Tag Archives: Defamation

அவதூறு வழக்கும் அவதூதர்களும்

மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.

எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார்.
தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார்.
அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.

நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.

இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…

சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.

இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம்.
முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.

ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன்
மைனே பியார் கியா – சல்மான் கான்
சான்வரியா – ரன்பீர் கபூர்
கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன்
பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங்
பாபி – ரிஷி கபூர்
ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப்
பர்சாத் – பாபி தியோல்
கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான்
தீவானா – ஷாரூக் கான்

எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.

ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.

ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.

மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.

ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.

ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.

ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?

நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி

முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:

“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.

முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.

கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”

பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.

இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.