Daily Archives: ஜனவரி 2, 2006

வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் இன்னமும் தீவிரமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

என் வீட்டில் வாக்காளர் பெயர் சரிபார்க்கும்போது அடையாள அட்டை வழங்குவது பற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்றுமட்டும் சொன்னார்கள்.

இப்பொழுது நடைமுறையில் இருப்பது – ஏதாவது புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை எடுத்துக்கொண்டுதான் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லமுடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க நான் சென்றபோது நானும் என் மனைவியும் வாகன ஓட்டுநர் அடையாள அட்டையைப் பயன்படுத்தினோம். பலரும் ரேஷன் கார்டுகளைக் கொண்டுவந்திருந்தனர். ஆனால் ஒரு கணவன் – மனைவி கூட்டணி கையில் எந்த அடையாள அட்டையையும் கொண்டுவரவில்லை.

வாக்குச்சாவடி அதிகாரிகள் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுத்தனர். ஆனால் கட்சி ஏஜெண்டுகள் அனைவருமே (கட்சி வித்தியாசமின்றி) அவர்கள் இருவரையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு கோரினர். குடும்பத் தலைவர் தான் இனி வீடுவரை சென்று அடையாள அட்டை எதையும் எடுத்துவர முடியாது என்று ‘பிகு’ செய்தார். ஆனால் நல்லவேளையாக வாக்குச்சாவடி அதிகாரிகள் அவருக்கு அனுமதி தரவில்லை. அவர் வாக்களிக்காமல் வீடு திரும்பினார்.

விதிகளை பொருட்படுத்தாமல்தான் நாம் நம் நாட்டை மோசமாக்கியிருக்கிறோம்.

அடுத்த நான்கு மாதங்களில் தேர்தல் ஆணையத்தால் அனைவருக்கும் அடையாள அட்டையைக் கொடுக்க முடியுமா?

நாடாளுமன்றத் தேர்தலின்போது அடையாள அட்டை வைத்திருந்த பலரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை. ஒருமுறை பெயர் வாக்காளர் பட்டியலில் வந்துவிட்டால் அத்துடன் வேலை முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்கக்கூடாது.

வாக்களிப்பது நமது உரிமை, அதைக் கேட்டுப்பெறுதல் வேண்டும்.

(பி.கு: தமிழ்நாடு, பாண்டிச்சேரியுடன் அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவையும் தேர்தலுக்குச் செல்கின்றனவாம்.)

மேலோட்டமாக பார்த்தோமென்றால்…….

தமிழக தேர்தலில் முக்கியமான தலைவலி தி.மு.க தலைவருக்குத்தான் என்பது தெளிவாக தெரிகிறது. ராமதாஸ் ஏற்கனவே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவேண்டும் என்றால் அது நாங்கள் இல்லாமல் முடியாது என்று கூறிவிட்டார்.

வைகோ கெளரவமாக சொல்லிக்கொள்ளும்வகையில் தங்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டுக்கள் எண்ணிக்கை இருக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.இதுவெல்லாம் ஒரு வகையிலான பிளாக்மெயில் என்பது தமிழகஅரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

காங்கிரஸை சமாதானப்படுத்துவது சுலபம். இங்கே துள்ளிக்கொண்டு இருப்பார்கள்.ஆனால் மாறனை விட்டு 10,ஜன்பத்தில் பேசி சரி பண்ணிவிடலாம். கம்யூனிஸ்ட் கட்சிகளை சமாதானப்படுத்துவதும் கடினமில்லை.

இவர்களுடன் ஒப்பிட்டால் அம்மாவுக்கு பிரச்சினை அதிகமில்லை. அதிகம் பேருக்கு சீட்டு கொடுக்கவேண்டிய சூழ்நிலையில்லை. ஆட்சிக்கும் பெரிதான கெட்டபெயர் இல்லை என்றுதான் சொலலவேண்டும். தேர்தலுக்காக கடந்த ஒரு வருடமாக தயாராகி வருகிறார் என்று சொல்லலாம.

தேர்தல் தேதிகள்

இன்று தேர்தல் கமிஷன் கூடி தமிழக, பாண்டிச்சேரி, அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேதிகளை ஆராய்கிறார்கள். மே மாதத்தோடு அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலம் முடிகிறது. தேர்தல் தேதிகளை கல்லூரி,பள்ளிகளுக்கு பாதிப்பு இல்லாத ஒரு நாளினை மே மாதத்தின் பிற்பகுதியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.

ஆளப் போவது யார்? 2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மி…

ஆளப் போவது யார்?

2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மிக முக்கியமான வருடம். தமிழக சட்டசபை தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இரண்டு காரணங்களினால் இந்த தேர்தல் மிக முக்கியமானதாகிறது.

ஒன்று ஜெயிக்கப் போகும் கட்சி / தலைவர்கள் தான் தமிழகத்தினை 2010 வரை ஆளுவார்கள். 2010 என்பது மானுட வாழ்வியலிலும், உலக அமைப்பிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாய் அமைந்துவிடும். இப்போதே நிறைய சமூக மாற்றங்கள், அறிவியல் தொழில்நுட்பம் என ஆரூடங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, தமிழகத்தினை 2010 வரை ஆளப்போவது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி தமிழகத்தினை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பது பில்லியன் டாலர் கேள்வி.21-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் நிலையென்ன? எப்படி வளர்ச்சியடைய போகிறோம்? மாறி வரும் உலக பொருளாதார சூழலையும், அரசியல் கோட்பாடுகளையும் தமிழகம் (முக்கியமாக சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை) எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? தமிழகம் இந்தியாவிலேயே முதலீட்டுக்கு சாதகமான மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. இதைப் எப்படி ஆள வரப்போகிறவர்கள் தக்கவைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

இரண்டாவதாக, தமிழகத்தின் மூத்தக் கட்சியான தி.மு.க.வின் தலைவரான கருணாநிதிக்கு வயதாகிக் கொண்டேப் போகிறது. அ.தி.மு.கவிலோ ஜெயலலிதாவிற்கு பின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் கிடையாது. திராவிட அரசியலின் கடைசி தேர்தலாக இது இருக்குமா ? இந்த இரண்டு திராவிட பாரம்பரிய கட்சிகளைத் தாண்டி, பா. ம.க, விடுதலை சிறுத்தைகள், கொஞ்சமாய் ம.தி.மு.க, விஜயகாந்தின் தே.தி.மு.க போன்றவைகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க வும் கம்யூனிஸ்டுகளும் தமிழகத்தின் தலையெழுத்தினை மாற்றி எழுதும் சக்தியினை பங்குப் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் நடக்காமல் போனாலும், அடுத்த தேர்தலுக்கு போகும் போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சாத்தியங்கள் இருக்கிறதா? இது தாண்டி, இந்தியாவெங்குமே பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, அரசியல்வாதிகளை பின்னி பெடலடெக்கும் ஊடகங்கள், தகவல் பெற்றறியும் மசோதா, தகவல் தொழில்நுட்ப,அதிநவீன தொழில்களின் முன்னேற்றம் என்று ஹை-வோல்டேஜில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சமமான குரல்கள் தமிழகத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. யார் வந்தாலும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வலைப்பதிவுகள் சமீபத்தில் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

இந்த முக்கியமான தேர்தலை சமூக மாற்றத்தினை உள்ளடக்குவதில் ஒரு சிறு முயற்சியாக “தேர்தல்2006” என்கிற கூட்டு வலைப்பதிவினை தொடங்கி இருக்கிறேன். ஜனவரி தொடங்கி பேச ஆரம்பிக்கலாம். எப்போது தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரியாமல் இருந்தாலும், அடிப்படை கேள்விகளையும், அரசியல் விளளயாட்டுகளையும் அலச அரம்பிக்கலாம். 234 தொகுதிகளை தொகுதிவாரியாக அலச முடியும். தமிழகமெங்கும் விரவியிருக்கும் வலைப்பதிவாளர்கள் அவரவர்கள் இடத்தின் நிலவரத்தினை பதியலாம். சாதாரணமாய் தினமும் சந்திக்கும் பல்வேறு மக்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். தமிழகம் யார் தலைமையில் ஆள வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ரோட்டில் சர்வசாதாரணமாக பார்க்கும் மக்கள் தான் எஜமான்கள். அவர்கள் நினைத்தாலேயொழிய மாற்றங்கள் வாராது. இந்த வலைப்பதிவு தேறும் பட்சத்தில், இதனை கல்லூரிகளுக்கு எடுத்து செல்லலாம். என்னளவில் ஊடகங்களில் இருக்கும் தொடர்புகளைக் கொண்டு நிருபர்களிடமிருந்து சேதிகள் சேகரிக்க முனைகிறேன். நாளைய தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான வெளியை உருவாக்கி விவாதிக்க சொல்லலாம். அவரவர் இடங்களிலிருந்து நிலவரங்களை பதியலாம். சென்ற தேர்தலை நான், அரவிந்தன் மற்றும் சில நண்பர்கள் இணையத்தில் முழுமையாக தொகுத்திருந்தோம். tamil.net இல் பங்கு பெற்றிருந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த முறை அந்தப்படை பெருகட்டும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் / தமிழகத்தின் அரசியலில் ஆர்வமிருக்கும் எவரும் இதில் பங்கு பெறலாம். தமிழகத்தில் என்னென்ன இருக்கவேண்டும், என்ன மாறுதல்கள் வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்தினை வற்புறுத்துங்கள். இதில் யார் வேண்டுமெனாலும் சேர்ந்து கருத்துக்களை பகிரலாம். நீங்கள் எந்த சார்பு நிலை வேண்டுமானால் இருக்கலாம்.(கலைஞர் தான் உலகின் உன்னதமான தலைவர், புரட்சி தலைவி போன்ற தலைவி சூரிய குடும்பத்திலேயே இல்லை, திருமா/ தலித் அரசியல் இல்லாமல் தமிழகமில்லை, மருத்துவர்.இராமதாஸ் இருக்குமிடம்தான் தமிழகத்தின் அசைக்கமுடியாத சக்தி ) எவ்விதமான கருத்தாங்களையும் முன்வைக்கலாம். தி.மு.க/அ.தி.மு.க, தலித், தமிழ் தேசியம், நக்சல்பாரி, உலகப்பொருளாதாரம், விடுதலைப்புலிகள் ஆதரவு / எதிர்ப்பு, ஈழத்தமிழர் வாழ்க்கையும் தமிழக அரசியலும், வாக்கு போடவேண்டுமா / வேண்டாமா, தேர்தல் முறைகளில் வேண்டிய மாற்றங்கள் என்ன, நேர் /எதிர் / குறுக்கு / உள்குத்து அரசியல், மூன்றாம்/நான்காம்/பத்தாம் அணி என்று எந்த தலைப்பிலும் எழுதலாம். மிகவும் சீரியஸாக எழுத வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை. பகடி, நையாண்டி, நகைச்சுவை என பல்வேறு முகங்களில் தமிழக அரசியலை ஆராயலாம். நானே ஒரு “கொள்கை / தேர்தல் அறிக்கை generator” தயார் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையினை எழுத சிரமபடும்போது நாம் உதவலாம் என்ற நல்லெண்ணம் தான் 😉 மற்றபடி இதை ஒரு மிக முக்கியமான மாற்று ஊடகமாகவும் மக்களின் குரலாகவும் மாற்றுவதென்பது மக்களின், நண்பர்களின், வலைப்பதிவர்களின் கையில் (அல்லது கீபோர்டில்) இருக்கிறது.