பார்வைகள் என்கிற தலைப்பில் இக்கூட்டுப்பதிவுக்கு வெளியே தமிழகத் தேர்தல் பற்றிய சிறப்பான பதிவுகள் இருப்பின், வலைப்பதிவாளரின் அனுமதி பெற்று இங்கே பதியலாம். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பு உருவாகும் சாத்தியங்களுண்டு.
சோதனைக் காலம்
என் நண்பர் ஒருவருக்கு அபாரத் திறமை ஒன்றுண்டு.கவிதை எழுதுவதோ, மேடைப் பேச்சோ அல்ல. வாசல் கூடத்தில் உடகார்ந்திருக்கும் போதே, பின்னால் இரண்டு கட்டுத் தள்ளியிருக்கிற சமையலறையில் என்ன தயாராகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி விடுவார். உட்கார்ந்த இடத்திலிருந்தே சொல்வார். என்ன காய்கறி வேகிறது, என்ன கொதிக்கிறது, என்ன பொரிக்கப்படுகிறது என்று மிகச் சரியாகச் சொல்லுவார். எப்படிச் சொல்கிறீர்கள் என்றால் வாசனை வருகிறதே என்பார். நம் மூக்கிற்கு எந்த வாசனையும் தெரியாது. தெரிந்தால் மட்டும் என்னத்தை சொல்லிவிடப்போகிறோம்? வாழ்க்கையில் நாம் சாப்பிடக் கற்றுக் கொண்ட அளவிற்கு சமைக்கக் கற்றுக் கொள்வதில்லை.
என் மூக்கிற்கு வேறொரு வாசனை தெரிகிறது.தேர்தல் வாசனை. தமிழ்நாடு இன்னொரு தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இப்போதுள்ள தமிழகச் சட்டமன்றத்தின் ஆயுட்காலம், இந்த ஆண்டு ஜூனில் முடிவடைகிறது. புதிய சட்டமன்றம் ஜூனில் பொறுப்பேற்க வேண்டுமானால் குறைந்த பட்சம் மே மாதத்தில் தேர்தல் நடக்க வேண்டும்.கடந்த சட்டமன்ற தேர்தல் 2001ம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் வரவிருக்கும் தேர்தலும் மே முதல் வாரத்தில் அல்லது ஏப்ரல் இறுதியில் வந்துவிடும் என்று தெரிகிறது. தேர்தல் எப்போது நடக்க வேண்டும், எத்தனை கட்டமாக நடக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத்தான் உண்டு. குளறுபடிகளுக்குப் பின் சரி செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்களை சரி பார்ப்பது, தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆராய்வது போன்ற பணிகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் வரும் வாரத்தில் தமிழகம் வருகிறார். அரசியல் வட்டாரங்களும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதற்கான சூசகங்கள் தெரிகின்றன.
தமிழ்நாட்டின் தேர்தல் வியூகங்களைக் கணிப்பது அப்படி ஒன்றும் சிரமான காரியம் அல்ல. எப்போதுமே இரண்டு அணிகள்தான்.மூன்றாவது அணி என்பதற்கு இடமிருந்ததில்லை. அரசியல் தூய்மைவாதிகள், (puritans) அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் கற்பனையில் அதற்கு இடமுண்டு. வெறும் வாயை மெல்ல நேரிடுகிற நேரங்களில் அவர்கள் இந்த அவலை மெல்வதுண்டு. மற்றப்படி மக்கள் மத்தியில் அந்தக் கருத்து வேர் பிடிக்கவே இல்லை.
இரண்டு அணிகளில் ஒன்றான திமுக கூட்டணி மக்களை ‘தேர்தலுக்குத் தயார்படுத்துவதற்காக’ இம்மாதம் 18ம் தேதியிலிருந்து பிரசாரக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்த இருக்கிறது. மார்ச் மாதம் அதன் மாநில மாநாடு கூட இருக்கிறது. தமிழகம் முழுவதும் திரையிட ஒரு பிரசாரக் குறும்படம் ஒன்றைத் தயாரித்து, தணிக்கைச் சான்றிதழும் பெற்று அது தயாராக இருக்கிறது.இவை தவிர வேறு சில அடையாளங்களும் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுக்கள் நடப்பதாக கருணாநிதியே தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில் வேறு இருவரது பேச்சுக்கள் கவனத்திற்குரியவையாகின்றன. ஒன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோவினுடையது. கெளரவமான எண்ணிக்கையில் இடங்களைப் பெறுவதற்கு மதிமுக முயற்சிக்கும் என்று புத்தாண்டன்று அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) அதனுடைய ஆதரவில்லாமல் எந்தக் கட்சியாலும் ஆளுங்கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்ற முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர்.இராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
இந்த இரண்டு கருத்துக்களும் சாதாரணமான சூழ்நிலையில், அதிக கவனம் பெற்றிருக்காது. ஆனால் கூட்டணிக்குள் இடப்பங்கீடு பற்றிய பேச்சு நடப்பதாக சொல்லப்படும் சூழ்நிலையில், அதற்கு வெளியே தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் கருத்துக்கள், அவற்றின் தொனி காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன.
அதிமுகவிற்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நின்ற நாளிலிருந்து ஊடகங்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு தருணத்தை நோக்கி திமுக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் அரசியல் அனுபவத்திற்கும் சாணக்கியத்தனத்திற்கும் சவால் விடும் தருணம்.
தமிழக சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 234. தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டுமானால் 118 இடங்களைப் பெற்றாக வேண்டும். 118 இடங்களில் வெற்றி பெற வேண்டுமானால் குறைந்தது 140 முதல் 150 இடங்களில் போட்டியிட்டாக வேண்டும். (கடந்த தேர்தலில் அதிமுக இதே போன்ற ஒரு சூழ்நிலையில் இருந்தது. அப்போது அது 141 தொகுதிகளில் போட்டியிட்டது) மீதமுள்ள 80 அல்லது 90 இடங்களை காங்கிரஸ், பா.ம.க., மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இவற்றோடு முஸ்லீம் லீக், உதிரியான தலித் கட்சிகள் ஆகியவையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் பாமக, காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட்கள் எல்லோரும் அதிமுக அணியில் போட்டியிட்டனர். அப்போது சாத்தியமானது இப்போதும் சாத்தியமாகாதா எனக் கேள்வி எழுவது இயல்பு. அப்போது திமுக அணியில் பாஜக இருந்தது. எனவே காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் அணிகள் அந்த அணியில் இருக்க முடியாத நிலைமை.பாஜக குறித்து பாமக அவ்வளவு கடுமையான நிலையை எப்போதும் எடுத்ததில்லை என்றாலும் அதற்கு அன்று அதிமுகவின் ஆதரவு தேவைப்பட்டது.தேர்தல் கமிஷனின் அங்கீரத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது.
கடந்த தேர்தலில் காங்கிரசும் தமிழ்மாநில காங்கிரஸ் இரண்டும் இணைந்து 46 இடங்களில் போட்டியிட்டன.பாட்டாளி மக்கள் கட்சி 27 இடங்களில் போட்டியிட்டது.
தனது கட்சியை தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று அறிவித்திருப்பதன் மூலம், தனது கட்சி காங்கிரசிற்கு நிகரான, அல்லது காங்கிரசை விடப் பெரிய கட்சி என்று கருதுகிறார் என்பது வெளிப்படை. எனவே அவர் காங்கிரசிற்குக் கொடுக்கப்படும் இடங்களுக்குக் குறைவாகப் பெற்றுக் கொள்ள முன்வரமாட்டார் என்பதைத்தான் இந்த அறிவிப்பின் மூலம் உணர்த்த அவர் முற்படுகிறார் எனக் கருத இடமிருக்கிறது. ஒருவேளை அப்படிக் குறைவான இடங்களைப் பெற்றுக் கொள்ள வற்புறுத்தப்பட்டால், தான் கூட்டணியிலிருந்து விலகி நிற்கவும் கூடும் என்பதையும். அப்படி விலகிக் கொண்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் அவரது அறிவிப்பின் அடுத்த வாக்கியம் சுட்டுகிறது. அது: ‘பாமகவின் ஆதரவில்லாமல் ஆளுங்கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது’
பாமகவை சமாளிக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்க தில்லியில் உள்ள அதன் மேலிடத் தலைமை இணங்கலாம்.ஆனால் அது தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் பணியாற்றும் உற்சாகத்தைப் பாத்தித்துவிடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பியது. அந்தக் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதி அது. அந்தத் தொகுதியில் போட்டியிட பாமகவும் விரும்பியது. தில்லியில் ஆட்சி அமைப்பதுதான் முக்கியம் என்ற மனநிலையில் இருந்த காங்கிரஸ் மேலிடம், கூட்டணிக் கட்டாயங்களுக்காக அதைப் பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுத்தது. இப்போது மீண்டும் அதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அது நிச்சியம் அவர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தும். அதுவும் தவிர இப்போது விட்டுக் கொடுத்து சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் அது இல்லை. கடந்த முறை விட்டுக் கொடுத்த போதே அதை இந்த சட்டமன்றத் தேர்தலில் சரி செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் விட்டுக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தனிப் பேச்சில் சொன்னார்கள்.
தமிழகச் சட்ட மன்றத் தேர்தலோடு புதுவைச் சட்டமன்றத் தேர்தலும் நடக்கக்கூடும். அப்படி நடக்குமானால் அதைக் காட்டி காங்கிரஸ்- பாமகவிடையே சமரசத்தை ஏற்படுத்த கருணாநிதி முன்வரலாம்.காங்கிரஸ் புதுவையில் சிதறுண்டு கிடக்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க அதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம்.
பாமக கூட்டணிக்குள் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகளை அழைத்து வரும் என்றும் ஒரு பேச்சு சில காலமாக இருந்து வருகிறது. அப்படி வந்தால் அவர்களுக்கும் எப்படி இடம் கொடுப்பது என்ற கேள்வியும் இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் பாமகவிற்கு மொத்தமாக சில தொகுதிகளை ஒதுக்கி அதிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள் ஒதுக்கீடு செய்து கொள்ளுங்கள் என்று கருணாநிதி சொல்லுவார் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் பாமக இன்னும் அதிக இடங்களைக் கோரக் கூடும்.
எப்படிப் பார்த்தாலும் 140 இடங்களைத் திமுக எடுத்துக் கொண்டு மீதியுள்ள 94 இடங்களைப் பங்கிட்டுக் கொடுக்க நேரிட்டால் பாமக 50 இடங்களைக் கோரக்கூடும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கட்சிகளின் இடங்களும் பாதிக்கப்படும்.
இதற்கு ஒரு மாற்று மத்தியில் உள்ளதைப் போல மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி என்பது. இந்தக் கருத்தை காங்கிரஸ் தலைவர்கள் சில காலமாகப் பேசி வருகிறார்கள். சிலர் பகிரங்கமாக மேடைகளில் பேசினார்கள். சிலர் கட்சி அலுவலகத்தில் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஆனால் திமுகவிற்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. கூட்டணி ஆட்சி என்பதை மாநில அளவில் மக்கள் ஏற்பதில்லை என்று கருணாநிதி கருத்துத் தெரிவித்திருக்கிறார். எதிர்காலத்தில் கட்சியை பலப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு ஆட்சி உதவும் என்பதால் திமுகவைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளுமே இந்த ஏற்பாட்டை விரும்பக்கூடும். அப்படி ஒரு நிலை எடுக்கப்பட்டால் தேர்தல் பிரசாரம் என்பதே அதிமுக எதிர்ப்பிலிருந்து கூட்டணி ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்பதான பட்டி மன்றமாக மாறிவிடும்.
கூட்டணிக் கட்சிகளிடம், அதிமுக எதிர்ப்பு என்பதைத் தவிர மற்ற எல்லாப் பிரசினைகளிலும் கருத்தொற்றுமை நிலவுகிறது என்று கருத இயலவில்லை. குஷ்பு விவகாரத்தில் பாமகவும் இடதுசாரிகளும் எதிர் எதிர் நிலையை மேற்கொண்டனர். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதில் காங்கிரசிற்கும் இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இலங்கை அரசியலில் பாமகவிற்கும் இடதுசாரிகள், காங்கிரஸ் இடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. திமுக இந்தப் பிரசினைகள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்ற நிலையை வெளிப்படுத்தாமல் இரண்டு தரப்பையும் சமாளித்துப் பேசி வருகிறது.
ஆனால் மக்கள் இது போன்ற தொகுதிப் பங்கீட்டுக் கணக்குகளையும், முமுக்க முழுக்க அரசியல் சார்ந்த பிரசினைகளிலும் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.அவர்களுக்கு அவர்களது அன்றாடப் பிரசினைகள்தான் பெரிதாகத் தோன்றுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மாநிலத்தை ஆண்ட அதிமுக மீது மக்களிடம் கடும் சினம் நிலவியது. அநேகமாக எல்லாத் தரப்பினருமே ஏதோ ஒரு காரணத்திற்காக அதிருப்தி அடைந்திருந்தனர். ஆனால் இப்போது அது போன்ற அதிருப்தி இல்லை. அதற்காக திருப்தி இருக்கிறது என்பது அர்த்தமல்ல. விவசாயிகளைப் பொறுத்தவரை அதிமுகவின் ஆட்சிக்காலம் முழுவதும் அவர்களுக்குப் பிரசினைகள் இருந்து வருகின்றன. சுமார் நான்கண்டு காலம் காய்ந்து கெடுத்த இயற்கை இந்த ஆண்டு பெய்து கெடுத்திருக்கிறது. சுனாமி மீட்டுப் பணிகளில் மற்ற நாடுகளொடு ஒப்பிடும் போது தமிழகம் கணிசமாக சாதித்திருக்கிறது. ஆனால் இது போன்ற விஷயங்களை உள்ளூரின் நிலைமைகள்தான் தீர்மானிக்கும். இது ஊருக்கு ஊர் வேறுபடும்.
இவற்றையெல்லாம் விட வேறொரு பெரிய ‘தலைவலி’யை ஆளும் கட்சி சந்திக்க நேரிடும்.அது தொழிற்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்ப்பு முறை. பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் ஆனால் தனியார்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அரசு தலையிடக்கூடாது என்று முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை பின்னால் பார்த்தால் தலையாரி குதிரை என்ற கதையாக உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்ற நிலையை திமுக, பாமக கட்சிகள் எடுத்துள்ளன. எனவே நுழைவுத் தேர்வு நடந்தால் அது ஒர் அரசியல் பிரசினையாக உருவெடுக்கும். நடத்தாவிட்டால் உச்சநீதி மன்றத்தில் பிரசினை எழும். பல்லாயிரக்கணக்கான மாணவர்களை பாதிக்கக் கூடிய பிரசினை இது. இந்தக் கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. மே மாதம் தேர்வுகள் முடிந்து மாணவர் சேர்க்கையை மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் காலம். அப்போது தேர்தல் நடந்தால் மாணவர்களின் உணர்ச்சித் தீவிரம் அதில் பிரதிபலிக்கும். இளைய வாக்காளர்களில் மாணவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
தேர்தலைவிட, தேர்தலுக்கான முன்னோட்ட நாட்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்குமே சோதனை நாட்கள். அவர்களது தலைமைப் பண்பின் தரம் அந்த நாள்களில் தெரிந்துவிடும்.
[மாலனின் அனுமதி பெற்றே பதியப்படுகிறது. மாலனின் பதிவு ]