சன் டிவியின் டிரெய்லர் நேரமான ‘புத்தம் புதுசு‘ பார்த்தால் எல்லாப் படமும் ஒரே மாதிரிதான் பயமுறுத்துகிறது. ‘காதலன்‘ ஸ்டைலில் பறக்கும் கார்கள், கேப்டன் ரேஞ்சுக்கு நெருப்புக்குள் இருந்து வெளிவரும் சட்டை போட்டுக் கொண்டிருக்கும் பொத்தான் போடாத ஹீரோ, நாலைந்து ஹீரோயின்கள், விஷ்ஷ்க் என்று 120 டெசிபலுக்கு எகிறும் தலைப்புகள், அநேக படங்களில் மீண்டும் விவேக்.
1. பரமசிவன்: அஜீத் இளைத்து துரும்பாகியிருக்கிறார். ரஜினியால்தான் ‘சந்திரமுகி‘ ஓடியது என்பதை பி. வாசுவுக்கு உணர்த்தும் அபாயம் இருக்கிறது. அஜீத்துக்கு ‘காட்ஃபாதர்‘ வரும் வரை பொறுமை காக்க வேண்டியதுதான்.
2. ஆதி: ‘திருமலை‘, ‘சுள்ளான்‘ என்னும் புஸ்வாணங்கள் கொடுத்த ரமணாவின் அடுத்த படம். பிரகாஷ் ராஜ், மணிவண்ணன் என்று விஜய்யின் ஆஸ்தான சகாக்கள். பாடல்கள் எதுவுமே ஜனரஞ்சகமாக இல்லை.
3. இதயத் திருடன்: நுவ்வொஸ்தநந்தே நெனொதந்ந்தன (‘Nuvvostanante Nenoddantana’)-வின் மொழியாக்கமான ‘சம்திங் சம்திங்‘தான் ஜெயம் ‘ரவி’யின் அடுத்த படம். அப்பாவின் தயாரிப்பு, அண்ணனின் இயக்கம் என்று அந்தப்படம் வரும்வரை ரவியை விட்டு சௌந்த்ர்யா ரஜ்னிகாந்த் கூட தள்ளியே இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். சரண் இயக்கம், கவிதாலயா தயாரிப்பு என்பதால் படத்தை எப்படியாவது ஹிட்டாகி விடுவார்கள்.
4. கலாபக் காதலன்: சொவ்வறை வல்லுநராக ஆர்யா. மனைவியாக ஓவர் ஆக்ட் க்வீன் ரேணுகா மேனன். புதுமுக இயக்குநர் என்பதால் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம்.
5. சரவணா: தெலுங்கு ரீமேக் என்பதாலும் ‘மன்மதன்‘ சிம்பு நாயகன் என்பதாலும் பத்து மேற்பட்ட பெண்கள் நாயகியாக நடிப்பார்கள். படத்தைக் குறித்து சிம்பு
“மன்மதன், தொட்டி ஜெயா போன்ற காத்திரமான (ஹெவி) குணாபாத்திரங்களுக்குப் பிறகு இந்த மாதிரி ஒரு வெகுஜன (கமர்ஷியல்) படம் செய்வது புத்துணர்ச்சி தருகிறது”
என்று சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி டயலாக் படத்தில் பேசினாலே போதும்; கே.எஸ். ரவிக்குமாருக்கு நகைச்சுவை பஞ்சமே ஏற்படாது.
6. பாசக் கிளிகள்: அமெரிக்காவில் வரி விதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக நிறுவனங்கள் பல கிளைகளைக் கொண்டு விதவிதமாக நஷ்டத்தில் இயங்கும். கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் இந்த வருட ‘கண்ணம்மா‘வாக இராம நாராயணனின் அழுவாச்சி காவியம்.
7. சுதேசி: விஜய்காந்தின் ‘பேரரசு‘வையே தவறவிட்டு விட்டேன். வித்தியாசமான சிரிப்பம்சங்கள், மாயாவாத எதார்த்தம், பொருந்தாக்காதல் என்று எப்போதும் போல இந்த முறையும் கேப்டன் ஏமாற்ற மாட்டார் என்றே நம்புகிறேன்.
8. புதுப்பேட்டை: வருதா?
படங்கள் குறித்த பின்னணித் தகவல்களுக்கு கோலிவுட் டாக்-கும் உதவியது.










