சன் டிவியின் ‘டாப் 10’ திரைப் பட்டியலில் சேரியமாய் உடையணிந்து, முகத்தில் புன்னகை எட்டிப் பார்க்காமல் பேசினாலும், நம்மை சிரிக்க வைத்து விடுவார்கள். அதே போல், தெலுங்கு குத்துப் பாட்டு போல் ‘டன் டனக்கு’ இசைத்தாலும், ராஜஸ்தானி பாலவன அன்னியச் சூழலிலும் தமிழக அரசியலுக்கானப் பாடலை சுட்டிக் காட்டும் பதிவொன்றை கில்லியில் படிக்க நேரிட்டது.
பெண்:
சும்மா ஒரு தாலி கட்டுடா
சும்மா ஒரு வீடு கட்டுடா
சும்மா ஒரு பிள்ளை கொடுடா
அத ஸ்குலுக்குதான் கூட்டிக்கிட்டு போயி வுடுடா
அதிமுக தேர்தல் அறிக்கையில் திருமணங்களுக்கு தாலி கொடுப்பதாக சொல்லப்பட்டது. தரிசு நிலங்களை விவசாயிகளுக்குக் கொடுத்து விவசாயமும் வசிப்பிடமும் கட்டிக் கொள்ள வசதி செய்து தருவதாக திமுக அறிக்கை சொன்னது. விஜயகந்த்தின் வீட்டுக்கு ஒரு காராம்பசு கொடுத்து அதன் மூலம் இலவசமாக கன்று பிறந்து பிள்ளை கொடுப்பதையும் கவிஞர் மறக்கவில்லை. இங்கு பாடலாசிரியர் சமகால அரசியல் களத்தைச் சுட்டுகிறார்.
கடைசியாக தன்னுடைய கிச்கிச் கீச்சுக் குரலில் அனுராதா ஸ்ரீராம் வாயிலாக, இந்த மாதிரி சும்மா கொடுப்பதற்கு பதில், பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால், மேற்சொன்ன எல்லாமே எளிதில் கிடைத்துவிடுமே என்று சுட்டுவதில்தான் பெண்ணின் குரல் முழுமையடைகிறது. அந்த வைர வரியிலும், கிராமப்புற கல்விச்சாலைகள், அருகில்/எளிதில் சென்றடையும் தூரத்தில் இல்லாமல், தொலை தூரத்தில் இருப்பதை பொதிவாக நுழைப்பது, இன்றைய நிஜத்தை ‘சி’ செண்டருக்கும் உறைக்க வைக்கிறது.
ஆண்:
சும்மா ஒரு தாலி வருமா
சும்மா ஒரு வீடு வருமா
சும்மா ஒரு பிள்ளை வருமா
வேற வேலை வெட்டி இல்லையா
ஆள விடும்மா
இங்கு பொருளாதார அலசல் எளிமையாக்கித் தரப்படுகிறது. இலவசம் எல்லாமே இலவசம் அல்ல; அதற்கான விலை என்ன என்று யோசிக்க வைக்கும் கருத்துக்கள். வேலைவாய்ப்புப் பெருக்கம் மூலமே சும்மாக்கள் ஒழியும் என்று உணர்கிறோம்.
மேலும், ஒரு தாலி கேட்பவர்கள், இரண்டு, மூன்று என்று தொடர்வார்கள். ஒன்று என்று கேட்பதின் அபத்தத்தையும் ஆண் குரல் வினா எழுப்புவதை கவனிக்கலாம்.
கடைசியாக, வந்தபின் காப்போனாக இல்லாமல், வருமுன் அலசல்காரனாக, கணவன் வந்தபின் ஏற்படும் மணச்சிக்கல்களையும், வீடு வந்தபின் தேவைப்படும் மின்சார/வரி/செப்பனிடுதல் செலவுகளையும், கன்றுக்குட்டி பிறந்தபின் பால் தடவல்களையும் அலசி ஆராய்ந்தபின் முடிவெடுப்பதை வலியுறுத்துகிறார்.
பெண்:
நான் மானா வீனா சுனா பானா
அக்கா பொன்னுடா
நான் உன்ன நம்பி ஓடி வந்தேன்
சொன்னால் கேளுடா
மானா என்றால் மாறன்; வீனா என்றால் விஜய்காந்த்; சுனா என்றால் (இருள்நீக்கி) சுப்பிரமணியம்; பானா என்றால் பணம்.
உடன் பிறவா சகோதரி குடும்பத்துப் பெண்களின் ஆதிக்கம் நிலவுவதை இரண்டாம் வரி குறிப்பிடுகிறது.
மாறனின் சன் டிவி குழுமத்தை நம்பியும், தேமுதிக வாக்குகளைப் பிரிக்கும் என்று நினைத்தும், ஜெயந்திரரின் ஆதரவுடனும் பணத்தின் ஆளுமையுடனும் திமுக மக்கள் மன்றத்தை சந்திப்பதை இரட்டுற மொழிதல் வெள்ளிடை மலை.
ஆண்:
நான் வீனா பானா கானா போனா
நான் அக்கா பையன் டீ
என்ன நம்பி வந்தால்
மோசம் போயி காஞ்சி நிப்படி
வீனா என்றால் வீரப்பன்; பானா என்றால் பன்னீர்செல்வம்; கானா கருணாநிதி; போனா என்றால் போண்டி.
அக்கா பையன் என்பது டிடிவி தினகரன் எம்.பி.யையா அல்லது முன்னாள் வளர்ப்பு மகனா அல்லது வருங்கால வாரிசா என்று இந்த கட்டுரையாசிரியருக்கு விளங்கவில்லை. நடராஜன் – சசிகலா family tree-ஐ ஆழமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இதன் உண்மை விளங்கும்.
வீரப்பன் வதை, பன்னீர்செல்வம் நம்பிக்கை, கருணாநிதி முதுமை, போண்டியாகும் பயம் என்று அதிமுக தேர்தலை எதிர்நோக்குவதை சொல்லும் மாணிக்க விநாயகம், கூடவே இருந்து குழி பறிப்பவர்களை நம்பினால் காஞ்சி ஜெயந்திரர் போல் நிற்கப் போவதாக ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்துகிறார்.
மேலும் சொல்ல ஆசைதான்…
கவிதையை ஆராயக் கூடாது; அவை கேட்பவரின் பிணி தீர்க்கும் வல்லமையுடன் வாசிக்கும் தகைமைக்கு ஏற்ற அனுபவத்தைத் தரவல்லது என்னும் நான்மறைக்குக் கூற்றுக்கு ஏற்ப மற்றவற்றை கேட்போருக்கே விட்டு விடுகிறேன்: கொக்கி பாடலை ருசிக்க