நேரடித் தேர்தல் ரத்தால் நெருக்கடியில் அரசியல் கட்சிகள்
எஸ்.திருநாவுக்கரசு
கோவை, செப்.21: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளிடையே இடப் பங்கீடு செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் முதல் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தபோது, தலைவர் பதவியைக் கொண்டு இடப் பங்கீட்டை அரசியல் கட்சிகள் செய்து கொண்டன. வார்டுகளை மட்டும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பேசிப் பிரித்துக் கொண்டனர்.
தலைவரை வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், மெஜாரிட்டி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினருக்கே தலைவர் பதவி கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எத்தனை வார்டுகளில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சி போட்டியிடுவது, மீதியை கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இல்லையேல், கூட்டணிக் கட்சிகளின் தயவை நாட வேண்டியிருக்கும். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினரைப் பெற வேண்டுமானால் அந்த அளவுக்கு வார்டுகளில் போட்டியிட வேண்டும்.
மொத்த வார்டுகளில் 50 சதத்துக்கும் மேலாக ஒரு கட்சி போட்டியிட்டால் கூட்டணிக் கட்சிகளுக்கு மீதி வார்டுகளை பிரித்துக் கொடுப்பது சாத்தியமில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.
மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யும் முறை இருக்கும்போது, அப்பதவியை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பறிக்க முடியாது. ஆனால், கவுன்சிலர்கள் சேர்ந்து அவர்களில் ஒருவரை மேயராகவோ, நகர்மன்றத் தலைவராகவோ, பேரூராட்சித் தலைவராகவோ தேர்ந்தெடுக்கும்போது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அவர்களின் பதவியைப் பறிக்க முடியும்.
இச்சூழலில் உள்ளாட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு வரும் கட்சி, மன்ற உறுப்பினர்களில் மெஜாரிட்டியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், கூடுதல் வார்டுகளில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சியிலும் கூட்டணி தான்?: திமுக கூட்டணியைப் பொறுத்தவரை மாநில அரசில் எப்படி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறதோ, அதேபோல உள்ளாட்சி அமைப்புகளிலும் கூட்டணி ஆட்சி நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிப் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வோம். அதற்கேற்ப, வார்டுகளை விட்டுக்கொடுத்து போட்டியிடுவோம் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை புதன்கிழமை சென்னையில் முடித்து, சனிக்கிழமைக்குள் மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தையை முடிக்க திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி அமைப்பு இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் சிக்கல் இல்லை. கூட்டணிக் கட்சிகளான மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் பெரிய எதிர்பார்ப்பில் இல்லை. எனவே, சுமுகமான முறையில் இடப் பங்கீடு நடக்கும் என அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சினை இல்லாத கட்சி: நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எவரும் எதிர்பார்க்காத வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்ற நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை அனைத்து நிலைகளிலும் வேட்பாளர்களைக் களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாத நிலையில் இடப் பங்கீடு பிரச்சினைகள் எதுவும் இல்லாத கட்சியாக அது உள்ளது.