ஆணுக்கு என்ன பிடிக்கும்? ஆக்ரோஷமான குத்துச்சண்டை பிடிக்கும். குத்துச்சண்டை விளையாட்டா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், விளையாட்டில் போட்டி மட்டும் பார்வையாளனுக்கு போதாது.
போர்முனைக்கு செல்லும் பயம், கத்தி கிழித்த ரத்தம், கொலைவெறி பகைமை எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் மாமிசத் துண்டுகளில் கேளிக்கைத்தனம் பூர்த்தியடையும்.
அமெரிக்காவில் இதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். நியு யார்க் யாங்கீஸுக்கும் பாஸ்டன் ரெட் சாக்ஸுக்கும் ஆகவே ஆகாது.
நியூ யார்க் தோற்க வேண்டும் என்பதற்காக ‘செய்வினை’ வைப்பார்கள். பாஸ்டன் பேஸ்பால் வீரரின் சட்டையை விளையாட்டு அரங்கத்துக்குள் புதைத்து வைப்பார்கள். சென்ற வருடம் யாங்க்கீஸ் தோற்றதற்கு காரணம் தேடுபவர்கள் அந்த ‘மந்திரித்த டி-சர்ட்’டை தோண்டி கண்டுபிடித்து வழக்கு தொடுக்கும் நாடகம் எல்லாம் நடக்கும்.
(கடைசியாக அந்த சட்டை $175,100 டாலருக்கு நன்கொடை அமைப்புக்காக ஏலத்தில் விலை போனது நல்ல விசயம்).
இன்று பாஸ்டனுக்கு விளையாடும் வீரர், நாளை நடக்கும் ஏல பேரத்தில் நியூ யார்க்கிற்கு செல்வது சகஜமாக நிகழ்ந்தேறினாலும், இதே மாதிரி அண்டை நகரங்களுக்குள் தீராப்பகை இருப்பது போல் பாவ்லா காட்டி ரசிகர்களை முறுக்கேற்றுவார்கள்.
கபில் தேவுக்கு அழத் தெரியவில்லை என்றால், ஹர்பஜன் சிங்குக்கு அறையத் தெரியவில்லை.
இணையத்தில் பதினாலு தடவை ஃபார்வர்ட் மடலாக படித்த நகைச்சுவையை சொல்லும் ‘அசத்த/கலக்கப் போவது யாரு‘ நபருக்கு ‘டைமிங்’ முக்கியம். இந்த மாதிரி உணர்ச்சிகரமான உச்சகட்டத்திற்கும் ‘டைமிங்’ அதி முக்கியம்.
ஸ்ரீசாந்த் பவுன்சர் போட்டவுடன் ‘திமிரு’ தருண் கோபி எழுதிய இலக்கியத்தரமான டயலாக் ஆன ‘டேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்’ என்று கோபமாக அறைந்தால், அதற்கு பெயர் டைமிங். தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பும்.
செய்தி:
மொஹாலி போட்டி முடிந்ததும் வரிசையாக பஞ்சாப் அணி வீரர்கள் ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார் ஹர்பஜன் சிங். 3-வது வீரராக ஸ்ரீசாந்த் நின்றுள்ளார். அவரிடம் கைகொடுப்பதற்குப் பதிலாக ஓங்கி அறைந்துள்ளார். ஹர்பஜனைத் தொடர்ந்து வந்துகொண்டி ருந்த அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், அதைக் கண்டு கொள் ளாமல் மற்ற வீரர்களிடம் கைகொடுப்பதில் கவனம் செலுத்தி யுள்ளார்.
மும்பை அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்துக்கு, போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங்கை தடுக்கத் தவறியதால் அவருக்குத் இந்தத் தண்டனை.
நேற்றைய கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சியில் கூட கைகலப்பு அரங்கேறியது. ஒரு தலை பட்சமாக பாஸ்டன் ‘செல்டிக்ஸ்‘ அணியே வென்று கொண்டிருக்க ஆட்டத்தை விறுவிறுப்பாக்க என்.பி.ஏ. (நேஷனல் பாஸ்கெட்பால் அஸோசியேஷன்) நினைத்தது.
முதலில் நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டனர். எதிரணியின் அராஜகமான செயல்களுக்கு விசிலடித்து குற்றங்கண்டு பிடிக்க வேண்டிய தருணங்களில் கண்டுங்காணாமல் விட்டுக் கொடுத்தும், ‘மாமியார் கை பட்டா குத்தம்’ என்பது போல் பாஸ்டன் லேசாக எதிரணியினர் மேல் உரசினாலும், ‘ஃபவுல்’ என்று ஊக்கப்படுத்தி, பார்வையாளர்களை உசுப்பேத்தினர்.
‘அதாவது நாலு பேருக்கு நல்லதுன்னா’ என்பது போல் நாற்பது பார்வையாளர்களுக்கு கோபம் பொங்கி வர வேண்டும். வந்தது.
அடுத்தது, சண்டக்கோழியாக வளர்த்துவிடப்பட்டிருக்கும் ஒருவர் மேல் ‘Foul’ முழங்கியவுடன், ‘அவன்தான் தவறு செய்தான்’ என்பது அப்பட்டமாக தெரிகிறதே என்று சிலுப்பிக் கொண்டு எழ ஆட்டம் சூடு பிடித்தது.
இதைத்தான் லால்சந்த் ராஜ்புத் + ஹர்பஜன் சிங் + ச்ரீசாந்த் (& நடுவர்(கள்)) செய்யத்தவறி விட்டனர்.
ஆட்டம் ஆரம்பத்தில் ‘முக அழகிரி + தயாநிதி மாறன்’ மாதிரி நட்போடு உரசவேண்டும். நடுவே கருத்துக்கணிப்பு மாதிரி பொறி பறக்க வேண்டும். கடைசியில் அப்பாவியாக மூன்று பேரைப் போட்டுத் தள்ளிவிட்டு நாடகத்தை முழுமையாக்க வேண்டும்.
இதற்காகத்தான் நடிகர்களை கிரிக்கெட் அணிகளின் தூதுவர்களாக நியமிப்பது வசதிப்படும். பெங்களூர் அணிக்கு த்ரிஷாவை தூதுவராக ஆக்கியிருந்தால் ‘சபாஷ்! சரியானப் போட்டி’ என்று எல்லாரும் உற்சாகமடைந்திருப்பார்கள்.
நிஜ களவீரர்களுக்கு பதில் ‘த்ரிஷா – நயந்தாரா இடையே சௌரிப்பிடி சண்டை’ என்று காண கண்கோடி வேண்டும் காட்சிக்காக முந்தின நாளே நுழைவதற்கு க்யூ வரிசையில் காத்திருப்பார்கள்.
ஆனால், ஹர்பஜன்/ஸ்ரீசாந்த் என்று நாடகத்தனமாக, கொல்கத்தாவின் ஷாரூக் கானுக்கும் மும்பை அம்பானிக்கும் வாள் சண்டை என்றால் எவர் நம்புவார்கள்?
தொடர்புள்ள நகைச்சுவைகள்
இதையும் பாருங்க 😀

படம்… hilarious 😀