DMK’s new formula to face congress threat


காங்கிரஸை சமாளிக்க திமுக புது பார்முலா – thatstamil.oneindia.in

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியை சமரசப்படுத்த புதிய பார்முலாவை திமுக வகுத்துள்ளது. இதன்படி மத்தியில் 2 திமுக அமைச்சர்களை வாபஸ் பெற அக்கட்சி முன் வந்துள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மை பலம் உடைய திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று கூட்டணியில் உள்ள பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என தமிழக காங்கிரஸார் கோரி வருகின்றனர்.

ஆட்சியில் பங்கு கொடுக்காமல் நீண்ட நாட்களுக்கு ஆட்சி நடத்த முடியாது, காங்கிரஸ் கட்சியினர் எந்த இடத்திலாவது தங்களது ‘புத்தியைக்’ காட்டி விடுவார்கள் என திமுக சந்தேகப்படுகிறது. சமீபத்தில் டெல்லி சென்றபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், கருணாநிதியே மாற்றுத் திட்டம் குறித்து விவாதித்தாகக் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களில் கணிசமான அளவு அதிமுக ஆதரவாளர்கள் இருப்பதை கருணாநிதி தெளிவாக உணர்ந்துள்ளார். எனவே இவர்களால் ஆட்சிக்கு எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மாற்றுத் திட்டத்தை சோனியா காந்தியிடம் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதாக இருந்தாலும், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தப்பித் தவறி அமைச்சரவையில் இடம் பெற்றால் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் அதிமுக தரப்புக்குப் போய் விடும் அபாயம் இருப்பதை சோனியாவிடம் கருணாநிதி விளக்கியுள்ளார்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆட்சியில் பங்கு தர தான் தயங்குவதாகவும் சோனியாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அத்தனை கோஷ்டியினரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்பார்கள், அப்படி ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டால் அது மக்களிடையே திமுக கூட்டணி குறித்து தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும், கூட்டணியின் இமேஜ் சரிந்து விடும் என்பதையும் சோனியாவிடம் கருணாநிதி எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.

இப்படி பல்வேறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி, ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை என்று தெரிவித்த கருணாநிதி அதற்குப் பதில் ஒரு மாற்றுத் திட்டத்தை சோனியாவிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மத்தியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் 2 பேரை வாபஸ் பெற்றுக் கொள்ள திமுக தயார். அதற்குப் பதில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.

நான் ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளேன். அடுத்து முதல்வர் ஆவேனா என்பது தெரியாது. எனவே இந்த ஆட்சிக்காலத்திலேயே பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

அதற்கு காங்கிரஸ் கட்சி மூலம் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது. எனவே இந்த புதிய திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் கருணாநிதி உருக்கமாக கூறியதாக தெரிகிறது.

One response to “DMK’s new formula to face congress threat

  1. Unknown's avatar விசித்திரகுப்தன்

    இதெல்லாம் எப்படி கூட இருந்து பார்த்த மாதிரி எழுதுகிறார்களோ தெரியவில்லை 🙂

    இதில் இப்படியோ அல்லது அப்படியோ விவாதம் செய்தால் ஆதாரம் இல்லாததால்…உனக்கு தெரியுமா…நீ பார்த்தாயா என்பதிலேயே முடியும்

    எனவே இப்போதைக்கு 🙂 மட்டும்தான்.

    ஆனா கருணாநிதி மத்தியில் மந்திரி பதவியை விட்டுக்குடுக்க தயாராயிட்டாருன்னா நம்ப முடியலை….ஒரு வேளை தயாநிதி மாறனை ரிசைன் பண்ண சொல்லப் போறாறோ :))

விசித்திரகுப்தன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.