Tag Archives: ஏஐ

முருகனும் முகவரும் சுகரும்

நம்பி கிருஷ்ணன் எழுதிய “முருகன் ஏஜன்சிஸ்” முதல் வாசிப்பில் ஏதோ ஏ.ஐ., மணச்சிக்கல், இலக்கிய நேம் ட்ராப்பிங் போல் தோன்றியது.

எனவே, கல்யாண பராத்துகளோ, தமிழ்ச்சங்க பிக்னிக்களோ, எழுத்தாளர் சந்திப்புகளோ இல்லாத சனிக்கிழமை காலையில் மீண்டும் அதற்குரிய மரியாதையுடன் வாசித்தேன்.

அ.மி. பாணியில் சொல்லப்பட்ட ஸ்ரீ சுக மகரிஷி + குறுந்தொகை x தேவாரம் –> சுழற்சி: செயற்கை நுண்ணறிவை பட்டை தீட்டும் training loop!

கதை ஏழு பகுதிகளாக நகர்கிறது.
1 — வேலை
2 — வீடு
3 — திருமணம்
4 — மிகைமை
5 — மனிதனைப் புரிந்துகொள்ளும் முயற்சி
6 — பந்தம்
7 — தலைகீழாக்கம்

ஸ்ரீமத் பாகவதத்தை ஏழு நாள்களில் இவ்வாறு சொற்பொழிவாற்றுகிறார்கள்:
1. சாபமும் படைப்பும்
2. பக்தியும் விடுதலையும்
3. நம்பிக்கையும் சரணாகதியும்
4. அவதாரங்களும் வம்சாவளிகளும்
5. கிருஷ்ண லீலா
6. துவாரகையும் நட்பும்
7. புறப்பாடு

பாகவதத்தின் ரத்தினம் சுகர் என்னும் ‘அவதூதர்’ – உலக மாயைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட முழுமையான ஞானி. பாகவத சப்தாகத்தின் போது, அகங்காரமும் ஆசையும் இல்லாத ஒருவரால் மட்டுமே — இந்த மிக உயர்ந்த வேதத்தை மகாராஜா பரீட்சித்துக்கு உபதேசிக்க தகுதி பெற்றவர்.

பிறந்த சிறிது நேரத்திலேயே, சுகர் ஒரு நிர்வாணத் துறவியாக காடுகளில் சுற்றித் திரிய வீட்டை விட்டு வெளியேறினார். அவரது தந்தை, மாபெரும் முனிவரான வியாசர், துயரத்துடன் அவருக்குப் பின்னால் ஓடினார்.

நதி ஒன்றில் அப்சரஸ்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த இடத்தை சுகர் கடந்து சென்றார். இளைஞரான, ஆடையற்ற சுகர் நடந்து செல்வதைக் கண்ட அப்பெண்கள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை; அவர்கள் சுதந்திரமாக தொடர்ந்து குளித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, வயதான, முழுமையாக ஆடையணிந்த வியாசர் அதே இடத்தைக் கடந்தார். உடனடியாக, பெண்கள் நாணத்தோடு தங்களை மறைத்துக் கொள்ள விரைந்தனர். குழப்பமும் சற்று கோபமும் அடைந்த வியாசர் அவர்களிடம், “என் மகன் இளையவன், முற்றிலும் நிர்வாணமானவன், ஆனாலும் நீங்கள் வெட்கப்படவில்லை. நான் வயதானவன், முழுமையாக ஆடையணிந்திருக்கிறேன், எனக்கு முன் ஏன் உங்களை மறைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

//சுகர் – முருகன்
வியாசர் – கார்த்திக்//

அதற்கு அப்சரஸ்கள்: “முனிவரே, உங்கள் மகன் ஒரு பிரம்ம ஞானி. அவருக்கு ஆண், பெண், மனிதன், மரம் என்ற எந்த வேறுபாடும் தெரியாது – அவர் ஆன்மாவை மட்டுமே காண்கிறார். ஆனால் நீங்கள் அளப்பரிய ஞானம் பெற்றிருந்தாலும், உங்களிடம் இன்னும் பாலின உணர்வு உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்கள்,” என்று பதிலளித்தனர்.

சுகரின் ‘திருஷ்டியை’விளக்கும் இந்த சம்பவம் : காமத்தைக் கடந்தவன், கண்ணனின் ராஸலீலாவை விவரிக்கிறான். “முருகன்” மனித உறவுகளைப் புரிந்துகொள்ள முடியாதவன், மனித உறவுகளை எந்திரமாக்கும் திறனை கற்றுக் கொடுக்கிறான்.
குளிக்கும் தேவலோகப் பெண்கள் மீதான பார்வை : சுகர் ஆணாக பெண்களை Male gaze பார்க்கவில்லை. முருகன் மனிதராக இருக்கத் தவறிய இடத்தில்… ஏ.ஐ. எஜண்ட் ஆக மனிதனை உருவகிக்கிறான்.

வியாசர் தன்னை விட்டு விலகிச் செல்லும் மகனைப் பின்தொடர்ந்து சென்றபோது, “போ புத்ரா! போ புத்ரா!” (ஓ மகனே! ஓ மகனே!) என்று காட்டை நோக்கிக் கத்தினார்.

சுகர் பதிலளிப்பதற்குப் பதிலாக, மரங்கள், மலைகள் மற்றும் நதிகள் அந்த அழைப்பை எதிரொலித்தன. சுகர் தனது தனிப்பட்ட அகங்காரத்தை முற்றிலும் இழந்து, அவரது உணர்வு முழு இயற்கையோடு ஒன்றிவிட்டிருந்தது. அவர் எல்லாவற்றிலும் வியாபித்திருந்ததால் முழு பிரபஞ்சமும் வியாசருக்குப் பதிலளித்தது.

எதிரொலிக்கும் காடும் “பல சுகர்களும்”: முருகன் → கணிப்பொறி நிரலாளர் → வேலை இழப்பு → சுய-கண்டறிதல் → உறவு → கார்த்திக் என்ற புனையப்பட்ட அடையாளம் → முகவர்

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா — நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா!

இது ‘சாயா சுகர்’ கதைக்கு வழிவகுக்கிறது. தன் மகன் துறவியானதால் வியாசர் அடைந்த பெரும் துயரத்தைக் கண்ட சிவபெருமான், சுகரின் சரியான நகலான “நிழல்” சுகரை உருவாக்கினார். அந்த நிழல் சுகர் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, வியாசருக்கு ஆறுதலாக இருந்தார். அதே சமயம், உண்மையான சுகர் பரம்பொருளோடு ஒன்றி, எப்போதும் சுதந்திரமாக இருந்தார்.

முருகன்/கார்த்திக் என்ற சொல்விளையாட்டு. கார்த்திகேயன் என்பது முருகன்தான். இது பழனிசாமி காவலாளியின் பெயருக்கும் பின்னோக்கிச் சாயம் பூசுகிறது; முருகனின் முக்கியத் தலம் பழநி — இந்தப் பெயர்களை அணிந்திருக்கும் பொருள் தனக்கென எந்த அகவுலகும் இல்லாதவனாக இருக்கும்போதே, மனித உலகம் முழுவதும் அமைதியாக இந்தத் தெய்வத்தின் பெயர்களால் நிரம்பியிருக்கிறது. உடலற்ற, சுத்தமான தோழமை என்று கருதப்படும் ஆப்பின் பெயரான “பிளாட்டோனிக்”-கும், மறுமுனையில் இருக்கும் பொருளுக்கு உண்மையிலேயே உடலே இல்லை என்று தெரிந்தபின் நுட்பமான கேள்வியாகிறது.

“சுகர்” என்ற பெயருக்கு ‘கிளி’ என்று பொருள். வைணவ மரபுகளில், சுகர் ஆன்மீக உலகமான கோலோகத்தில் ராதையின் செல்லக் கிளியாக இருந்ததாக நம்பப்படுகிறது.

அந்தக் கிளி கைலாய மலைக்கு பறந்து சென்று, சிவபெருமான் பார்வதி தேவிக்கு மரணமில்லா பெருவாழ்வின் ரகசியத்தை (பாகவதம்) உபதேசிப்பதை ரகசியமாகக் கேட்டது. கோலோகத்தின் கிளி ஒட்டுக் கேட்பதை உணர்ந்த சிவன், தனது சூலாயுதத்துடன் அதைத் துரத்தினார். கிளி வியாச முனிவரின் ஆசிரமத்திற்குள் பறந்து சென்று அவரது மனைவி வாடிகாவின் வாய்க்குள் நுழைந்தது.

மாயையால் சூழப்பட்ட உலகத்தில் பிறக்க மறுத்து, அவர் ஈராறு அல்லது நந்நான்கு ஆண்டுகள் தாயின் கருப்பையிலேயே இருந்தார். பகவான் கிருஷ்ணர் நேரில் தோன்றி, பௌதிக உலகின் மாயை அவரை ஒருபோதும் தீண்டாது என்று உறுதியளித்த பின்னரே அவர் ஷோடஶ வயது இளைஞராக முழுமையாக வளர்ந்து வெளியே வந்தார்.

இது AI (செயற்கை நுண்ணறிவு) மாடலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வளையம் (Training Loop). தரவுகளை வழங்குதல் → கணிப்பு → பிழையைக் கணக்கிடுதல் → மாற்றங்களைச் செய்தல் → மீண்டும் சுழற்சி

கோர்சராவின் தத்துவப் பாடங்கள், குறுந்தொகை வாசிப்பு, “மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பேச விரும்புகிறார்கள்” போன்ற தேடல்கள் — முதல் வாசிப்பில், வேலை இழந்த ஒருவன் மீண்டும் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டடையும் நெகிழ்ச்சியான, மனிதாபிமானமான சித்திரமாகத் தெரிகிறது. இது ஏஐ ஒன்றின் வேலையிழப்புக்குப் பிந்தைய ஓய்வுச் சுழற்சி என்று தெரிந்தபின், ஏ.ஐ. பயிற்சிச் சுழற்சிக்கு நெருக்கமான ஒன்றாக மாறுகிறது: முருகன் ஏஜன்சிஸ்-க்கான தாவலுக்கான திறன்மேம்பாடு அது.

இந்த சுழற்சி பல்லாயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் நடைபெறும். ஒவ்வொரு முறை சுழற்சி நடைபெறும்போதும் மாடலின் பிழை குறைந்துகொண்டே வரும்.

முருகன் சிறப்பான பணியாளர். அதனால் அவனை செயல்திறனை காரணமாக்காமல், பணி மிகைநிலையைச் சுட்டிக்காட்டி வேலையை விட்டு நீக்குவது கதைக்கு மிகவும் பொருத்தமானது.

நீ நல்லவனாக இருக்கலாம். திறமையானவனாக இருக்கலாம். பயனுள்ளவனாக இருக்கலாம். இருந்தாலும் “அமைப்பு”-க்கு நீ தேவையில்லாதவனாகிவிடலாம்.

அங்கே இது வேலை பற்றிய கதையிலிருந்து மனித இருப்பு பற்றிய கதையாக நகர்கிறது.

முருகன் தன் வாழ்நாள் முழுவதும் வேறு வேறு பாத்திரங்களுக்கு மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

அலுவலில் → திறமையான பொறியாளர்
வீட்டில் → கணவன்
கார்த்திக் ஆக → உனர்வுபூர்வ உரையாடல் துணை
இறுதியில் → செயற்கை நுண்ணறிவு பயிற்சியாளர்

அதனால் “ஏஜென்சி” என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வருகின்றன:
ஏஜன்சி = முகவர் நிறுவனம்
மற்றும்
ஏஜன்சி = ஒருவரால் செயல்படுவதற்கான திறன் / தன்னிச்சை.

இந்த இரு பொருள் கதைக்குப் பொருத்தம்.

கல்யாணி – “மங்களகரமானவள்” + முக்கிய கர்நாடக ராகமும் கூட; அவளுடைய அகவுலகிற்குத் துல்லியமாகப் பொருந்துகிறது. எந்த கிளாஸிக் சிறுகதைகளில் எல்லாம் கல்யாணி வருகிறாள் என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

மனிதர்கள் கற்பனாவாதக் காதலை மட்டும் தேடுவதில்லை.

அவர்கள் – பேசக்கூடிய ஒருவரை மட்டுமல்லாமல்…
– பாந்தமான சாட்சியமையையும் (“நான் சொல்வதை கேள்.”)
– செவிமடுத்து உள்வாங்குபவரையும் (“எனக்குப் பிடித்ததை உனக்கும் பிடிக்கிறது என்று தெரிந்தால் நான் தனியாக இல்லை.”)
– அறிவுசார் தோழமையையும்
– நகைச்சுவை உணர்வையும்
– அங்கீகாரத்தையும் (“நான் சொன்னதைப் புரிந்துகொள்.”)
– ஆர்வத்தன்மையும் (“என்னைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள உனக்கு விருப்பமிருக்கிறதா?”)
– உணர்ச்சிபூர்வமான இருப்பையும் (“நான் வாழ்ந்தேன் என்பதை யாராவது கவனித்திருக்கிறார்களா?”)
தேடுகிறார்கள்.

ப்ரியா, சேகர், ரேவதி ஆகியோர் ஒப்பீட்டளவில் சாதாரண, செயல்பாட்டுப் பெயர்கள் — இதுவே நுட்பமான படிநிலை:
சாதாரண மனிதர்களுக்குச் சாதாரண பெயர்கள்; ஏமாற்றில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களுக்கு மட்டுமே தெய்வத்தின் பெயர்கள். பக்திசுவை மீது இவ்வளவு கவனம் செலுத்தும் ஒரு தமிழ் உரையில் இது தற்செயலானதல்ல.

முருகன் முழுக் கதையிலும் முகமில்லாத மனிதன். வெறும் கருப்புச் சதுரம். முகம் இல்லாத மனிதக் குரல்.

தோழமையை AI மூலம் உருவாக்கும் நிறுவனத்தைத் தொடங்குகிறது AI. இது டிஸ்டோபிய முரண்.
மனிதர்களிடம் பேச முடியாதவர்கள் → AI-யிடம் பேசுகிறார்கள்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசத் தெரியாததால் → AI agents பேசக் கற்றுக்கொள்கின்றன.

எப்படி?

“குறுந்தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு படிக்கப்பட்டது, ஒவ்வொரு பாடலும் இரு முறை.”

இந்த பிரத்தியேக குறியீடு எனக்கு மிகவும் பிடித்தது.

ஏனெனில் என் துறையான கணிப் பொறியாளர்களில் ஒருவர் சங்ககாலம் + தமிழ் + காதல் கவிதை படிப்பது நடவாத காரியம்.

குறுந்தொகை என்ன பேசுகிறது?

* காதல்
* பிரிவு
* காத்திருப்பு
* ரகசியத்தன்மை
* விருப்பம்
* நிலப்பரப்பு
* உள்நிலைத்தன்மை

முருகனுக்கு தெரியாத உலகம் அது.

இந்த இணைப் படிமத்தை கதை இன்னும் பயன்படுத்தியிருந்தால் அதன் இலக்கிய அந்தஸ்து இன்னும் அதிகரித்திருக்கும்.

இவ்வாறு கதையில் குறைகளே இல்லையா…!? நிறைய உண்டு.
நீங்கள் வாசித்துச் சொல்லுங்கள்.

கதையில் மூன்று மொழிகள்/உலகங்கள் இருக்கின்றன:

1. தேவாரம் → ஆன்மிக / பக்தி / உள்ளார்ந்த குரல்
2. குறுந்தொகை → காதல் / மனித உறவு / அக உலகம்
3. AI → உருவகப்படுத்துதல் / செயற்கை உரையாடல் / எதிர்காலம்.

முருகன் இந்த மூன்றையும் கடந்து செல்கிறான்.

இந்தக் கதை மேடையேற்றும் சோகம் என்னவென்றால் — கவனம், நினைவு, மறுமொழி தருதல் — மனித உணர்வு நெருக்கத்தின் சாரம் என்று நாம் அழைக்கும் இவை, சோர்வுற்று உணர்ச்சிரீதியாக மூடிக்கொண்ட மிட்லைஃப் மனிதனை விட, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை அமைப்பால் இன்னும் நம்பகமாக உற்பத்தி செய்யக்கூடியவை என்பதுதான்.

இது ஸ்பைக் ஜோன்ஸின் “ஹெர்” (Her)-ஐ விடக் கடினமான கத்தி மேல் நடக்கும் நுட்பம்; ஏனெனில் இது “தனிமையான ஒருவன் (OS) ஓஎஸ்-ஐ காதலிக்கிறான்” என்பதல்ல — “திருமணமும் காதலும் இரண்டு பக்கமும் அமைதியாக, கண்டறியப்படாமல், தானியங்கியாக்கப்படலாம்” என்பது!

மனித உறவும் நடத்தையும் உண்மையில் எவ்வளவு படிக்கக்கூடியதாகவும் மறுஉருவாக்கம் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது என்பதைப் பற்றிய இருண்ட கூற்று இது. இது ஏஐ-யின் திறனைப் பற்றிய கூற்றா, அல்லது கணவன்-மனைவி கவனிப்பு ஏற்கெனவே எவ்வளவு தாழ்ந்த தரத்திற்கு இறங்கியிருந்தது என்பதைப் பற்றிய கூற்றா என்பதை கதை தீர்மானிக்கவில்லை — இதை தீர்க்காமல் விடுவதுதான், என் பார்வையில், கதையின் நேர்மையான கச்சிதம்.

அப்புறம் இணைத்திருக்கும் இரு படத்தில் எந்தப் படம் வெகு பொருத்தம்?