சென்னை மாநகராட்சி அடுத்த மேயர் யார்?
சென்னை, செப். 29: சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அடிப்படையில், மேயர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உருவாகியுள்ளன.
புதுப்பேட்டை பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நா. பாலகங்கா, சைதாப்பேட்டை பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன், கிண்டி பகுதியில் போட்டியிடும் கா. தனசேகரன் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியன், கா. தனசேகரன் ஆகியோரில் ஒருவர் பெயர் முன்மொழியப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
1996-ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது மா. சுப்பிரமணியன் கவுன்சிலராக வெற்றிபெற்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறந்த கவுன்சிலர் விருது பெற்றார்.
2001-ம் ஆண்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் பல்வேறு விவாதங்களில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2005-ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண விநியோக மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழக்கக் காரணம் என்று கூறி கைது செய்யப்பட்டவர் தனசேகரன். பின்னர் இவர் மீதான வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிமன்றம் இவரை விடுவித்தது.
அதே வேளையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவர் நா. பாலகங்காவின் பெயர் முன் மொழியப்படும் எனத் தெரிகிறது.
2001-ம் ஆண்டு மேயர் பதவிக்கு நடைபெற்ற நேரடித் தேர்தலில் பாலகங்கா போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ 155 கவுன்சிலர்களில் ஒருவர்தான் மேயராக முடியும் என்பதால் மேயர் தேர்தலுக்கான முக்கியத்துவம் இந்த முறை கவுன்சிலர் தேர்தலுக்குக் கிடைத்துள்ளது.