Tamil Drama Review

ரகசிய ஸ்னேகிதியே

Director Chats‘நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்’ கடைசியாக ‘பொங்கல் விழா’வில் கூடியது. அதற்குப் பிறகு அடுத்த சந்திப்பாக, நியு ஜெர்ஸி ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் குழுவின் நாடக நிகழ்வு.

மேகமூட்டமான இரவில் அரிதாகத் தென்படும் நட்சத்திரங்கள் போல் பாஸ்டனில் தமிழர் கொண்டாட்டங்கள் எப்பொழுதாவதுதான் கிடைக்கிறது. அவ்வப்போது கண்ணில் மாட்டும் நட்சத்திரங்களையும் யாரும் கண்டு மகிழாமல், சன் டிவிக்குள் புகுந்து விட்டிருக்கும் சூழ்நிலை.
Kathir Faints
அளவான கூட்டம். இலவசமாக நடந்த பொங்கல் விழா போல் நாடகமும் காசு வாங்காமல் நடத்தப் பட்டிருந்தால், இன்னும் கொஞ்ச பேர் வந்திருப்பார்கள். திருட்டு விசிடியை ஆதரிக்கும் தமிழுலகில் இருந்து வந்தவர்களிடம் நுழைவுப் பணம் கேட்கலாமா?

வெகுஜன எழுத்தாளர் பிரும்மா. ‘வணக்கம் தமிழகம்’ நேர்காணலில் நாடகம் சுறுசுறுப்பாக பயணத்தைத் தொடங்குகிறது. குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கப் பெறுகிறோம். பிரும்மா எழுதும் காதல் கதையின், பின்கதைதான் ‘ரகசிய சினேகிதியே’ நாடகம்.

அரங்கத்தின் ஒரு பாதியில் பிரும்மா எழுதும் காதல் கதை அரங்கேறுகிறது. மற்றொரு Stage in Stageபாதியில் பிரும்மாவின் எழுத்தாக்க முரண்கள் தரப்படுகிறது. திரைக்கு முன்னும் பின்னும் நடப்பவை, கதைக்குள் கதை என்று தொய்வில்லாமல் செல்கிறது.

நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக தாமோதரனை முடிவு செய்வதன் தாத்பர்யம்; வெள்ளித்திரையில், பணக்கார வீடு என்றால் அம்மா இருக்கமாட்டாளே என்னும் சினிமா இலக்கணங்களை மெல்லிதாக சாடுவது; மருத்துவத்திற்குப் படிக்கும் காவ்யாவிற்கும் மருத்துவர் கதிருக்கும் காதல் திருமணம் நடைபெற வைப்பதுடன் நாடகம் முடிகிறது.

Doctor Directorமதுரையில் இருந்து சென்னை தூரம் அளவு இருக்கும் நியு ஜெர்ஸி – பாஸ்டன் தொலைதூர பயணத்தில் கூட சோபா, இருக்கைகள், அரங்க அமைப்பு என்று கவனித்து அமைத்திருந்தார்கள். நாடகத்தின் வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தாலும், இயல்பாக நடிகர்களிடமிருந்து வெளிப்பட்டாலும், இன்னும் கொஞ்சம் இளசாக, புதுசாக இருந்திருக்கலாம். தனக்கு முக்கியமல்லாதவற்றை மறந்து விடும் ஹீரோயினிடம் ‘என்றைக்கு எவன் உடம்பில் எதை மறந்து வைக்கப் போறியோ’ என்று Aariya Uthadugal Bhawanஅங்கலாய்க்கும் அம்மாவின் உரையாடல்கள் போல் நாடகம் நெடுங்க ஆங்காங்கே ஷார்ப் டயலாக் எட்டிப் பார்த்திருந்தால், நடுவில் ஏற்படும் தொய்வு குறைந்திருக்கும்.

சன் டிவி வணக்கம் தமிழகத்தில் ‘ரமேஷ் பிரபா’வும் ‘ரேவதி’யும் லேட்-20களாக வயசைக் கணிக்கலாம். அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், என்.ஆர்.ஐ. ஆங்கில உச்சரிப்புடன் யுவதியும், நேர்காணலுக்குரிய சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய தெளிவான உச்சரிப்புடன் மிட்-40களை சொல்லத்தக்கவரும் நாடகத்தில் கதாபத்திரங்கள் ஆனது, சன் டீவியை சதாய்ப்பதற்கா அல்லது நடிகர் பற்றாக்குறையா என்றறியேன்.

Maamis Talk Serialபிரும்மாவாக நடித்தவர், அவரின் ஆல்டர்-ஈகோ ஆனந்தனாக மனசாட்சியாக உலா வந்தவர், காதலன் + மணமகனாக மேடையில் இருந்து துள்ளிக் கீழே விழுந்து நமக்கு அடிபடுமளவு ஒன்றி நடித்த கதிர், அம்மா மீனாட்சி (பார்வதி?), அப்பா தாமோதரன் எல்லாருமே டிஸ்டிங்சனுடன் கலக்கினார்கள். ரகசிய சிநேகிதி ‘காவ்யா’ நடன முகபாவங்களையும் கண் பேசும் வார்த்தைகளையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிவாஜித்தனம் உணராமல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மெனுவை எம்.பி.3 ஆக ஒலிக்க விட்ட பணியக சிப்பந்தி, உணவகத்திலும் வாடிக்கையாளரை வளைக்கும் சாஸ்திரி மற்றும் ஸ்டீரியோடைப் மாமிகளுக்கும் ஒரு ‘ஓ’.

டயல் செய்யாமலே செல்பேசியில் பேசுவது, பட்டு வேஷ்டியில் வலம் வரும் கிளார்க், நடுத்தரக் குடும்பமாக இருந்தாலும் பளபளா (பட்டுப்) புடைவையில் காலை டிபன் செய்து கொடுக்கும் பார்வதி போன்ற சறுக்கல்களை எஸ்.வி.சேகர் (எம்.எல்.ஏ) டைப் நாடகங்களைக் கிண்டலடிக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்வேன்.

எழுத்தாளர் சுஜாதாவிற்கு ஒத்த பிரும்மாவை, ‘ஆன்ஜைனா’, இருதய வால்வ், ரத்தக் Hero meets Heroine & In-Lawsகுழாய் என்று மருத்துவ சொற்களையும் பிரயோகங்களையும் கொண்டு முழுசாக ஜல்லியடிக்க வைப்பது போன்ற ப்ராக்டிகல் ஜோக்களும் ஏராளம்.

நாடகாசிரியர் திரைப்படங்களைப் பார்ப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு எழுதினால் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., நூற்றுக்கணக்கான சொல்லாமல்/சொல்லி/·ப்ரெண்ட்ஷிப்/காமம்/கவர்ச்சி/கல்லூரி காதல் கதைகளின் வாசம் எட்டிப் பார்க்காமல் இருக்கும். இந்த விமர்சனத்தை எழுதுபவரும் ஆயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களை ரெகுலராக ரசிப்பது, இந்த மாதிரி வாசனைகளை அதீதமாக உணரச் செய்வதாக இருக்கலாம்!

வாசகர் கடிதம், நேயர் உரையாடல், போன்ற உத்திகள் மூலம் இருபத்தி நாலு வாரத் தொடரை நகர்த்துதல், எழுத்தாளனின் சறுக்கல்கள், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளின் பழக்கங்கள் என்று ஒரு நாடகம் அமர்க்களமாகவும்;
Brahma in vanakkam Thanmizhagam
காதல் குழப்பம், கல்யாணமா நட்பா என்னும் பயங்கள், போன்றவற்றை இயல்பான நிகழ்வுகளின் மூலம் வெகுஜன பத்திரிகை தர்மப்படி உருவாக்கிய, சஸ்பென்ஸ் திருப்பங்கள் நிறைந்த காதல் கதையை இன்னொரு நாடகமாக விறுவிறுப்புடனும் கொடுத்திருக்கிறார்கள்.

கதை, வசனம் கலிபோர்னியாவை சேர்ந்த திரு. மணிராம் அவர்கள். எஸ்.வி சேகர், கிரேசி போன்றோர் அரசியல், சினிமா என்று ஆளுக்கொர் பக்காமாய் போய்விட அடுத்த தலைமுறை நாடகங்களுக்கு திரு. மணிராம் போன்றோர் தேவை.

பின் கேள்வி: பழைய ஜானி வாக்கர் ரெட் லேபிள் புட்டியில் புதிய ஆப்பிள் ஜூஸை நிறைய அருந்திய நடிகர் பிரும்மா ஒகேதானே?! 🙂

பின் பதில் – ரமணி: மேடையில் பிரம்மா குடிப்பது ஆப்பிள் ஜுஸ்தான் என அவ்வளவு அப்பட்டமாகவா தெரிந்தது? நாடகம் முழுவதும் ஒருவர் அவ்வளவு குடித்து அவ்வளவு தெளிவாக பேசுவாரேனால் அவர் குடித்தது மதுவாக இருக்க முடியாது என்பது ஒரு சுலபான யூகம் என்றாலும், அது ஏன் ஐஸ் டீயாக இருக்க முடியாது?

நிகழ்வுப் புகைப்படங்கள்

பதிவான மின்னிதழ்: தமிழோவியம்


| |

கலாநிதி மாறன் அட்டூழியம்

ஜெயா டிவியையும் வாங்கிவிட்டார் கலாநிதி மாறன்.இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பான செய்தி திமுக ஆதரவு செய்தியாகவே மக்களால் பார்க்கப்படும.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சோனியா காந்தியால் மன்னிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கும் நளினியின் சொந்தக்காரர்களுக்கு கலைஞர் கண்ணம்மா படம் எடுத்து உதவினாராம்.

இதை ஒலக மகா குற்றம் போல் ஜெயா டிவி ஏகப்பட்ட பில்ட் அப்களுடன் எடுத்துக்கூறியது.இனியாவது புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.கலைஞர் இன்னும் ஈழ தமிழர்களின் மேல் பாசத்துடன் இருக்கிறார் என்பது இதன் பின்னே உள்ளே செய்தி.

அப்ப ஜெயா டிவியை சன் டிவி வாங்கிடுச்சா…கொடுமைடா சாமி…கலைஞர் உங்கள் மனித நேயத்தை தலைவணங்கி போற்றுகிறேன்.அதிமுக வில் மட்டுமல்ல, ஜெயாடிவியில் மட்டுமல்ல .அதிமுக வை ஆதரிப்பவர்களுக்கும் சிறிது அறிவை கொடுக்கும்படி ஆண்டவனை வேண்டுகிறேன்.ஆமென்.

Subdued campaigning

இந்த முறை தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணி ஆரவாரம் குறைவாகவும் அமைதியாகவும் நடந்துள்ளது. தேர்தல் தொடர்பான வன்முறை என்று பார்த்தால் அஇஅதிமுக ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளர்களை பயமுறுத்தியதாக வந்த தகவல்கள்தாம். ஒரு ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சி வேட்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எதனால் கொலை செய்யப்பட்டார் என்று இன்னமும் தெரியவில்லை. ஆண்டிப்பட்டியில் லீலாவதி (எம்ஜிஆர் அண்ணன் மகள்) தன்னை வேட்பும்மனு தாக்கல் செய்யவிடாமல் கடத்திச் சென்றனர் என்று சொல்லியுள்ளார். சில இடங்களில் கல்லடிகள் நிகழ்ந்துள்ளன.

அவ்வளவு மோசமில்லை.

சுவற்றில் சின்னங்கள் வரைவதைத் தடை செய்தது நல்ல விஷயம். சென்னையில் சில “பொதுச்சுவர்களில்” நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மற்றபடி வாக்கு சேகரிக்க கட்சிகள் பொதுக்கூட்டங்களையும் தொலைக்காட்சிகளையுமே நம்பியுள்ளனர். இது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் இதன் விளைவாக திமுகவுக்கு மிகப்பெரிய முன்னிலை கிடைத்துள்ளது. சன் குழுமத்தின் நான்கு தமிழ் சானல்களும் மாற்றி மாற்றி விளம்பரங்களை ஒளிபரப்புவதுடன் பொதுக்கூட்டங்களை நேரடியாகவும் ரெகார்ட் செய்தும் ஒளிபரப்புகின்றனர். அத்துடன் நேர்காணல் என்ற பெயரில் நடக்கும் வாக்கு சேகரிப்பும் உண்டு. ஜெயா டிவி தன் பங்குக்கு அஇஅதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கினாலும் இது சமமான ஒரு போட்டி அல்ல என்றே அனைவரும் சொல்வர்.

இப்படி கட்சிவாரியாக சானல்கள் இருப்பதான் இருட்டடிப்பு செய்யப்படுவது பிற கட்சிகள் அனைத்துமே. சன் டிவியில் பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேர்காணல்களுக்கு மட்டும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளனர். அதேபோல ஜெயா டிவியில் வைகோவும் திருமாவளவனும் வந்தனர். விஜயகாந்த் என்று ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார் என்பது ராஜ் டிவியைப் பார்க்காவிட்டால் நமக்குத் தெரியவே தெரியாது. விஜய் டிவி இந்த விஷயத்தில் ஒதுங்கியே உள்ளது. ஆங்கில செய்தி சானல்கள் அவ்வப்போது மட்டுமே தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகின்றன. ஏனெனில் இப்பொழுது ஐந்து மாநிலங்களில் சேர்ந்தாற்போல தேர்தல்கள் நடக்கின்றன.

தமிழ் செய்தித்தாள்களும் தமது சார்புநிலை காரணங்களால் நடுநிலையாக அனைத்துக் கட்சிகளின் செயல்பாட்டையும் விளக்குவதில்லை. ஆனாலும் ஒவ்வொரு செய்தித்தாளிலும் பிற கட்சிகளைப்பற்றி சிறிதாவது தெரிந்துகொள்ள முடிகிறது. தினகரனிலும் தமிழ் முரசு பத்திரிகையிலும் அஇஅதிமுக, விஜயகாந்த் பற்றிய செய்திகள் வருகின்றன. தினமலர், தினமணி ஆகியவை இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காண்பித்துள்ளன. திமுக அல்லாத பிற கட்சிகளின் விளம்பரங்கள் தினகரன் அல்லாத பிற பத்திரிகைகளில் வெளியாகின்றன.

ஆங்கில செய்தித்தாள்களில் கட்சிச் சார்பு அந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை.

சிதம்பரம் சொன்னதுபோல இம்முறை தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான். தொடக்கத்திலிருந்தே இந்தத் தேர்தல் அறிக்கையை ஒட்டியே – எதிர்த்தோ, ஆதரித்தோ – விவாதங்கள் அமைந்துள்ளன. அத்துடன் பிற விவாதங்கள் – ஜெயலலிதா ஆட்சி கெட்டதா, நல்லதா; காங்கிரஸ், திமுக கூட்டணியின் மத்திய ஆட்சியால் தமிழகத்துக்கு நன்மையா, தீமையா; ஜெயலலிதா மத்திய அரசுமீது வைக்கும் குற்றச்சாட்டுகள், அவர்கள் சொல்லும் பதில் குற்றச்சாட்டுகள்; தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள், வைகோ கட்சி மாறியது ஆகியவை.

தெருவில் பாட்டு பாடிக்கொண்டுபோகும் ஆட்டோக்கள்கூட (“உங்கள் பொன்னான வாக்குகளை ___________ முத்திரையில் குத்தி கலைஞரின்/புரட்சித்தலைவியின் ஆதரவுபெற்ற அண்ணன் _____________ அவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்”) குறைவாகவே தென்படுகின்றன.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதும் தெருவில், திறந்த ஜீப்பில் பல்விரிய, கைகுவிய சுற்றிவருவதும் இன்னமும் தொடர்கிறது. பெருந்தலை ஒன்று பேசிக்கொண்டே போக பக்கத்தில் பொம்மைபோல கூப்பிய கரங்களுடன் நிற்கும் வேட்பாளர் இன்னமும் இருக்கிறார். அதேபோல மேடையிலும் கட்சித் தலைவர்கள் பேசித்தள்ளும்போது கை/கால் வலித்தாலும் விடாது நிற்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் விஜய ராஜேந்தர், பாக்யராஜ் இருவருமே சூப்பர் ஹிட். ராஜேந்தர் உளறித் தள்ளினாலும் பல நேரங்களில் மெச்சும்படியான அடுக்குமொழிகளில் விளையாடுகிறார். குட்டிக்கதை வல்லுனர் பாக்யராஜும் திமுகவுக்கு நல்ல வலு சேர்த்துள்ளார். ஆனால் சரத்குமாரால் அஇஅதிமுகவுக்குப் பலன் குறைவுதான் என்று நான் நினைக்கிறேன். கடைசிவரையில் ராதிகாவை வெளியில் காணமுடியவில்லை.

இணையம் வழியான campaigning அதிகமாக இல்லை. திமுக, அஇஅதிமுக இரண்டுக்குமான அதிகாரபூர்வமான தளங்களில் தேர்தல் அறிக்கைகளோ, தொகுதி உடன்பாடோ, வேட்பாளர் பெயர்களோ உடனடியாக வரவில்லை. சில நாள்கள் கழித்தே கிடைத்தன. இந்தத் தளங்களின் சுட்டிகள் கூகிள் வழியாகச் சென்று தேடினால்தான் கிடைக்குமே தவிர கழக விளம்பரங்களிலோ தொலைக்காட்சிப் பேட்டிகளின்போதோ காணக்கிடைக்காது.

திடீரென ஒருநாள் தெருவில் பல இடங்களில் http://www.electadmk.com என்ற சுட்டி கண்ணில் பட்டது. முதலில் அதைப் படித்தபோது இது அ இஅதிமுக ஆதரவுத் தளமா அல்லது திமுக தளமா என்று தெரியவில்லை. கூர்ந்துபார்த்தால்தான் admk என்று தெரியவந்தது. (electadmk could as well be elect-a-dmk)

லோக் பரித்ராணின் இணையதளத்தின் புகழ் இப்பொழுது உலகெங்குமே பரவியிருக்கும். இந்தத் தளத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று யாருக்காவது புரிந்தால் அதை விளக்கி எனக்குக் கடிதம் எழுதவும்!

பாவம் மதிமுக. அவர்களது தளத்தில் பழைய கதைகள்தாம் உள்ளன. மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் பாசத்தோடு வைகோவைப் பார்க்கும் படம் இங்கே உள்ளது. அந்தப் பாசம் மாறும்போது படங்களும் தளத்தில் மாறவேண்டும் என்பதை யாராவது அவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும். கேப்டனின் கட்சிக்கும் இணையத்தளம் உண்டு. ஆனால் விஷயம் அதிகம் இல்லை இங்கே.

பாமக இணையத்தளம் எதுவும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளார்களோ, என்னவோ.

வேட்பாளர்கள் யாரும் சொந்தமாக இணையத்தை நாடவில்லை – நெப்போலியனைத் தவிர. இரு தினங்களுக்கு முன்னதாக நெப்போலியன் I am for Mylapore என்ற தளத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த முறை எப்படியானாலும் அடுத்த தமிழக சட்டசபைத் தேர்தலில் இணையம் பெரும் பங்கு வகிக்கப்போகிறது.

தேர்தல் 2006 பதிவும், சி.என்.என் – ஐ.பி.என் பார்வையும்

நேற்று மாலை நானும் பத்ரியும், தேர்தல் 2006 பற்றிய ஒரு சிறப்பு செய்தியினை சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சியின் நிருபர் விவியன் மேத்யுவிற்கு அளித்தோம். காலையிலிருந்து (ஏப்ரல் 5) அது ஓளிபரப்படுகிறது. காலையில் நான் பார்த்தேன். “தமிழ்நாடு ப்ளாக்பஸ்டர்ஸ்” என்கிற தலைப்பில் காலை 8.30 மற்றும் மாலை 7 & 9 நேரங்களிலும், மற்றபடி நாள் முழுக்க பல்வேறு செய்திகளிடையே துணுக்குப் பதிவாகவும் இது ஓளிபரப்பாகி இருக்கிறது. நான் தேர்தல் 2006 பதிவு உருவானவிதம், எழுதும் பதிவர்கள், அதனுடைய பார்வை பற்றி பேசியிருக்கிறேன். பத்ரி, வலைப்பதிவுகள் எவ்வாறு அரசியல் பார்வைகளை மாற்றி வருகின்றன, பத்திரிக்கை, தொலைக்காட்சி தாண்டிய ஒரு மாற்று ஊடகமாக இன்னும் 5 வருடங்களில் எப்படி மாறும் என்று பேசியிருக்கிறார். காலையில் நான் பார்த்ததில் வெட்டி போட்டிருந்தார்கள். தேர்தல் 2006, இட்லிவடை, ஹாட் மச்சி ஹாட் போன்ற வலைப்பதிவுகள் காண்பிக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்தால் பாருங்கள்.

Elections – 2060

தேர்தல் 2060 – சில குறிப்புகள்

தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் “வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டியில் என்னுடைய பதிவு:

  1. 2060-இல் ஒரு கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கும்?

    • 1
    • 100
    • 1000
    • தலா ஒரு குடும்பத்துக்கு ஒரு கட்சி என்று பார்த்தால்…
  2. 2060-இல் தேர்தல் எப்படி நடக்கும்?

    • இணையம்/தொலைபேசி/கணினிகள் மூலம்
    • வாக்குசாவடிதான்
    • கருத்துக் கணிப்புகள் மூலம்
    • தேர்தலா???
  3. 2060-இல் வெற்றிவாய்ப்புள்ள பெண் வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடுவார்கள்?

    • தொகுதிக்கு ஒருவராவது
    • மாவட்டத்துக்கு ஒருத்தர்
    • மாநிலத்துக்கு ஒருத்தர்
    • பெண் வேட்பாளர் என்று கணக்குப் பார்ப்பது அருகி விடுமளவு பரவலான பங்களிப்பு
  4. 2060-இல் வேட்பாளர் தேர்வில் எது முக்கியமாகக் கருதப்படும்?

    • ஜாதி
    • பணம்
    • வாரிசு
    • ஒவ்வொரு வேட்பாளரும் கட்சியின் உள்-அமைப்பு (primary) தேர்தலில் வெல்வது
  5. 2060-இல் கருணாநிதியின் எந்த வாரிசின் கையில் திமுக இருக்கும்?

    • திமுக (மாறன்)
    • திமுக (ஸ்டாலின்)
    • வாரிசு அல்லாத – திமுக (வைகோ)
    • ஹூ இஸ் கருணாநிதி?
  6. 2060-இல் ஊடகங்கள் எப்படி தேர்தலை கண்காணிக்கும்?

    • உள்ளூர் வலைப்பதிவுகளுக்கு, வேட்பாளர்களின் தினசரி அரட்டை நேரம்
    • தொலைக்காட்சியில், அரசியல் கட்சித் தலைவர்களின் நேரடி விவாதம்
    • தேர்தலை எல்லாம் ஊடகங்களில் பார்க்க எங்கே நேரம்? வீட்டுக்கு வீடு வருகை
    • அதே தினகரன்; தினமலர்; தி ஹிந்து; வலைப்பதிவு குமுறல்கள்
  7. 2060-இல் திரை நட்சத்திரங்களின் தாக்கம் எப்படி இருக்கும்?

    • ஐஷ்வர்யா ரஜினியும், ஸ்ருதி கமலும், முக்கிய கட்சித் தலைவர்கள்
    • விஜய்க்கு ஆயிரம் பில்லியனா? என்னும் வதந்திகளின் உலாவலோடு
    • சன், ஜெயா டிவிகளில் தேர்தலுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரித்த, முழுநீளப் படங்களோடு
    • விசிடி நட்சத்திரத்தைத்தானே கேக்கறீங்க?
  8. 2060-இல் எது முக்கியமான பிரச்சினை?

    • தற்பால் திருமணம், அரவாணிகளுக்கு சம உரிமை
    • தலித் ஒடுக்குமுறைகள், பிற்படுத்தப்பட்டவருக்கு உரிமை
    • இலவச இணைய வசதி, ஏழைகளுக்கு சல்லிசான விலையில் மகிழுந்து
    • சுற்றுச்சூழல் கொள்கை, உடல்நலப் பாதுகாப்பு வரைவு, வரிவிதிப்பு வித்தியாசங்கள், கல்வித் திட்டங்கள்
  9. 2060-இல் வலைப்பதிவுகளின் பங்களிப்பு என்ன?

    • ஒவ்வொரு முக்கிய கட்சிக்கும், நூறாயிரம் வலைப்பதிவுகள் இருக்கும்.
    • ஒவ்வொரு வேட்பாளரும் சொந்தமாக, தினசரி வலைப்பதிவார்.
    • கட்சிகள், வேட்பாளர்களின் தகிடுதத்தங்கள் உடனடியாக அம்பலமாகி, வாக்காளரை சென்றடையும்.
    • கலவரங்களை ஒருங்கிணைக்கப் பயன்படும்.
  10. 2060-இல் தேர்தல்…

    • வன்முறை + வாக்காளரை மிரட்டல் + கலவரம்
    • நேர்மை + கொள்கை + கண்ணியம்
    • கூட்டணி + இனம் + அதிகார பலம்
    • I have better things to worry about…

| |

Vikadan on Mr. Voter

தேர்தல் குதிரைகள் :: மாண்புமிகு வேட்பாளர் – எஸ். உமாபதி (2004-இல் எழுதியது)

‘இவர் காரெக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!’ என்று ராஜதந்திரிகளான அரசியல் தலைவர்களே ஆதங்கப் படுகிறார்கள். ‘அரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர் என்றெல்லாம் இவரை எடை போட முடியாது. ரொம்ப சாமர்த்தியசாலி. புத்திசாலித்தனமாக முடிவெடுப்பார். தப்பு செய்யும் அரசியல்வாதிகளைத் தன் கையிலிருக்கும் வோட்டு என்ற ஆயுதத்தால் கடுமையாகத் தண்டித்து, மண்ணைக் கவ்வ வைப்பார்’ என்று அரசியல் விமரிசகர்கள் அடிக்கடி இவரைப் பற்றி எழுதுவார்கள்.

சில அரசியல்வாதிகள் இந்த வாதத்தை அப்படியே அலட்சியப் படுத்திவிட்டு,

‘அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை… பட்டைச் சாராயத்தையும் பத்து ரூபாய் நோட்டையும் கொடுத்து இவரைச் சுலபமாக விலைக்கு வாங்கி விடலாம்’

என்பார்கள்.

ஒவ்வொரு தேர்தல் ரேஸிலும் எத்தனையோ குதிரைகள் ஓடினாலும் அதில் எந்தக் குதிரையை ஜெயிக்க வைப்பது, எதைத் திணறடிப்பது என்று தீர்மானிப்பது இவர்தான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா. இந்தத் திருவிழாவில் இவர் தான் ராஜா.. ஒரு நாள் ராஜா!

இவரை அலட்சியப்படுத்திய, காத்திருக்கவைத்த, கண்டுகொள்ளாத பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் அந்தச் சமயத்தில் கூழைக்கும்பிடு போடுவார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இவர் நிற்பார். இவர் வாழ்த்துவாரா… வீழ்த்துவாரா எனப் புரியாமல் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள் கும்பிடு தலைவர்கள்.

‘நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி’ என்பதால், இவர் ஆயுசு முழுக்க காங்கிரஸுக்கு விசுவாசமாக இருப்பார் என அந்தக் கட்சி நம்பியது. ஆனால், எமர்ஜென்ஸி கொடுமைகளை அனுபவித்த பிறகு, ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியைத் தோற்கடித்தது இவர் கொடுத்த பெரிய ‘ஷாக்’! ஒரு பிரதமரையே தோற்கடிக்கிற பயங்கரமான ஆசாமி இவர் என்பதை அப்போதுதான் உலகமே உணர்ந்தது.

இந்திராவைத் தோற்கடித்த இவர், அங்கு தேர்ந்தெடுத்தது ராஜ்நாராயண் என்ற அரசியல் ஜோக்கரை! இந்திராவைத் தோற்கடித்தது மிஸ்டர் வாக்காளர்தான் என்பதை உணராமல், தன் ‘பலத்தின்’மீது அபார நம்பிக்கை கொண்டு ராஜ்நாராயண் ஆடியபோது, அவரை அரசியலில் பெரிய குழிதோண்டிப் புதைத்து மீளவே முடியாமல் செய்தார்.

‘மேதாவித்தனம் பாதி… பாமரத்தன்மை பாதி.. கலந்து செய்த கலவை இவர்’ என்பது இவரது பயோடேட்டா. இதனாலோ என்னவோ இவர் பல சமயங்களில் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்துவிட்டு லேட்டாக வருத்தப்படுவார். ஆனால், செய்த தவற்றை மறு தேர்தலிலேயே திருத்திக் கொள்வார். ராஜீவ் காந்திமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவரைத் தோற்கடித்த பெருமைக்குரியவர் இவர்தான். அப்புறம் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் அடித்துக்கொண்ட போது, தன் தவற்றை உணர்ந்து அடுத்த தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தவரும் இவர்தான்!

ஆனால், இவரது பெரிய மைனஸ் பாயிண்டே அடிக்கடி பொங்குகிற அனுதாப உணர்வுதான். யாராவது தலைவர் இறந்தால் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுபோல அவர் சார்ந்த கட்சிக்கு வாக்குகளைக் குத்தித் தள்ளி விடுவார். அந்த விஷயத்தில் கடல் அலை மாதிரி கண்ணீர் அலை கிளப்புவார்.

அடிக்கடி மாற்றங்களை விரும்புகிற டைப் இவர். அதனால் சமயங்களில் குயுக்தியாக யோசிப்பார். ‘நான் உங்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கேன். எனக்கு வோட்டுப் போடுங்க’ என்று யாராவது வந்து கேட்டால், ‘இவரே இவ்வளவு செய்திருக்காரே… இவரை எதிர்க்கறவரை ஜெயிக்கவெச்சா அவர் இன்னும் ரெண்டு மடங்கு செய்வாரோ?’ என யோசிப்பார். அதிலும் சிலசமயம் மோசம் போவார்!

ராம்விலாஸ் பாஸ்வான் ஒரு தடவை இவரைப் பற்றி வெறுத்துப்போய் அடித்த காமெண்ட் ரொம்ப பிரபலம். ‘அமைச்சராக இருந்து பல நன்மைகள் செய்தபோதும் ஜெயிக்க வெச்சாரு. எதிர்க்கட்சி எம்.பி.யா இருந்து ஒண்ணுமே செய்யாதபோதும் நாலு லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வெச்சு, என் பெயரை கின்னஸ் புக்கிலும் போட வெச்சாரு. இவரு என்ன நினைக்கிறார்ன்னே புரிஞ்சுக்க முடியலை.’

‘ராமன் ஆண்டால் என்ன… ராவணன் ஆண்டால் என்ன’ என்பது இவர் அடிக்கடி பாடும் பாட்டு. மிக நேர்மையான தலைவர்கள் இவரிடம் வந்தால்கூட, ‘போப்பா! நீயெல்லாம் அரசியலுக்கு வேஸ்ட்’ என தோற்கடித்து துரத்துபவர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கிரிமினல் சட்டத்தில் இருக்கிற எல்லா செக்ஷன்களிலும் சிக்கி சிறையிலிருக்கிற ஆசாமியை ஜெயிக்கவைப்பார்.

இந்தியாவில் ஒரு பொதுத்தேர்தலின் செலவு ஆயிரம் கோடிக்கு மேல். அரசியல் கட்சிகள் தேர்தலுக்குச் செலவழிப்பது அதைவிடப் பத்துமடங்கு அதிகமான பணம். பலருக்கு செலவு கட்டுப்படியாகவில்லை. ‘இவரை எப்படித் திருப்திப்படுத்துவது என்று தெரியவில்லையே. அது தெரிந்தால், அதை மட்டும் செய்துவிட்டு ஜெயித்துக்கொண்டே இருக்கலாமே’ என்று யோசிக் கிறார்கள். ‘கொஞ்சம் பர்ஸனல் டச்… கொஞ்சம் அன்பான பேச்சு… பெயர் சொல்லிக் கூப்பிடுகிற அளவு நெருக்கம் காட்டிவிட்டால் போதும்… இவரைக் கவிழ்த்து விடலாம்’ என்று தேர்ந்த தேர்தல் நிபுணர்கள் பலர் கணித்துச் சொன்னார்கள். ஆனால், அதெல்லாம்கூட வேலைக்கு ஆகாது என்று நிரூபித்துவிட்டார் நம்ம ஆள்.

இப்போதும் அப்படித்தான்.. ‘ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே. இந்தியா ஒளிர்கிறது. உனக்காக நல்ல ரோடு போட்டாச்சு.உன் எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கு’ என்று சொல்லி பி.ஜே.பி. (அதிமுக?) இவரை வளைக்கப் பார்க்கிறது.

‘உனக்கு வேலையில்லை… சாப்பாடு இல்லை… எதிர்காலம் இல்லை… எல்லாத்தையும் நாங்க தர்றோம்’ என்கிறது காங்கிரஸ் (திமுக?).

இவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, மையமான ஒரு மர்மப் புன்னகையுடனே அலைகிறார். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரியாமல் ஆளாளுக்கு கருத்துக் கணிப்பு பூதக்கண்ணாடி வைத்து இவர் மனசைப் படிக்கப் பார்க்கிறார்கள்.

அது லேசில் பிடிபடுகிற விஷயமா என்ன?!

Reduplicative paramnesia

கார்ட்டூன்விகடன் : சுவடுகள் – 2004 பாராளுமன்ற தேர்தல் குறித்து மதன்

Blogs & the Blogging Bloggers who Hype them

தலைப்பு உதவி: Lies and the Lying Liars Who Tell Them: A Fair and Balanced Look at the Right: Al Franken

கருத்துப்படத்துக்கு நன்றி: ஜிட்ஸ் – washingtonpost.com


| |

2004 Loksabha Eelction Memoirs

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ::

கோயில்களில் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றைப் பலிகொடுக்கக்கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்ததே! அது, பாரம்பரியமாக குலவழிபாடு முறையில் எம்மக்கள் செய்துவந்த சடங்குகளில் கைவைத்து விட்ட இந்துத்வா திணிப்புதான்.

“பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் துணை ராணுவம் வரவேண்டும் என பேசியுள்ளீர்களே.. தமிழகம் பீகாராகிவிட்டதா என்ன?”

“தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவிடாமல் பா.ம.க-வினர் தடுத்துவிடுவார்கள் என்பதைத்தான் கடந்த கால தேர்தல்கள் காட்டின. தமிழகக் காவல்துறையினரால் இவர்களின் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதால்தான் அப்படி ஒரு கோரிக்கை வைத்தேன்.”


தாமரைக்கனி ::

“தமிழ்நாட்டுல இப்போ இன்பத் தமிழன் அதாவது இன்பமான தமிழன் யாரு?”

“‘இன்பத் தமிழனா?’ அது யாரு? ஓ… அப்பிடி வர்றீங்களா! தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராடி நம்மளைச் சந்தோசப்படுத்தி அதுல இன்பம் காண்ற கலைஞர்தான் எனக்கு உண்மையான இன்பத்தமிழன். மத்தபடி அப்பிடிப் பேர் வெச்சிட்டுத் திரியறதெல்லாம் சும்மா வெத்துவேட்டு!”


வைகோ ராமேஸ்வரத்தை வந்தடைந்தபோது இரவு மணி ஒன்பதரை.

“வைகோ ராமேஸ்வரத்தில் பேசுகிறானே.. கடல்கடந்து யாராவது வந்திருக்கிறார்களா என்று க்யூ பிராஞ்ச் போலீஸாரின் கண்கள் அலைமோதுவதையும் நான் பார்க்கிறேன்”

என டைமிங்காக ஜோக்கடிக்கிறார்.

வைகோ சஸ்பென்ஸ்!

டெல்லிக்குப் போற வாய்ப்பை உதறிட்டு, சிவகாசியைத் தூக்கி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்கிட்ட குடுத்துட்டு, தேர்தல் பிரசாரத்துல பிஸியா இருக்காரு வைகோ. ‘அடுத்து என்ன பண்ணப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ்’னு அடிக்கடி பத்திரிகைக்காரங்ககிட்ட சொல்றாரு.

2006 சட்டமன்றத் தேர்தல்தான் அவரோட லட்சியமாம். ‘அதுக்குள்ள புத்தம்புது பலம் திரட்டிப் பெரிய சக்தியா தேர்தலை அவர் சந்திப்பாரு’னு வைகோவோட இருக்கிறவங்க சொல்றாங்க.. அப்படி என்ன திட்டம் வெச்சிருக்காருனுதான் புரியலை!


விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்..?
“அரசியலைப் பத்தி நான் எந்த முடிவும் இப்ப எடுக்கல. இந்தத் தேர்தல்ல யாருக்கும் ஆதரவு கொடுக்கறதாகவும் முடிவு பண்ணவேயில்லை. அரசியல்வாதிங்க என் மன்றத்து தோழர்களை சந்திச்சு ஆதரவு கேட்டிருக்கலாம். அதுல தப்பு இல்ல.. என்னை சந்திக்க வந்தாலும் நானும் அவங்கள சந்திக்க முடியாதுனு சொல்லப்போறதில்ல. ஆனா நாங்க யாரையும் ஆதரிக்க போறதில்லங்கிறதுதான் உண்மை. ஜனநாயகக் கடமையைச் செய்யற வகையில என் மன்றத்தினர் தவறாம வோட்டு மட்டும் போடுவாங்க.

அதே போல, இந்த தேர்தல்ல என் மன்றத்தினர் போட்டியிடப் போறதில்ல. அரசியல்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவாத்தான் இருக்கேன். என் ரசிகர்களும் அப்படித்தான். என் பேச்சை மீறி ஒரு துரும்பைக்கூட அவங்க அசைக்க மாட்டாங்க.

அரசியல்ங்கிறது தவிர்க்க வேண்டிய விஷயம் கிடையாது.. நான் சொன்னா சொன்னபடி அரசியல் களத்துல குதிப்பேன்” என்று விடைகொடுத்தார் கேப்டன்!


வேட்பாளர்களில் அதிக பசை உள்ளவர்?
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றதுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் காட்டியிருக்கும் சொத்துக் கணக்குப்படி… மிகபெரிய பணக்காரராக இருப்பது, ப.சிதம்பரம்தான்! இவர் தன் குடும்பத்துக்கு சுமார் 15 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் நிலவரம்.

பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் சொத்துமதிப்பு, நான்கு கோடி ரூபாய்தான்! ஆனால், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது!

தி.மு.க.வைச் சேர்ந்த கரூர் தொகுதி வேட்பாளரான கே.சி.பழனிசாமி, கொடுத்திருக்கும் கணக்குப்படி அவரின் சொத்து மதிப்பு ஐம்பத்திரண்டு கோடி!

நன்றி: ஆனந்த விகடன் & ஜூனியர் விகடன்

This Election… That Poll

2001 Election Dejavu

1. Opinion poll predicts ‘edge’ for DMK front: திமுக 123-130 வரை வெல்லும்.

2. All eyes on voter turnout: வாக்கு சதவிகிதம் அதிகரித்தால் ஆளுங்கட்சி தோற்கும்.

3. Opinion polls are a Karunanidhi ploy: Vaiko: மதிமுகவை அழிக்கக் கருத்துக் கணிப்புகளை கலைஞர் பயன்படுத்துகிறார் என்று வைகோ குற்றச்சாட்டு.

4. It is difficult to work with AIADMK: Naidu: ‘அதிமுகவுடன் எந்த கட்சியும் ஒத்துப் போவது ரொம்ப கஷ்டம்’ – வெங்கையா நாயுடு.

5. Online poll fever: குமுதம் முதல் அம்பலம் வரை.

இதுவெல்லாம் போகட்டும்… வைகோ-வின் ‘இரண்டாவது மனைவி’யைக் குறித்து விசாரித்தபோது சொன்ன முதல் மரியாதை டயலாக், யாருக்காவது நினைவிருக்கிறதா? செய்தியின் சுட்டி கைவசம் உண்டா???

நன்றி: தி ஹிந்து – Copyrights © 2001 The Hindu