Tag Archives: வர்த்தகம்

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் யார்?

ஜிம் சைமன்ஸ் மறைந்துவிட்டார்.

தமிழ் ஊடகங்களில் லங்காஸ்ரீ மட்டுமே கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் அஞ்சலிக் குறிப்பில் இருந்து:

“கணிதம் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையால் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜிம் சைமன்ஸ் (Jim Simons).
31 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள ஜிம் சைமன்ஸ் உலகின் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
வர்த்தகம் குறித்த முடிவுகளுக்கு கணினி சிக்னல்களை பயன்படுத்தி முன்னோடியாக திகழ்ந்ததால் ”Quant King” எனும் பெயரால் ஜிம் சைமன்ஸ் அழைக்கப்பட்டார்.”

https://news.lankasri.com/article/world-richman-jim-simons-dies-at-86-1715378169

நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணத்தை கணித ஆராய்ச்சிக்காக களத்தில் குவித்தவர். கணிதவியல் ஆராய்ச்சியாளர்கள், கணக்கில் ஆர்வம் கொண்டோர் என அனைவரையும் சொகுசாக ஒன்று சேர்த்து மாநாடுகளை நடத்தியவர். ஸ்டோனி ப்ரூக் பல்கலையில் SCGP (Simons Center for Geometry and Physics), நியு யார்க் நகரில் சைமன்ஸ் மையம், Mathematical Sciences Research Institute (MSRI) என்று அழைக்கப்பட்ட Simons Laufer Mathematical Sciences Institute (SLMath); தொழில்நுட்பத் துறையிலும் அறிவியல் ஆய்வு என உலகின் அனைத்து ஆராய்ச்சிகளையும் இலவசமாகக் கொடுக்கும் arXiv தளத்திற்கு பல பில்லியன்கள்; மாக்மா ஒப்பந்தம்; AMS-Simons மானியங்கள்; சைமன்ஸ் இணைவாக்க நிதிநல்கை; குவாண்டா சஞ்சிகை (Quanta); கணக்கை சுவாரசியமாகச் சொல்லிக் கொடுக்கவும் புதிய விஷயங்களை விளக்கவும் Numberphile யூடியுப் கன்னல்; Math for America; தேசிய கணித அருங்காட்சியகம்; சைமன்ஸ் வானாய்வகம்

உதவித் தொகைகளை பட்டியல் போட்டால் பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் கூட ‘எச்சில் கையால் காகத்தை விரட்டுவது’ போல் தோன்றிவிடும்.

ஆய்வு மாணவர்களிடம் புழங்கும் நகைச்சுவையைக் கேட்டிருப்பீர்கள்: வேறெந்தத் துறையைக் காட்டிலும் வடிவகணிதம் சார்ந்த ஆராய்ச்சி முடித்தவருக்குத்தான் சராசரியாக அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும். சைமன்ஸ் மூன்று பில்லியன் சம்பாதிக்கிறார். மற்ற எல்லோரும் வருடத்திற்கு அறுபதாயிரம் டாலர் வாங்குவோம்.

“Be guided by beauty. I really mean that. Pretty much everything I’ve done has had an aesthetic component, at least to me. Now you might think ‘well, building a company that’s trading bonds, what’s so aesthetic about that?’ But, what’s aesthetic about it is doing it right. Getting the right kind of people, and approaching the problem, and doing it right […] it’s a beautiful thing to do something right.”

Jim Simons

வால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்

உங்களுக்கு மாதந்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வேலை போய்விட்டது. என்ன செய்வீர்கள்?

முருகன் இட்லி கடையில் சேர்வீர்களா? காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை காலர் கசங்காமல் இருந்தவர், ஒரே நாளில் கழிவறை சுத்தம் செய்பவராக மாறுவீர்களா? ஒரு மணி நேரத்திற்கு ஒரு சந்திப்பு, மதிய உணவிற்கு ஒன்றரை மணி நேர ஒதுக்கல், எக்ஸெல் கோப்புகளை நிரப்புதல் என்றெல்லாம் காலந்தள்ளியவர் நான்கு டபரா காபியும் எட்டு தட்டு இட்லியும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வினாடியும் பம்பரமாகாச் சுழல்வீர்களா?

ஜேம்ஸ் ஆடம்ஸ் நிஜமாகவே செய்து பார்த்திருக்கிறார். அவர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். முதலீட்டாளர்களிடம் “இது அருமையான முதலீடு. உங்கள் சேமிப்பை என்னிடம் கொடுத்தால் ஒரே மாதத்தில் இரட்டிப்பு ஆக்குவேன்!” என்று வார்த்தைஜாலத்தில் மயக்கி, பணம் பறித்தவர். 2008ல் துவங்கிய பொருளாதாரச் சரிவு 2009ல் விஸ்வரூபம் எடுத்தபோது, முதலீட்டாளர்களின் பொருள் எல்லாம் திவாலாகி விட, அந்தப் பணத்தை நிர்வகித்த ஜேம்ஸ் ஆடம்ஸும் வேலை நீக்கம் ஆகிறார்.

நானும் பலமுறை வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் அதே துறையிலேயே வேலை தேடி இருக்கிறேன். கணினி நிரலி எழுதுவதில் இருந்து கணினித்துறை ஆலோசகராக – பக்கத்து வீட்டிற்குத் தாவி இருக்கிறேன். தொலைத்தொடர்பு துறையில் இருந்து பொருளாதாரத் துறை; அங்கிருந்து சேமநலத்துறை என்று வெவ்வேறு துறைகளுக்குத் தாவினாலும் எல்லாமே கணினியும் நிரலியும் மென்பொருளும் நிர்வாகமும் சார்ந்த வேலைகள். ஒரு நாள் கூட இன்று மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை பார்க்கலாம் என்றோ பர்கர் கிங் கிளை ஒன்றைத் துவக்கலாம் என்றோ யோசித்ததே இல்லை.

இந்த மாதிரி சாதாரண மக்கள் யோசிப்பதில்லை. ஜேம்ஸ் ஆடம்ஸ் யோசிக்கிறார். ஏன்?

movies_films_waffle_street_james_adams_movie_images_wife_danny_glover_house

இரண்டு காரணங்கள் இருந்திருக்கும். முதலாவது… அவருடைய குடும்பப் பின்புலம். தாத்தா தொழில் செய்திருக்கிறார். டயர் விற்றிருக்கிறார். கார் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தியிருக்கிறார். அப்பாவும் அதே போல் பிறிதொரு பிஸினெஸ் நடத்தியிருக்கிறார். சர்க்கஸில் கீழே பாதுகாப்பு வளையம் இன்றி ஆடுபவர்கள் சாதாரணர்கள். ஆனால், சொந்தமும் பந்தமும் பக்கத்து ஊர்களில் இருப்பதும், அவர்களின் பணம் கொடுக்கும் துணைக்கரமும் கொண்டவர் ஜேம்ஸ்.

இரண்டாவது… மார்கன் ஸ்டான்லி அல்லது கோல்ட்மென் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த மாதிரி பொய் வாக்குறுதி கொடுத்து செல்லாத பத்திரங்களை விற்று பெரும் பணம் ஈட்டியது. அதன் பிறகு, அந்த வருவாய் வருவதற்குக் காரணமாக இருந்த முகங்களை மாற்றியது. அந்த முகங்களில் ஒருவர் ஜேம்ஸ். புத்திசாலி நிதி வர்த்தகர். நிதியாளுமை தெரிந்தவர். வேலையை விட்டுத் தூக்கும்போது மூன்றாண்டு சம்பளம் கூட கொடுத்து சீட்டைக் கிழித்திருப்பார்கள். சிலர் இந்த பல்லாண்டு கால ஊதியத்தை வைத்துக் கொண்டு புதிய தொழில் தொடங்குவார்கள். ஜேம்ஸும் அது போல் யோசித்து இருப்பார்.

life-behind-the-lobby_-indian-american-motel-owners-and-the-american-dreamஆனால், பெரும்பாலான சப்வே உணாகங்களை குஜராத்திகள் நடத்துவதாக அமெரிக்க தேஸிகளுக்கு இடையே பேச்சு உண்டு. இது இன்னும் டிரம்ப் காதிற்கு எட்டியதா என்று தெரியவில்லை. அதே போல் உள்ளூர் காபிக் கடையான ‘டன்கின் டோண்ட்ஸ்’ உடனடி உணவகங்களும் இந்தியர்களே பெரும்பாலும் நடத்துகிறார்கள். இதைப் படித்த வெள்ளை இனவெறியர் எவராவது துப்பாக்கியும் கையுமாக டன்கின் டோனட்ஸுக்குச் சென்று அதன் முதலாளிகளை சுட்டுத் தள்ளாமல் இருப்பாராக என எல்லாம் வல்ல ஃபேஸ்புக்காரை வேண்டிக் கொள்கிறேன்.

இது போன்ற விரைவு உணவகங்களுக்கு வருமானம் ஓரளவு உத்தரவாதம். முதல் கிளையைத் துவக்கி நடத்துவதுதான் சிரமம். அதில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு இரண்டாவது கிளை, மூன்றாவது கிளை என்று கடகடவென விரிவாக்கலாம். முதல் கிளையில் நாய் போல் உழைத்தவர்களை இரண்டாம் கிளையின் மேலாளர் ஆக்கலாம். அதை, அப்படியே விரிவாக்கி, ஒரு லயத்தில் செலுத்தினால் ஆறேழு கிளைகள் வரை எளிதாகக் கொண்டு சென்று நிம்மதியாக வாழலாம். ஆனால், முதல் கிளை மட்டும் ஒழுங்காக அமையாவிட்டால், முழு கட்டிடமும் விழுந்து விடும்.

mcfranchise_income

முதல் கிளை நல்ல இடத்தில் இருக்க வேண்டும். அங்கே கூட்டம் வர வேண்டும். சுவாரசியமான கூட்டமாக இருக்க வேண்டும். கிம் கர்டாஷியன் போன்றோர் எல்லாம் வாஃபுல் ஹவுஸ் பக்கம் வருவார்கள். அது நமது வாஃபுல் ஹவுஸ் ஆக இருக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு இருக்கக் கூடாது. சிப்பந்திகள் கர்ம சிரத்தையாக பணி புரிய வேண்டும். யாரும் கடன் சொல்லி ஏமாற்றி ஓடக் கூடாது. சும்மா சாப்பிடுபவர்களை விட இளைஞர் குழாம் வர வேண்டும். கல்லூரி மாணவிகள் வந்தால் மற்றெல்லோரும் தானாக வருவார்கள். எலி, கரப்பான் பூச்சிகள் இல்லாத சுகாதாரம் அமைய வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல். அதனால், முதல் கிளையில் உயிரைக் கொடுத்து நடத்த வேண்டும். அதன் பின், தன்னாலேயே கல்லா கட்டலாம்.

இதில் சில எட்டாக்கனிகளும் உண்டு. மெக்டொனால்ட் உணவகம் ஆரம்பிக்க ஐந்து மில்லியன் கேட்பார்கள். அதுவே சிபோட்லே துரித உணவகம் ஆரம்பிக்க வெறும் இரண்டு மில்லியன் போதும். வாஃபுல் ஸ்ட்ரீட் ஆரம்பிக்க 335,000 கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? எனவே, பலருக்கு இந்த தொழில் தொடங்குவது எல்லாம் ‘சீச்சீ… அந்தப் பழம் புளிக்கும்’ என்றே ஆகி விடுகிறது.

franchise-cost-chart1

இந்தத் திரைப்படம் எப்படி முக்கியமானது ஆகிறது:

1. வாழ்ந்துகெட்டவரின் வாழ்க்கையைச் சொல்கிறது. பந்தா பி.எம்.டபிள்யூ. கார். நான்கு படுக்கையறைகளும் அழகிய அறைகலன்களும் கொண்ட வீட்டைக் கொண்டவரின் நிஜவாழ்க்கை இது. எனக்கும் இது போல் நிகழ்ந்து, அமெரிக்காவில் நடுத்தெருவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்த்தும் கதை.

2. மேற்கத்திய உலகு இப்போது கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஒப்பந்தக்கார உலகிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதை இவரின் வாழ்க்கையும் சுட்டுகிறது. குமாஸ்தா வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்ன வேலையை முடிக்க இவ்வளவு டாலர் என்று பேரம் பேசுவோம். அந்த வேலையை செய்து முடித்தால் கையில் காசு. செய்து முடிக்காவிட்டால் பணமும் போச்சு; பேரும் போச்சு. கணித்துறை வல்லுநரோ, பயிலக குருவோ… எவரானாலும் காரியம் முடித்தால் மட்டுமே சோறு பொங்க முடியும்.

3. இந்த வேலை என்னால் செய்ய முடியும்; அந்த வேலையில் வருவாய் வரும் என்பதால் நாம் ஒரு பணியில் இருக்கிறோமா? அல்லது இந்த வேலையில் நயாபைசா லாபம் இல்லாவிட்டால் கூட செய்துகொண்டிருப்போமா? – இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வது அவசியம். ஒரு செயலை ஊதியத்திற்காக செய்தால் சிரத்தை இருக்கலாம்; நேர்த்தி கூட அமைந்து விடலாம்; நமக்கு திருப்தி கிடைக்குமா?

இராவணன் படப்பாடல்: அமெரிக்க கடன், போர், வர்த்தகம், நிதி தரம்

இந்த கடன எப்ப வந்து நீ கேக்கறே
என் சொகுசுக்குள்ள கேள்விக்குறிய நீ வெதச்சே

அடி நியூ புக்லாந்து பெரிசுதான்
சின்ன ஸ்கானர் உயரம் சிறிசு தான்
ஒரு கூகிள் தேஞ்சு பறக்குதடி
மொத்த புக்கும் நெட்டில் கிடைக்குதடி

சொத்தே போகுதே சொத்தே போகுதே
சொவ்வறைய நீ கொஞ்சம் சுழிக்கையில

அமெரிக்கன் தவிக்கிறன் அவிச்சத கேட்கிறன்
அஸ்திரத்த விடணும் உன் மேலே

அக்கரைச் சீமையில் நீயிருந்தும்
ஏரியலில் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி ராணுவம் துடிக்குதடி

லிபியாவும் கியூபாவும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சு ஆகல

டெமொக்ரட்ஸ் சொல்லும் நல்ல சொல்ல
டெவில் புத்தி கேட்கல

தனியா தவிச்சு ஆப்கானிஸ்தானில் தடம் கெட்டு திரியுதடி
தனியா குறுகி சீனா தள்ளிவிட்டு சிரிக்குதடி

இந்தச் சண்டைக் கிறுக்கு தீருமா
அடி ஹெல்த்கேர் விட்ட ஒபாமா மாறுமா

என் தேக்கத்தை தீர்த்து வச்சு வளருமா

லண்டனும் நியுயார்க்கும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
டாலரும் யூரோவும்
இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(சொத்தே போகுது)

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல
இந்தியாவும் பெர்சியாவும் தப்பிப் போகும் பணப்புழக்கத்தில

கத்தி காட்டி சதி போட்ட அரசருக்குள்ள
கத்தி குத்தில்லாத அரசாட்சியுமில்ல

எட்ட இருக்கும் சென்னையப் பார்த்து
இறக்குமதியாக்கிறது காரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
பங்கோ வர்த்தகமோ போகல

கள்ளா காவியமா ஒரு பாகுபாடு தெரியலயே
கள்ளா இருந்தும் உடம்புல கிக்கு ஏறலியே

என் பாண்டும் ஒருநாள் சாயலாம்
என் மியூசியத்துல உன்பொருள் போகுமா

நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து கொலம்பசுக்குள்ள

லண்டனும் நியுயார்க்கும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
டாலரும் யூரோவும் இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(சொத்தே போகுது)


அசல்

பாடியவர்– கார்த்திக், இர்பான்

இசை – A.R. ரகுமான்

படம் இராவணன்

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என்புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்சே

அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உயரம் சிறிசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கடும் தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசிரே போகுதே உயிரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறன் மடிப்பிச்சை கேட்கிறேன்

மனசைத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீயிருந்தும்

ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைச்சு ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேட்கல

தனியா தவிச்சு உசிர் தடம் கெட்டு திரியுதடி

தனியா குறுகி என்னை தள்ளிவிட்டு சிரிக்குதடி

இந்த மன்மத கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என்மயக்கத்தை தீர்த்து வச்சு மன்னிச்சிடுமா

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(உசிரே போகிறதே)

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள

விதி விலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலயே

பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒருநாள் சாயலாம்
என் கண்ணில உன்முகம் போகுமா
நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து மனசுக்குள்ள
(உசிரே போவுது)

வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்

செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி:

3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை?

கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு தீர்வல்ல. சமூக ரீதியிலான மாற்றங்களை நிறைய செய்ய வேண்டும்.

உதாரணம்: கருப்பருக்கெதிராக கருப்பர் நடத்தும் குற்றங்கள்.அந்த சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்களை அதிகரித்தால் இது தானாக குறையும்.

பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மாநில அரசுகள் பல்கலைகழகங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை குறைக்கின்றன. நீண்டகால அடிப்படையில் இது தேசத்துக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் ஒபாமா பல்கலை மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் உதவித்தொகை வரவேற்கத்தகுந்த திட்டம் தான்.

அமெரிக்க பல்கலைகழகங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை போக்க வேண்டும். வேலைக்கு போகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் அதற்கேற்ராற்போல் மாற்ற வேண்டும்.

நிதி மட்டுமே உடனடி பிரச்சனையாக தெரிகிறது.மற்றபடி அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களே ஆகும். ஓரளவு உதவி செய்தால் அவையே தம்மை கைதூக்கி விட்டுக்கொள்ளூம்.

4. உலக வர்த்தகம்: ஒத்துழைக்கும் கொலம்பியாவோடு முரண்டு பிடிக்கும் ஒபாமா ஒத்துக் கொள்ளாத கொள்கை கொண்ட வெனிசுவேலாவோடு சரிசமமாக அமர்வேன் என்கிறார். ஏற்கனவே சட்டைப்பையில் அமர்ந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் போவது அமெரிக்காவுக்கு ஷேமமா? புவிவெம்மையைக் கட்டுபடுத்தும் விதமாக நாப்ஃதாவை மீண்டும் பேரம் பேசுவது, அமெரிக்கத் தொழிலாளர் நலனுக்காக தென் கொரிய கார் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று ஒபாமா முன்வைக்கும் கொள்கைகள், அமெரிக்காவை தனிமைப்படுத்துமா?

நாப்தாவில் தொழிலாளர் உரிமை, மற்றும் சுற்றுப்புர சூழல் காப்பு ஆகியவற்றை சேர்ப்பேன் என்கிரார் ஒபாமா. கொலம்பியாவில் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் அதனுடன் சுதந்திரவணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறேன் என்கிறார்.

இதெல்லாம் டெமக்ராடிக் கட்சியினரின் பெட் புராஜெக்ட்கள். அடுத்த நாடுகளை முதலில் இதுபோல் அமெரிக்கா வலியுறுத்துவது அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல்தான். சுற்றுப்புற சூழலுக்கு செலவு செய்யும் அளவுக்கு கொலம்பியா, மெக்சிகோவிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இது போன்ற பர்சனல் அஜெண்டாக்கள் அமெரிக்காவின் நலனுக்கு எள்ளளவும் உகந்ததல்ல.

5. நிதி கட்டுப்பாடு: மெகயின் என்னதான் சொல்கிறார்? கடந்த ஆண்டுகளில் ‘கட்டவிழ்த்துவிடு’ என்று தீவிரமாக இயங்கியதும், சடாரென்று பத்து நாளைக்கு முன் சடன் ப்ரேக் அடித்து, தன் நிலையை மொத்தமாக மாற்றியதும் என்பதாக இருப்பதில் எந்தப் பாதை இன்றைய நிலையில் வால் ஸ்ட்ரீட்டை வழிக்குக் கொண்டுவரும்?

ஆலன் கிரீன்ஸ்பான் காலத்து பப்பிள் எக்கானமியின் விளைவுகள் இன்று உணரப்படுகிறது. மெக்கெயின் மட்டுமல்ல, வேறு யாருமே அன்று நடந்த தவறுகளின் விளைவுகளை சரியாக யூகித்திருக்க முடியாது.

பான்னி மே, பிரட்டி மாக்கை கிரடிட் ஸ்கோர் சரியாக இல்லாதவர்கள், மற்றும் மைனாரிட்டி இனத்தவரை குறிவைத்து வீட்டுகடனுதவி அளிக்க செய்து டெமக்ராடிக் கட்சியினரின் ஓட்டுவங்கியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பில்க்ளின்டனை தான் வீட்டுகடனுதவி சந்தை சரிந்ததற்கு முதலில் குற்றம் சுமத்தவேண்டும்.

மெக்கெயின் பெயிலவுட் பாக்கேஜ் விவகாரத்தில் ஆடியது டிராமா. அது சரியாக வேலை செய்யவில்லை. மற்றபடி மெக்கெயினிடம் ஸ்திரமான பொருளாதார கொள்கை இல்லை. அலாஸ்காவில் கினறு தோண்டினால் எண்னை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 2012க்காக காத்திருக்கிறேன்.

நன்றி: செல்வன்.