அலன்டே & பினொச்சே – சிலி
தென் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான இரணகளறியான ஆட்சிக் கவிழ்ப்பு, நான் பிறந்த வருடத்தில் அரங்கேறியது. சிலி நாட்டின் ஜனாதிபதி சால்வடோர் ஆலெண்ட் கோஸன்ஸ் (Salvador Allende Gossens) மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். மார்க்சிய சித்தாந்தத்தை உறுதியாக கடைபிடிப்பவர். கம்யூனிஸத்தின் வளர்ச்சியைக் கண்டு பயந்த அமெரிக்க உளவுத்துறை, ஜனாதிபதியை உலகை விட்டே அகற்றியது.
அமெரிக்க வலையகக் கணக்குகளின்படி ஏறக்குறைய 5,000 மக்கள் இறந்தார்கள். சரியான கணக்குப்படி பார்த்தால் குறைந்தது முப்பதாயிரம் பேர் மரணம்.
ஜனநாயக முறையில் நிலவிய மக்களாட்சியை நீக்குவதற்காக – கட்சித் தலைவர், தாளிகை, ஊடகம், வர்த்தக நிறுவனத்தின் தலைவர், தொழிலாளர் அமைப்பு, முக்கிய பிரஜை என்று வித்தியாசம் பாராமல் சி.ஐ.ஏ. மில்லியன்களை இறைத்தது. அவர்களின் கைங்கர்யம் இல்லாமலேயே அலெண்டேவிற்கு இறங்குமுகம் தொடங்கியிருந்த காலம். கிட்டத்தட்ட போலந்தை ஒத்த நிலையாக இருந்திருக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் முதன்முதலாக மார்க்சீய கட்சியை தேர்ந்தெடுத்த பெருமை சிலியைச் சாரும். செப்டம்பர் 1970-இல் குறுகிய வித்தியாசத்தில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்துகிறார் ஆலெண்டெ. நாட்டின் முக்கிய குடும்பத்தை சேர்ந்தவர்; செனேட்டராக இருந்தவர்; முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர். வலதுசாரி தேசியக் கட்சியையும் இடதுசாரி கிறித்துவ டெமொக்ரடிக் கட்சியையும் வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கிறார்.
அவருக்கு முன் ஆட்சியில் இருந்தவர் மிதமான இடதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட கிறித்துவ டெமொக்ரடிக் கட்சியின் எட்வர்டோ ஃப்ரெய் மொண்டால்வா (Eduardo Frei Montalva).
முழுக்க முழுக்க அயல்நாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்த சுரங்கங்களில் பெரும்பானமை உரிமை அரசுவசம் செய்து காட்டியவர். சிலியின் ஜீவாதாரமான தாமிரச்சுரங்கத்தில் 51% அரசுக்கு சொந்தமாக்கியவர். வணிக கூட்டுறவு மையம், நேரடி கொள்ளளவு போன்ற சீர்திருத்தங்களை அமைத்தவர்.
மொண்டால்வாவினால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடியாததால் பணப்புழக்கம் குறைந்து, அரிசி விலை, யானை விலையாக ஏறிக் கொண்டே போனது. நோக்கங்கள் நல்லவையாக இருந்தாலும், வாழ்க்கை தரத்தில் மாற்றம் இல்லை.
இன்றைய வெனிசுவேலா அதிபர் போன்ற கருத்தாக்கம் கொண்ட அலெண்டெ இந்த திட்டங்களை தூசு தட்டி அந்நியர் கண்ணில் விரலை விட்டு படுத்தியிருக்கிறார். கனிமங்களையும் இயற்கை வளங்களையும் மட்டும் ஏற்றுமதி என்று சுரண்டுவதை கட்டுக்குள் கொணர்ந்து, இறக்குமதி என்று தள்ளிவிடுவதை நிறுத்தி, சுதேசியாக உள்நாட்டில் அனைத்தையும் தயாரித்து, வாழ்வை வளமாக்குவேன் என்னும் வாக்குறுதியில் ஜெயித்தார்.
பதவிக்கு வந்தவுடன் தொழிலாளியின் சம்பளத்தை உயர்த்துவது, நிலங்களை பங்கிட்டு உடைமையைப் பரவலாக்குவது, சமூக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரிப்பது, என்று ஜரூராக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்.
இதன் தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் ஸ்தாபனங்களை தேசியமயமாக்குகிறார். அதிபரை உழைப்பாளியின் தோழனாகவும் விவசாய நண்பனாகவும் மாற்றுகிறது. சமீபத்தில் (தற்போதும் கூட) ஜிம்பாப்வேயில் நிலவிய சூழலையொத்த அந்த நிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் பொங்கியெழுந்து பிறரின் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறார்கள்.
அமெரிக்க முதலீட்டுக்கும் நிறுவனங்களுக்கும் இன்ன பிற பணக்காரர்களுக்கும் கடுந்தொல்லை. அந்நிய செலாவணி தேய்ந்து நின்று போகிறது. தனித்து விடப்பட்ட சிலியின் பொருளாதாரத்தை முட்டுக் கொடுக்க மாஸ்கோவும் விரையமுடியாத ருஷியாவின் குழப்பங்கள். அத்தியாவசியப் பொருள் கிடைக்க நீண்ட காத்திருப்பு. எந்தப் பொருளும் கள்ளச்சந்தையில் மட்டுமே கிடைக்கும் பற்றாக்குறை கோலம். பணவீக்கம் பெருக்கிறது.
(செய்ய வேண்டிய சுயகுறிப்பு: இ.பா.வின் ‘ஏசுவின் தோழர்கள்’ போன்ற கம்யூனிஸ-பொருள்முதல் வாதங்களை முன்வைக்கும் விவரிப்பு இங்கு தரலாம். )
ஆலண்டே-வை எதிர்த்து கனரக ஓட்டுனர், குடியானவர், பெட்டிக்கடைகாரர், வேலை நிறுத்தம் (அதாவது பதுக்கல்?!) செய்கிறார். அலண்டேவின் ஆதரவாளர்கள், அரசின் தலையீடைக் கோருகிறார்கள். அநியாயமாக ஸ்ட்ரைக்கில் ஈடுபடுபவர்களை பொடா/தடா/144 இட்டு அடக்கி வைக்க சொல்கிறார்கள்.
மன்மோகன் சிங் மாதிரி ஆலண்டேவும் கூட்டணி ஆட்சி நடத்தினார். கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், லிபரல், சுயேச்சை என்று ஆளுக்கொரு பக்கம் அரசியல் செய்தார்கள். வலதுசாரி ஆணைக்கு இணங்க இராணுவத் தளபதி பதவி விலகுகிறார். ஆலண்டேவின் நம்பகத்துக்குரியவர் நாட்டின் பாதுகாப்பில் இருந்து ஒதுங்கி கட்சி மாறி விடுகிறார். இது சி.ஐ.ஏ காசு செலவழிப்பதின் பலனாக இருக்கலாம்; அல்லது உள்ளூர் அரியணை அவா ஆகவும் இருக்கலாம்.
உள்ளே நுழைகிறார் புது ஹீரோ அகஸ்டோ பினொச்செ (Augusto Pinochet). புதிய தளபதியாக அலண்டேவினால் பட்டாபிஷேகம் நடக்கிறது. வேலை நிறுத்தம் போராக மாறுகிறது. போராளிகளின் தாக்குதல்கள் தலைநகரைத் தொடுகிறது. தோல்வி நிச்சயம் என்று தெரிந்தவுடன் இரகசிய சுரங்கப் பாதை வழியாக தப்பித்துப் போகாமல், அமெரிக்க விமானங்களினால் கொல்லப்படுகிறார்.
பினொச்சே கட்சி மாறி மேற்கத்திய சித்தாந்தத்தைத் தழுவினார். கோபம் கொண்ட போராளிகள், ஆயிரக்கணக்கான அலெண்டே ஆதரவாளர்களை ஹிட்லர் தனமாய் கொன்று குவிக்கிறார்கள். அனைத்து கட்சிகளையும் தடை செய்வது பினாச்சேவின் முதல் வேலை. எதிர்த்து பேசுகிறவர் காணாமல் போகிறார்.
(செய்ய வேண்டிய சுயகுறிப்பு: இங்கு ஜார்ஜ் ஆர்வெல் நினைவு கூர்ந்தால் பொருத்தமாக இருக்கும். இந்திரா காந்தி அவசர காலத்தினை ஒப்பிடலாம். சீனாவின் தணிக்கை முறை, சிரியாவின் ஊடக அடக்குமுறை, ஈரானின் கொடுங்கோல் ராஜாங்கம், பர்மா நோபல் பரிசு; ஃபிடெல் காஸ்ட்ரோவின் நசுக்கல்களோடு உலகப் பயணத்தை முடித்துக் கொள்க!)
‘சிகாகோ பாய்ஸ்’ என்று செல்லமாக விளிக்கப்படும் மில்டன் ஃப்ரீட்மென் (Milton Friedman) அடிப்பொடிகளை நிதித்துறை அமைச்சகத்தை கையிலெடுக்கிறார்கள். மேற்கத்திய கோட்பாடுகளை சில காலத்திற்கு திறம்பட நிர்வகித்து பொருளாதாரத்தைப் பல்கிப் பெருக்கினார்கள். எண்பதுகளில் மீண்டும் புரட்சி கலந்த கோபம் வெடிக்க ஆரம்பித்தது.
1981-இல் நிரந்தர ஜனாதிபதி சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்திக் கொள்கிறார். இருபதாண்டுக்குப் பிறகு நடந்த 1989 தேர்தலில் மண்ணைக் கவ்வினாலும், அரியணையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.
பினாச்சே நல்லவரா / கெட்டவரா என்னும் வாதம் சென்ற வருடம் வரை இழுபறியாக ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் தொடர்ந்தது. கடைசியாக கெட்ட பையன் என்று கிழ வய்தில் தீர்ப்பு வந்தாலும் சொகுசாகத்தான் காலந்தள்ளுகிறார்.
அலன்டே குறித்தும் சிலி பற்றியும் அறியத் தூண்டிய மயூரனின் பதிவு.
Allende | September 11 | Chile | Pinochet | Montalva