டாவின்ஸி கோடு: தடையும் தர்க்கமும் :: எஸ்.வி. ராஜதுரை
மிக அதிகமாக விற்பனையாகும் நாவல்கள் (best sellers) “காலத்தை வென்ற’ மிகச் சிறந்த படைப்புகளாகவும் அமைவது உலகில் மிக அரிது. நானூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ஸ்பானிய நாவல் “டான் க்யோட் டி லா மான்ச்சா’ (Don Quixote de la Mancha) அன்றைய வாசகர் எண்ணிக்கை, வாங்கும் திறன் முதலியவற்றைக் கருத்தில் கொள்கையில் மிக அதிக அளவில் விற்பனையான ஒரு நாவலாகக் கருதப்படுகிறது. செர்வாண்டெஸின் இந்த ஆக்கம் நாவல்களின் தாய் எனக் கருதப்படுவதுடன் உலகின் முக்கிய மொழிகள் பலவற்றில் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னரின் முக்கிய நாவல்களிலொன்று “அப்ஸலம், அப்ஸலம்‘. 1936இல் வெளியான இந்த நாவலின் விற்பனை ஐந்நூறைத் தாண்டவில்லை. அதே ஆண்டில், மற்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஹார்வி அல்லென் என்பார் எழுதிய “அந்தோய் அட்வெர்ஸ்’ என்னும் நாவல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி புத்தகச் சந்தையில் “சாதனை’ படைத்தது. ஆனால், இலக்கிய உலகில் இந்த எழுத்தாளரையோ அவரது நாவலையோ இன்று யாரும் நினைவு கூர்வதில்லை. ஆனால் ஃபாக்னரின் படைப்புகள் இலக்கியவாதிகளுக்கு இன்னும் உள்உந்துதல் தந்து கொண்டிருக்கின்றன.
மற்றொரு அமெரிக்க நாவலாசிரியர் டான் ப்ரெüன் எழுதிய “டாவின்ஸி கோடு’ நாவலின் விற்பனை, 2003 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல கோடிப் பிரதிகளைத் தாண்டிவிட்டது. இதுபோக பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நாவலின் பிரதிகளும் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. படிப்பதற்கு சுவாரசியமான இந்த நாவலின் சம்பவங்கள், பாரிஸிலுள்ள கலை அருங்காட்சியகமான லூவ்ரில் அதன் காப்பாளர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டதிலிருந்து தொடங்குகின்றன. கொலையுண்டவர் பிணமாகக் கிடந்த கோலம், அவரது உடலில் எழுதி வைக்கப்பட்டிருந்த சில எழுத்துகள் ஆகியவற்றின் துணையுடன் குறியீட்டியல் பேராசிரியர் ஒருவரும் கொலை செய்யப்பட்டவரின் மகளும் “துப்பு’ துலக்க முற்படுகையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன.
“புனிதக் கிண்ணம்’ எனச் சொல்லப்படுவதைத் தேடிக் கண்டுபிடிக்க அவர்கள் மேற்கொள்ள முயல்கையில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். நாவலின் புனைவுப்படி, “புனிதக் கிண்ணம்’ என்பது மேரி மக்தலேனா என்பவரையே குறிக்கிறது; தனது சீடகோடிகளில் ஒருவரான இவரை ஏசு மணம் புரிந்து கொண்டாரென்றும் தனது கொள்கை நெறிகளைப் பரப்ப அந்த மாதையே ஏசு நியமித்தார்; இவர்களது சந்ததியினர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்ஸியின் “கடைசி இரவு உணவு’ என்னும் ஓவியத்தில் ஏசுவுக்கு அருகே அமர்ந்திருப்பவராகக் காட்டப்படும் சீடர் மேரி மக்தலேனாதான்; டாவின்ஸி, மோஸôர்ட் போன்ற கலைஞர்கள் இந்த மேரி மக்தலேனாவைப் புனிதராகக் கருதும் ஒரு சமயக் குழுவைச் சேர்ந்தவர்கள்; ஏசுவுக்கும் மக்தலேனாவுக்கும் இருந்த தொடர்பு குறித்த செய்திகளை அழிப்பதற்காக “ஒபெஸ் டெய்’ என்னும் கிறிஸ்துவ அமைப்பு- வத்திகானுக்கு நெருக்கமான அமைப்பு -அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகவும் இந்த நாவல் கூறுகிறது.
இந்த நாவலின் ஆங்கில மூலமும் ஐரோப்பிய மொழியாக்கங்களும் கடந்த மூன்றாண்டுகளாக அந்த நாட்டு மக்களிடையே எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. அந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களே. கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திகானின் ஆட்சேபணையை அலட்சியம் செய்த அந்த நாட்டு மக்களிடையே இந்த நாவலின் திரைப்பட வடிவமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பால்ஸக், தோஸ்தோவ்ஸ்கி, தோல்ஸ்தாய், காஃப்கா போன்ற மகத்தான கலைஞர்களின் படைப்புகள் தரும் உள்ளொளி எதனையும் இந்த நாவலில் காணமுடிவதில்லை என்பதும் இன்னும் இருபதாண்டுகளுக்குப் பிறகு இதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசப் போவதில்லை என்பதும் வேறு விஷயம். ஆனால் ப்ரெüனின் நாவலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் கிறிஸ்துவ நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறது என்னும் வாதம் அர்த்தமற்றது.
இன்றுவரை கத்தோலிக்க உயர்பீடம் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை; கருத்தடை உரிமையை ஒப்புக்கொள்ளவில்லை. வத்திகான் பயன்படுத்தும் அதே விவிலியத்திலிருந்து “விடுதலை இறையியலை’ உருவாக்க முயன்ற தென்னமெரிக்கக் கத்தோலிக்கப் பாதிரியார்களை போப் ஆதரிக்கவில்லை. ஆறு நாட்களில் உலகம் கடவுளால் படைக்கப்பட்டதாக நம்புபவர்களின் மத அடிப்படையையே தகர்க்கும் டார்வினின் கோட்பாட்டைப் பாடப் புத்தகங்களில் இடம்பெறாமல் தடுக்கும் அடிப்படைவாதச் சக்திகள் அமெரிக்காவிலும்கூட இருக்கின்றன. ஆனால் அவையும்கூட “டாவின்ஸி கோடு’ நாவலுக்கோ, திரைப்படத்திற்கோ தடைவிதிக்கும்படி போராட்டம் நடத்தவில்லை.
கோபர்னிகஸ், கலிலியோ, டார்வின் முதல் இன்றைய மரபணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் வரை, “”மத உணர்வுகளைப் புண்படுத்தாமல்” அறிவியல் வளர்ந்ததில்லை.
கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரால் மாற்று மதத்தவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயல்கள் உலகில் நடைபெறத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பியப் பத்திரிகையொன்று வெளியிட்ட முகமது நபி பற்றிய கேலிச்சித்திரங்கள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு, “”மற்றவர்களின் உணர்வுகள் புண்படும்” என்னும் பெயரால் கலை, இலக்கியப் படைப்புகளைத் தடை செய்வதும் எதிர்த்துப் போராடுவதும் பாசிசக் கலாசாரத்தையே உருவாக்கும்.
சிவாஜி பற்றிய நூலொன்றை காங்கிரஸ் வசமுள்ள மராத்திய அரசாங்கம் தடை செய்தது; தஸ்லிமா நஸ்ரீன் படைப்பொன்றை மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கம் தடை செய்தது; இலண்டனில் எஃப்.எம். ஹூúஸனின் ஓவியக் கண்காட்சிக்கு எதிராக “இந்தியப் பண்பாட்டுக் காவலர்கள்’ ரகளையில் ஈடுபட்டனர்; நீதிக் கட்சியின் வரலாறு ஜெயலலிதா ஆட்சியின்போது பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது; தலைசிறந்த கன்னட எழுத்தாளர் குவேம்பின் பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து தேவெ கெüட கர்நாடக முதலமைச்சராக இருந்த காலத்தில் குவேம்புவே எழுதிய படைப்பொன்று (“மத உணர்வுகளைப் புண்படுத்தியதால்’) நீக்கப்பட்டது.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, பா.ஜ.கவின் குஜராத் அரசாங்கம், நர்மதா அணைத் திட்டத்தை விமர்சித்தார் என்ற ஒரே (மதச்சார்பற்ற) காரணத்திற்காக ஆமிர்கான் நடித்த திரைப்படத்தை அந்த மாநிலத்தில் திரையிடக்கூடாதென ஆணை பிறப்பித்தது. இத்தகைய தடைகள் செய்வதற்கு அந்தந்த மாநில அரசாங்கங்கள் சொன்ன அதே தர்க்கவாதங்களின் அடிப்படையிலேயே பெரியார் மரபுக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசாங்கம் “டாவின்ஸி கோடு’ திரைப்படத்திற்குத் தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் தானும் ஒரு எழுத்தாளர், கலைஞர் என்பதையும் திராவிட இயக்கத்தினரின் நாடகங்களும் திரைப்படங்களும் பத்திரிகைகளும் பெரியார் காலத்திலிருந்து நேற்று வரை தணிக்கைகளுக்கும் தடைகளுக்கும் உள்ளாயின என்பதையும் மறந்துவிட்டார் போலும்!
உண்மையான கிறிஸ்துவ நெறிகளைப் புண்படுத்தும் வேறு காரியங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. தலித்துகளுக்குத் தனிச் சுடுகாடு, அகமண முறை, வரதட்சிணை, ஆணாதிக்கம், சுரண்டல் எனப் பல்வேறு வடிவங்களில் ஏசுநாதர் மீது கடுந்தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்டெர்நெட்டும் அசல் அல்லது திருட்டு விசிடி/டிவிடியும் இருக்கும் யுகத்தில் எந்தவொரு விஷயத்தையும் யாராலும் தடைசெய்துவிடலாம் என நினைப்பது எத்தகைய அறியாமை! அடுத்த ஆண்டு ஏதெனுமொரு வெளிநாட்டுத் தொலைக்காட்சி சானலில் “டாவின்ஸி கோடு’ ஒளிபரப்பப்படுமானால் நமது ஆட்சியாளர்கள் என்ன செய்வர்? சீன, ஈரானிய ஆட்சியாளர்களைப் பின்பற்றுவார்களா?