‘ஐடியலிஸம்‘ என்பதைத் தமிழில் எப்படி சொல்வது?
ஸ்டாலின் முதலமைச்சராகவும் ஜெயலலிதா துணை முதல்வராகவும் பதவியேற்றால் எப்படி இருக்கும்?
சட்டசபையில் திருக்குறள் மட்டுமல்லாமல் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ ஆரம்பித்து ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ வரை மேற்கோள் காட்டி எதிரெதிர் வாதங்கள் அமைந்தால் எப்படி இருக்கும்?
கவர்னராக பிசி அலெக்ஸாந்தர் போன்ற செயல்திறமும் சுயசிந்தனையும் உடையவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சகத்திடம் வேண்டினால் எ.இ.?
மகனின் திருமணத்திற்கு ஆஜராகக் கூட முடியாமல் காவிரி பிரச்சினை குறித்து கர்நாடகாவுடன் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் முதல்வர் கிடைத்தால் எ.இ.?
கான்வெண்ட் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பாமல், ஊட்டி, கொடைக்கானலுக்கும் ஹாஸ்டல் தள்ளிவிடாமல், அரசுப் பள்ளிக் கூடமே சிறந்தது என்று உளமாற நினைத்து, அந்த அரசுப் பள்ளிக்கே குழந்தைகளை அனுப்புமாறு நடந்து கொள்ளும் அமைச்சர்கள் இருந்தால் எ.இ.?
எந்த அமைச்சர் எப்படி செயல்படுவார்; அரசுத்துறை நிர்வாகம் எவ்வாறு திட்டங்களைத் தீட்டி அரசியலுக்கு ஏற்றவகையில் மக்களுக்கு கொண்டு செல்கிறது; பேரங்கள் எப்படி படிகிறது; ஏன்? பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொண்டால் எ.இ.?
பேச்சு யார் எழுதித் தருகிறார்கள்? ஆக்கப்பணிகள் எப்படி சொற்பொழிவாகிறது? மத்திய மாநில சுமூக உறவை மதித்து தொடர்ந்து உரையாடி, வர்த்தகமும் சமூகமும் அமைச்சகமும் பின்னிப் பிணைவதையும் உண்ர்ந்து பொதுநலனை முன்னிறுத்தி, தேர்தல் அறிக்கையில் வாக்கு கொடுத்ததை நிறைவேற்றினால் எ.இ.?
எதிர்க்கட்சியுடன் கொள்கை அளவில் ஒத்துப் போகும் தீர்மானங்களை இயற்றி, மாவட்ட சகாக்களுடன் நட்பு பாராட்டி, மாநிலத்துக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஒன்று திரளும் எம்.எல்.ஏ.க்கள் வாய்த்தால் எ.இ.?
உதாரண மனிதர்களும், காரியத்துடிப்புடன் சமரசம் செய்யாத மனப்போக்குடையவர்களும், குறைகளை எவர் எடுத்து வைத்தாலும் திறம்பட வாதிட்டு வெல்ல நினைப்பவர்களும், அந்த வாதத்தின் இறுதியில் எதிராளி சொல்வது உகந்ததாக இருக்கும் பட்சத்தில் மேலானக் கொள்கையை எடுத்துக் கொண்டு முடித்துக்காட்டும் வைராக்கியமுடையவர்களும் சட்டமன்றத்தை நிறைத்துக் கொண்டிருந்தால் எ.இ.?
இவையெல்லாம் தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
அமெரிக்காவில் நினைத்ததை நடத்திக் காட்டிய தொடர் ‘வெஸ்ட் விங்‘ இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவிலேயே நடக்க இயலாத விஷயங்களை மெய்சிலிர்க்க புத்திசாலித்தனமாக நாடகமாக்கிய தொடர். பெண்ணாசை இல்லாத ‘சுதந்திர கட்சி’ ஜனாதிபதி. எதிர்க் கட்சி வேட்பாளரை #2-வாக நியமிக்கும் பரந்த மனப்பான்மை.
அரிய புத்தகங்களின் முக்கிய takeaways-ஐ சாதாரணமான சம்பாஷணையில் பொருத்தமாக நுழைப்பது. அமெரிக்காவின் வழிமுறைகளை, செனேட், காங்கிரஸ், நீதிமன்றம், ராஷ்டிரபதி, அமைச்சரவை, கவர்னர் போன்ற பல்துறைப் பொறுப்பாளிகளை விளக்கமாக விறுவிறுப்பாகக் காட்டிய அரசியல் தொடர் + பாடம்.
தொடர்புடைய பதிவு: Commander in Chief – Thinnai | NBC.com > The West Wing
West wing | English TV | தமிழ்ப்பதிவுகள்