரியாக மகன் சூர்யா. சூர்யா உணர்ச்சிவசப்படுபவன். அப்பா பற்றற்ற ஞானியாக முன்னேறி செல்பவர். பையனோ கவிஞனை ஒத்த மனநிலையில் துடிப்பானவன்; செயல் வீரன். தந்தை அரசு உத்தியோகமாக காலத்தை ஓட்டுபவர். பிள்ளை ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவாக கடன் வாங்கி, முதுவலி அஜீத்தாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுபவன்.
ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் அடைத்த கிரிமினலையே காதலிக்க ஆரம்பிப்பது. அமெரிக்கா வந்த தொணதொணப்பு சூர்யாவின் தொண்ணூறு நாள் சிறையில் மேக்னா மாட்டிக் கொள்ள காதல் ஆரம்பிக்கிறது.
இதன் உல்டா ‘ரிவர்ஸ் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்’. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் மேல் சிறைக் காவலாளிக்கு அனுதாபக் காதல் தோன்றுவது. இது ப்ரியாவின் நிலை. போதை, குறிக்கோளின்மை என்று இலக்கற்ற வலைப்பதிவனாய் வீடெனும் சிறையில் தனியனாய் ஆன சூர்யாவை பக்கத்து வீட்டு ப்ரியா பச்சாதாப காதல் கொள்கிறார்.
- மக்கள் மாறுகிறார்களா? இல்லை.
- உலகம் மாறி விடுமா? ஆம்.
கல்லூரியில் சூர்யாவை சேர்த்துவிட்டு பிரியாவிடை கோரும் தந்தை கிருஷ்ணனுக்கும் போர்முனைக்கு செல்லும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பும் தாத்தா கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் உண்டா? கிடையாது. இதெல்லாம் எப்போது உணர முடிகிறது?
கௌதம் மேனன் என்னும் கிருஷ்ணன் → சூர்யா எனப்படும் ‘வாரணமாயிர’த்தை ் → கல்லூரியாகிய திரையரங்கில் விட்டிருக்கிறார். அது எப்படி வளர்கிறது என்பது ‘வாரணம் ஆயிரம்’ கையில் கிடையாது. உலகம் என்னும் உங்களின் அனுபவப் பருக்கையில்தான் எங்கோ ஒட்டியிருக்க வேண்டும்.
‘ஒழுங்காப் படிச்சுடுவான்’ என்னும் நம்பிக்கை, ‘சரியா செஞ்சுடுவான்’ என்று இராணுவத்திலும் தொடர்கிறது. பையன் சூர்யாவும் அதே நம்பிக்கையில்தான் ‘அன்பு வெல்லும்’ என்று மேக்னாவை துரத்தினான். ‘நான் என்னை மீட்டெடுப்பேன்’ என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியாக ப்ரியாவை கரம்பிடிக்கிறான்.
‘இதைத்தான் செய்யவேண்டும்’ என்பது போன தலைமுறை உபதேசம். ‘மனதிற்கு விருப்பமான லட்சியத்தை எவருக்கும் உபத்திரவமில்லாமல் எப்படியாகினும் செய்து காட்டு’ என்பது இந்தக்கால தாரக மந்திரம்.
மேலும் சில பார்வைகளின் நறுக்குகள்