Dinamani.com – TamilNadu Page: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சங்க கலையரங்கில், சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவ அறிவிப்பு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் அவர் கூறியது:
நடிகர் சங்க உறுப்பினர்களுக்குள் எந்த அரசியலும் இல்லை. வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொள்ளவில்லை.
நடிகர் சங்கத் தலைவர் தேர்தலை ஜூலை 30-ம் தேதி நடத்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. சங்கத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்வோம். வேட்பு மனு தாக்கல் எப்போது என்பது உள்பட தேர்தல் பணிகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பின்னர் அறிவிக்கப்படும்.
நிர்வாகிகள் வற்புறுத்தினால் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன்.
படப்பிடிப்பு காரணமாக பல நடிகர், நடிகைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தலைவர் தேர்வு குறித்து அவர்களுடனும் பேசுவோம் என்றார் விஜயகாந்த்.
நாசர், விஜயகுமார், எஸ்.வி.சேகர், ராதாரவி, செந்தில், மனோரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து மீண்டும் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
நாசர்:
அரசியல் கட்சிகளில் இருப்பவர்களில் நடிகர் சங்க முக்கிய பொறுப்புகளை விகிக்கக் கூடாது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் தலைவர்களிடம் கோபமாகப் பேசினார் நடிகர் நாசர்.










