இரு நாடுகள் – இரு தலைமுறைகள்

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சாலை விதிகளை மூன்று விதமாகப் பார்க்கிறேன்.

அமெரிக்காவிலும் aggressive driving போன்ற குணாதிசயத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால், காவல்துறை குறித்த பயம் அது பல்கிப் பெருகாமல் தடுத்திருக்கிறது. ஏதாவது தப்பு செய்தால் விழியத்தில் ஒளிப்பதிவாகி இருக்கும்; அதன் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கடுமையான பண இழப்பும் நீங்கா காப்புறுதி களங்கமும் கிடைக்கும் என்னும் அனுபவ பாடத்தில் விளைந்த சட்டத்தை பின்பற்றல். போலீஸ் மட்டும் தூணிலும் இருப்பான்/துரும்பிலும் இருப்பான் நிலை இல்லாவிட்டால் இந்தியர் போன்ற சாலை ஒழுங்கு லண்டனிலும் வந்துவிடும்.

இன்னொரு விதமாகப் பார்த்தால் இந்தியர் ‘தன் கையே தனக்குதவி’ ரகத்தினர். பஞ்சாயத்து ராஜ் என்பார்கள்; ஆனால், காரியம் ஆக வேண்டுமானால் எம்.பி. சிபாரிசை நாடுவார்கள். ‘சமூகத்தில் நீ விரும்பும் மாற்றமாக நீயே இரு’ என்னும் காந்தியைப் போற்றுவார்கள்; அனால், அரசர் ஒரு கப் பால் கேட்டால், ‘நான் மட்டும் ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றினால் வித்தியாசம் தெரியாது’ என்னும் கதை கேட்டு வளர்ந்தவர்கள்.

சுதந்திரத்திற்குப் பின் உருவான தலைமுறையினரின் வளர்ப்புமுறை இன்னொரு முக்கிய காரணம். என்னுடைய சம வயதினரின் பெற்றோரைப் பார்க்கும்போது சிக்கனத்தையும் நேர்மையையும் குழப்பிக் கொண்ட சமூகத்தையே காண்கிறேன். இன்றைக்கு ஐம்பதைத் தாண்டிய வயதினர் தன்னிடம் பிறர் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படிதான் பிறர் பொறுமையாக சட்டத்தை பின்பற்று என வலியுறுத்துகிறார்கள். அதே தருணத்தில், தங்கள் மனசாட்சிக்கு குந்தகம் விளைவித்துக் கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை எதுவும் இருப்பதில்லை. இவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இன்றைய தலைமுறை தன் வரம்புக்கு மீறிய செயல்களை (சிக்கனமின்மை) செய்ய சகலமும் ஓகே என்கிறார்கள்.

நல்ல சுவாரசியமான அறிபுனை கதைக்கு ஒரு உதாரணம்

2013ல் புலிட்சர் பரிசு பெற்ற ஆடம் ஜான்சன் இந்த மாத Esquireல் கதை எழுதியிருக்கிறார். தற்கால காலச்சுவடு, சொல்வனம்.காம் போன்ற இதழ்களில் வரும் எந்தப் புனைவும் இதற்கு நிகரானவையே.

கதை ஏன் என்னை கவர்ந்திழுத்தது? சிறுகதையின் தலைப்பு ‘நிர்வானா’. அது எனக்கு ரொமபவேப் பிடித்த இசைக்குழு.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரக ஆரம்பம். திடீரென்று வாயில் நுழையாத வியாதி வந்த மனைவி. கை, கால் இழுத்துக் கொண்டுவிடுகிறது. அவளை மிகவும் அனுசரித்துப் பார்த்துக் கொள்ளும் கண்கண்ட கணவன் என்று பீம்சீங் காலத்து உருகல். ஆனால், அதை கவுதம் வாசுதேவ் மேனன் நடையில் சொல்லியிருக்கிறார். செயலிழந்த உறுப்பு கொண்ட அவர்களுக்கிடையேயான உடலுறவு சொல்லும்போது கூட நன்றாகவே உரு ஏற்றுகிறார்.

இலக்கியத்தில் அடிக்கடி கேட்கப்படும் வாசகம் ‘தட்டை’. இந்தக் கதையில் அதைக் காணோம். களன் சிலிக்கான் பள்ளத்தாக்கு. நாயகனும் கண்டுபிடிக்கிறான். அதுவும் எந்த சமயத்தில்? மனைவியை கண்ணும் கருத்துமாக விழித்திருந்து கவனித்துக் கொண்ட பதினைந்தே நாள்களில் ’ஹாலோகிராம்’ மனிதர்களை உருவாக்குகிறான். சாதாரண hologram அல்ல. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் உருவத்திற்கு உயிர் தருகிறான். இணையம் மூலமாக அவரின் விழியப்படங்களையும் ஒளிப்படங்களையும் நடை உடை பாவனைகளையும் இணைத்து உலவ விடுகிறான்.

இந்த மாதிரி ஹோலொகிராம் உருவாக்குவதால் என்ன பிரச்சினைகள் எப்படி எல்லாம் எழும் என்பதையும் அறிபுனைவாக அலசுகிறது சமூகப் புனைவு. எல்லோரும் பொய் உருவங்களைக் கோரி அவனிடம் வருகிறார்கள். அவனே அந்த மாதிரி ஒரு தோற்றத்தை சரி செய்யும் reputation management பணியாளன். இப்பொழுது இறந்து போன நிர்வாணா குழுவின் கர்ட் கோபேனுக்கு நிகர் உருவாக்குவது சரி… வாழ்ந்து கொண்டிருந்தாலும் அசைவற்ற மனைவிக்கு நிகர் உருவாக்குவது கூட சரி… ஆனால், ஃபேஸ்புக்கில் எக்குத்தப்பான படம் போட்டுவிட்டு அதை அகற்ற போலி நிகர் உருவாக்குவது எப்படி சரி?

இது எதிர்கால உருவகம். கூடவே, சமகால கூகிள் கண்ணாடியும் ஆளில்லாமல் பறக்கும் விமானங்களும் வருகிறது. அவனே இயந்திரகதியில் இயங்குவதை இந்த இரண்டு வன்பொறிகளும் உணர்த்துகின்றன. எவரோ இயக்க, எங்கோ பறந்து, எவற்றையோ பார்க்க வைக்கும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் drone, மனைவிக்கு புது உலகத்தைக் காட்டுகிறது. கட்டிலிலும் நரம்புகள் எங்கும் ஊசித் துளைப்பாக முடங்கியவரை, தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இருபது பக்க சிறுகதை எழுதுவது பெரிய விஷயமல்ல… நாலு அறிவியல் கண்டுபிடிப்புகளை புனைவில் தூவுவது பெரிய விஷயமேயல்ல… நேற்று தோன்றிய வியாதிகளை விவரிப்பது புதிய சரக்கேயல்ல… கவித்துவமாக உருவகங்களை உலவ விடுவது சங்கத்தமிழ் சங்கதி… ஆனால், எல்லாவற்றையும் சுவாரசியமாக, பக்கங்களை ஆர்வமுடன் புரட்டுமாறு ஒரே கதையில் புழங்க விடுவது மிகப் பெரிய விஷயம்.

தமிழில் நான் எழுதினால் மட்டுமே சாத்தியம்.

தேஸி என்பவர் யார்? அமெரிக்காவில் இந்தியரின் குறியீடுகள்

பொதுமையாக்கலுடன் நிறைய பிரச்சினை உண்டு. அதுவே ஒரு பொதுமைப்படுத்தல்தான் என்பதால், அமெரிக்க வாழ் சகாக்கள் குறித்த பொதுக்காரணியாக்கல்:

“It is lamentable, that to be a good patriot one must become the enemy of the rest of mankind” என்கிறார் வால்டேர். இதையே “தான் உண்டு… தன் வேலை உண்டு என்று இருந்தால் சக இந்தியத் தொழிலாளிகளின் எதிராளியாக மாற்றுவது தேஸி மனப்பான்மை” என்று மொழிபெயர்க்கிறேன்.

இருப்பு கொள்ளாமையில் தவிக்கிறார்கள். “அவள் என்ன செய்கிறாள்?” என்று அறிவதை இலட்சியமாக வைத்திருக்கிறார்கள். காசு செலவழிப்பதற்கு அஞ்சாதவர்கள், கஞ்சத்தனத்தைக் கைவிட மறுக்கிறார்கள். பதற்றமும் அச்சமும் நடுத்தர வர்க்கத்தின் குறியீடுகளா அல்லது நடுத்தர வயதின் குறியீடா என குழப்பவைக்கிறார்கள். நொடிக்கு நொடி மாறும் விளம்பரம் போல் குவிமையமின்றி அலைபாய்ந்து வேகமாக தாவிக் கொண்டே பறக்கிறார்கள்.

ஹோட்டலுக்கு சென்றால் tip வைக்காமல் வருவது; பாத்ரூமிற்கு சென்றால் சீப்பை எடுத்து இல்லாத சிகைக்கு அலங்காரம் செய்வது; காபி எடுக்க சென்றால் கூடவே ரத கஜ துரக பதாதிகளை அழைப்பது; உங்களோடு தெலுங்கானா குறித்து காரசாரமாகப் பேசிவிட்டு, நீங்கள் பதிலளிக்க ஆரம்பித்தால் ஃபேஸ்புக் பக்கம் சென்று விடுவது…

இதெல்லாம் இந்தியக் கலாச்சாரமா? தேசிக் கலாச்சாரமா? என்று சீமான் அமெரிக்கா வரும்போது “மக்கள் முன்னால்” விவாதிப்பார்.

காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள்

அமெரிக்காவில் இப்போது இரு வார்த்தைகள் பலமானப் புழக்கத்தில் இருக்கின்றன. பாஸ்டன் மாஃபியா கும்பல் தலைவர் வைட்டி பல்ஜர் (Whitey Bulger)க்கு ‘Rat’. இன்னொரு பக்கம் எட்வர்டு ஸ்னோடென் (Edward Snowden)க்கு ’Whistleblower’.

சொந்த சகோதரர்களின் செய்கையைக் காட்டிக் கொடுத்தால் Rat. குறிப்பாக கொள்ளையர்களுக்கு நம்பகத்தன்மை மிகவும் அவசியம். அவ்வாறு சகாக்களை நம்பி ஒப்படைக்கும் விஷயங்களை காவல்துறையிடம் போட்டுடைப்பது மித்திர துரோகம் மட்டுமல்ல… அதையும் தாண்டி பாதகம் விளைவிப்பது என்பதால் Rat.

சகுனி வேலை செய்தால் Whistleblower. இது ராஜத்துரோகம். பெரிய அளவில் சதி செய்து, உள்ளாளாக நுழைந்து, அரசாங்கத்தில் உளவு பார்த்தால் Whistleblower. சந்தர்ப்பவசத்தால் கவிழ்ப்பது Rat. சூழ்ச்சி செய்து கவிழ்ப்பது Whistleblower.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியவர்கள் யார் என்று ஒருவர் வெளியிட முடியாது. கொன்று விடுவார்கள். பிராட்லி மானிங் மாதிரி ஒற்று அறிக்கைகளை விக்கிலீக்ஸ் ஆக்கினால், குற்றஞ்சாட்டப்பட்டு கம்பி எண்ணுவார்கள். 9/11 திவிரவாதிகளின் ஆதிவேரை கிளற முயற்சித்தால் கோலீன் ரௌளி (Coleen Rowley) மாதிரி காணாமலும் போய்விடுவார்கள். மோனிகா லூயின்ஸ்கியும் பில் கிளிண்டனும் ஜலபுலாஜல்ஸ் செய்ததை சொன்னால் லிண்டா ட்ரிப் மாதிரி புகழும் பெரும்பணமும் பெற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

ஆரன் ஷ்வார்ட்ஸ் போல் தற்கொலை செய்யாமல் பதுங்கி வாழும் ஜூலியன் அஸாஞ்சேக்கள் வாழ்க!

சசிகுமாரின் ‘குட்டிப் புலி’

குட்டிப் புலி படம் பார்த்தேன். அந்தப் படத்தின் சாமுத்ரிகா லட்சணத்தைக் கண்டு ஆச்சரியப்படலாம். வெற்றிகரமான மசாலா சினிமாவிற்கு பதின்மூன்று விஷயங்கள் இருக்கவேண்டும்.

1. ரெண்டு நிமிஷத்துக்குள்ளாற கதைய சொல்லிறணும்: போக்கிரிப் பயலுக்கு கலியாணமாவ மாட்டேங்குது. அப்பாவப் போல பையனும் வெட்டு குத்துனு சாகக்கூடாதுனு அம்மா நினைக்கிறா. இதெல்லாம் நடந்துச்சா?

2. திரையில் நம்மையே பாக்குற மாதிரி ஹீரோவோ (ஹீரோயினோ) இருக்கணும்: படிக்காத ஹீரோ; பக்கத்து வீட்டுப் பைங்கிளி தானாகவே வந்து காதல் செய்யுற ஹீரோ; கைநிறைய காசு கொடுத்து செலவழிக்கச் சொல்லுற அம்மா இருக்கும் ஹீரோ.

3. செண்டிமெண்ட் நிறைந்த கதை: அம்மா பாசம் இருக்கா: செக்… அடி வாங்குறானா: √ அனாதையைக் காப்பாத்துறானா: √ நியாயத்தைத் தட்டிக் கேட்குறானா: √

4. படம் முழுக்க தடக் தடக் அபாயம்: சினிமாவின் முதல் காட்சியிலேயே அந்த எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கப் போகும் அபாய அணுகுண்டு டிக் டிக் கேட்க ஆரம்பிக்க வேண்டும். திரைக்கதையின் துவக்கத்திலேயே பார்வையாளன் சீட் நுனிக்கு வர வேண்டும். இங்கே ஹீரோவும் கொலை செய்வானா, ஜெயிலுக்குப் போவானா என்பது தோன்றுகிறது. சசிகுமாரும் இளைய தளபதி விஜய் அல்ல. செத்துக் கூடப் போய்விடலாம் என பயப்பட வைக்கிறது.

5. கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ரசனை: ஷங்கருக்கு இது பிரும்மாண்டமாகப் படலாம். தெலுங்கர்களுக்கு இது மூன்று நான்கு நாயகிகளாகத் தோன்றலாம். ரஜினிக்கு ஸ்டைலாக இருக்கலாம். சசிகுமாருக்கு எண்பதுகளின் நாஸ்டால்ஜியா. இளையராஜா பாடல்கள்; தாவணி போட்ட ஸ்ரீதேவி நாயகி.

படம் ஹிட் ஆவதற்கான பாக்கி எட்டு சூட்சுமம் கூட சொல்லலாம்… ஆனால், சசிகுமார் இதெல்லாம் பார்த்து பார்த்து படம் செய்வார் என்பது திரைக்கதையின் அரசியல், இரண்டு பொண்டாட்டி நியாயம், பார்ப்பனர்களை இழிவுபடுத்தல் என்றெல்லாம் ஆராய்வதற்கு ஒப்புமானம்.

எழுத்தாளர் + சிந்தனையாளர் + குரு = இயக்கம்?

எந்தவொரு எழுத்தாளருக்கும் இல்லாத தலைமைப் பண்பு ஜெயமோகனிடம் இருக்கிறது. வெறுமனே ஃபேஸ்புக் குழு, மின்னஞ்சல் அரட்டை என்று இல்லாமல் செறிவான விவாதம், பண்பட்ட மாற்றுக்கருத்துகளுக்கு இடம், பரஸ்பர அறிமுகம், செல்ல சீண்டல், கடுமையான எதிர்வினை எல்லாவற்றுக்கும் தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். மடல்கள் தொய்யும்போது தானே நுழைந்து உரையாடலை மேம்படுத்துகிறார்.

அந்தக் குழுவில் அங்கத்தினராக இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மனநிறைவை மட்டுமல்லாது, சுற்றுலா செல்லும்போது அவர்களை நேரடியாகப் பார்த்து உரையாடும் வாய்ப்பையும் தருகிறது.

ஜெயமோகனின் சொல்புதிது குழும நண்பர்களை லண்டனில் சந்தித்தேன். விமான நிலையத்திற்கே வந்து பெட்டி படுக்கைகளை எடுக்க உதவிய கிரி, காடு நாவலுடன் காணக் கிடைத்த எஸ்ஸெக்ஸ் சிவா, படு பாந்தமாக பேசிக் கொண்டிருந்த பிரபு என்று சுவாரசியமான பேச்சு. சிறில் அலெக்ஸும் வந்திருந்தால் இன்னும் கனஜோராக இருந்திருக்கும் என்பது தவிர வேறெந்த குறையும் இல்லாத மாலைப்பொழுது.

தமிழில் எழுதும் எல்லாரையும் தெரியும்னு சொல்லலாம்தான்… ஆனால், அவர்களுக்கு என்னைத் தெரியுமா : )

மேலும், இங்கே நான் சொல்வது தலைமை தாங்கி வழிநடத்தும் குணாதிசயத்தைக் குறித்தது…

ஒருவர் நல்ல சுவாரசியமான/முக்கியமான படைப்பு எழுத்தாளராக இருப்பது வேறு விஷயம். அந்த நல்ல எழுத்தாளரே வழிகாட்டியாக இருந்து, பலரை ஒருங்கிணைத்து, மக்களிடம் செல்வாக்கும் நிறைந்து, அவர்களிடம் செயலாற்றலையும் தோற்றுவித்து, தன்னுடைய வாசிப்பாளர்களுக்கு தன்னிறைவையும் தந்து, அவர்களின் கிரியாஊக்கியாகவும் விளங்குவதை குறிப்பிட நினைக்கிறேன்.

நன்றி ஜெயமோகன்.

நுழையுரிமை முதல் குடியுரிமை வரை

ஒழுங்குமுறையாக அமெரிக்காவிற்கு குடிபுகுந்த இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் எப்போதும் இருக்கும் அச்சம் என்பது ‘நிரந்தரக் குடியுரிமை’ வருமா? எப்போது வரும்? வருவதற்குள் பெற்றோர் மண்டையைப் போட்டால், இந்தியாவிற்கு அவசரமாக செல்ல முடியுமா? அப்படி சென்றால், திரும்பி அமெரிக்கா நுழைவதற்கு விசா போடவேண்டுமா? விசா கிடைப்பதற்கு எத்தனை நாள் இந்தியாவிலேயே காத்திருக்க வேண்டும்? விசா படிவத்தில் என்ன எல்லாம் கேட்பார்கள்? பிறப்பு சான்றிதழ் வைத்துக் கொண்டிருக்கிறோமா? எச்1-பி எப்போது காலாவதி ஆகிறது? எப்பொழுது நீட்டிக்க வேண்டும்? அதற்கு என்ன எல்லாம் ஜெராக்ஸ் போட வேண்டும்? எப்படி தபாலில் அனுப்ப வேண்டும்?

இப்படி எண்ணிலடங்கா கவலைகளும், தாள்களும், தகவலேடுகளும், கோப்புகளும், தேதிகளும், அறிக்கைகளும், ஆய்வுகளும் நிறைந்தவை.

நாளைக்கு நடக்கப் போவதை நமக்கு கடவுளோ அறிவியலோ தேதிவாரியாக சொல்வதில்லை. வருங்காலத்தை மட்டும் அட்டவணை போட்டு மாதாமாதம் ஆருடம் வெளியிட்டால், அதை விடப் பெரிய மனக்கிலேசம் எதுவும் இருக்காது.

ஆனால், அமெரிக்க குடிபுகல் துறை இந்த வேலையை கர்மசிரத்தையாக செய்கிறது. இளங்கலை மட்டும் படித்தவருக்கு எப்பொழுது ‘பச்சை அட்டை’ வேலை துவங்கும்; முதுகலை மட்டும் வாங்கியவருக்கு எந்தத் தேதியில் குடிநுழைவு விண்ணப்பம் வாங்கப்படும்; அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்தவருக்கு எத்தனை நாள் இன்னும் அமெரிக்காவிலேயே இருக்க பாத்யதை; வேலைக்காக வந்தவர் எந்த நாளில் தகுதிக்கான தடவுகளை தர வேண்டும் என்று பட்டியல் போட்டு இணையத்தளத்தில் சொல்லுகிறது.

பங்குச்சந்தை மேலே ஏறும்… இறங்கும். அது போல் இந்தத் தேதிகளும் தடாலென்று முன்னேறும்… அவ்வாறே பின்னோக்கியும் பயணிக்கும். பங்குச்சந்தைகளில் சில நிறுவனங்களின் மதிப்பு உயரும்… அவ்வாறே சில நாட்டு மக்களின் குடிமைப் பத்திரம் வேகமாக நடக்கும். அங்கே பணத்தோடு விளையாட்டு; இங்கே வருங்கால வாழ்க்கைக்கான கணக்கு.

என்னதான் குடியுரிமை கிடைத்து பரமபதத்தை அடைந்துவிட்டாலும், ட்ரெவான் மார்ட்டின் மாதிரி சில வழக்குகள் நமக்கு உண்மை நிலையை இடித்துரைத்துக் கொண்டே இருப்பது வேறு விஷயம்.

பூச்சி சங்கீதம்: வண்டுகளில் இசை லயமும் சத்தங்களும்

Bug Music: How Insects Gave Us Rhythm and Noise – by – David Rothenberg சமீபத்தில் வாசித்தேன்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடிமக்கள் இளையராஜாவா, ஏ ஆர் ரெஹ்மானா என பிணக்குப் போட்டு கொள்வதற்கான மூத்த காரணத்தை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. பல கோடி மில்லியன் ஆண்டுகள் முன்பே பூச்சிகள் இருந்ததை நாம் அறிவோம். அதில் இருந்து புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் ஆனதும் அறிவோம்.ஆனால், அந்தப் பூச்சிகளிடம் இருந்துதான் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்று அறிந்து கொண்டதை அறிவோமா?

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை குறிஞ்சி பூப்பது இருக்கட்டும்; பதினேழு ஆண்டுகள் கருத்தரிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அளபெடை இசைக்கும் சிகாடா (cicada) பூச்சிகளை கவனித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல… இவருக்கு முன்னோடியாக 1690இலேயே மட்சுவோ பாஷோ என்பவர் சிக்காடாக்களின் தாளங்களை ரசித்து ஹைக்கூ ஆக்கியதையும் கவனிக்கிறார். 1980களில் வந்த ஆராய்ச்சி பத்திரிகைகளைப் புரட்டி அதில் கவனிக்கப்பட்ட பூச்சிகளின் ராகங்களையும் ஆய்கிறார். புத்தகத்தின் ஆசிரியர் டேவிடுக்கு அசாத்திய பொறுமை கலந்த விடா ஆர்வம்.

பறவையின் குரலில் பாட்டு கேட்பது எளிது. வைரமுத்து கூட குக்கூ எனக் இந்தக் குயில் கூவாதோ எனத் தொட்டு, மைனா, மயில், கோழி, வாத்து எல்லாவற்றையும் மெல்லிசையில் மடக்கியுள்ளார். டேவிட் ராதன்பெகும் அவ்வாறே. புறாக்கள் விருத்தம் போடுகிறதா, கிளி செப்பலோசையில் உருகுகிறதா, மஞ்சக் காட்டு மைனா எகனை மொகனையுடன் மெல்லிசைக்கிறதா என துவங்கி இருக்கிறார். இந்தப் புத்தகம் முடிந்தவுடன் கிரிக்கெட் பூச்சிகள், சுவர்க்கோழிகள் துணையுடன் இசைத் தொகுப்பே வெளியிட்டிருக்கிறார்.

இந்த சினிமாப் பாடல் எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதி வேர், எங்கோ பூச்சிகளின் மெட்டில்தான் இருக்கும் என்று நீங்களும் ஆய்வுபூர்வமாக நம்பவேண்டுமானால், புத்தகத்தை வாசிக்கணும்.

படுத்து உருள ஒரு பாத்ரூம்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தவுடன் என்னை முதன் முதலில் ஈர்த்தது பாத்ரூம்தான். அதுவும் சாதாரண பாத்ரூம் அல்ல… ‘Disabled Bathroom’.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவசரமாக வந்தது. பத்து மணி நேர விமானத்தின் இறுதியில், நீங்கள் டாய்லெட்டுக்கு சென்றால், உங்களுக்கு ‘வானூர்தியத்து செருவென்ற சலக்கசெழியன்’ என்னும் பட்டம் கொடுக்கலாம். லண்டனில் இருந்து கிளம்பியவுடன் கிடைக்கும் பழரசங்களும், பொறைகளும், ஏ.வி.எம்.எல்.களும், கோழிக் குருமாக்களும் கலந்து கிடைக்கும் சுகந்தத்தின் நடுவில் உட்கார்வதற்கு நேரடியாக புத்தரிடமே ஞானோபதேசம் பெற்றிருந்தாலும் இயலாது.

எனவே, காத்துக் கிடந்த வேகம். அதனுடன், பீறிடும் உற்சாகம். நுழைந்தவுடன் காலியாக இருந்த கழிவறைக்குள் நுழைந்தால், நான் பம்பாயில் இருந்த பெட்ரூமை விட பெரிய அறை. இந்த மாதிரி விசாலமான இடத்தில் நால்வரை வாடகைக்கு அமர்த்தலாமே என எண்ண வைக்கும் தேம்பத் தவள உருள வைக்கும் புழக்கப் பிரதேசம். கொணர்ந்த பெட்டிகளை ஈசானிய மூலையில் சார்த்துவிட்டு, போட்டிருந்த கவச கோட்டுகளை வாஸ்துப்படி மாட்டிவிட்டு, கையில் குமுதத்தை எடுத்துக் கொண்டு, நிம்மதியான வெளியீடு.

பீடம் கூட கொஞ்சம் உயர்வாக அசல் ராஜாக்களின் சிம்மாசனம் போல் சற்றே வசதியாக காணக்கிடைத்தது. பிருஷ்டத்தை அமர்த்துவதற்கு எந்தவித சமரமும் செய்யாமல், சாதாரணமாக அமர முடிந்தது. வேலை ஆனவுடன், உள்ளேயே கை அலம்பும் இடம். சொந்த ஊர் மாதிரி சோப் போட்டு சுத்தம் செய்த பிறகு ஆற அமர ஆடைகளை மாட்டிக் கொள்ளும் வசதி.

முடித்துவிட்டு, வெளியில் வந்தால், சக்கர நாற்காலிக்காரர் முறைத்துப் பார்க்கிறார். அவருக்காக பிரத்தியேகமாக இருக்கும் இடத்தில், அத்துமீறி, சகல போஷாக்குடன் இயங்கும் ஒருவன் ஆக்கிரமித்துக் கொண்டால் கோபம் வராதா? ஆனால், என்னவாக இருந்தாலும் வாய்ப்புக் கிடைத்தால், மாற்றுத்திறனாளிக்களுக்கான கழிப்பிடத்தை உபயோகிப்பதை தவறவிடாதீர்கள்.

லண்டன் சுற்றுலா

victoria-railway-station-london-david-french
லண்டன் அசப்பில் பார்த்தால் தேர்ந்த அமெரிக்க நகரம் போல் இருக்கிறது. சொல்லப் போனால் நியு யார்க்கின் ஒன்று விட்ட தம்பி போல் தெரிந்தது. ஆங்காங்கே சூதாட்ட மையங்கள்; இரயில்வே ஸ்டேஷனிலேயே ’வை ராஜா வை’ விளையாடலாம் எல்லாம் பார்த்தால் கோட் சூட் போட்ட லாஸ் வேகாஸ் வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தைக் கொடுக்கும்.

காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வோர் கையில் பை இருக்கும். அது மாதிரி லண்டனில் வேலை முடிந்து வீடு திரும்புபவர் கையில் பியர் இருக்கும். பொதுவில் பியர்சாந்தி செய்வதை லாஸ் வேகாஸ் மட்டுமே தரிசனம் செய்திருக்கிறேன். லண்டனில் குடி கொண்டாட்டமாக இல்லாமல் உதிரமாக இணைந்திருக்கிறது.

கண்காணிப்பு கேமிராக்களின் அணிவரிசை, நிஜமாகவே ’The Truman Show’ படப்பிடிப்பில் அங்கம் வகிக்கிறோமோ என சினிமாவை வாழ்க்கையோடு இணைத்தது. நட்ட நடு பாரிஸ் நாட்டர்டாம் தேவாலயத்தின் எதிரேயே ஒன்றுக்கிருப்பவர்கள் போல் எல்லாம் இல்லாமல் லண்டனில் சந்து பொந்துகளில் எங்காவது எச்சில் துப்பினால் கூட தபாலிலே சம்மன் அனுப்புவார்கள் என இங்கிலாந்துக்காரர்களை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள்.

மதிய உணவிற்கான இடைவேளையை கர்ம சிரத்தையாக பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நகரங்களின் அலுவல் வாழ்க்கையில் பெரும்பாலானோர் ஓடிக்கொண்டேதான் சாப்பிடுவார்கள். ஒரு கவளம் சாப்பாடு; நாலு வரி நிரலி. அல்லது ஒரு கடி சாண்ட்விச்; எட்டு வரி பதிவு… இப்படி வேலையும் கையுமாக உண்ணாமல் ஆற அமர புல்தரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து போஜனம் புசிப்பதையும் இங்கேக் கொட்டிக் கொள்வதையும் பார்த்தாலே டம்ஸ் கேட்டது என்னுடைய அமெரிக்க வயிறு.

குப்பை போல் ஒதுக்கித்தள்ளும் குடிசைவாசிகளின் ஒதுக்குப்புறங்களும், காடுகளுக்குள் வீடு அமைக்கும் புறநகர் கலாச்சாரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், அவற்றில் கோடானு கோடிகளை அள்ளும் வங்கிக்கூலிகளும், அறிமுகமில்லாதவர்களுக்கு உள்ளீடற்ற ஷோ கேஸ் சிரிப்பு முகமும், தவறுதலாக இடித்தால் கண்டிப்பு நிறைந்த போலி மன்னிப்புகளும், மேற்கத்திய நாகரிகமாகக் கருதும் புறப்பூச்சு நாசூக்குகளும், இன்னொரு அமெரிக்காவையே எனக்கு இங்கிலாந்தில் காட்டிக் கொண்டிருந்தது.
TrainView_Slums_Ghetto_London_England_UK_Victoria_Station-Railways_Poor