Tag Archives: Obama

அமெரிக்க அதிபர் தேர்தல்: விளம்பரப் போர்

1. ஒபாமா – மெகயினுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது

2.ஜான் மெக்கயின் – ஒபாமாவிற்கும் அவரை சுற்றியிருக்கும் ஆலோசகர்களுக்குத்தான் பொருளாதாரம் தெரியாது

3. ஒபாமா – மெகயினின் பிரச்சார யுக்தி

4. ஜான் மகயின் – பராக் ஒபாமாவிற்கு இரான் போன்ற உலக நாடுகள் குறித்த அறிவு கிடையாது

5. ஜான் மெக்கயின் – இன்னாள் கூட்டாளி, ஒபாமாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனின் முன்னாள் விமர்சனம்

6. ஜான் மக்கயின் – அமெரிக்காவை ஏகவசனத்தில் வசைபாடும் வெனிசுவேலாவின் ஹியூகோ சாவெஸ் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவரா உங்களுக்குத் தேவை?

7. ஜான் மெகெயின் – பராக் ஒபாமாவின் சொந்த வீட்டை வாங்கிக் கொடுத்தது யாரு?

8. பராக் ஒபாமா – ‘மகெயினுக்கு எத்தனை பங்களாக்கள் சொந்தமாக இருக்கின்றன’ என்று கூட கணக்கு கூட வைத்துக்கொள்ள முடியாத அளவு பணக்காரர்

9. மெகெயின் – ஒபாமா ஜனாதிபதியானால் வருமான வரியை எக்கச்சக்கமாக உயர்த்துவார்

10. ஒபாமா – மெகயின் சண்டக்கோழி; இராக் போரினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்புகள்

11. மெகயின் – ஒபாமா என்னும் விளம்பரப்பிரியர்; புகழ் பெற்றவர் என்பதால் தலைவராக மாட்டார்

12. ஜான் மகயின் – ஒபாமா என்னும் தேவதூதர்

தொடர்புள்ள அலசல்: Recent Obama Ads More Negative Than Rival’s, Study Says – washingtonpost.com: “Democrat Said to Be Facing Pressure to ‘Show Some Spine'”

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்…

பராக்கின் ரசிகன் அல்ல நான்.

ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.

ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.

மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.

பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.

மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.

உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.

இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.

பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.

போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.

இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.

அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.

என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.

உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.

அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.

எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .

இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.

இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.

தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.

நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.

ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.

ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.

[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]

ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.

அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.

ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.

மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

  • சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
  • உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
  • சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
  • மக்களிடம் வேலைத் திறன்,
  • தொழில் நுட்ப அறிவு,
  • ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
  • பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
  • நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.

ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.

தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.

இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.

இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.

ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.

அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.

ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.

மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.

மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.

ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.

மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்

  • நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
  • தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
  • ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்

என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.

இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.

என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.

வலைப்பதிவுகளில் 'அமெரிக்க அதிபர் தேர்தல்'

தமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.

1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்

நான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.

2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்

ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.

3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்

சாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…

4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்! :: யு.எஸ்.தமிழன்

Unemployment rate had been within the required amount throughout Bush’s regime. ஒரு நாடு சுபிட்சமாக, inflation இல்லாமல் இருக்க 4-6% unemployment rate இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்…highly not recommended to bring the unemployment rate below this levels as it will trigger inflation! http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி! :: புதிய ஜனநாயகம்

முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.

6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பிபுதிய கலாச்சாரம்

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி

ஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்?

ஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்

8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்

– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,
– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் ? வரிப் பணமேன் ?
– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை
– கருக்கலைப்பு கூடாது
என்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது

9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!நாடும் நடப்பும்

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

10. ஒபாமா இது நியாயமா! சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)

இனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.

அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது

11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி

21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!! :: சேவியர்

ஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment
மெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired

13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் மெட்ரோ நியூஸ் 29.08.08

பயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

ரஜினிக்குப் பின் கமல்: டைனோக்குப் பின் யாரு? – கேள்வி – பதில்

முதல் போணியாக வந்தவர் டைனோபாய். (பார்க்க: Dyno Buoyயிடம் சில கேள்விகள் | இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது?) திமுக செய்தி ஒன்று போட்டால், உடனடியாக அதிமுக தகவல் வரவேண்டும் என்பது விதி. அமெரிக்கர்கள் ஏன் குடியரசுக் கட்சி விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்பதை டைனோ சொன்னார்.

ரஜினிக்குப் பின் கமலாக ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (வழக்கம் போல் கலர் கோடிங், தடிமன்படுத்துதல் எல்லாம் என்னால் ஆன உபகாரம்)

முழுக்க முழுக்க மெகயின் சார்பு முழக்கத்திற்குப் பிறகு தீவிர ஒபாமாப் பற்றாளரிடம் என்னுடைய சந்தேகங்கள்:

1. ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு உதவுமளவு உங்களுக்கு அவர் உந்துதல் அளித்திருக்கிறார். ஏன்?

பதில்: நான் ஒபாமாவை முதலில் பார்த்தது 2004ம் ஆண்டு தேர்தலில் செனட் வேட்பாளராக. அந்த வருடம் அவர் ஜான் கெர்ரியை அறிமுகப்படுத்தி ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அற்புதமாகப் பேசினார். பின்னர் MSNBC தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுத்தார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் புத்திசாலித்தனமாக, தெளிவாக, நிதானமாக, ஒரு இயல்பான புன்னகையோடு பேசிய ஒபாமாவின் மேல் எனக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டு அவரது எழுத்துக்களை, செயல்களை கவனிக்கத் துவங்கினேன். அதன் பின்னர் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்ட ஒவ்வொரு விஷயமும் எனது ஆதரவை வலுப்படுத்தின:

  1. அவரது ஈராக் போர் பற்றிய 2002 உரை. மிகத்தெளிவாக, மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் ஈராக் போரினால் அமெரிக்காவிற்கு எந்த எந்த விதத்தில் கெடுதல் வரும் என்பதையும், இந்தப் போர் எப்படியெல்லாம் திசைமாறிப் போகும் என்பதையும் விளக்கும் இந்த உரை போர் துவங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் (October 2002) அமெரிக்காவில் போருக்கு ஆதரவாக சுமார் 70% மக்கள் இருந்தனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அறிவுள்ள அரசியல்வாதிகள் அநேகம் பேர் உண்டு. துணிச்சலான அரசியல்வாதிகள் அநேகம் பேர் உண்டு. வசீகரமான பேச்சுத்திறன் கொண்ட அரசியல்வாதிகள் அநேக அநேகம் உண்டு. இந்த ஒரு உரையில் ஒபாமா தன் அறிவு, துணிச்சல், திறன் மூன்றையும் வெளிப்படுத்தினார். இந்த உரையைப் படித்ததும் எனக்கேற்பட்ட ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.
  2. அவரது பின்புலம். பலமுறை சொல்லப்பட்டதென்றாலும், இப்பொழுதும் வியப்பூட்டுவது. ஒரு கென்ய (கறுப்புத்) தந்தைக்கும் ஒரு கான்ஸாஸ் (வெள்ளைத்) தாய்க்கும் ஹவாயில் பிறந்து, பின் இந்தொனேஷியாவில் வளர்ந்து, பின் அமெரிக்கா வந்து ஹார்வர்டில் பெரும் கீர்த்தியுடன் படித்து, மிகுந்த செல்வம் ஈட்டித் தரக்கூடிய தொழில்களைத் துறந்து சமூகப் பணிக்கும், பின் அரசியலுக்கும் வந்தவர் என்பது பிரமிப்பான விஷயம். இப்படிப்பட்ட ஒரு ‘சர்வதேச மனிதர்’ அமெரிக்கத் தலைவராவது இந்த சிக்கலான தருணத்தில் மிகவும் தேவையானது என்று நினைக்கிறேன். இது பற்றி ஆன்ட்ரூ சல்லிவன் ‘தி அட்லாண்டிக்’கில் ஒரு நல்ல கட்டுரை எழுதினார்: http://www.theatlantic.com/doc/200712/obama
  3. பொதுவாக, அவரது பேச்சு மற்றும் தேர்தல் பிரச்சார அணுகுமுறை. குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது, மார்ச்சில் அவர் நிகழ்த்திய இனத்துவேஷம் குறித்த உரை. அவரது பிரச்சாரத்தின் மிகவும் இக்கட்டான நிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த உரையில் தனது ‘கறுப்பர்’ என்ற அடையாளம் சார்ந்த பெருமை, தனித்தன்மைகளை விட்டுக் கொடுக்காமலும், அதே சமயத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டாமலும் மிகச் சிறப்பாகப் பேசினார். இந்த உரையில் அரசியல் சாதுர்யத்தை விட அதிகமாக அவரது நேர்மையும், உள்ளத்து ஒளியும் தெரிந்தது என்று சொன்னால் மிகை வார்த்தையாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை.

ஒபாமா ஒரு அதிஉன்னத அரசியல்வாதி என்று சொல்ல வரவில்லை. சில கண்கூடான குறைகள் அவரிடமும் உள்ளன – சட்டென்று முடிவெடுக்க முடியாத தடுமாற்றக் கணங்கள், வாதங்களில் உழைப்பிற்கு பதில் திறமை/புத்திசாலித்தனத்தை நம்புவதால் வரும் குழப்பங்கள், சில கொள்கைகளில் தெரியும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும், இவற்றை எல்லாம் மீறி, கடந்த பதினாறு வருடங்களில் நான் கண்ட அமெரிக்க அரசியல்வாதிகளிலிருந்து மிகுந்த மாறுபட்டவராகவும், மிகவும் நம்பிக்கையூட்டுபவராகவும் ஒபாமா இருக்கிறார்.

2. துணை ஜனாதிபதிக்கு எத்தனையோ பொருத்தமானவர்கள் இருந்தாலும், ‘மூத்தவர்’, ‘அடக்கி வாசிப்பவர்’ என்ற காரணங்களினால் ஜோ பைடன் தேர்ந்தெடுக்ககப்பட்டிருக்கிறார். உங்கள் பார்வையில் துணை ஜனாதிபதி தேர்வு எப்படி? ஒபாமா எடுக்கும் முதல் முடிவு சிறப்பாக இருந்ததா?

பதில்: இந்தத் தேர்வு எனக்கு இரண்டு காரணங்களுக்காகப் பிடித்திருந்தது:

  1. பைடனின் விஷய/அனுபவ ஞானம். குறிப்பாக வெளியுறவுத்துறையில். இந்த விஷயத்தில் ஒபாமாவிற்கு ஒரு அண்ணன் போலிருந்து ஆலோசனை தரக்கூடியவர்.
  2. இவர் பெயர் ஹில்லரி க்ளிண்டன் இல்லை. 🙂

பொதுவாகவே, யோசிக்காமல் சட்டென்று பேசி விட்டு பின்பு மாட்டிக் கொண்டு ‘திருதிரு’வென்று முழிக்கும் அரசியல்வாதிகளை எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் பேசும் போது உண்மை பேசுகிறார்கள் என்று நம்பலாம். 🙂 பைடன் இந்த விஷயத்தில் டாக்டர் பட்டம் பெறத் தகுதியுள்ளவர். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதைப்போல வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் வைபவங்கள் ஒன்றேனும் நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.

3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

தொடர்ச்சி நாளை…

அமெரிக்கத் தேர்தல் 2008 – மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல் – வாஷிங்டனில் நல்லதம்பி

வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.

வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.

இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது? – அமெரிக்க அதிபர் தேர்தல்

நேற்றைய கேள்வி – பதிலின் தொடர்ச்சி…

3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??

பெரிய மாறுதல்கள் வர வாய்பில்லாவிட்டாலும் அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை எந்த வகையிலாவது சட்டமாக்கிவிட டெமக்கரட்ஸ் உத்வேகம் காட்டுகிறார்கள்.அதன் மூலம் ஆப்ரிக்க அமேரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று டெமக்ராடிக்கட்சி நினைக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகைகளில் அவ்விரு சமூகங்களே அதிகம் பெறுவதால் இவ்வாறான திட்டத்தை அறிமுகங்செய்வது அந்த வோட்டு வங்கியை தனதாக்கிக் காக்க முடியும் என்பது டெமாக்ரட்ஸின் திட்டம்.அவர்கள் தங்கள் தேவையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! அதனால் ஜனநாயகக் கட்சி ஆட்சிஅமைக்கும்பட்சத்தில் அரசாங்க மருத்துவக் காப்பீடு எந்த வகையிலாவது அமல்படுத்தப்படும்.

இவ்வாறான அரசாங்க் தலையீட்டிற்கு அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் தேவைப்படும். அதற்கு ஒரே வழி வரி அதிகரிப்பபது மட்டுமே. பராக் மற்றும் ஹில்லாரியின் மருத்துவக் காப்பீட்டை அமல் படுத்த அமெரிக்கர்களின் வரியை பத்து சதவீதமாவது உயர்த்தினால் மட்டுமே முடியும் என்று பல வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்ததாகப் போர். அமெரிக்காவின் பொருளாதாரம் போரினால் விளையும் நன்மைகளில் வளர்ந்தது (Benefactor of the ‘Broken Window’ economic principle). எங்காவது எதற்காகவாவது போர் நடந்தால்தான் அமெரிக்காவினால் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும். முன்னாள் சோவியத் ரஷ்யாவுடன் கொண்ட பனிப்போரினால் அமெரிக்க வர்த்தகம் பல மடங்கு வளர்ந்தது. சோவியத்தின் மறைவிற்குப்பிறகு தனது தளவாட விற்பனை, மற்ற நாடுகளைக் காக்க வாங்கும் மானியம், குறைவற்ற எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் போன்ற பல வர்த்தக தொடர்புகளிலும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நெருக்கடி வளர்கிறது. அதை சமன் செய்ய அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாகக் காட்டி மிரட்டுவது அவசியமாகிறது.

பராக் ஜனாதிபதியானால் அவ்வாறான ஒரு சக்தி வாய்ந்த தளபதியாக செயல்படுவாறா என்பது சந்தேகமே. Barack’s ascend to presidency could start America’s fall from being a super power.

4. இந்தியர்களின் நலனுக்கு எவரின் எந்தக் கொள்கை உகந்தது? எச்1பி எண்ணிக்கை அதிகரிப்பார்களா? பச்சை அட்டை துரிதப்படுமா? எவரினால் இந்தியாவுடன் வர்த்தகம் மேம்படும்?

The biggest myth amonst Indians is that emocrats favor aliens or immigration which is NOT the fact! உங்களுக்கு சந்தேகமிருந்தால் ஜான் கெர்ரியின் சென்ற தேர்தல் வலைதளதில் தேடிப்பார்க்கவும்! இப்போதைய தேர்தலில் இம்மிக்ரேஷனுக்கு அத்துணை முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இரு வேட்பாளர்களும் அதைப்பற்றி பெரும் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வந்தேறிகளுக்கான குடியுரிமை சட்டங்களை முன்னின்று இயற்றி அதை அமல் படுத்தியது குடியரசுக் கட்சியே!

என்னை பொருத்தமட்டில் (ஒரு சுயநல நோக்கில்கூட) எச்1பி எண்ணிக்கை இப்போதிருக்கும் அளவே அதிகமாகப்படுகிறது. மேலும் எச்1பி, பச்சை அட்டைக்களில் அரசாங்கம் நேரிடையாக தலையிடுவதில்லை. பச்சை அட்டை வழங்க அதிக ஆண்டுகள் எடுப்பதற்குக்காரணம் இல்லீகல் இமிக்கரண்ட்ஸ் எனப்படும் சட்டவிரோத வந்தேரிகளுக்கு அரசாங்கம் சட்டபூர்வ குடியுரிமை வழங்க முடிவெடுத்ததே காரணம். அந்த திட்டத்தினால் குடிநுழைவுத்துறையினர் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விண்ணப்பங்களை பார்க்க தேவையான ஆட்பலமின்றி நிலுவையில் கிடத்தப்பட்டது. மேலும் எச்1பி அதிகப்படுத்துவதாலும் பச்சை அட்டை வழங்க அதிக தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரம் முன்னேற்ற ஏற்பட்டு திறனுள்ள ஆட்களுக்கான தேவை ஏற்பட்டால் ஒழிய எச்1பியை அதிகப்படுத்துவது முட்டாள்தனமே. மேலும் ஏற்கனவே இங்குள்ளவர்களின் பணி நிலவரமே ஆட்டம் காணும் போது அதிக ஆட்களை இறக்குமதி செய்வது மக்களுக்கு அபிமானம்தரக்கூடியது அல்ல.

BRICS – Brazil, Russia, India, China and South Africa (Previously BRIC now SA joined the league to become the emerging five) ஆகிய ஐந்து நாடுகளின் வளர்ச்சியை புறக்கணிக்கமுடியாத ஒரு தளத்தில் இன்றைய பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக வர்த்தகதில் போட்டியிடவும், அதில் கலந்து கொள்ளவும் இந்த ஐந்து நாடுகளிடமும் நல்ல நட்புறவை பேணுவதே புத்திசாலித்தனம் என்பதை இரு கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் எந்த கட்சி வந்தாலும் இந்தியாவுடனான வர்த்தகமும் பொருளாதார பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும் என்பதே உண்மை!

5.நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஸ்லேட் போன்றவை ஏன் குடியரசுக் கட்சிக்கு சார்பாக தலையங்கங்கள் தீட்டுவதில்லை?

அதையே நான் திருப்பிக்கேட்கலாம் – ஏன் அவர்கள் ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சியைத் தாக்குவதைப்போல தாக்குவதில்லை? தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் எப்படி மிடியா உலகையே தன் பிடியில் வைத்திருக்கிறதோ அதைப்போலவே இங்கு ஜனநாயகக் கட்சியும். பராக் ஒரு கொலையே செய்தாலும் அதை கருணைக் கொலை என்று வாதிடக்கூடிய பத்திரிக்கைகள் இங்கு அதிகம். மேலும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சிக்காரர்கள் அந்த பத்திரிக்கைகளை படிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். முன்னால் கம்யூனிஸ்ட் மற்றும் இடது சார்புடைய வெளிநாடுகள் மூலம் அவர்களுக்கு பணம் வருவதாலும் இருக்கலாம்.

டைனோ | டைனோ

Dyno Buoyயிடம் சில கேள்விகள்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பதிவர்களிடம் கேள்வி கேட்டு எனக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க எண்ணம். முதலில் மாட்டியவர் பதிவர் டைனோ.

நீங்களும் பதிலளிக்க ரெடி என்றால், உங்கள் மின்னஞ்சலை எனக்கு அஞ்சல் செய்ய வேண்டுகிறேன். கூடவே கேள்விகளையும் கேட்டுக் கொண்டுவிட்டால், பதிலளிக்க தோதுப்படும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

இனி டைனோவுடன் குறுக்கு விசாரணை:

1. ட்விட்டரில் கொடுக்கும் ஸ்டேட்டகளைப் பார்த்தால் நீங்க குடியரசுக் கட்சி ஆதரவாளர் போல் தெரிகிறீர்? ஏன் ரிபப்ளிகன்ஸ்?

நான் குடியரசுக்கட்சி ஆதரவாளன். கட்சிகளைக்களைக் கடந்து, நல்ல நவரச பேச்சாளர் என்பதால் பில் க்ளிண்ட்டன் பால் கொஞ்சம் சாஃப்ட் கார்னர் உண்டு.

ஏன் ரிபப்ளிக்கன் – கொஞ்சம் எனக்கு தெரிந்தளவில் விரிவாக பதிலளிக்க முயல்கிறேன்:

அவர்களின் கொள்கை மேல் கொண்ட ஈர்ப்புத்தான் முதல் காரணம். குடியரசுக்கட்சியின் கருக்கலைப்பு, ஒருபால் சேர்க்கை ஆகிய சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அவர்களின் மற்ற கொள்கைகளில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஜனாதிபதி ரீகன் அவர்களின் “Lesser Government Intervention” அதாவது அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாத ஒரு நாடு/பொருளாதாரம் என்பது என்னை மிகவும் கவர்ந்தது.

காப்பிடலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு என்று இதை நான் கூறுவேன். கம்யூனிசம் சம்பாதிப்பது அனைத்தையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு அரசாங்கத்திடமே கையேந்தச்செய்யும் ஒரு வறட்டு சித்தாந்தம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இறைந்து பெறவேண்டிய நிலை வந்தால் தனி மனித முன்னேற்றத்தை தடை செய்வது போல உள்ளது. வாசிப்பிற்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் எழுதத்ப்பட்ட ஒரு நடைமுறை சாத்தியமில்லாத மனிதகுல வளர்ச்சியை தடைசெய்யும் புதினம்தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் வீழ்ச்சி மனித பரிணாமத்தின் அவசியம் என்பதை உலக மக்களைப்போல நானும் உணரத்துவங்கியிருக்கிறேன்.

சுதந்திரக்கட்சி சமத்துவம், சமதர்மம் போன்ற ஏட்டு சுரைக்காய்களை இன்னும் தாங்கிப்பிடிப்பதால் அவர்களை வெறுக்கிறேன். அரசாங்க மருத்துவக் காப்பீடு, அரசாங்கத்தின் தயவிலான கல்வி போன்றவை எனக்கு பிடிக்கவில்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ‘நம்மை’ விட சிறந்தவர் யாருமில்லை என்பது ரிபப்ளிக்கன்கள் கருத்து. நமக்கு ‘அரசாங்கமே’ சிறந்த பாதுகாப்பு அளிக்கும் என்பது ஜனநாயக கட்சியின் வாதம்.

இப்போதைய அமெரிக்காவில் என் குழந்தையை நான் தனியார் பள்ளிக்கு அனுப்ப விரும்பினாலும் அரசாங்கத்திற்கு பள்ளிக்கான வரியை செலுத்தியே ஆகவேண்டும். ஒரு வகையில் என் பிள்ளைகள் எந்த பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்கிறது. (ஏன் நல்ல பள்ளியிருக்கும் மாவட்டத்திற்கு மாறி விட வேண்டியதுதானே என்று விதண்டாவாதம் செய்யலாம் – அதைப்பற்றி விரிவாக பிரிதொருநாளில்).

நாளை அதே முறையைத்தான் ஜனநாயகக்கட்சி மருத்துவத்திற்கும் அறிமுகம் செய்யவிருக்கிறது. வருடத்திற்கு 10,000 டாலர் மருத்துவ சேவை வரி கட்டும் நானும், வேலை செய்யாமல் அரசாங்க உதவி பெரும் ஒருவரும் ஒரே வரிசையில் தரமில்லாத ஒரு மருத்துவமனை வரிசையில் காத்திருக்ககும் நிலை வரும். இதில் ஹில்லாரி/ஓபாமா கொண்டுவருவதாக சொல்லப்படும் மருத்துவக் காப்பீட்டில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் நான் வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படுவேன், இப்போது பள்ளிகளுக்கு வரி கட்டுவதைப்போல! Rob the rich and distribute to poor என்பது ராபின்ஹுட்டிற்கும் எம்ஜியார் திரைப்படங்களுக்கு மட்டுமே உரிதானவை. அவரே தன் கடைசி காலத்தில் அமேரிக்கா வந்துதான் மருத்துவச்சிகிச்சை பெற்றார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏன் எல்லோரும் சமமாக இருக்கலாமே என்று இந்திய கம்யூனிஸ்டுகளைப்போல கேட்கலாம். அதற்கு லிங்கன் அவர்களின் கூற்றே பதில் – “The government that can do everything for us will take everything from us”. அரசாங்கம் சீரமைப்பு சட்டங்களை ஏற்படுத்திவிட்டு அதை வழிநடத்துவதை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவதே காப்பிடலிஸத்தின் அடித்தளம்.

The government should regulate by creating and amending laws not own institutes and run them. அரசாங்க சேவை என்றுமே தரத்துடன் இருக்காது என்பது கண்கூடு! அரசாங்கம் எப்போதுமே ஊழல் நிறைந்தது. அதன் தாக்கத்தை குறைப்பதே ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் அடைய தற்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே தீர்வு! இந்தியாவில் அரசாங்கம் நடத்தும் பள்ளிகள்,மருத்துவமனைகள் எந்த தரத்துடன் இருக்கிறதோ அதே தரத்துக்கு அமெரிக்கவிலும் வந்து விட ஜனநாயகக்கட்சி துணை போவதாலும் அவர்களைப்பிடிக்காது.

நான் மேலே குறிப்பிட்டதைப்போல அரசாங்கமே பல துறைகளை நடத்த வேண்டும் என்று டெமக்ரட்ஸ் விரும்புவதால் அவர்கள் வரிகளை உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். வரி அதிகம் கட்டுவது எனக்கு உவப்பில்லாததால் வரி குறைப்பை ஆதரிக்கும் குடியரசுக்கட்சியை எனக்குப் பிடிக்கும். பதில் மிகவும் நீண்டு விட்டது. விளக்கம் தேவைப்பட்டால் மீண்டும் தொடர்கிறேன்!

2. ஜான் மெகயின் – சாரா பேலின் அல்லது பராக் ஒபாமா – ஜோ பைடன்: எவருக்கு உங்க ஆதரவு? அடுத்த ஆட்சிக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆகிறார்கள்.

இதற்கான பதிலை என் சென்ற பதிலில் இருந்தே ஊகித்திருக்கலாம். மெக்கெய்ன்னுக்குத்தான் என் ஆதரவு!

பராக் சிறந்த பேச்சாளர். அமெரிக்கத் தேர்தலில் இந்த நிலையை எட்டியிருக்கும் முதல் கருப்பினத்தவர் என்ற வகையில் அவரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அதே சமயம் அவருக்கு பின்னால் இருக்கும் கட்சி இறந்த சித்தாந்தங்களை தூக்கிப்பிடிக்கும் வயதானவர்களும் புதிய சிந்தனைகளை ஏற்காத ஒரு கட்சி. சென்ற இரு தேர்தலின் போது பத்திரிக்கைகளில் வந்த பல கட்டுரைகள் டெமக்ரட் கட்சியின் அடிவேரை அம்பலப்படுத்தி அந்த கட்சிக்கு ஒரு நல்ல தலைமை இல்லாத குறையை சுட்டியிருக்கிறார்கள். அந்த ஒரு பெரிய இடைவெளியை ராஜ தந்திரத்துடன், இனபற்றையும் மாற்றம் என்ற வரையறுக்காத கொள்கையையும் முன்னிறுத்தி சொகுசாக அமர்ந்து கொண்டவர்தான் பராக். குடியரசுக் கட்சி அவ்வாறல்ல. இப்போதே Fiorina, Bobby Jindal, Palin போன்ற இள ரத்தங்களை பாய்ச்சி தன் கொள்கைகளை உயிர்பித்துக்கொண்டே இருக்கும் ஒரு கட்சி. என்னைப்பொருத்தமட்டில் பராக் இந்த ஆண்டு பொறுத்து அடுத்த தேர்தலாண்டில் போட்டியிட்டிருக்கலாம். அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடும்படி இல்லை. அனுபவமின்மை, தலைமை ஏற்று நடத்தகுடிய முதிர்ச்சியின்மை ஆகியவை பெரிய கெடுதல்களை உருவாக்கலாம்.

மெக்கெய்னின் அனுபவம், நாடாளும் திறமை, நாட்டுக்கு ஆற்றிய சேவை, பல்லாண்டு கால செனட்டில் இருகட்சிகளை பல திட்டங்களில் ஒருங்கிணைத்த பாங்கு, பொறுமை, எதிர்த்து போட்டியிட்ட தன் கட்சி மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்களை கையாண்ட முதிர்ச்சி ஆகிய பல பண்புகளுக்கு டெமக்ராட்ஸிடம் எந்த சரியான பதிலுமில்லை!

3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??

பாக்கி விடைகள் நாளை…

Democratic National Convention – 3rd & 4th Days

  • முதல் இரண்டு நாள் பார்க்கவில்லை.
    • துவக்க நாளன்று மிஷேல் ஒபாமா. அவர் அருமையாகப் பேசுவார்.
    • அடுத்த நாள் ஹில்லரி. கொள்கை நன்றாக இருந்தாலும் பேச்சிலும் சமர்த்தர் அல்ல.
    • ஹில்லரி சொற்பொழிவாற்றிய அடுத்த நாள், தினசரியைப் பார்த்தவுடன் ‘Erect Obama’ என்று பேசியதாக பார்த்தவுடன், விழித்துக் கொண்டேன்.
  • தங்கத் தலைவர் பில் க்ளின்டனுக்காக மூன்றாவது நாள் விழித்திருந்தேன். ஏமாற்றவில்லை. டெலி-ப்ராம்டர் முன்னாடி இருப்பதை துளிக்கூட உணர்த்தாத நேரடியான, பார்வையாளரைத் தொடும் பேச்சு. இவர் மீண்டும் தேர்தலில் நின்றால், கள்ள வாக்கு போட்டாவது ஜெயிக்க வைக்க வேண்டும்.
    • ஜனநாயகக் கட்சியின் ப்ரைமரியில் தன் மனைவி ஹில்லரிக்கும் ஒபாமாவும் நிகழ்ந்த சூடான வாக்குவாதத்தில், உலக வெம்மை அதிகரித்திருப்பதாக நகைச்சுவையுடன் துவங்கினார்.
    • ‘அதிகாரத்திற்கு உதாரணமாக அல்லாமல், அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தணும் என்பதற்கு உதாரணமாக அமெரிக்கா இருக்கணும்’.
  • துணை ஜனாதிபதிக்கு ஒபாமா கட்சி சார்பில் நிற்கும் ஜோ பைடன் பில் க்ளின்டன் அளவிற்கு பட்டை கிளப்பாவிட்டாலும் கச்சிதமாகப் பேசினார்.
  • ஜோ பைடன் பேசுவதற்கு முன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காட்டினார்கள்.
    • அனுதாப ஓட்டு வாங்குவது போல், பைடனுடைய (முதல்) மனைவியும் மகளும் கார் விபத்தில் இறந்ததை மிக உருக்கமாக சித்தரித்தார்கள். பைடனை அறிமுகம் செய்த அவருடைய மகனும், அதை தன் உரையில் அழுத்தந்திருத்தமாக எடுத்துவைத்தார்.
    • ‘போடுங்கம்மா ஓட்டு’/கரீபி ஹடாவோ’ போல் அமெரிக்காவிலும் நிறைய பிரச்சார வாசகம் கேட்க முடிகிறது. பைடன் சொன்னது: ‘இதற்குப் பெயர் மாற்றம் அல்ல. பழைய மொந்தையில் பழைய கள்’ (That’s not change; that’s more of the same).
    • ‘இன்னும் நான்காண்டுகள் ஜார்ஜ்…. மன்னிக்க! வாய் தவறிவிட்டது 😉 ஜான் மெகெயினின் ஆட்சி வேண்டுமா?’
  • கட்சி கூட்டங்களில் தமிழ்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை
    • அங்கே அழகிரி பேரன் மாநாட்டு மேடையில் கையசைக்கிறார். இங்கே ஜோ பைடனின் பேரன், பேத்திகள், மாமா, ஒன்று விட்ட அத்தை மகனின் சித்தப்பா மகள்.
    • வாரிசு அரசியல். ஜோ பைடனின் மகன் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றுகிறார்.
    • விஜய்காந்த்தின் மனைவி பிரேமலதா முக்கியத்துவம் அடைவது போல் மிஷேல் ஒபாமாவின் ஒவ்வொரு அசைவுகளும் கவனிக்கப்படுகின்றன.
  • கடைசி நாள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஆல் கோர் வந்தார். சுற்றுச்சூழல் மாசு குறித்தும் தொட்டுச் சென்றார். எட்டாண்டுகள் முன்பு பெரும்பான்மை பெற்று, முழுமையான வெற்றியடைந்திருந்தும், உச்சநீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டதையெல்லாம் கழிவிறக்கமாக புலம்பாத பேச்சு.
  • இறுதியாக பராக் ஒபாமா.
    • ஹில்லாரி கிளின்டனுக்கு பெரிய நன்றியுடன் துவங்கினார். ஏனோ, ஹில்லரி, பில், அவர்களின் மகள் செல்ஸி கிளின்டனை அரங்கத்தில் (தொலைக்காட்சியில்) காணோம்!
    • ‘தற்போதைய ஜனாதிபதியோடு முழுமையாக ஒத்துப் போய், 90 சதவிகிதம் அவர் போட்ட சட்டங்களுக்கு ஜான் மெக்கெயின் வாக்களித்திருக்கிறார். ஜார்ஜ் புஷ்ஷை 90% வால்பிடித்துவிட்டு, ‘நானும் மாற்றப் போகிறேன்’ என்று ஜான் மெகெயின் சொல்வது பிசாத்து பத்து சதவீத மாற்றம்’.
    • ‘நானும் வரிவிலக்களிப்பதற்கு ஆதரவாளன். மில்லியன் டாலர் ஈட்டாதவர்களுக்கு வருமான வரிக்குறைப்பு செய்யப்போகிறேன். குடியரசு வேட்பாளர் ஜான் மெகயினோ இந்த பெரும்பணக்காரர்களுக்கு மேலும் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடுகிறார்’.
    • ‘எனக்கு வசதி வாய்ப்புகள் கிடையாது. நான் இவ்வளவு தூரம் வரக்கூடியவன் (வெள்ளை இனத்தை சேர்ந்தவன் & செல்வந்தன்) இல்லை.’ – எளிமையான நெஞ்சிலறையும் சுயமதிப்பீடு.
    • ‘தேசப்பற்றில் போய் ‘எனக்கு ஜாஸ்தி; உனக்கு கம்மி!‘ என்று கட்சிவாரியாக பிரிச்சுப் பேசலாமா? என்னுடைய நாட்டுப்பற்றை எவரும் கேள்விகேட்க முடியாது!’
    • “‘அமெரிக்கர்கள் எப்போ பார்த்தாலும் புலம்பித் தள்ளுறாங்க என்கிறார் மெகயின். கரடுமுரடான பாதையில் காலணி கூட இல்லாமல் நடக்க சொல்லிட்டு, ‘சிணுங்கறாங்க பார்‘ என்பது போல் இது இருக்கிறது”.
    • காதல் முறியும்போது சொல்லப்படும் புகழ்பெற்ற வாசகம்: ‘பிரச்சினைக்கு நீ காரணமல்ல; நான்தான் காரணம்!’. அதை உல்டா செய்து, ‘இந்த வெற்றி என்னுடையது இல்லை; உன்னுடையது’ என்றார்.
    • 45 நிமிடங்கள் மூச்சு விடாமல், தண்ணீர் அருந்தாமல், திறந்த வெளி அரங்கின் உபாதைகளூடன் மிகச் சிறப்பாக பேசினார். பேச்சில் கருத்து அதிகம் இருந்ததால், என் கண்கள் சொருகியது உண்மை. அதற்கு பதில் உவமேயங்களும் கவர்ச்சி சொற்றொடர்களும் கிண்டல் முத்தாய்ப்புகளும் உள்குத்து வெற்றுவார்த்தைகளும் நிறைந்திருந்தால் இன்னும் ஜனரஞ்சகமாக இருந்திருக்கும்.
  • இறுதியாக சில அவதானிப்பு
    • மிஷேல் ஒபாமா உணர்ச்சிப் பிழம்பாகவே காணப்பட்டார். ஹில்லரியின் மேல் இருந்த கோபம், ஒபாமா சுதந்திரக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரான பூரிப்பு, ஆப்பிரிக்க – அமெரிக்கர் முதல்முறையாக தடைகளைக் கடந்தது என்று நவரசங்களும் காட்டினார். ஹில்லரி போல் அரசியல் சமரச புறப்பூச்சிட மிஷேலுக்கு தெரியாதது வெளிப்படையாகவே தெரிந்தது.
    • ஜோ பைடனைப் பார்த்தால் இன்னொரு ஜான் எட்வர்ட்ஸ் போலவே தென்படுகிறார். தனக்கு சேதமில்லாமல் எதிராளியைத் தாக்குவது; அடுத்த வேட்பாளர் ஹில்லரியுடன் இதமாக நடந்து கொள்வது; 2012– இல் வாய்ப்பு கிடைக்க இப்பொழுதே போதுமான அஸ்திவாரம் ஏற்படுத்திக் கொள்வது; இவை எதுவும் வாய்க்காவிட்டால் மீண்டும் செனேட்டில் குடியரசுக்காரர்களுடன் ‘கட்சி பேதமில்லா’ குடித்தனம்செய்வது; என்று வழவழா கொழகொழாவாகத்தான் ஜான் மெக்கெயினை பட்டும் படாமலும் விமர்சிக்கிறார்.
    • ‘துணை ஜனாதிபதி வேட்பாளர் தாக்காவிட்டால் என்ன? நானே கோதாவில் குதிக்கிறேன்’ என்று பராக் ஒபாமா ஒண்டிக்கு ஒண்டி சவால் விடாத குறையாக தனியாவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்.
    • உங்களில் ஒருவன் நான்’ என்று சொல்லி ஜார்ஜ் புஷ் வாக்கு கேட்டு, படித்த பெருங்குடிமகனாராக ஆல் கோரை கட்டம் கட்டி தோற்கடித்தார். அதையே இன்று திருப்பிப் போட்டு ‘எண்ணிக்கையிலடங்கா வீடு! அந்த மாதிரி பெரும்பணக்காரர்களுக்கான மெகயின் அரசு!! அது தொடர வேண்டுமா? அல்லது பாட்டாளி பராக் வேண்டுமா?’ என்று சித்தரிக்கும் திருவிழா முடிந்திருக்கிறது.
  • ஒபாமாப் பேச்சு என்ன சொல்லியது?
    • ‘மாற்றம் என்றால் என்ன? எது மாறும்? எவ்வாறு மாறும்? எப்படி மாற்றப்படும்? எங்கே மாறும்?’ – பொருளாதாரம், சமூகம், இராக், தற்பாலினத்தவர், துப்பாக்கி வேண்டுவோர், இன்ன பிற
    • ‘நீங்க கென்யாவா? உங்களுக்கு அமெரிக்க மதிப்பீடுகள் இருக்கிறதா? ஒசாமாவுக்கும் ஒபாமாவுக்கும் ஓரெழுத்துதானே வித்தியாசம்?’ – தெளிவான, பளிச் பதில்
    • ‘மெகெயினை விட நீங்க எப்படி உசத்தி? அவருடைய கட்சியிம் அவரும் வித்தியாசமவர்னு சொல்றாங்களே? ஏன் உங்களுக்கு வாக்களிக்கணும்?’
  • ட்விட்டரில் பண்டிட்கள் என்ன சொல்கிறார்கள்?
    • 1. Bill Clinton, 2. Hillary, 3. Joe Biden, 4. Michelle Obama and 5. Barack Obama were the best speakers of the DNC in the order mentioned – pksivakumar
    • திருப்பதி உண்டியல் கலெக்ஷனை denverக்கு உடனே அனுப்பவும்.சில்லறை தட்டுப்பாடு இங்க ஏகப்பட்ட பேர் Change Change அட்டை வைச்சுகினு நினுக்குனு … – msathia
    • #dnc08 <Bill> Relates himself with Obama. Republicans plan to win didn’t work against him in 1992 nd it will not work against Obama! – dynobuoy
    • One thing missing from O’s speech so far – a touch of levity, a bit of humor. Unfortunately, that is important in the US political circus – srikan2
    • Low point: addressed only democrats (us, we…) not americans in general and independents whom he has to rely upon. – donion
    • so do we need 21st century bureaucracies? namma kalaignar pesara maathiri irukke – elavasam

தமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்'

தமிழ் பிபிசி:

நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.

சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் இருக்கின்றார்.

இது ஒரு மாபெரும் கூட்டணி என்றும், இது அமெரிக்காவில் மாற்றங்களை கொண்டு வரும் என ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரங்கள் சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.


தினத்தந்தி

இந்தியாவுக்கு ஆதரவானவர் : ஜோசப் பிடன், இந்திய அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். தனது கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை நிறுத்துவது என்று ஒபாமா பல நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.

  • கிளிண்டனின் மனைவி ஹலாரி,
  • இந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில், டெலாவரே மாகாண செனட் உறுப்பினர் ஜோசப் பிடனை, தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா தேர்வு செய்துள்ளார். ஜோசப் பிடனின் வயது 65. அவர் தற்போது செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவராக இருக்கிறார். இவர் முதல்முறையாக 1972-ம் ஆண்டு செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29. தற்போது 6-வது தடவையாக செனட் உறுப்பினராக இருக்கிறார். செனட் சபையில் பல்வேறு கமிட்டிகளில் பதவி வகித்துள்ளார். இவர் வெளியுறவு கொள்கை மற்றும் ராணுவ கொள்கைகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

இந்த கொள்கைகளில் ஒபாமாவுக்கு அனுபவம் இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, ஜோசப் பிடனின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவரை ஒபாமா தேர்வு செய்துள்ளார்.

ஜோசப் பிடன், ஏற்கனவே கடந்த 1988-ம் ஆண்டிலும், இந்த ஆண்டிலும் அதிபர் பதவி வேட்பாளர் ஆவதற்கு முயன்றார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பை பெற்றுள்ள அவர், டென்வரில் நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில், 27-ந் தேதி உரையாற்றுகிறார்.

ஜோசப் பிடன், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், ஜான் கெர்ரி, சக் ஹகெல் ஆகிய செனட் உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இடதுசாரிகளின் ஆதரவு வாபசையும் மீறி, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதை அறிந்து, அவரை பாராட்டினார்.

இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவுவது, அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும் என்ற கருத்துடையவர், ஜோசப் பிடன். இந்திய அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க பாராளுமன்றத்தில் இறுதி ஒப்புதலுக்கு வரும்போது, இவர் அதற்கு ஆதரவாக உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்: அறிவித்தார் ஒபாமா:

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.


தினமணி

ஜனநாயகக் கட்சி யு.எஸ். துணை அதிபர் வேட்பாளர் ஜோசப் பிடன்

வாஷிங்டன், ஆக. 23: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா, துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பிடன் (65) என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரிப்பவர் ஜோசப் பிடன். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற இவர் மிகவும் உதவியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டபோதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் உறுதியை சமீபத்தில் ஜோசப் பிடன் பாராட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் துணை அதிபராக ஜோசப் பிடன் தேர்ந்தெடுக்கப்படுவார்.


Thatstamil.com
Joseph Biden is Obama’s running mate, ஓபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் ஜோசப்:


Webdunia.com

அமெ‌ரி‌க்க துணை அ‌திப‌ர் வே‌ட்பாளரை தே‌‌ர்‌ந்தெடு‌த்தா‌‌ர் ஒபாமா!: டெ‌ல்லோவா‌ர் சென‌ட்ட‌ர் ஜோச‌ப் ‌பிடேனை‌ பரா‌க் ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளா‌ர்.

துணை அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் போ‌ட்டி‌‌க்கு தே‌ர்‌ந்தெ‌டு‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று கருத‌ப்ப‌‌ட்ட இ‌‌ன்டியான சென‌ட்ட‌ர் இவ‌ா‌ன் பயா, ‌வி‌ர்‌ஜியானா கவ‌ர்ன‌ர் ‌டி‌ம் கெ‌ய்‌ன் ஆ‌‌கியோரை ‌பி‌ன்னு‌‌க்கு‌த் த‌ள்‌ளி‌‌‌வி‌ட்டு, 65 வயதாகு‌ம் ‌பிடே‌ன்-ஐ ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

‌சென‌ட் அயலுறவு ந‌ட்பு குழு‌த் தலைவரான பிடே‌ன் கட‌ந்த 1972 ஆ‌ம் ஆ‌ண்டு தனது 29-வது வய‌தி‌ல் முத‌ல் முதலாக அ‌ந்நா‌ட்டு பாராளும‌ன்ற‌த்து‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


மேலும் :: Google செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஹமீது கர்சாய் மற்றும் இராணுவ அதிகாரிகள் சந்திக்கவுள்ளார்.

தலிபான்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கூட்டுப்படைகள் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில் பராக் ஒபாமாவின் முதல் விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சீர்கெட்டு வரும் நிலையினால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பராக் ஒபாமா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராக்கில் இருக்கின்ற துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்படவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

நன்றி: பிபிசி