மனம் போன போக்கில் எழுத வேண்டும். இலக்கு எதுவும் கூடாது. பாஸிவ் வாய்ஸை தவிர்க்க வேண்டும். அம்மாவிற்கு எழுதும் கடிதம் போல் இயல்பு கிடைத்தால் நல்லது. கஷ்டப்பட்டு உவமை போடக் கூடாது. எதிர்மறை வாக்கியங்களை விட்டு விடு.
ம்யூனிச் படத்தின் ஹீரோவைப் பார்த்தால் ஹல்க்தான் நிழலாடுகிறது. ஐ.எம்.டி.பி பக்கத்தின் சுட்டி கொடுக்கலாம். படிப்பவர்களுக்கே அங்கு போக வேண்டும் என்று தெரியாதா? கேள்விகளைக் கொண்டு கட்டுரையைத் தொடுப்பது அலுப்பாக இருக்கும்.
இந்து மதத்தில் பாவ மன்னிப்பு கிடையாது. யூதர்களுக்குக் கூட இல்லை. ‘ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா’ உபயம். சின்ன வயதில் இருந்தே குற்றவுணர்வை வைத்து மிரட்டுகிறார்கள். தப்பு செய்தோமோ; தோப்புக் கரணம் போட்டோமோ என்று விட முடிவதில்லை. ஜூரியை வைத்து தீர்ப்பு எழுதுவதற்கும் நீதிபதியை நடுவணாகக் கொண்டதற்கும் இதற்கும் முடிச்சுப் போட வேண்டும். கூகிள் தேடலில் மேட்டர் சிக்கும்.
திரைப்படமாக பட்டியலிட ஆசை. ஆனால், பார்த்துவிட்டேன் என்பதைத் தவிர படப் பட்டியலில் வேறு உபயோகம் ஏதும் இல்லை. இன்னொரு முறை டிவிடி-யை வாடகை எடுப்பது குறையலாம். புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் படப்பட்டியல் இடுவதற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. Been there… done that என்று உலகிற்கு ஓதுவது.
மிடில்-ஏஜ் க்ரைஸிஸ் என்றால் என்ன? கம்பி வளையத்தை எலி விடாமல் துரத்தி ஓடிக் கொண்டே இருக்கும். எலியாகத் தன்னையும், வளையமாக வேலையையும், கற்பிப்பது. நின்று விட்டால் ஆராய்ச்சியாளருக்கும் போரடிக்கும். மிகையுந்துரத்த வெம்பிணியுந்துரத்த அலுக்காமல் எதையாவது விரட்டும் மனம் இருக்கும் வரை நடு வயதுப் போராட்டங்களைத் தவிர்க்கலாம்.
அழகாக இருப்பவர்களையும் சொந்தக்காரர்களையும் தான் அமெரிக்கா விருப்பத்துடன் உற்றுப் பார்க்கிறது. கொசுவைக் கொன்றால் வருத்தமாக இல்லை. எலியை கார் மிதித்தால், காருக்கு சேதம் ஆகாதவரை லாபம். அணில் செத்துப் போனால் அன்று முழுக்க குற்ற உணர்ச்சி. Nicole Vaidisova-வைத்தான் விம்பிள்டனில் முன்னிறுத்துகிறார்கள். ஷரபோவா நேற்றைய மலர். மீடியாவுக்கு நாளொரு மாயை. எதுகை மோனை இல்லாவிட்டால் இயற்கையாக இருக்கும்.
லாப்ஸ்டரைக் கூட கனிவுடன் கொலை செய்ய வேண்டும் என்கிறார்கள். தனி வீட்டில் வாழாத ஈர்க்கிறாலை சாப்பிட மாட்டார்களாம். அகரமுதலி தேடாமல் ஈர்க்கிறால் என்றால் லாப்ஸ்டர் நண்டு என்று தெரிய வேண்டும்.
Takoyaki உண்ணுவதற்குக் கூட மஞ்சள் நீர் தெளித்து ‘அட்டபாதரே! எண்காலி!! சாக்குக்கணவாய்!!! பேய்க்கணவாய!!!! வெட்டிக் கொள்ளலாமா?’ என்று திருவிளையாடற் புராண விளிச்சொற்களுடன் வினவச் சொல்வார்கள்.
கவனம் சிதறக் கூடாது என்பதை விட சிந்தை மொய்ம்பு தேவை.










