Tag Archives: Meetups

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – முதலாமாண்டு விழா

வெர்னர் ஹெர்சாக் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் 11வது பிராயத்தில் தான் தன் முதன் முதல் சினிமாவைப் பார்க்கிறார். அதன் பிறகு பின் வரும் காலத்தில் உலகம் மெச்சும் இயக்குநர் ஆகிறார். குட்டிப் பயலாக இருக்கும்போதே மண்டைக்குள் விதைகளை ஊன்றிவிட வேண்டும்.

அந்த மாதிரி சொர்ணம் சங்கரபாண்டி Sornam Valavan Sankar சின்னஞ்சிறிய வயதிலேயே பள்ளிகளில் திருக்குறளின் முழுப் பதிப்பையும் குறள்நெறிக் கதைகளையும் அந்தந்த வகுப்பிற்கேற்ப அறிமுகம் செய்யும் நூல்களை இல்லந்தோறும், கிராமமெங்கும் ஊராட்சி ஊராட்சியாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் விலையில்லாமல் கொடுக்கிறார். தருவதுடன் நிற்காமல், முற்றோதல் போட்டிகளை முன்னெடுக்கிறார். குழந்தைகளின் வாழ்வில் மந்திரமாக, நினைவில் ஊறி நிற்கும் அறநெறிச்சாரமாக வள்ளுவரின் குறள்களை ஊன்றுகிறார்.

இந்த சந்திப்பு அதற்கானதல்ல. இது ஹார்வார்டு தமிழ் இருக்கையை உருவாக்கியதற்கான விழா. அதன் பின் பல்வேறு அமெரிக்க, கனடா பல்கலைக்கழகங்களில் வெறுமனே தமிழ்மொழியை மட்டும் பயிற்றுவிக்கும் தமிழ்த்துறையாக மட்டும் இயங்காமல், நாற்காலி போட்டு தீவிரமாக தமிழாக்கங்களை புதினங்களை உலகெங்கும் உள்ள அயநாடுகளில் பல்வேறு பாஷைகளுக்கும் ”தமிழ் இருக்கை” முயற்சிகளைத் தொடரும் விழா.

அமெரிக்க பல்கலை எங்கும், பேராசிரியர்கள் மூலம் பல ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆய்வுகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும் தமிழ் இருக்கைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன (“துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்” – எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.)

ஹார்வார்டில் வெற்றிகரமாக தமிழுக்கு சிம்மாசனத்தை உருவாக்கி ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் எளிய விழா. மார்த்தா செல்பி (Martha Ann Selby) சிறப்புரை ஆற்றினார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் இன்ன பிற மொழிகளுக்கும் தற்காலப் படைப்புகளையும் செவ்வியல் இலக்கியங்களையும் மொழிமாற்றம் செய்யும் முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டார். இரு மொழியிலும் ஆற்றல் பெற்றவர்களை மூன்று நான்கு மாதம் தங்கவைத்து மொழியாக்கம் செய்வது, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தமிழ் எழுத்தாளர்களை விருந்தினராக அழைத்து அவரின் நாவல்களைக் குவிமையமாக பார்வைக்கு உள்ளாக்கி விமர்சன விழாக்களை நடத்துவது, இலக்கியப் பயிற்சி முகாம் வழியாக மொழியாக்கங்களைப் பரவலாக பல எழுத்தாளர்களிடம் கொண்டு செல்வது, படைப்பாளிகள் பட்டறைகள் – என பல எண்ணங்களையும் திட்டங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்தார்.

இந்த விழாவில் பழைய நண்பர்களான ஃபெட்னா சிவா, சொர்ணம். சங்கர் போன்றவர்களை மீண்டும் பார்க்க முடிந்தது. இது வரை வாசித்து மட்டுமே அறிந்திருந்த சிவகாமி ஐ.ஏ.எஸ். போன்றவர்களை சந்தித்து மனம் விட்டு பேச முடிந்தது. அடிக்கடி பார்க்கும் ப்ராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், மாஸாசூஸெட்ஸ் தமிழ் மக்கள் மன்றம், நியு இங்கிலாந்து தமிழ் சங்கம் போன்ற பாஸ்டன் வட்டார உறவுகளை புதுப்பிக்க முடிந்தது.

ஹார்வர்டு இருக்கைக்கு அஸ்திவாரம் போட்டு நடத்தி முடித்து அதன் பின்னும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மருத்துவர் ஜானகிராமன் அவர்களையும், மருத்துவர் சம்பந்தம் அவர்களையும், நேரில் வாழ்த்த முடிந்தது.

இனிய மாலைப் பொழுதில் விருந்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்த பமீலாவிற்கு Saroj Bamiela Sankaran நன்றி!

Invitation for the Sep 16th Event at Boston with Isaikkavi Ramanan

Isaikkavi Ramanan is a prolific poet and writer in Tamil, a composer, and a singer. He has published about 32 books. Notable among them is Sikaram, the biography of the famous movie director, K. Balachandar. His books in English include Chips Down? Chin Up!; Business Mantras, a Pictorial on N. Mahalingam; and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.

Day: September 16th Sunday
The speech starts at 3 PM
Place: Burlington’s Recreation Center
Address: 61 Center St, Burlington, MA 01803

He has addressed audiences of various age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs, and motivational talks. He has anchored and acted in several programs on many popular TV channels relating to social and spiritual themes. He has written a Tamil play Bharathi Yaar? and plays the lead role. He has also dabbled in English theatre and has traveled widely across the globe for his lecture tours in English and Tamil. Besides pursuing his interest in literary works, Mr. Venkateswaran is an avid photographer and a nature enthusiast. He is an ardent pilgrim and has made 35 visits to different parts of the Himalayas so far.

Please join us for his talk and Q&A in Boston.

கவிஞர், பாடகர், எழுத்தாளர், இலக்கிய-ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இசைக்கவி ரமணன். 35 முறை இமாலயப் பயணம். ‘கோடுகள் இல்லா உலகம்’, ‘யோகக் குறள்’, ‘ரமணனைக் கேளுங்கள்’, ‘வண்டி போய்க் கொண்டிருக்கிறது’, ‘திருமணம் என்பது’ போன்ற நூல்களின் ஆசிரியர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்; திருக்குறள் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று பம்பரமாகச் சுழல்பவர்.

அவரின் பேச்சை செப். 16 – ஞாயிறு அன்று பாஸ்டன் பக்கமாக கேட்க வாருங்கள்.

நேரம்: மதியம் மூன்று மணி
ஒருங்கிணைப்பு: Tamil Makkal Mandram, USA
தலைப்பு: கண்ணதாசன் நினைவலைகள் – வசந்த கால நதிகளிலே

இந்த நிகழ்வைத் தவற விடாதீர்கள்! அவசியம் நேரில் வாருங்கள்!!

முகவிழி சபைகள்: சேட்படுத்துதல்

Meetup_Eventbrite_Mixer_Pizza_Beer_Software_Demo_Pitch_Forums_Events_Talks_Chat_Discussions
சாயங்காலம் ஆனால், கால்கள் தானாக அந்தப் பக்கம் சென்றுவிடுகிறது. மனைவி இல் நானும் இருப்பது ஒரு காரணம். இலவசமாக பீட்சா பரிமாறுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.

என்ன இலவசம்? காரை நிறுத்த முப்பது சொச்சம் டாலர் செலவு. அந்தி மயங்கும் வேளையில் வீடு திரும்பும் எண்ணற்ற ஜனத்திரளில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல பெட்ரோல் செலவு. நியு யார்க்கை விட மோசமாக ஓட்டும் பாஸ்டன் நகர கட்டுமானத்திற்கு இடையே நுழைந்து வளைத்து இடிபடாமல் செல்லும் இதய நோய் உண்டாக்கம் கூட செலவு.

புற்றுநோய் வந்தவர்களுக்கான ஆதரவுக் குழு; மதுவின் பிடிக்குள் சிக்கினவருக்கான வாராந்திர சந்திப்புகள்; பொதுமேடையில் பேசுவதற்கான அச்சம் நீக்கும் டோஸ்ட்மாஸ்டர் கூட்டங்கள்… போல், இதுவும் ஒத்த பயனீட்டாளர்களின் ஊற்றுக்களம். ஒரு சிந்தனையாளரை அழைத்து, அவரைப் பேசவிட்டு, அவரின் வாயும் பவர்பாயின்ட்டும் பார்க்கும் களம்.

செவ்வாய் என்றால் ஜாவா; புதன் அன்று நோ சீக்வல்; வியாழன்தோறும் பத்தாண்டுகளுக்கு மேலாக புத்தம்புதியதாக மிளிரும் அதிவிரைவு மென்பொருள் உருவாக்கம் (agile software development). வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள் கிடையாது; இளவயதினர் ஜோடிப் பொருத்தத்திற்காக கிளப் விட்டு கிளப் மேய்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை.

வாரயிறுதிகளில் இன்னும் பெரிய ஜமா கூடும். முழுவதுமாக ஆழ்ந்து பயிற்சிப் பெறும் செய்முறை விளக்கக் காட்சிகள் உண்டு; சொந்தக் கணினி எடுத்துக் கொண்டு போனால், புதிய நிரலிகளை உருவாக்குவதில் சரிசமமாக அனைவரும் பங்குப் பெற்று, முழுவதாக தயார் ஆன புத்தம்புதிய பயன்பாட்டை உலகிற்கே உடனடியாக உலவ விட சனியும் ஞாயிறும் போதுமானது.

ஆனால்… உங்களுக்குத்தான் பரிசிலோ பங்கோ சன்மானமோ கிடைக்காது. சொவ்வறை எழுதினோம்; அது நாளைய கூகிளிலோ, வருங்கால யாஹூவிலோ ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்னும் மனத்திருப்தி மட்டுமே வாய்க்கப் பெறும்.

ஃபைட் கிளப் போல் இப்படி மன்றம் மன்றமாக சென்று வருவதும் மாலையானால் ‘என்ன கச்சேரி’ என்று தி ஹிந்துவில் எங்கேஜ்மென்ட் பார்ப்பதும் ஒன்றா என்பதை ஆராய தீஸிஸ் பரிந்துரை இட்டிருக்கிறேன்.