Daily Archives: ஜூன் 24, 2006

Chitti – Lifesketch

‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன்
பிறப்பு: ஏப்ரல் 20, 1910
மறைவு: ஜூன் 24, 2006

வாழ்க்கை

 • திரைப்பட விமர்சகர்
 • பட்டதாரி ஆசிரியர்
 • அகில இந்திய ரேடியோ வானொலி இதழ்ப் பொறுப்பாசிரியர்
 • அ.இ.ரேடியோ முதுநிலை நிருபர்
 • வானொலி பணி நிறைவு: 1968
 • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர்.
 • 1875இல் “ஆதியூர் அவதானி” – முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர் (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் வெளியானது)

  விருதுகள்

 • ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்
 • பிரபல மணிக்கொடி எழுத்தாளர்
 • 1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘ரோல் ஆஃப் ஹானர்’ விருது வழங்கப் பெற்றவர்.
 • ‘தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ – சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு ‘இலக்கியச் சிந்தனை’ விருது பெற்றவர்.

  நூல்கள்

 • அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)
 • சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
 • கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)
 • தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)
 • நடந்தாய் வாழி காவேரி (தி ஜானகிராமனுடன் சேர்ந்து எழுதிய பயணநூல்)

  தமிழ் மொழிபெயர்ப்புகள்

 • கே ஏ நீலகண்ட சாஸ்திரி
 • Verrier Elwin
 • Lester Brown
 • JS Pruthi
  ஆகியோர் நூல்கள்

  ஆங்கிலப் படைப்புகள்

 • தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
 • தி பரமாச்சார்யா

  | |

 • Chitti Anjali – Narasayya

  சிட்டி என்னும் சிரிப்பாளி – நரசய்யா

  ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த இவரை ஈர்த்த ஆங்கில எழுத்தாளர்கள் பி.ஜி. வுட்ஹௌவுசும் ஜி.கே. செஸ்டர்னும்தான். ஆங்கிலத்தில் ஹாஸ்யம் கலந்த கட்டுரைகளை 1930ல் பச்சையப்பன் கல்லூரி நாட்க்ளிலேயே எழுதியிருக்கிறார்.

  தன்னை ‘சர்க்கஸில் வரும் கோமாளி‘ என்று வருணித்துக் கொள்ளும் சிட்டி, அப்படித்தான் வாழ்க்கையிலும் இருந்தார்.

  சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) இவ்வாறு கலாமோஹினியில் குறிப்பிட்டிருந்தார்.

  “இவர் ஒரு பொல்லாத பேர்வழி என்று இவரது தோற்றத்திலிருந்தே தெரிகிறதல்லவா? பார்வைக்கு பரம சாது போலிருந்தாலும் பரிகாசம் என்று வந்துவிட்டால், போதும். படாதபாடு படுத்திவிடுகிறார். ஆங்கில இலக்கியத்தில் செஸ்டர்டன் என்பவர் கையாண்டதைப் போன்று கண்ணியமான பரிகாசத்தை இவர் தமிழில் கையாள்வது நிச்சயமாக ஆறுதலளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்” (கலாமோஹினி :: 1943)

  ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் லீ காக் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லும்போது, ‘நகைச்சுவை எவரையும் புண்படுத்தக் கூடாது’ என்று கூறுவார். அவரைப் போலவே சரித்திர எழுத்தாளரும் நகைச்சுவை எழுத்தாளருமான சிட்டி இதை முற்றிலும் கடைபிடித்தவர்.

  அவர் வாழ்க்கை சிரமம் இல்லாமல் இருக்கவிலை; ஆனால் எந்த சிரமம் வந்தாலும் அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அதேபோல மற்றவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தபோதெல்லாம் அவர்கள் இவரிடம் வந்துப் பேசினாலே அவை தீர்ந்து விடுமெனவும் நம்பினார்கள்.

  சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனியில் இருந்தபோது கூட, இந்த வயதிலும், அவரது நகைச்சுவை சற்றும் குறையாத நிலையில் அவரைப் பார்த்த சிறந்த மருத்துவர்கள் அவரது “பாசிடிவ் அவுட்லுக்” என்பதைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதில் ஒருவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், “இந்தப் பெரிய மனிதருக்கு சிகிச்சை வெற்றியடைந்ததற்குக் காரணம் அவரது சிறந்த மனோதிடம்தான்” என்றார். இந்த மனோதிடம் நகைச்சுவையாளர் அனைவருக்கும் உண்டென்பதுதான் உண்மை!

  (டிசம்பர் 2004)


  | |

  Chitti PG Sundarrajan – Memoir

  சிரிக்க வைக்கிறார் சிட்டி – திருப்பூர் கிருஷ்ணன்

  விஷமம், நையாண்டி, கிண்டல், கேலி, நகைச்சுவை ஆகிய எல்லா அர்த்தங்களையும் புலப்படுத்துகிற மாதிரி தமிழில் ஒரே சொல் உண்டா? உண்டு.

  அந்த சொல்தான் ‘சிட்டி!’ தி.ஜா.வின் நெருங்கிய நண்பராயிருந்த எழுத்தாளர் சிட்டி பி.ஜி. சுந்தரராஜன்.

  வெறும் 94 வயது ம்ட்டுமே ஆன குறும்புக்கார இளைஞர்! அவருடன் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு மினி பேட்டி:

  கே: நீங்கள் எழுதிய முதல் படைப்பு என்ன? எந்த வயதில் எழுதினீர்கள்?

  ப: என் ஐந்து வயதிலேயே அதை எழுதி விட்டேன். அதன் சிறப்பு காரணமாக, எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு, இன்றுகூட ஏராளமான தமிழர்கள் அந்தப் படைப்பை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அனா, ஆவன்னா ஆகிய உயிரெழுத்துகள் தான் அந்தப் படைப்பு!

  கே: முதல் கதையை எழுதியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

  ப: ஒருவேளை என் கதைக்கு நோபல் பரிசு கிடைத்து விட்டால், பரிசை எந்த வாக்கியங்களால் நிராகரிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!

  இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார் சிட்டி. சிடுமூஞ்சிச் சிகாமணிகள் முகத்தில் கூட, ஒரு சின்னப் புன்னகைக் கீற்றையாவது மலரச் செய்கிற சாமர்த்தியம் அவருக்கு உண்டு.

  சிட்டி, தி.ஜா.வின் ‘அம்மா வந்தாள்‘ நாவல் பற்றி என்னிடம் ஒரு கமெண்ட் அடித்தார். அதன் கதாநாயகியான அலங்காரத்தம்மாள் கள்ளக் காதலனுடன் உறவாடுபவள். அவள் தன் பாவத்தைத் தொலைக்க, கடைசியில் தன்னந்தனியே காசிக்குப் போக நினைப்பதாய் நாவல் முடியும்.

  ‘காசிக்குப் போகும்போது தன் கள்ளக் காதலனையும் கூட்டிக் கொண்டு போவதாகத்தான் அவர் நாவலை முடித்திருக்க வேண்டும். அலங்காரத்தம்மாளுக்கு அந்த அளவுக்குக் கொழுப்பு ஜாஸ்தி!’ என்றார் சிட்டி. இதை தி.ஜா.விடம் சொன்னேன். அவர் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.

  சிட்டியின் தனி சிறப்பு, பேசும்போதே சடாரென்று அழகழகான ஆனால் விஷமம் நிறைந்த குட்டிக் கதைகளை உண்டு பண்ணிச் சொல்வது. கும்பகோணத்திலிருந்து ஓர் எழுத்தாளர் வந்தார். சிட்டியைப் பார்க்க விரும்பினார். அழைத்துச் சென்றேன்.

  சிட்டி என்னிடம் ‘உனக்கு ராமாயணம் தெரியுமோ?’ என்று ஆரம்பித்தார். எனக்கு ஜாக்கிரதை அதிகம். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று தயக்கத்தோடு சொல்லி வைத்தேன். சிட்டி தன் ராமாயணத்தை ஆரம்பித்தார்.

  “ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் காட்டில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென லட்சுமணன் “அண்ணா, நான் ஏன் உன்னுடன் வர வேண்டும்? உன்னைத்தானே அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார்? நீ மனைவியோடு வந்திருக்கிறாய். நான் ஊர்மிளையை விட்டு வந்துவிட்டேன். சே!” என்று சலித்துக் கொண்டு திரும்பி நடந்தான்.

  சீதை “பிராணநாதா! நான் இதுவரை படித்த எந்த ராமாயணத்திலும் இது போன்ற சம்பவம் வந்ததில்லையே!” என்றாள்.

  “கொஞ்சம் பொறு. புரியும்” என்றார் ராமர். சற்று நேரம் சென்றது. லட்சுமணன் ஓடோடி வந்தான்.

  “அண்ணா, நான் ஏன் அப்படிப் பேசினேன் என்று எனக்கே தெரியவில்லையே! நானே விரும்பித்தானே உன்னுடன் வந்தேன். உன்னைப் பிரிந்து என்னால் எப்படி இருக்க முடியும்!” என மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உடன் நடந்தான்.

  ராமன் சீதையிடம் “புரிந்ததா?” என்று கேட்டார்.

  “புரியவில்லையே!” என்றாள் சீதை.

  “நாம் இதுவரை நடந்து வந்த பூமி கலியுகத்தில் கும்பகோணம் என்று ஷேத்திரமாகப் போகிறது. அது தன் சுபாவத்தை இப்போதே காட்ட ஆரம்பித்து விட்டது!” என்றார் ராமர்!”

  (வந்த் எழுத்தாளர் வெகு நேரம் சிரித்து அவர் கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. இந்தக் கதையில் கும்பகோணம் என்ற ஊர், வரும் எழுத்தாளரைப் பொறுத்து திருநெல்வேலி, மதுரை என்று வித்விதமாகப் பெயர் மாற்றம் கொள்ளும்!)

  சத்தியவான் சாவித்திரியை நினைவுபடுத்தும் வகையில் ‘காரடையான் நோன்பு’ என்று ஒரு பண்டிகை. பெண்கள் வெல்ல அடை தட்டி அந்தப் பலகாரத்திக் கடவுளுக்குப் படைப்பர்கள். பின் மங்கலச் சரடைக் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். அந்த அடை சிட்டிக்குப் பிடிக்காது. அதை எதிர்த்து அவர் ‘நவீன சாவித்திரி’ என்று ஒரு கதை உண்டு பண்ணியிருக்கிறார்!

  கணவன் உயிரைத் தருமாறு எமனிடம் வேண்டினாள் சாவித்திரி. எமன் தரமுடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டான். வேறு வழியில்லாத அவள், ஒரு யுக்தி செய்தாள். பலகாரம் சாப்பிட்டுச் செல்லுமாறு எமனை உபசரித்து இந்த் அடையைச் செய்து போட்டாள். சாப்பிட்டான் எமன். உலகில் இப்படியும் ஒரு பலகாரமா என்று தாளாத துக்கத்தில் எமன் உயிரை விட்டுவிட்டான். அதனால் பிழைத்தான் சத்தியவான்!

  (பெண்கள் கௌத்தில் கட்டிக் கொள்ளும் சரடு ஒருபுறமிருக்க, இந்தக் கதையைக் கேட்பவர்கள் சிட்டி விடும் சரடை எண்ணிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்!)

  சிட்டி பரமாச்சாரியாளின் பக்தர். இலக்கியத்தில் பழங்கால இரட்டைப் புலவர்கள் போல், இரட்டையரில் ஒருவராக இயங்குவஹிலேயே மகிழ்ச்சி காண்பவர்.

 • கு.ப.ரா.வுடன் ‘கண்ணன் என் கவி’
 • தி.ஜா.வுடன் ‘நடந்தாய் வாழி காவ்ரி
 • சிவபாத சுந்தரத்துடன் நாவல், சிறுகதை வரலாறுகள்
 • பெ.சு. மணியுடன் வ.ரா. வரலாறு

  எனச் சிட்டி இணைந்து படைத்த நூல் ஒவ்வொன்றும் பெரும் சாதனை.

  பி.ஜி. உட்ஹவுஸ் தனிப்பட்ட முறையில் சிட்டிக்கு எழுதிய கடிதம் ஒன்று சிட்டியிடம் உண்டு. வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ். சுவாமிநாதனின் மாமியாரான எழுத்தாளர் கிருத்திகாவும் சிட்டியும் பைண்டிங் நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்ட மிக நீண்ட கடிதங்கள் இலக்கிய வரலாறாய்த் திகழ்பவை. எழுத்தாளர் நரசய்யா எழுதிய, ‘சாதாரண் மனிதன்‘ என்ற சிட்டியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் அவர் பெருமையைப் பேசுகிறது.

  தில்லி, பாண்டிச்சேரி போன்ற சில இடங்களில் சில கூட்டங்களுகு நானும் சிட்டியும் ஒன்றாகப் போயிருக்கிறோம். அப்போது அவருடன் த்ங்கிக் கழித்த நாட்கள் நான் மலர்ச்சியுடன் சிரித்துச் சிரித்து வாழ்ந்த பொன்னானா நாட்கள். அறிவாளிகள் என்றால், நகைச்சுவை உணர்வற்று சீரியஸ் ஆகத்தான் இருப்பார்கள் என்ற பொதுவிதிக்குச் சிட்டி விதிவிலக்கு. எந்த சோக்த்தாலும் பாதிக்கப்படாத அவரது அபாரமான நகைச்சுவை உணர்வுக்கு இயற்கை தந்த் அன்புப் ப்ரிசுதா அவருடைய முதிய வயது.

  டிசம்பர் 2003
  சுவடுகள் – திருப்பூர் கிருஷ்ணன்
  வெளியீடு: திருப்பூர் குமரன் பதிப்பகம்

  அஞ்சலிக் குறிப்புகள்: பத்ரி | நா கண்ணன்


  | |

 • Chat Meet – Chokkan

  விகடனில் வல்லினம்… மெல்லினம்… இடையினம் என்று தற்கால கணினியாதிக்கத்தை நுட்பமாக எழுதுபவர். தினம் ஒரு கவிதை தொடங்கி விகடன் தொடர் வரை எது எடுத்துக் கொண்டாலும் சிரத்தையும் உழைப்பும் பளிச்சிடும். சொக்கனுடன் மின்னஞ்சல் பேட்டி:

  1. அயோத்தி, வீரப்பன், ஹமாஸ், ருஷ்டி என்று பிரச்சினையை புத்தகமாக்கி சுமக்கிறீர்களே… சுவாரசியமாய் இருக்கிறாய்;பயமாய் இருக்கிறது? என்பது போல் மிரட்டல் ஏதாவது?

  கதையல்லாத படைப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறவர்கள் எல்லோருக்கும், இந்தப் பிரச்னை ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்தே தீரும் என்று நினைக்கிறேன்.

  என்னைப்பொறுத்தவரை, எந்தப் பிரச்னையிலும் சார்பு நிலை எடுக்காமல் எழுதுவதில் கவனமாக இருக்கிறேன். ஆகவே, இருதரப்பு வாதங்களையும் (சில சமயங்களில் ஊகங்களையும்கூட) தெளிவாக, நேர்மையாக முன்வைத்துவிடுவதால், அயோத்திபோன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளைக்கூட, முழுமையாகவும் நடுநிலைமையோடும் பதிவு செய்வது சாத்தியமாக இருக்கிறது.

  மற்றபடி, படைப்பாளிபற்றிய முன்முடிவுகளோடு படைப்புகளை அணுகுகிறவர்கள் சிலர் எப்போதும் இருக்கிறார்கள். அதுபற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை, செய்வதற்கில்லை.

  2. இருபது, முப்பது வருடம் முன்புவரை பிரபலமான தமிழ் எழுத்தாளர் என்றால் நாவல் / சிறுகதை எழுதுபவர். இன்று இது மாறி இருக்கிறதா? உங்களை எப்படி இந்த காலச்சக்கரம் பாதித்திருக்கிறது?

  புனைவு, அபுனைவு ஆகிய இருவகைகளிலுமே எழுத்தாளரின் முக்கியத்துவம் குறைந்து, படைப்புக்கு அதிக கவனம் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

  அதாவது, இதற்குமேல் ‘என்னுடைய ரீடர்ஸ்’ என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒரு சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் வரமுடியும் என்று தோன்றவில்லை. படைப்பில் தரம் இல்லாவிட்டால், எத்தனை பெரிய எழுத்தாளராக இருந்தாலும் நிராகரிக்கப்பட்டுவிடுகிற சாத்தியங்கள்தான் அதிகமாகத் தெரிகின்றன. இது ஆரோக்கியமான முன்னேற்றம்தான்.

  நாவல் / சிறுகதைகளைப் பொறுத்தவரை அவற்றைக் கதைகளாகப் படித்து ரசித்துக்கொண்டிருந்த பெரும்பான்மையினர், இப்போது அதேமாதிரியான, சொல்லப்போனால் இன்னும் அதிகத் திருப்பங்களோடு கூடிய சம்பவங்கள், புனைவுக் காட்சிகளைத் தொலைக்காட்சிவழியே பார்த்துவிடுகிறார்கள். அநேகமாக எல்லாப் பிரபல இதழ்களும் புனைவு சார்ந்த படைப்புகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டதை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

  ஆகவே, சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத, மொழியழகில் கவனம் ஈர்க்கும் புனைவுப் படைப்புகளுக்குதான் இனி வரவேற்பு இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  3. ஒரு புத்தகம் எழுத எத்தனை நாள்/நேரம் ஆகிறது? வீட்டையும் வேலையையும் வாசகனையும் எப்படி மேய்க்கறீர்கள்? முழு நேர புத்தக ஆசிரியராகக் காலந்தள்ள முடியுமா?

  புத்தகம் எழுதுவதற்கான கால அளவு, முழுக்க முழுக்க, நாம் எடுத்துக்கொள்ளும் தலைப்பைப் பொறுத்ததுதான். ஒரு வாரத்தில் எழுதியதும் உண்டு, மாதக்கணக்கில் நீட்டி முழக்கியதும் உண்டு.

  நேர நிர்வாகம்மட்டும் புரிந்துவிட்டால் வீடு, வேலை, வாசகன் ஆகிய மூன்றையும் கட்டி மேய்ப்பது அப்படியொன்றும் சிரமமில்லை. காலம்காலமாக எல்லா எழுத்தாளர்களும் செய்துவருகிற காரியம்தானே ஸ்வாமி? 🙂

  முழு நேர எழுத்தாளராக இருப்பது சாத்தியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துணிந்து ஆற்றில் இறங்கிப் பார்க்காதவரை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை, இந்தக் கேள்வியைமட்டும், தகுதியுள்ள இன்னொருவரிடம் ரீடைரக்ட் செய்துவிடுங்கள்!

  4. புத்தகம் வெளிவந்ததின் ஆய பயன், ‘the special moment’ என்று எந்த தருணத்தை சொல்வீர்கள்?

  அபூர்வமாகக் கிடைக்கும் சில வாசகர் கடிதங்கள்!

  காரணம், வீடுமுழுதும் சமையலறைதவிர எல்லா இடங்களிலும் புத்தகங்களை நிரப்பிவைத்திருக்கும் நான், எந்த எழுத்தாளருக்கும் வாசகர் கடிதம் எழுதியதில்லை. காரணம், புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதே அந்த எழுத்தாளருக்குச் செய்யும் கௌரவம் என்று நினைக்கிற படுசோம்பேறி நான்.

  அப்படியிருக்கையில், என்னுடைய புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரோ ஒருவர் நேரம் செலவழித்துக் கடிதமோ, மின்னஞ்சலோ எழுதுகிறார் என்று நினைக்கையில், நிஜமாகவே மெய்சிலிர்க்கிறது.

  5. விரும்புவதை எழுதுவதற்கு நூல்கள்; வாசகனின் விருப்பத்திற்கு வளைவதற்கு பத்திரிகைத் தொடர்கள் – ஸ்டேட்மண்ட் சரியா…?

  பத்திரிகைத் தொடர்களில் எல்லாவிதமான விஷயங்களையும் எழுதமுடிவதில்லை என்பது உண்மைதான். அதோடு ஒப்பிடுகையில், நேரடிப் புத்தகங்களில் கனமான தலைப்புகளைக் கையாளமுடிகிறது.

  ஆனால், புத்தகங்களை, அவை பேசும் தலைப்புகளுக்காகவே காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். பத்திரிகைத் தொடர்களின் விஷயம் அப்படியில்லை. எல்லாவிதமானவர்களுக்கும் பொருந்தும்படியாக எழுதவேண்டியிருக்கிறது, கலகலப்பான உதாரணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், துணுக்குச் செய்திகளில் கவனம் கவரவேண்டியிருக்கிறது. அதேசமயம், தகவல் ஒழுங்கு சிதறிவிடாமலும் சொல்ல வந்த விஷயம் நீர்த்துப்போய்விடாதபடியும் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

  இப்படி ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தாலும், பத்திரிகைத் தொடர்களின் வீச்சு அதிகம் என்பதால், No Complaints!

  ***

  என். சொக்கன்
  20 06 2006


  | |