Daily Archives: ஜூன் 21, 2006

Abu Musab al–Zarqawi

அல் ஜர்காவி இறந்ததை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடகங்களும் ‘ஆஹா… ஓஹோ… பலே… பேஷ்… அமர்க்களம்.. என்ன சாதனை… வாவ்… சூப்பர்… நீட்… அது! அப்படி போடு… போட்டுத் தாக்கு… தல!! கலக்கல்… அடுத்து ஒஸாமாதான்… வெற்றி… நொறுக்கிட்டீங்க… பிச்சுட்டீங்க!!!‘ என்று மிதமாகப் பாராட்டும் சமயத்தில் பா. ராகவனின்குமுதம் ரிப்போர்ட்டர்மாயவலை கட்டுரையில் இருந்து:

அல் காயிதாவின் ஈராக் பிரிவு தளபதி அபூ மூசாக் அல் ஜர்காவி (Abu Musab al – zarqawi) அமெரிக்க வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்கிற செய்தியால் கடந்த வியாழக்கிழமை செய்திப் பத்திரிகைகள் சாபல்யமடைந்தன. (பலபேர் ஜர்காவியை ஜவாஹிரியுடன் போட்டுக் குழப்பிக்கொண்டு, அல் காயிதாவின் முதன்மைத் தளபதியைச் சுட்டுவிட்டார்கள் என்று அலறினார்கள்!)

மீடியா இத்தனை உரக்கப் பேசுமளவுக்கு ஜர்காவி ஒன்றும் ரொம்பப் பெரிய ஆள் இல்லை. மிகவும் சாதாரணமான லோக்கல் ரவுடிதான். 2004ம் ஆண்டு வரை அவன் பெயர் யாருக்கும் தெரியாது. யாருக்கும் என்பதை அடிக்கோடிட்டுப் படியுங்கள் ஒசாமா பின்லேடனுக்கே தெரியாது! Tawhid என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி ஈராக்கில் குண்டுபோட்டுக்கொண்டிருந்தவன். சதாம் உசேன் கைது செய்யப்பட்டபிறகு ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ கலவரங்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தபடியால் உள்ளூரில் கொஞ்சம் பிரபலமானான்.

ஈராக்கில் அமெரிக்கப் படையின் ஆட்சிதான் உண்மையில் நடக்கிறது என்கிறபடியால் அல் காயிதாவால் நேரடியாக அங்கே எந்தத் திருவிளையாடலையும் நிகழ்த்தமுடியாத சூழ்நிலை. ஆகவே ஜர்காவியை வாடகைக்கு எடுத்தார்கள். சொல்லிக்கொள்ளும்படி அல் காயிதாவுக்கு இப்போது ஈராக்கில் ஒரு நெட் ஒர்க் இல்லாத காரணத்தால் ஜர்காவியையும் அவனது அடியாள்களையுமே on behalf of al qaeda வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். இதனடிப்படையில்தான் ஜர்காவியை அல் காயிதாவின் ஈராக் தளபதி என்று மீடியா சொல்கிறது.

ஆனால் ஜர்காவிக்கு அல் காயிதாவின் தொடர்பும் தரவும் கிடைத்தபிறகு நிறைய நாசவேலைகளைக் குறுகிய காலத்தில் செய்தான் என்பதை மறுக்கமுடியாது. ஜோர்டனிலும் ஈராக்கிலும் பணியாற்றிக்கொண்ட பல பெரிய அமெரிக்க அதிகாரிகளைத் தீர்த்துக்கட்டியது இவனது திருப்பணிகளில் முதன்மையானது. ஈராக்கில் மட்டும் எழுநூறு பேரைப் படுகொலை செய்ததில் ஜர்காவியின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.

நவம்பர் 2005ல் ஜோர்டன் தலைநகர் அம்மானில் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் குண்டு வெடித்துப் பலபேர் இறந்த சம்பவம் நினைவிருக்கிறதா? அது ஜர்காவியின் காரியம்தான். ஜோர்டன் நீதிமன்றம் ஜர்காவிக்கு பதினைந்து வருட சிறைத்தண்டனை எல்லாம் விதித்து உள்ளே தள்ளியது. தப்பித்து எப்படி வெளியே வந்தான் என்பதை அவனே ஒரு வாழ்க்கை வரலாறு எழுதியிருந்தால்தான் தெரிந்துகொண்டிருக்க முடியும்!

ஆகவே…..?!


| |

China is democratic: Arundhati Roy

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அருந்ததி ராயை சந்தித்த நிருபர்களிடம் பரபரப்பான துணுக்கை அருந்ததி ராய் பகிர்ந்து கொண்டார்.

சீனா சுதந்திர நாடு. அங்கு உள்ளே இருப்பவர்கள் தங்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்பதை அறிந்தே இருக்கிறார்கள். கூகிள் கூட வித்தியாசமாக அரசுக்கு விருப்பமான முடிவுகளை மட்டுமே தருகிறது என்பதை அரசல் புரசலாக அறிவார்கள். அமெரிக்காவிலும் தொலைக்காட்சி இருக்கிறது; சீனாவிலும் ரூபர்ட் முர்டாக் கால் பதித்துள்ளார். இதுவே சீனா முழுக்க முழுக்க மக்களை தளைகளில் இருந்து விடுவித்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.’

அங்கிருந்த தமிழ் வலைப்பதிவர், ‘அருந்ததி… நீங்கள் 1984-இல்

“I would hate to be thought of as an intellectual”

என்று இந்தியா டுடே நேர்காணலில் சொல்லியிருந்தீர்களே? இப்போது இந்த மாதிரி புத்துணர்ச்சி சிந்தனையை வித்திடுவதன் மூலம் தங்களை அறிவுஜீவியாக்கி விடுவார்களே!?’ என்று வினவினார்.

‘அது நான் விரும்பாமல் கிடைக்கிற பட்டம். நாம் விரும்பும் விலையை நேரடியாக கார் விற்பவனிடம் சொன்னால், பேரம் படியாது. அதே போல்தான் இந்த ‘முற்போக்குவாதி’ பட்டமும். நான் உங்களிடம் சென்று ‘என்னை இப்படி அழை‘ என்று சொன்னால், நாமகரணம் இடமாட்டீர்கள். ஆனால், ‘எனக்கு இப்படி சொல்வது பிடிக்கவில்லை‘ என்று சொல்லிப் பாருங்கள்… உளறினாலும் கூட நிச்சயம் பீடத்தில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.’ என்றார்.

தொடர்ந்து, ‘பீஜிங்கில் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடைபெறப் போகிறது. அவர்கள் என்ன பொருள்முதல்வாதத்தையா பின்பற்றினார்கள்? ஜனநாயகம் தழைக்கிறது என்று சொன்னாலும் டொரொண்டோவிற்கோ, பாரிசுக்கோ, ஜப்பானுக்கோ இது கிடைக்கவில்லை. சைனாவிற்குத்தான் கொடுத்தார்கள்! இது போதுமே?’ என்று முடித்துக் கொண்டு கறுப்புக் கண்ணாடி பொருத்திய லிமூஸினில் ஏறி இரவு விருந்துக்கு விரைந்து விட்டார்.

தொடர்புள்ள சுட்டிகள் & உதவிய பேட்டி: AlterNet: Arundhati Roy: Back In the U.S.A. | Guardian Unlimited | Guardian daily comment | The western view of the rise of India and China is a self-affirming fiction | வஜ்ரா… தமிழ் வலைப் பதிவு: அருந்ததி ராய் | India not democratic: Arundhati Roy


| |

Only for Hot MEN / WOMEN (age 18 above only)

நேற்றைக்கு சூடான பதிவு எழுதியாச்சு. இன்றும் சூடா இருக்கீங்களா? சூட்டைத் தணிக்கணுமா… வேறெங்கும் செல்ல வேண்டாம். கூகிள் படத் தேடலை முடுக்க வேண்டாம். இங்கே வந்தால் போதும்.

தணிஞ்சுரும்.

ஆனா, அக்கம்பக்கம் பாருங்க. பாஸ் இருக்காரா? இப்ப வேணாம். வேற யாராவது எசகுபிசகா பார்த்துருவாங்களா? வேணவே வேணாம்…

தமிழ்மணத்தில் இந்த மாதிரி பதிவு இடலாமா என்று தெரியவில்லை.

தேன்கூட்டில் புகைப்படத்தை அப்படியேப் போட்ருவாங்க… அங்கேயே படிப்பவர்கள் இதனால் சூடாகலாம். இறைவர் மேல பாரத்தைப் போட்டுட்டு நான் இதை இடுகிறேன்.

நேற்று போல் இன்றும் உள்ளர்த்தத்தை மட்டும் கவனித்து பேரின்பத்தைத் தொடவும்.

பாருங்க…

பாருங்க….


.


 நன்றி: சும்மா


| |

Montreal Visit

மாண்ட்ரியால், க்யூபெக் – கனடா பயணக் குறிப்புகள் & படங்கள்:

(படங்களை எலிக்குட்டி கொண்டு சுட்டினால், இன்னும் கொஞ்சம் பெரிய புகைப்படங்கள் ஃப்ளிக்கர் உபயத்தில் கிடைக்கும்)

 • திரும்பி வந்ததில் இருந்து ஆரம்பிக்கிறேன். சென்னையில் நாய், ஆடு, மாடு, கோழி பிராணிகளும், மனிதர்களும், உந்து வாகனங்களும் சாலையைப் பகிர்ந்து கொள்வார்கள்.. அமெரிக்காவில் சாந்த சொரூப விலங்குகளுடன் ஒட்டி உறவாட காசு கொடுத்து இந்த மாதிரி சஃபாரி செல்ல வேண்டும். வான்கோழி, லாமா, கலைமான் என்று எல்லாம் காருக்குள் தலை நீட்டி ‘மம் மம்’ சாப்பிடுகிறது.

  P1010096

 • கோட்டை நகரம் க்யூபெக் சிட்டி. தங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வாங்க என்று வாயிலில் இருந்து கூவி அழைக்கிறார்கள். குட்டி அக்டோபஸ்கள் (Squids) முதல் வெண்ணெய்யை பூரணமாக அடக்கி, வெண்ணெயில் முக்கியெடுத்த ரவியோலி வரை எல்லாமே சூப்பர்.

  குதிரை சவாரியில் அக்ரஹாரம் போல் இருக்கும் நான்கே நான்கு முக்கிய வீதிகளை வலம் வந்துவிடலாம். எனக்கு வாய்த்த குதிரைக்காரன் ‘இந்து மதம் – சிறு குறிப்பு வரைக’ என்று வினவ, ரொம்ப சிரமப்பட்டு கொஞ்சமே கொஞ்சம்தான் விளக்க முடிந்தது.

  P1010084

 • உலகின் மிக உயரமான அருவி: மாண்ட்மாரன்சி நீர்வீழ்ச்சி. நயாகரா நயாகராதான். இதன் அருகே உள்ளே, காட்டுவழிப் பாதை வழியே இயற்கைப் பயணம் கொடுக்கும் ‘கான்யான்’, மாண்ட்மாரன்சியை விட இனிமையான, தவறவிடக் கூடாத தலம்.

  P1010077

 • இந்த பாலம் Sainte-Anne Canyon-இல் உள்ளது. பாலத்தின் மேல் என்னைப் போன்றவர்கள் நடந்தும், இளவட்டங்கள், கயிறு போட்டு சாகசமாகப் பறந்தும் அந்தப் பக்கத்தை அடைகிறார்கள்.

  P1010060

 • நதியைத் துரத்தும் கற்கள்

  P1010047

 • தூரத்துப் பச்சை: உச்சியில் ஏறிக் கொண்டு மாண்ட்ரியால் தரிசனம்

  P1010039

 • மாண்ட்ரியால் முழுக்க சொக்க வைக்கும் தேவாலயங்கள். பிரும்மாண்டமானப் புறத்தோற்றம். அமைதி கவழும் உட்புறம். பிரகாரங்கள் எங்கும் உள்ளூர் மற்றும் பைபிள் கதைகள். சாந்தமாக நோக்கும் சிற்பங்கள். கண்ணாடி ஓவியங்கள். ஒரு நாள் முழுக்க ஒரு சர்ச்சுக்கு ஒதுக்கினால், உங்கள் பயணத்தின் நோக்கம், நிச்சயம் வெற்றி!

  P1010034

 • ஒலிம்பிக் கடனை இன்னும் அடைத்தபாடில்லை என்று சோகமாகப் புலம்பினாலும், சிரத்தையாக பராமரித்து வருகிறார்கள். பூங்காக்கள், தோட்டங்கள், சுற்றுச்சூழல் நிலையம் என்று 1976 ஒலிம்பிக்ஸ் தளங்களை வருகையாளர்கள் ரசிக்குமாறு உருமாற்றி இருக்கிறார்கள்.

  P1010019

 • கொஞ்சம் இருட்டிடுச்சு. Notre-Dame Basilica (Basilique Notre-Dame)
  P1010005

  வாரந்தோறும் ஏதாவது திருவிழா கொண்டாடுகிறார்கள். நான் சென்றிருந்தபோது ஜாஸ் திருவிழா. ஒவ்வொரு தெருமுக்கிலும் கச்சேரி. ஃப்ரென்ச் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம்.

  நடுவே வண்டிக்கு சோறு போடும்போது, என்னுடைய கிரெடிட் கார்ட் பிரச்சினை செய்தது. சண்டைக்கோழியாக நான் ஆங்கிலத்தில் கத்த, பெட்ரோல் பங்க் காரர் ஃப்ரென்ச்சில் மட்டுமே பேசி அடம்பிடித்தார். மொழிபெயர்ப்பாளர் நடுவர் மன்றம் வரை சென்று புரிந்து கொண்டாலும், கிராமப்புறங்களில் ‘எங்களுக்கு ஃப்ரென்ச்சு மட்டும்தான் தெரியும்‘ என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.

  குதிரை சவாரி சென்றால், இந்து மதத்தை ஐந்து வரிகளுக்கு மிகாமல் மேற்கத்திய உலகுக்குப் புரியவைக்க தயாராக இருங்கள். எல்லா வகை உணவுகளும் கிடைக்கும் என்றாலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய சாப்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் வைத்திருக்கும் பஃபே மஹாராஜா போன்ற இந்திய உணவகங்களையும் தவறவிட வேண்டாம்.

  குறைந்தது நான்கு நாளாவது மாண்ட்ரியால் மற்றும் க்யூபெக் மாகாணத்தை சுற்றிப் பார்க்க தேவை. தேவாலயங்கள் குறித்து முன்பே இணையம் மூலமாக போதிய பின்புலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றிற்கு செல்லும்போது ‘அரகரா’ மட்டும் போட்டுக் கொள்ளாமல், எப்போது படம் எடுக்க முடியும், எந்த ஆக்கம் முக்கியம், என்ன சரித்திரம் என்று தெரிந்து நண்பர்களுடன் பகிர்ந்தால் காலரைத் தூக்கி விடுவார்கள்.

  கடந்த முறை சென்று மூன்று வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. டொரொண்டோவிற்கு மதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் வருகிறாராம். செல்ல முடியுமா என்று திட்டமிட வேண்டும்.


  | |

 • Raj Gouthaman – State of Tamil Daliths

  ராஜ் கௌதமன்

  ஆங்கிலேயர் புகுத்திய பூர்ஷ்வா ஜனநாயகத்தில், பிரதிநிதித்துவ அரசியல், பெரும்பான்மையோரின் ஆதரவு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது. தமிழக மக்கள் தொகையில் இரு சதவிகிதத்தினராக இருந்த பார்ப்பனரை எதிர்க்க மீதி 98 சதவிகிதத்தினரைத் திராவிடர் என்ற ஒரு குடையின் கீழ் வேளாளர்கள் திரட்ட முனைந்தனர். வேளாளரின் சாதி அரசியலுக்குத் தமிழ் மொழியும் சைவ மதமும் ஆய்தங்களாயின.

  தலித் மக்களைத் தீண்டாதவர்களாக ஆக்கியதில் பார்ப்பனரைப் போலவே வேளாளருக்கும் பங்குண்டு. ஆனால் தீண்டாமைக் குற்றத்திற்கு பார்ப்பனரையும், அவர்களுடைய சமஸ்கிருதப் பண்பாட்டையும் காரணங்களாக வேளாளர்கள் எடுத்துக் காட்டினார்கள். நீலாம்பிகை அம்மையார் போன்றவர்கள் பார்ப்பனரின் சமஸ்கிருதப் பண்பாட்டிற்குள் கால்களைப் பதித்துக் கொண்டே தீண்டாமைக்குப் பார்ப்பனர் மட்டுமே காரணம் என்றார்கள்.

  வேளாளர் சத்திரியர் முதலான சாதியினரைத் திராவிடர் எனவும், எஞ்சிய பெரும்பான்மை தலித் மக்களை ஆதி திராவிடர் எனவும் ஒன்று திரட்டும் நோக்கில் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. இக்கட்சியின் தலைமை தெலுங்கு நிலவுடமையாளர்களிடமும் தமிழ் வேளாளர்களிடமும் இருந்தது. படித்த சிறுபான்மை ஆதிதிராவிடரும் இக்கட்சியில் அங்கம் வகித்தார்கள்.
  ….

  படித்த ஆதிதிராவிடர்கள் நகரங்களில் கால்பதித்து வாழ்ந்த சிறுபான்மையோராவார். தோட்டி, சக்கிலியர், ஒட்டர், உப்பரவர் முதலான தெலுங்கு – தலித்களும், தேவேந்திரகுலம் என்று தங்களை சமஸ்கிருதமயப்படுத்தி மேற்சாதியாக மாற்ற முனந்த பள்ளரும், இவர்கட்கெல்லாம் புரோகித காரியங்களைப் பார்த்து மேற்சாதியாகப் பாவித்துக் கொண்ட வள்ளுவர்களும், மாடு தின்ற, தின்னாத பறையர்களும் ஒரு அரசியற் கொடியின் கீழ் இன்றும் வரமுடியாதிருக்கிற போது, அன்றைக்கு இதனை நினைத்துப் பார்க்கவே முடியாதுதான்.
  ….

  சைவ உணவு, பசுவின் பால், நெய் ஆகியவை உயர்சாதி அடையாளத்தையும், அசைவ உணவு, குறிப்பாக மாடு, பன்றி இறைச்சி உணவு போன்றவை கீழ்ச்சாதி அடையாளத்தையும் சுட்டின. சாதி இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்பில் ஓரிரு வயது முதலாகவே எவை எவை தீட்டுக்கள், எவரெவர் தீண்டத்தகாதவர் ஆகியவை உணவு அடிப்படையில் சொல்லித் தரப்படுகின்றன.

  பசுவோடு தொடர்புடையவை சுத்தமானவை என்றும், நாய், பன்றியோடு தொடர்புடையவை அசுத்தமானவை என்றும் உணர்த்தப்படுகின்றன.

  ‘பசுவாலைப் பிடித்தபடியே நதியைக்
  கடக்கலாம்; நாய்வாலைப் பிடித்தபடி
  நதியைக் கடக்க முடியுமா ?’

  என்று அறநெறிச்சாரம் என்ற நீதி நூலும்,

  ‘எலும்பைத் தின்று செமிக்கிற நாய்க்குப்
  பசுவின் நெய்யுண்டு செமிக்க முடியுமா ?’

  என்று நீதி வெண்பா என்ற நீதி நூலும் கேட்கும் வினாக்கட்கு அடியில் பசு / நாய் என்ற ரீதியில் சுத்த / அசுத்தப் பாகுபாடு இருப்பது தெரியும். பழைய புறநானூறு போன்ற இலக்கியங்களிலும், பசு, பார்ப்பார், பத்தினிப் பெண் என்று பசுவின் வரிசையில் பார்ப்பனரையும், ஒருவனுக்கே உடலைத் தரும் பெண்டிரையும் சேர்த்திருப்பதைக் காணலாம். வேளாள / பார்ப்பன பக்தர்கள் இறைவனிடம் கசிந்துருகும்போது,

  ‘சீலமில்லாத புலையன், நாயன்’ என்றும்,
  ‘நாயடியேன், புலையடியேன்’ என்றும்

  தங்களைத் தாழ்த்திக் கொள்ளுகிறபோது, தாழ்ச்சியின் இறுதி எல்லையாக நாயும், புலையன் என்ற தலித்தும்தான் வாய்த்தார்கள்.
  ….

  எல்லாவித அதிகாரங்களும், குடும்ப அமைப்பில் தனிமனித அளவில் உளவியல் ரீதியாக உள்வாங்கப் படுவது பாலியல் அடிப்படையில்தான். தலித்கள் சாதி, பொருளாதார அதிகாரங்களைத் தகர்ப்பது போல, குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்ப்பது கடமை.

  ஆண் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தையும், அதன் வழியே உயர்சாதி ஆதிக்கம் கொண்ட சாதியமைப்பையும் இவை இரண்டையும் நிரந்தரப்படுத்துகின்ற மத நிறுவனத்தையும் உடைக்கின்றபோது தான் மொத்த சமுதாயத்தோடு தலித்களும் விடுதலை பெறுவது சாத்தியமாகும். எத்தனை அரசியல் – பொருளாதார மாற்றங்கள் நடந்தாலும் முழு விடுதலை என்பது சாதிய, பாலியல் ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் சாத்தியமில்லை.

  வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றைச் செய்து கொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். ‘தலித்’ ஒன்றுக்குத்தான் சாதி இல்லை, மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்குக் கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக்காக்க மதங்கள் இல்லை. சாதியையும் மதத்தையும் ஆண்மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விததில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழங்க முடியும்.

  தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்ப்வர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, ம்தக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும் நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும். அது வரை?

  நன்றி: தலித்திய விமர்சனக் கட்டுரைகள் :: ராஜ் கௌதமன் – காலச்சுவடு


  | |

  La Sa Ramamirtham

  அடையாளங்கள் – லா.ச.ரா.

  தருணத்தின் தர்க்கத்தினின்னு இன்னும் மீளவிலை. தேடினால் வராது; ஆனால் எதிர்பாராத சமயத்தில் பின்னால் வந்து தோளை தொடும் தருணத்தின் ஸரஸம்.

  எண்ணத்தோடு, அதனினும் மஹத்தான இன்னொரு எண்ணம் இழையும் ரஸாயனத்தில், மனம் நித்யத்வத்துடன் உராய்கையில், வேறு ரோமாஞ்சலி, நெஞ்சடைப்பு, தனக்குத்தானே தனிழப்பு, பயம், கணமேயுகம். யுகமே கணம் – கோடுகள் அறிந்த நிலையில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஒரு ஆனந்தம் – ஆனால் நொடி நேரமே தாள முடியாது. ஆனால் அதில் அமுதம் உண்டு விட்டேனே! அதற்காக அலைகிறேன்.

  தரிசனத்துக்கு ஆதாரம் அன்புதான். அன்பின் பெருக்கு. அன்புக்கேற்றபடி ஆவாஹனம் ஆவாஹனத்துக்கு ஏற்றவாறு தரிசனம். தரிசனம் என்பது என்ன? அன்பின் அலைச் சிகரத்தில் சமயத்துக்கேற்றவாறு அவள் தோன்றுவிதம், ரூபம். இங்கு அரூபமும் ரூபம்தான்; ஆமாம் யார் அவள்?

  நித்யத்வத்தில், மானிடப் பரம்பரை வழிவழி. நம்பிக்கையின் தீவிரத்தில் செதுக்கப்பெற்று, அதே வழிவழி பக்தியில் ஊறி, இலக்கியமென்றும் இசையென்றும் கலை, ஞானம், விஞ்ஞானம், தியானம் என்றும் பல்வகை வழிபாடுகளில் செழித்தவள்.

  அவள் எங்கும் நிறைந்த சக்தி ஆதலால் அவளை தனி உருவத்தில் முடக்குவதற்கில்லை.

  வான் நீலம் அவள் நிறம்.

  வாழை மரத்தில் ஆடும் தலைவாழையிலை அவள் பச்சைப் பட்டுப்பாவாடை.

  அதோ செம்பருத்திச் செடியில் எட்டா உயரத்தில் என்னப் பார்த்து நாக்கை நீட்டிச் சிரிக்கிறாள்.

  துளும்பிய கண்ணீர்த் துளியில், குமுறும் இடியில் நிறைந்த மனதில், இருவரிடையே தேங்கும் மௌனத்தில்.

  பூவரச மரத்தினின்று தானே சுழன்று சுழன்று உதிரும் இலையின் காவிய சோகத்தில்.

  கிணறுள், அதோ ஆழத்தில் சுரந்து கொண்டேயிருக்கும் தாரைகளில்,

  கோபுர ஸ்தூபி உச்சியில் உட்கார்ந்து சிறகைக் கோதி, உடனே பறக்கும் பச்சைக் கிளியின் சொகுஸில்,

  அடுத்த சமயம் அதே ஸ்தூபி மேல் கழுகின் சிறகு விரிப்பில்.

  சொல்லிக் கொண்டே போகலாம். உவமைகளில், உருவங்களில், அடையாளமாய்த் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். உள்ளத்தின் நெகிழ்ச்சியில் அவள் நடமாட்டம்; மௌனத்தின் உச்சிதான் அவள் வாழுமிடம்.

  திரிகரண சுத்தியில் எப்பவுமே இருக்க முடியாது. சுத்தமாயிருக்க ப்ராயத்தனம் தான் செய்ய முடியும். அழுக்கு சேர்ந்து கொண்டே தான் இருக்கும்.

  ஆனால் சில அபூர்வ சமயங்களில், முகூர்த்த வேளைகள் என்றே சொல்லலாம். தருணங்கள்; நான் என் பாசாங்குகளைக் களைந்து, பொய்மையில் மூழ்கிக் கிடந்த என் நாணயம் தானே மேல்வந்து, நான் யாருடனும், எதனுடனும் விரோதமில்லாமல் புவனத்தின் ஜீவஸ்ருதியோடு இழைந்துபோன வேளையில், இதயத்தின் அமுத கலசம் பொங்குகையில், தன் ஸஹிக்க முடியாத சௌந்தர்யத்தில் அவள் தோன்றுகிறாள். என் உள்ளத்தின் சதுப்பில் இறங்கி நடக்கிறாள். மார்பை இருகைகளாலும் பொத்திக் கொள்கிறேன். அவள் பாதச்சுவடுக்ளின் இன்பம் தாங்க முடியவில்லை. அதோ அவள் கொலுசு சப்தம் கேட்கவில்லை?

  அவள் தருண்யை.

  தெய்வம் வேண்டாம். ஆனால் தரிசனம் கட்டாயம் வேண்டும்.

  வார்த்தைகள் கிளிஞ்சல்கள்.

  அடையாளங்கள் (கட்டுரையின் சில பகுதிகள்) – லா.ச.ரா. (லா. ச. ராமாமிருதம்)


  | |