Thamizmanam for Sale

தமிழ்மணம் – விற்பனைக்கு
(இந்த வாரத் தமிழோவியத்தில் வெளியான கட்டுரை)

தமிழ்மணம் இணையத் தளமும் முழுக்க முழுக்க தமிழில் இயங்கும் வலைதிரட்டியும் acquisition target-ஆக மாறுவதற்கான அறிவிப்பை இங்கே காணலாம்: தமிழ்மணம் அறிவிப்புகள்: ஏன் ஏன் ஏன்?

அமெரிக்காவில் 90-களின் இறுதி போல் உற்சாகம் கரைபுரளாவிட்டாலும், வெப் 2.0 என்று மிதமான ஆவலுடன் களமிறங்கும் கம்பெனிகள் பெருகி இருக்கிறது. வலைப்பதிவு, கூட்டுப் புழு சோஷியல் நெட்வொர்க்கிங், செய்தியோடை, புத்தகக் குறி, அடையாளக் குறி (tags), வாசகர் வாக்கெடுப்பின் அடிப்படையில் முக்கியமான பதிவுகள், அஜாக்ஸ் போன்ற நவீன நுட்பங்கள் என்று நாலைந்து அடிப்படைகளை விதவிதமாக மிக்ஸ் செய்து சாம்பார், ரசம், கூட்டு, கறி, பொறியல், பொடிமாஸ் என்று காப்புரிமை பெற்று வருகிறார்கள்.

BRIC என்று நாடுகளின் முதலெழுத்தை சுருக்கமாகக் கொண்ட ப்ரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா நாட்டு நிறுவனங்களுக்கு மதிப்பு இன்னும் அதிகம். கூகிள், யாஹ¥ மற்றும் மைக்ரோசா·ப்ட் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது அமெரிக்காவில், ஆங்கிலத்தில் புதிதாக செய்திருந்தால், ‘நான் முதலா… நீ முந்திக் கொள்வாயா’ என்று கபளீகரம் செய்ய போட்டா போட்டி நிலவுகிறது.

இந்த மாதிரி நிலைமை தமிழகத்தில் இன்னும் சென்றடையவில்லை. இந்த நிலையில் தமிழ்மணம் வாங்குவதால் லாபமா? நஷ்டமா?

தமிழ்மணம்.காம் பெறுவதால் என்ன லாபங்கள்:

  • சிறிய மீன். இன்னும் பூதாகாரமாக வளரவில்லை. வளர்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் (மற்றும் இந்தியாவில்) பெருமளவு இணையப் பயன்பாடு இன்னும் சென்றடையவில்லை. தாத்தா/பாட்டிகள் மின்னஞ்சலையும், இளசுகள் அரட்டையும், மத்தியமர் தொழில் நுட்பத்திற்காகவும் பயன்படுத்தினாலும், ஈ-பே, அமேசான் போன்று வலை தாதாக்கள் என்று யாரையுமே சொல்ல முடியாது. இந்த நிலையில், தமிழ்மணத்தை அடித்தளமாகக் கொண்டு, பத்து கோடித் தமிழர்களை சென்றடையும் வாய்ப்பு இருக்கிறது.
  • ஐநூறுக்குக் குறையாத வலைப்பதிவர்களிடையே பரவலான பரிச்சயத்தைக் கொண்டது.
  • தினசரி ஆயிரம் பேருக்குக் குறையாமல வந்து செல்லும் இடம். ஒரு முறைத் தேடலில் வந்து விழுபவர்கள் கூட, மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வருகை புரிகிறார்கள். Repeat audience.

    ஒரு சில பாதகங்களை நோக்கலாம்:

  • அலிபாபா.காம் போன்று பெருஞ்செலவு செய்து ஸ்வீகரிக்க தமிழ்மணம்.காம் பரவ்¢ய பயனர்களைப் பெற்றிருக்கவில்லை.
  • ·பீட் ஆன் ·பீட்ஸ் போன்ற திறமூல நுட்பங்களினால் தயாரிக்கப்பட்டதால், நிரலியை யார் வேண்டுமானாலும் நிறுவி, சேவையைக் கொடுத்து விடலாம்.
  • தமிழ்மண வலைப்பதிவர்களோ, வாசகர்களோ… அவ்வளவு ஏன்? தமிழ் மக்களே இணையம் மூலமாக பொருள் வாங்குவதை உகந்து, இயல்பாக செய்வதில்லை. எம்பி3 அல்லது படங்களை இலவசமாக வலையில் இறக்கிக் கொள்ளுதல் போன்றவை எளிதாக எட்டுவதால், சினிமா மோகத்தைக் கூட பணமாக மாற்றி, அதன் மூலம் அமேசான் போல் லாபம் ஈட்டுவது கடினமான காரியம்.

    அடுத்ததாக தமிழ்மணம்.காம் எப்படி நிர்வகிக்க வேண்டும்? யார் முதலீடு செய்ய வேண்டும்? எப்படி பங்குதாரர் ஆவது? எவ்வாறு தன்னார்வலருக்கும் உரிமையாளருக்கும் வித்தியாசங்களை அடையாளம் காண்பது…

    இந்த அலசலுக்கு சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையின் க்ரெய்க்லிஸ்ட் ஒப்புமை உதவலாம். தமிழ்மணமும் க்ரெய்க் லிஸ்ட்டும் இருவேறு தளங்களில் செயல்பட்டாலும், அடிநாதம் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

    இருவருமே தன்னார்வலர்கள் மற்றும் பயனீட்டாளர்களை நம்பியுள்ளார்கள். இருவரிடமும் எண்ணிக்கையில் வெகு குறைவானவர்களே, முழு நேர வேலையாக ஈடுபட்டுள்ளார்கள்.

  • க்ரெய்க் லிஸ்ட் லாபம் ஈட்டுகிறது; தமிழ்மணம்.காம் வரி விளம்பரங்களை வெளியிடுகிறது.
  • தமிழ்மணம்.காம் லாபம் ஈட்டவில்லை; க்ரெய்க் லிஸ்ட் வரி விளம்பரங்களை வெளியிடுகிறது.என்பதுதான் முக்கிய வித்தியாசம்.

    தமிழ்மணத்தை வாங்குவோர் இந்த லாபமற்ற நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்களாக இருக்கக் கூடாது. என்றாவது மில்லியனர் ஆகி விடுவோம் என்னும் எண்ணத்தில், மாதந்தோறும் ஐயாயிரத்து சொச்சத்தை முதலீடாக எண்ணுபவர்களாக இருந்தால், வெகு சீக்கிரமே தமிழ்மணம் தன்னுடைய மணத்தை இழந்து விடலாம்.

    எனினும் தமிழ்மணத்தை தட்டி கொட்டி, உருச்சிதையாமல் மாற்ற விரும்பினால் என்ன செய்யலாம்?

  • சினிமா, இலக்கியம், அரசியல் என்று கன்னல்களை உருவாக்கலாம். இவற்றில் விளம்பரம் கொடுப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கலாம். மேம்படுத்தப்பட்ட கன்னலில், செய்திகள், வலைப்பதிவுகள், ·ப்ளிக்கர் போன்ற நிழற்படங்கள் என்று அனைத்தும் ஒருங்கேக் கிடைக்கும்.
  • சாதா பயனர், ஸ்பெஷல் பயனர் என்று இருவகைகளை உருவாக்கலாம். சாதா பயனரால் வலைப்பதிவுகளில் தேட முடியாது; பிடிஎ·ப் கோப்பாக்க முடியாது; சிறப்புப் பயனர் என்றால் தனி வண்ணத்தில் டக்கர் ஜிங்காக மிளிர்வார் போன்ற சலுகைகளைக் கொடுக்கலாம்.
  • ஆரெம்கேவி-க்கு தோழி.காம் செயல்படுவது போல், நல்லி, மூட்ஸ், ஆச்சி மசாலா பொடி என்று எல்லாருக்கும் தமிழ்மணம் சிறப்பு பாதைகளை அமைத்துக் கொடுத்து, விளம்பரதாரருக்குப் பொருத்தமான பதிவுகளை ஸ்பெஷலாகத் தொகுக்கலாம்.
  • தற்போது ப்ளாக்தேசம் இயங்குவது போல், தமிழ்மணத்தின் ·பீட் ஆன் பீட்ஸ் நிரலியை வைத்துக் கொண்டு, வங்காளம், தெலுங்கு, கன்னடம் என்று பிற மொழிகளுக்கு சேவையை நீட்டிக்கலாம். சி·பி.காம் போல் ஒற்றை சாளர அடிப்படையில், இந்தியரை தமிழ்மண வலைக்குள் வீழ்த்தலாம்.
  • அதிகம் அறிமுகமில்லாத அச்சு சேவைகளுடன் கை கோர்க்கலாம். அவர்களினால், தமிழ்மணம்.காம் ஏப்பம் விடப்படும் சாத்தியக்கூறுகளும் இதில் உண்டு.

    கடைசியாக கருத்தில் கொள்ள வேண்டியவை

  • அரச மரத்தை சுற்றிவிட்டு குழந்தைப் பெற்றுக் கொள்வது போல், ‘தமிழ்மணம்’ காசியின் மதிப்பை பார்த்து விட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தால் குழந்தை பிறக்காது. ஐந்தாண்டுகள், கருமமே கண்ணாக நேரமும் காசும் செல்வழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
  • காசி பயன்படுத்திய மை சீக்வல், ஸ்கிர்ப்டிங் போன்ற நிரலிகளில் போதுமான அளவு பட்டறிவும், அதிக அளவு ஆர்வமும் அவசியம் வேண்டும்.
  • இந்தியாவில் ஆள் போட்டு மேய்த்தல், வக்கீல்களுக்கு செலவழித்தல், முறையீடுகளுக்கு செவிமடுத்தல், நுட்பக் கோளாறுகளுக்கு துரித விடையளித்தல், பங்குதாரர்களுக்கு பதிலளித்தல், விளம்பரதாரர்களுக்கு விளக்கமளித்தல் என்று மண்டை காய்தலுக்கு உவப்புடன் ஈடுபட வேண்டும்.
  • தன்னார்வலர்களைப் பெருங்கூட்டமாக வைத்துக் கொண்டு, உள்கட்சிப் பூசல், காங்கிரஸ் கோஷ்டி போல் தொண்டர்களை விடத் தலைவர்கள் அதிகம் கொண்ட நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்ள, நெருங்கியத் தொடர்புள்ள மிகச்சிலரே ஈடுபட்டிருக்க வேண்டும்.
  • மைக்ரோசா·ப்ட்டை விட்டு பில் கேட்ஸ் விலகுகிறார் என்றாலும், ஏதாவது பொறுப்பில் எங்கிருந்தாவது கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார் என்பது போல், காசியும் தமிழ்மணம்.காமுடன் பின்னிப் பிணைந்திருந்தால் நலம்.

    தமிழ்மணம் குறித்து சென்ற ஆண்டு எழுதிய பதிவு: E-Tamil : ஈ – தமிழ் – அந்தக் காலத்தில் RSS இல்லை


    | |

  • Chat Meet – Aruna Srinivasan

    திசைகள் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர் அருணா ஸ்ரீனிவாசன்:

    1. வலைப்பதிவர் பத்திரிகையாளராக என்ன முயற்சிகளை எப்படி எடுக்க வேண்டும்? டிப்ஸ் கொடுங்களேன்…

    முதல் தேவை – ஆர்வம். ஆர்வம்; மேலும் ஆர்வம்; எண்ணம் முழுவதும் அதில் லயிக்கும் ஆர்வம் – passion.

    அடுத்து, அந்த ஆர்வத்தை வகைப்படுத்துவது அல்லது குறிப்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது. எழுதுவது என்பதில் பலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் சந்தைக்காக / பணம் ஈட்ட அல்லது தொழிலாக எழுத ஆசையா? ஏதாவது குறிகோளுக்காக எழுத ஆசையா? மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ள ஆசையா? எழுதி பெயர் / புகழ் பெற ஆசையா? …. என்று இப்படி ஏராளமாக எழுதும் ஆர்வத்தை வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.

    ஏன் எழுதுகிறோம்? என்பதை நமக்குள் நாமே அடையாளம் கண்டுகொள்ளப் பழக வேண்டும். என்னிடம் வரும் பல இளைஞர்கள் முதலில் கேட்பது – ‘நான் நிறைய எழுதுவேன். நிறையக் கதை எழுதியுள்ளேன்; கவிதை எழுதியுள்ளேன். எப்படி பிரசுரத்துக்கு அனுப்புவது என்று சொல்லுங்களேன் என்பார்கள். இவர்கள் ஆர்வத்தில் தவறில்லை. ஆனால் இது குல்லாய்க்கு ஏற்ற தலையைத் தேடும் ரகம். இன்று பெரும்பாலும் ஊடகங்களுக்கு எழுதுவது என்பது சந்தையில் விற்பது மாதிரிதான். சந்தைக்கேற்ற சாமான் விற்பது போல் சுயேச்சை பத்திரிகையாளர்கள் ஊடகச் சந்தைக்கு பண்டம் விற்பவர்கள். ஆங்கிலத்தில், வணிக மொழியில் சொன்னால் – Vendors. விதம் விதமான vendors செய்து கொடுக்கும் பாகங்கள் ஒருங்கிணைந்து நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பத்திரிகைகள் உற்பத்தியும் இப்படிதான். இன்னொரு விதத்தில் சொன்னால், சுயேச்சை பத்திரிகையாளர் ஒரு சுயேச்சை தையற்காரர் மாதிரி. யார் யாருக்கு எப்படி வேண்டுமோ அப்படி அளவெடுத்து அவர்களுக்கு ஏற்ற விதத்தில் உடையைத் தயாரித்து கொடுக்க வேண்டும்.

    எழுத்தாளராக வேண்டுமா? இலக்கியவாதியாக வேண்டுமா அல்லது பத்திரிகையாளராக வேண்டுமா என்ற தெளிவு முதலில் வேண்டும். இவற்றுக்குள் இருக்கும் வித்தியாசம் புரிய வேண்டும்.

    பத்திரிகையாளராகதான் என்று முடிவு செய்து விட்டால், அடுத்து என்ன துறையில் (அரசியல், வணிகம், பொழுதுபோக்கு, வாழ்க்கை / சமூக நிலவரம் – (Trends), சமூக மேம்பாட்டு விஷயங்கள், போன்றவை ) உங்கள் ஆர்வம் மற்றும் திறமை என்பதையும் சுய அலசல் செய்து அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் துறையைச் சார்ந்த பத்திரிகைகளை / ஊடகங்களை கவனமாக “படியுங்கள்” – பாடம் படிப்பதுபோல. ஒரு வாசகராகவும் ஒரு படைப்பாளராகவும் இரு கோணங்களிலிருந்தும் ஒவ்வொரு செய்திக் கட்டுரையையும் / செய்தியையும் அலசுங்கள். என்ன மாதிரி செய்திகள், எந்த விதத்தில் எழுதப்படுகின்றன என்பதைக் கூர்ந்து அலசுங்கள். ஆங்கிலத்தில் Reverse Engineering என்று சொல்வதுபோல் ஒரு செய்திக் கட்டுரையை எடுத்துக் கொண்டு அதை எப்படி அதன் ஆசிரியர் கட்டமைத்திருப்பார் என்று ஆராயுங்கள்.

    இப்படி முன் ஆராய்ச்சிகள் முடிந்ததும் எந்தப் பத்திரிகைக்கு என்ன மாதிரி எழுத வேண்டும் என்று புரிந்திருக்கும். ஒரு நிகழ்வு அல்லது ஒரு செய்தி உங்களுக்கு கட்டுரை எழுத தோதானது என்று தோன்றும்போது – அடடே இதைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்று “அரிப்பு” ஏற்படும்போது, உடனே அதைப் பற்றி பலரிடம் பேசியோ அல்லது புத்தகங்கள் / கோப்புகள் படித்தோ பல இடங்களிலிருந்தும் தேவையான விவரங்களை சேகரிக்க முடியும் என்ற எண்ணம் வலுத்தவுடன் உடனுக்குடன் அதை ஒரு வரை திட்டமாக / குறிப்புகளாக எழுதிக்கொள்ளுங்கள்.

    சிந்திக்க ஆரம்பித்த உடனேயே இப்படி பல ஐடியாக்கள் தினமும் வந்த வண்ணம் – சில சமயம் பொழிந்த வண்ணம் இருக்கும். கைக்கு எட்டும் இடங்களில் ஆங்காங்கே குட்டி நோட் புக் அல்லது தாள்கள் மற்றும் பேனாக்கள் வைத்திருங்கள்.

    அடுத்து மிக முக்கியமான வேலை. ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் வேலை செய்ய தயாராக வேண்டும். உங்களுக்குத் தோன்றும் ஐடியாவை, எப்படி வாசகர்களுக்கு ஏற்ற விதத்தில், அந்தப் பத்திரிகையின் அடிப்படை வடிவமைப்புக்கு ( Format) ஏற்ற மாதிரி உங்களால் எழுத முடியும் என்பதை ஆசிரியரிடம் விளக்கிச் சொல்லுங்கள். ஒவ்வொரு பத்திரிகையிலும் தலைமை ஆசிரியர் தவிர ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆசிரியர் இருப்பார். எந்தப் பகுதிக்கு உங்களுடைய ஐடியா பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அந்தப் பகுதியின் ஆசிரியரை முன் அனுமதி பெற்று ( appointment) நேரில் சந்தித்து பேசுங்கள். இது ஆரம்ப கால நட்பிற்காக. பழகிவிட்டால் ஒருவருக்கொருவர் தொலைபேசியிலேயே கலந்துரையாடி, ஒப்புதல் பெற்றுக்கொண்டு வேலையை ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு ஆள் தேவைப்படும்போது உங்களையும் அவர்கள் தொடர்பு கொண்டு வேலைக் கொடுப்பார்கள்.

    இங்கே முதல் பிரசுரம் வெளியாவதுதான் சற்று கடினம். ஒன்று வெளி வந்துவிட்டால் அதன் அஸ்திவாரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக்கொண்டே போகலாம். ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் படைப்புகள் வெளி வர ஆரம்பித்ததும் ஒரு portfolio செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களை சந்தித்து உங்கள் யோசனைகளை “விற்கும்போது” உங்களுடைய முன் அனுபவம் கையில் இருந்தால் இன்னும் கூடுதல் பலம்.

    அதன் பின் வானம்தான் எல்லை.

    கடைசியில், ஆனால் கட்டாயம் தேவை – வேகம். ஊடகத்துறையில் அந்தச் சமயத்தில் நடக்கும் நடப்பு நிகழ்ச்சிகள்தாம் ( Topical news) முக்கியம். காலம் / நேரம் என்பது இங்கே விலைமதிப்பில்லாதது. கொஞ்சம் அசந்தாலும் ஆறின கஞ்சியாகிவிடும். விரைவாக முடிவெடுக்கும் / எழுதும் திறமை. குறிப்பாக நடப்பு செய்திகள் பற்றி கட்டுரை எழுதும்போது அதன் சரித்திரம், பின்ணனி போன்றவை ஓரளவு புரிந்திருக்க வேண்டும். இதற்கு சமயம் கிடைக்கும்போதெல்லாம், பின்ணனி / பின் புல விவரங்களை அவ்வப்போது படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும் – இது ஒரு தொடர்ந்த கல்வி போலதான். குறித்த காலத்தில் குறித்த வேலையை பாங்காக முடித்து ஆசிரியரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பு இருந்தால் ஆசிரியர் குழுவின் நம்பிக்கையை பெறலாம். கால வரையரை ஊடகங்களில் மிக முக்கியம்.

    நேரம் என்று சொல்லும்போது உங்கள் கட்டுரையும் வாசகர்களின் நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று வேகமாக நகரும் வாழ்க்கையில் பலவிதமான போட்டிகளுக்கிடையே உங்கள் கட்டுரை வாசகரின் கவனத்தை ஈர்ப்பது முக்கிய விஷயம். ஈர்க்கும் வகையில் எழுதும் விஷயம், சொல்லும் விதம் அமைய வேண்டும். முதல் வரிகள் மிக முக்கியம். இரண்டு நிமிடத்திற்கு மேல் இன்றைய வாசகர் கவனம் நிலைக்காது என்ற எண்ணத்துடன் வடிவமையுங்கள். இன்றைய பத்திரிகையாளர் தொழில், சுருங்கச் சொல்லி விளக்கும் கலை.

    பத்திரிகையில் எழுத முக்கிய தேவை, செய்தியை நுகரும் / மோப்பம் பிடிக்கும் திறமை 🙂 இது பழக்கத்தில் தானே வரும். எது செய்தி என்பது எப்போதுமே சர்ச்சைக்குள்ளாகும் விஷயம். இந்தத் தொழிலில் அடிக்கடி பரிமாறிக்கொள்ளப்படும் வாக்கியம் – It is no news if dog bites man; when Man bites dog, it is news. 🙂

    நீங்கள் என்ன புதிதாக சொல்கிறீர்கள் என்பது முக்கியம். இந்த சமயத்தில் மாறி வரும் ஊடக நிலவரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். டிவி, மற்றும் இணையம் மூலம் பெரும்பாலான breaking news செய்திகள் வாசகர்களுக்கு கிடைத்துவிடும். இதையெல்லாம் தாண்டி அச்சு ஊடகத்தில் நீங்கள் சொல்வது வாசகர்களுக்கு புதிதாக / informative ஆக இருக்க வேண்டும்.

    இன்னொரு முக்கியமான தேவை பொறுமையும் விடாமுயற்சியும். ஆரம்ப நாட்களில் “பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்” கடிதங்கள் நிறைய வரலாம். (என்னிடம் இந்த ஆரம்பகால கடிதங்கள் இன்னும் உள்ளன. நடந்து வந்த பாதையை நினைத்து பார்க்க பின்னாளில் உதவும். :-)) இதற்கெல்லாம் மனம் தளராமல் ஆர்வம் குறையாமல் பல விதங்களில் நம் குறை நிறைகளை நாமே அவ்வப்போது சுய அலசல் செய்து கொண்டு முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும்.

    சந்தைக்கேற்ப பண்டங்கள் தயார் செய்து கொடுத்து பெயரையும் நிலை நாட்டலாம். ஒரு ஒழுங்குடன் ஒரு வாரத்தில் குறைந்தது இத்தனை கட்டுரைகள் எழுத வேண்டும் என்று ஒரு நியதியுடனும் ஒழுங்குடனும் (Discipline) திட்டமிட்டு செய்தால் சுயேச்சை பத்திரிகையாளராக சௌகரியமாக பொருள் ஈட்டவும் செய்யலாம்.

    2. திசைகள் பொறுப்பு எப்படி இருக்கிறது? திசைகள் அச்சு ஊடகமாகவும் மாற்றும் எண்ணம் உண்டா? திசைகள் மின்னிதழுக்கு தங்களின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன?

    ஆசிரியர் பொறுப்பு எனக்கு புதிதுதான். 16 வருடத்திற்கும் மேலாக கொடுக்கும் பக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது பெற்றுக்கொள்ளும் / தயாரிக்கும் பக்கம் வந்துள்ளது ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. மின்னிதழ் என்பதால் தயாரிப்பில் தொழில் நுட்ப விஷயங்கள் ஆரம்பத்தில் குழப்பின. அவையும் இப்போது ஓரளவு புரிகின்றன (என்று நினைக்கிறேன் :-)) ஆனாலும் தொழில் நுட்பம் காரணமாக இப்போதும் சில தவறுகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் இவைகளையும் தாண்டி விடுவேன் என்று நம்புகிறேன். நல்ல அனுபவம். ரசித்து செய்து கொண்டிருக்கிறேன்.

    திசைகள் அச்சு ஊடகமாக மாறுவது குறிக்கோள் அல்ல. இது ஒரு வணிக முயற்சியல்ல. வணிக விளம்பரங்கள் கூட தவிர்க்கப்படுகின்றன. சந்தா விளம்பரம் இல்லாமல் அச்சு ஊடகங்களை வெளியிடுவது சிரமமானது. நான்கு வருடங்கள் முன்பு திசைகள் ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய காரணம், இணையத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க வேண்டும், நிறைய விஷயங்கள் இணையத்தில் தமிழில் கிடைக்க வேண்டும் – தமிழ் இணையத்தில் நிறைய ஆக்கங்கள் புதிதாக உருவாக வேண்டும், அறியப்பட வேண்டும், அவை பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் – என்பதுதான். இன்னொரு அச்சு ஊடகமாக இல்லாமல், இணைய ஊடகமாக, யூனிக்கோட் குறியீட்டு முறையை உபயோகித்து திசைகள் உருவெடுத்ததன் காரணமும் அதுதான். தமிழில் யூனிகோட் குறியீட்டு முறையை உபயோகித்து வெளி வந்த முதல் மின்னிதழ் திசைகள்.

    இதே நோக்கோடுதான் – தமிழ் இணையத்தில் நிறைய புழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடுதான், வலைப்பதிவுகள் பற்றி ஜூலை 2003 இதழில் ஒரு அறிமுகக் கட்டுரையைப் பிரசுரித்து, தமிழில் வலைப்பதிவுகளின் வரவை திசைகள் ஊக்குவித்தது. இன்று ஓரளவு திசைகளின் எண்ணம் நிறைவேறியுள்ளது – இணையத்தில் நிறைய யூனிக்கோடில் தமிழ் ஆக்கங்கள் உருவாகின்றன / பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. தவிர, திசைகள் பூகோள ரீதியாக எந்த ஒரு பிரதேசத்தையும் சேர்ந்தது இல்லை. தமிழ் இன்று நாடுகளைக் கடந்த ஒரு உலக மொழி. தமிழ் குரல் ஒலிக்கும் இடங்களிலிருந்தெல்லாம் தமிழுக்கு பங்களிப்பு ஏற்படச்செய்ய அச்சு ஊடகத்தைவிட ஒரு மின்னிதழில் அதிக சாத்தியம் உண்டு. அச்சு ஊடகங்களும் இன்று மின்னிதழ் பதிப்பில் வெளி வரும்போது ஒரு மின்னிதழ் அச்சு ஊடகத்திற்கு செல்ல அவசியம் இருப்பதாக தெரியவில்லை. அதைவிட, தமிழை வேறு தளங்களில் எதிர்காலத்தில் எப்படி எடுத்துச்செல்லலாம் என்பதே திசைகளின் அடுத்த கட்டத் திட்டம். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும் ஒரு தொலை நோக்கு இதழாகவே திசைகள் இருக்கும்.

    மேலும், சிறுகதைகள், கவிதைகள் என்று இலக்கியம் இங்கே ஒரு அங்கம் மட்டுமே. ஆனால் இலக்கிய இதழ் அல்ல. முக்கியமாக சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் திசைகளின் குவியம். ஒவ்வொரு மாதமும் வெளி வரும் சிறப்புப் பகுதி ஒரு உதாரணம்.

    3. தங்கள் வலைப்பதிவு பக்கம் அடிக்கடி தென்படுவதில்லையே… ஏன்?

    எக்கச்சக்கமான வேலை பளுவினால் நேரம் கிடைக்கவில்லை……. – என்று சொல்ல ஆசைதான். ஆனால் உள்ளே “உண்மை பேசு” என்று ஒரு குரல் ஒலிக்கிறதே? 🙂 எத்தனை வேலை இருந்தாலும் ஆர்வமிருந்தால் நேரம், தானே முளைக்கும். அந்த ஆர்வம்தான் குறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வலைப்பதிவில் எனக்கிருந்த ஆரம்பகால புதுமை மங்குகிறது ஒரு காரணமாக இருக்கலாம். பதிவு என்றில்லை அச்சு ஊடகங்களிலும் முன் போல் எழுதும் ஆர்வம் குறைகிறது. எதன் மேல் இந்தப் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறேன் 🙂 ஆனால் இந்த அயற்சியும் ஆர்வக்குறைச்சலும் எழுதும் துறையில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது வந்து போகும் ஒரு சுழற்சிதான். சற்றுப் பொறுங்கள். மீண்டு /ம் வருவேன் 🙂

    4. அமெரிக்கா முதல் டான்ஜானியா வரை பல நாடுகளும், இந்தியா முழுக்க பல வசிப்பிடங்களிலும் வசித்தவர் நீங்கள். எந்த இடம் ரொம்ப பாதித்தது? எப்படி? மீண்டும் எங்கு செல்ல/வருகை புரிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    டான்ஜானியா !! முக்கிய காரணம் அந்த நாட்டில் வாழ்ந்திருந்தாலும் முழுக்க அறிந்திருக்கவில்லை. ( மற்ற இடங்களெல்லாம் அத்துப்படியா என்று கேட்காதீர்கள் – பதில் கிடையாது.) அங்கே இருந்தபோது குழந்தைகள் சிறியவர்களாக இருந்தார்கள். முழுக்க முழுக்க குழந்தைகள் / குடும்பம், அருகில் இருக்கும் நண்பர்கள் ( இந்தியர்கள்) என்று நான்கு வருடம் ஓடியே போய்விட்டது. பயணம் என்பது எல்லோரும் போல் Serangetti National park போன்ற பல்வேறு game parks மற்றும் இதர சுற்றுலா இடங்கள் மட்டுமே. ஒரு டுரிஸ்ட் போல்தான் வாழ்க்கை. ஆனால் இப்போது தோன்றுகிறது. இன்னும் ஆற அமர அங்கே உள்ளூர் மக்களுடன் பழகி, வித்தியாசமாக வேறு நிறையப் பயணங்கள் செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஓய்வு பெற்றவர்கள் பழைய இடங்களில் போய் வசிக்க ஏதாவது திட்டம் வரைய வேண்டும் 🙂

    5. திசைகள்.காம் போன்ற மின்னிதழ்களில் கத்திரிக்கு, கிட்டத்தட்ட உரிமை இல்லாதவாறு பங்களிப்பாளர்கள் ஆக்கங்களைத் தருகிறார்களா? அல்லது ‘எடிட்’ செய்தால் சுணங்குவார்கள் என்பதால், கச்சிதமில்லாத படைப்புகள் சில சமயம் வெளியாகிறதா? இணைய இதழில் நிர்வாக ஆசிரியரின் நடவடிக்கைகள் எவ்வாறு அச்சிதழ்களின் ஆசிரியரோடு வேறுபடுகிறது?

    “…அல்லது ‘எடிட்’
    செய்தால் சுணங்குவார்கள் என்பதால்,….” –

    திசைகளில் இதற்கு இடமேயில்லை. முன்பே கூறியபடி எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் செயல்படும் ஒரு அமைப்பில் தனி மனிதர்களின் சுணங்கல்களுக்கு இடமிருக்காது. இங்கே பத்திரிகையின் குறிக்கோள்தான் முக்கியம். தமிழில் புதிய ஆக்கங்களை /திறமைகளை ஊக்குவிப்பது திசைகளின் நோக்கம். எப்படியாவது சர்குலேஷனை அதிகரிக்க வேண்டும் என்ற எந்த விதமான அழுத்தமும் இல்லை; பிரபலங்களின் எழுத்துக்கள் இல்லாவிட்டால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. தரம் என்பது பெரும்பாலும் தனி மனிதரின் பார்வையைப் பொறுத்தது – subjective. திசைகளுக்கு வரும் படைப்புகளைப் படிக்கும்போது மிகச் சுமாராக இருந்தாலொழியப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறோம். புதிய எழுத்தாளர்களை இது ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். சுமாராக இருக்கும் படைப்புகளையும் சில சமயம் திசைகளுக்குத் தேவையான விதத்தில் மறுபடி எழுதித்தரவும் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன் – அப்படி கேட்டுக்கொண்டவர்கள் அன்போடு சிரமம் பார்க்காமல் மீண்டும் எழுதிக் கொடுத்ததும் உண்டு. திருத்தி எழுத வாய்ப்பே இல்லாத சில படைப்புகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் அப்படி நிராகரிக்கும் முன்னர், எழுதியவர் ஆரம்ப எழுத்தாளராக இருந்தால் எப்படி எழுதலாம் என்ற யோசனையையும் முன் வைத்துள்ளேன்.

    மின்னிதழில் கத்தரிக்கு அதிகம் வேலை இல்லை – தவிர்க்கப்பட வேண்டிய வாசகங்கள் / ஆபாசங்கள் / தாக்குதல்கள் இருந்தாலொழிய. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லா ஊடகங்களையும் போல் மின்னிதழிலும் கத்தரி / censor நிச்சயம் செயல்படுகிறது. எனக்குத் தெரிந்த வரையில் திசைகளில் அப்படி கத்தரிக்குத் தப்பி எந்த வாசகமும் வந்ததாகத் தெரியவில்லை. மற்றபடி அளவு வரையறை இணையத்தில் இல்லாததால் நீளத்தைக் குறைக்க கத்தரி தேவையில்லை. இது மின்னிதழின் சௌகரியம் 🙂 மற்றபடி கச்சிதமில்லாத படைப்பு என்பது subjective 🙂 அச்சு ஊடகத்தில் நான் எந்த ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கவில்லை. எப்போதுமே பங்களிப்பாளராகவே (contributor) இருந்துள்ளேன். ஆனால் அடிப்படையில் இரண்டு ஊடகங்களிலும் நிர்வாக ஆசிரியர் பொறுப்பு ஒரே மாதிரிதான் என்பது என் அனுமானம்.

    என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்ததற்கு மிக்க நன்றி பாலா.

    அருணா ஸ்ரீனிவாசனின் விரிவான பதில்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!


    | |

    Abu Musab al–Zarqawi

    அல் ஜர்காவி இறந்ததை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடகங்களும் ‘ஆஹா… ஓஹோ… பலே… பேஷ்… அமர்க்களம்.. என்ன சாதனை… வாவ்… சூப்பர்… நீட்… அது! அப்படி போடு… போட்டுத் தாக்கு… தல!! கலக்கல்… அடுத்து ஒஸாமாதான்… வெற்றி… நொறுக்கிட்டீங்க… பிச்சுட்டீங்க!!!‘ என்று மிதமாகப் பாராட்டும் சமயத்தில் பா. ராகவனின்குமுதம் ரிப்போர்ட்டர்மாயவலை கட்டுரையில் இருந்து:

    அல் காயிதாவின் ஈராக் பிரிவு தளபதி அபூ மூசாக் அல் ஜர்காவி (Abu Musab al – zarqawi) அமெரிக்க வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்கிற செய்தியால் கடந்த வியாழக்கிழமை செய்திப் பத்திரிகைகள் சாபல்யமடைந்தன. (பலபேர் ஜர்காவியை ஜவாஹிரியுடன் போட்டுக் குழப்பிக்கொண்டு, அல் காயிதாவின் முதன்மைத் தளபதியைச் சுட்டுவிட்டார்கள் என்று அலறினார்கள்!)

    மீடியா இத்தனை உரக்கப் பேசுமளவுக்கு ஜர்காவி ஒன்றும் ரொம்பப் பெரிய ஆள் இல்லை. மிகவும் சாதாரணமான லோக்கல் ரவுடிதான். 2004ம் ஆண்டு வரை அவன் பெயர் யாருக்கும் தெரியாது. யாருக்கும் என்பதை அடிக்கோடிட்டுப் படியுங்கள் ஒசாமா பின்லேடனுக்கே தெரியாது! Tawhid என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி ஈராக்கில் குண்டுபோட்டுக்கொண்டிருந்தவன். சதாம் உசேன் கைது செய்யப்பட்டபிறகு ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ கலவரங்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தபடியால் உள்ளூரில் கொஞ்சம் பிரபலமானான்.

    ஈராக்கில் அமெரிக்கப் படையின் ஆட்சிதான் உண்மையில் நடக்கிறது என்கிறபடியால் அல் காயிதாவால் நேரடியாக அங்கே எந்தத் திருவிளையாடலையும் நிகழ்த்தமுடியாத சூழ்நிலை. ஆகவே ஜர்காவியை வாடகைக்கு எடுத்தார்கள். சொல்லிக்கொள்ளும்படி அல் காயிதாவுக்கு இப்போது ஈராக்கில் ஒரு நெட் ஒர்க் இல்லாத காரணத்தால் ஜர்காவியையும் அவனது அடியாள்களையுமே on behalf of al qaeda வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். இதனடிப்படையில்தான் ஜர்காவியை அல் காயிதாவின் ஈராக் தளபதி என்று மீடியா சொல்கிறது.

    ஆனால் ஜர்காவிக்கு அல் காயிதாவின் தொடர்பும் தரவும் கிடைத்தபிறகு நிறைய நாசவேலைகளைக் குறுகிய காலத்தில் செய்தான் என்பதை மறுக்கமுடியாது. ஜோர்டனிலும் ஈராக்கிலும் பணியாற்றிக்கொண்ட பல பெரிய அமெரிக்க அதிகாரிகளைத் தீர்த்துக்கட்டியது இவனது திருப்பணிகளில் முதன்மையானது. ஈராக்கில் மட்டும் எழுநூறு பேரைப் படுகொலை செய்ததில் ஜர்காவியின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.

    நவம்பர் 2005ல் ஜோர்டன் தலைநகர் அம்மானில் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் குண்டு வெடித்துப் பலபேர் இறந்த சம்பவம் நினைவிருக்கிறதா? அது ஜர்காவியின் காரியம்தான். ஜோர்டன் நீதிமன்றம் ஜர்காவிக்கு பதினைந்து வருட சிறைத்தண்டனை எல்லாம் விதித்து உள்ளே தள்ளியது. தப்பித்து எப்படி வெளியே வந்தான் என்பதை அவனே ஒரு வாழ்க்கை வரலாறு எழுதியிருந்தால்தான் தெரிந்துகொண்டிருக்க முடியும்!

    ஆகவே…..?!


    | |

    China is democratic: Arundhati Roy

    அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அருந்ததி ராயை சந்தித்த நிருபர்களிடம் பரபரப்பான துணுக்கை அருந்ததி ராய் பகிர்ந்து கொண்டார்.

    சீனா சுதந்திர நாடு. அங்கு உள்ளே இருப்பவர்கள் தங்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்பதை அறிந்தே இருக்கிறார்கள். கூகிள் கூட வித்தியாசமாக அரசுக்கு விருப்பமான முடிவுகளை மட்டுமே தருகிறது என்பதை அரசல் புரசலாக அறிவார்கள். அமெரிக்காவிலும் தொலைக்காட்சி இருக்கிறது; சீனாவிலும் ரூபர்ட் முர்டாக் கால் பதித்துள்ளார். இதுவே சீனா முழுக்க முழுக்க மக்களை தளைகளில் இருந்து விடுவித்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.’

    அங்கிருந்த தமிழ் வலைப்பதிவர், ‘அருந்ததி… நீங்கள் 1984-இல்

    “I would hate to be thought of as an intellectual”

    என்று இந்தியா டுடே நேர்காணலில் சொல்லியிருந்தீர்களே? இப்போது இந்த மாதிரி புத்துணர்ச்சி சிந்தனையை வித்திடுவதன் மூலம் தங்களை அறிவுஜீவியாக்கி விடுவார்களே!?’ என்று வினவினார்.

    ‘அது நான் விரும்பாமல் கிடைக்கிற பட்டம். நாம் விரும்பும் விலையை நேரடியாக கார் விற்பவனிடம் சொன்னால், பேரம் படியாது. அதே போல்தான் இந்த ‘முற்போக்குவாதி’ பட்டமும். நான் உங்களிடம் சென்று ‘என்னை இப்படி அழை‘ என்று சொன்னால், நாமகரணம் இடமாட்டீர்கள். ஆனால், ‘எனக்கு இப்படி சொல்வது பிடிக்கவில்லை‘ என்று சொல்லிப் பாருங்கள்… உளறினாலும் கூட நிச்சயம் பீடத்தில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.’ என்றார்.

    தொடர்ந்து, ‘பீஜிங்கில் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடைபெறப் போகிறது. அவர்கள் என்ன பொருள்முதல்வாதத்தையா பின்பற்றினார்கள்? ஜனநாயகம் தழைக்கிறது என்று சொன்னாலும் டொரொண்டோவிற்கோ, பாரிசுக்கோ, ஜப்பானுக்கோ இது கிடைக்கவில்லை. சைனாவிற்குத்தான் கொடுத்தார்கள்! இது போதுமே?’ என்று முடித்துக் கொண்டு கறுப்புக் கண்ணாடி பொருத்திய லிமூஸினில் ஏறி இரவு விருந்துக்கு விரைந்து விட்டார்.

    தொடர்புள்ள சுட்டிகள் & உதவிய பேட்டி: AlterNet: Arundhati Roy: Back In the U.S.A. | Guardian Unlimited | Guardian daily comment | The western view of the rise of India and China is a self-affirming fiction | வஜ்ரா… தமிழ் வலைப் பதிவு: அருந்ததி ராய் | India not democratic: Arundhati Roy


    | |

    Only for Hot MEN / WOMEN (age 18 above only)

    நேற்றைக்கு சூடான பதிவு எழுதியாச்சு. இன்றும் சூடா இருக்கீங்களா? சூட்டைத் தணிக்கணுமா… வேறெங்கும் செல்ல வேண்டாம். கூகிள் படத் தேடலை முடுக்க வேண்டாம். இங்கே வந்தால் போதும்.

    தணிஞ்சுரும்.

    ஆனா, அக்கம்பக்கம் பாருங்க. பாஸ் இருக்காரா? இப்ப வேணாம். வேற யாராவது எசகுபிசகா பார்த்துருவாங்களா? வேணவே வேணாம்…

    தமிழ்மணத்தில் இந்த மாதிரி பதிவு இடலாமா என்று தெரியவில்லை.

    தேன்கூட்டில் புகைப்படத்தை அப்படியேப் போட்ருவாங்க… அங்கேயே படிப்பவர்கள் இதனால் சூடாகலாம். இறைவர் மேல பாரத்தைப் போட்டுட்டு நான் இதை இடுகிறேன்.

    நேற்று போல் இன்றும் உள்ளர்த்தத்தை மட்டும் கவனித்து பேரின்பத்தைத் தொடவும்.

    பாருங்க…

    பாருங்க….


    .


     



    நன்றி: சும்மா


    | |

    Montreal Visit

    மாண்ட்ரியால், க்யூபெக் – கனடா பயணக் குறிப்புகள் & படங்கள்:

    (படங்களை எலிக்குட்டி கொண்டு சுட்டினால், இன்னும் கொஞ்சம் பெரிய புகைப்படங்கள் ஃப்ளிக்கர் உபயத்தில் கிடைக்கும்)

  • திரும்பி வந்ததில் இருந்து ஆரம்பிக்கிறேன். சென்னையில் நாய், ஆடு, மாடு, கோழி பிராணிகளும், மனிதர்களும், உந்து வாகனங்களும் சாலையைப் பகிர்ந்து கொள்வார்கள்.. அமெரிக்காவில் சாந்த சொரூப விலங்குகளுடன் ஒட்டி உறவாட காசு கொடுத்து இந்த மாதிரி சஃபாரி செல்ல வேண்டும். வான்கோழி, லாமா, கலைமான் என்று எல்லாம் காருக்குள் தலை நீட்டி ‘மம் மம்’ சாப்பிடுகிறது.

    P1010096

  • கோட்டை நகரம் க்யூபெக் சிட்டி. தங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வாங்க என்று வாயிலில் இருந்து கூவி அழைக்கிறார்கள். குட்டி அக்டோபஸ்கள் (Squids) முதல் வெண்ணெய்யை பூரணமாக அடக்கி, வெண்ணெயில் முக்கியெடுத்த ரவியோலி வரை எல்லாமே சூப்பர்.

    குதிரை சவாரியில் அக்ரஹாரம் போல் இருக்கும் நான்கே நான்கு முக்கிய வீதிகளை வலம் வந்துவிடலாம். எனக்கு வாய்த்த குதிரைக்காரன் ‘இந்து மதம் – சிறு குறிப்பு வரைக’ என்று வினவ, ரொம்ப சிரமப்பட்டு கொஞ்சமே கொஞ்சம்தான் விளக்க முடிந்தது.

    P1010084

  • உலகின் மிக உயரமான அருவி: மாண்ட்மாரன்சி நீர்வீழ்ச்சி. நயாகரா நயாகராதான். இதன் அருகே உள்ளே, காட்டுவழிப் பாதை வழியே இயற்கைப் பயணம் கொடுக்கும் ‘கான்யான்’, மாண்ட்மாரன்சியை விட இனிமையான, தவறவிடக் கூடாத தலம்.

    P1010077

  • இந்த பாலம் Sainte-Anne Canyon-இல் உள்ளது. பாலத்தின் மேல் என்னைப் போன்றவர்கள் நடந்தும், இளவட்டங்கள், கயிறு போட்டு சாகசமாகப் பறந்தும் அந்தப் பக்கத்தை அடைகிறார்கள்.

    P1010060

  • நதியைத் துரத்தும் கற்கள்

    P1010047

  • தூரத்துப் பச்சை: உச்சியில் ஏறிக் கொண்டு மாண்ட்ரியால் தரிசனம்

    P1010039

  • மாண்ட்ரியால் முழுக்க சொக்க வைக்கும் தேவாலயங்கள். பிரும்மாண்டமானப் புறத்தோற்றம். அமைதி கவழும் உட்புறம். பிரகாரங்கள் எங்கும் உள்ளூர் மற்றும் பைபிள் கதைகள். சாந்தமாக நோக்கும் சிற்பங்கள். கண்ணாடி ஓவியங்கள். ஒரு நாள் முழுக்க ஒரு சர்ச்சுக்கு ஒதுக்கினால், உங்கள் பயணத்தின் நோக்கம், நிச்சயம் வெற்றி!

    P1010034

  • ஒலிம்பிக் கடனை இன்னும் அடைத்தபாடில்லை என்று சோகமாகப் புலம்பினாலும், சிரத்தையாக பராமரித்து வருகிறார்கள். பூங்காக்கள், தோட்டங்கள், சுற்றுச்சூழல் நிலையம் என்று 1976 ஒலிம்பிக்ஸ் தளங்களை வருகையாளர்கள் ரசிக்குமாறு உருமாற்றி இருக்கிறார்கள்.

    P1010019

  • கொஞ்சம் இருட்டிடுச்சு. Notre-Dame Basilica (Basilique Notre-Dame)
    P1010005

    வாரந்தோறும் ஏதாவது திருவிழா கொண்டாடுகிறார்கள். நான் சென்றிருந்தபோது ஜாஸ் திருவிழா. ஒவ்வொரு தெருமுக்கிலும் கச்சேரி. ஃப்ரென்ச் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம்.

    நடுவே வண்டிக்கு சோறு போடும்போது, என்னுடைய கிரெடிட் கார்ட் பிரச்சினை செய்தது. சண்டைக்கோழியாக நான் ஆங்கிலத்தில் கத்த, பெட்ரோல் பங்க் காரர் ஃப்ரென்ச்சில் மட்டுமே பேசி அடம்பிடித்தார். மொழிபெயர்ப்பாளர் நடுவர் மன்றம் வரை சென்று புரிந்து கொண்டாலும், கிராமப்புறங்களில் ‘எங்களுக்கு ஃப்ரென்ச்சு மட்டும்தான் தெரியும்‘ என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.

    குதிரை சவாரி சென்றால், இந்து மதத்தை ஐந்து வரிகளுக்கு மிகாமல் மேற்கத்திய உலகுக்குப் புரியவைக்க தயாராக இருங்கள். எல்லா வகை உணவுகளும் கிடைக்கும் என்றாலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய சாப்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் வைத்திருக்கும் பஃபே மஹாராஜா போன்ற இந்திய உணவகங்களையும் தவறவிட வேண்டாம்.

    குறைந்தது நான்கு நாளாவது மாண்ட்ரியால் மற்றும் க்யூபெக் மாகாணத்தை சுற்றிப் பார்க்க தேவை. தேவாலயங்கள் குறித்து முன்பே இணையம் மூலமாக போதிய பின்புலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றிற்கு செல்லும்போது ‘அரகரா’ மட்டும் போட்டுக் கொள்ளாமல், எப்போது படம் எடுக்க முடியும், எந்த ஆக்கம் முக்கியம், என்ன சரித்திரம் என்று தெரிந்து நண்பர்களுடன் பகிர்ந்தால் காலரைத் தூக்கி விடுவார்கள்.

    கடந்த முறை சென்று மூன்று வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. டொரொண்டோவிற்கு மதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் வருகிறாராம். செல்ல முடியுமா என்று திட்டமிட வேண்டும்.


    | |

  • Raj Gouthaman – State of Tamil Daliths

    ராஜ் கௌதமன்

    ஆங்கிலேயர் புகுத்திய பூர்ஷ்வா ஜனநாயகத்தில், பிரதிநிதித்துவ அரசியல், பெரும்பான்மையோரின் ஆதரவு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது. தமிழக மக்கள் தொகையில் இரு சதவிகிதத்தினராக இருந்த பார்ப்பனரை எதிர்க்க மீதி 98 சதவிகிதத்தினரைத் திராவிடர் என்ற ஒரு குடையின் கீழ் வேளாளர்கள் திரட்ட முனைந்தனர். வேளாளரின் சாதி அரசியலுக்குத் தமிழ் மொழியும் சைவ மதமும் ஆய்தங்களாயின.

    தலித் மக்களைத் தீண்டாதவர்களாக ஆக்கியதில் பார்ப்பனரைப் போலவே வேளாளருக்கும் பங்குண்டு. ஆனால் தீண்டாமைக் குற்றத்திற்கு பார்ப்பனரையும், அவர்களுடைய சமஸ்கிருதப் பண்பாட்டையும் காரணங்களாக வேளாளர்கள் எடுத்துக் காட்டினார்கள். நீலாம்பிகை அம்மையார் போன்றவர்கள் பார்ப்பனரின் சமஸ்கிருதப் பண்பாட்டிற்குள் கால்களைப் பதித்துக் கொண்டே தீண்டாமைக்குப் பார்ப்பனர் மட்டுமே காரணம் என்றார்கள்.

    வேளாளர் சத்திரியர் முதலான சாதியினரைத் திராவிடர் எனவும், எஞ்சிய பெரும்பான்மை தலித் மக்களை ஆதி திராவிடர் எனவும் ஒன்று திரட்டும் நோக்கில் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. இக்கட்சியின் தலைமை தெலுங்கு நிலவுடமையாளர்களிடமும் தமிழ் வேளாளர்களிடமும் இருந்தது. படித்த சிறுபான்மை ஆதிதிராவிடரும் இக்கட்சியில் அங்கம் வகித்தார்கள்.
    ….

    படித்த ஆதிதிராவிடர்கள் நகரங்களில் கால்பதித்து வாழ்ந்த சிறுபான்மையோராவார். தோட்டி, சக்கிலியர், ஒட்டர், உப்பரவர் முதலான தெலுங்கு – தலித்களும், தேவேந்திரகுலம் என்று தங்களை சமஸ்கிருதமயப்படுத்தி மேற்சாதியாக மாற்ற முனந்த பள்ளரும், இவர்கட்கெல்லாம் புரோகித காரியங்களைப் பார்த்து மேற்சாதியாகப் பாவித்துக் கொண்ட வள்ளுவர்களும், மாடு தின்ற, தின்னாத பறையர்களும் ஒரு அரசியற் கொடியின் கீழ் இன்றும் வரமுடியாதிருக்கிற போது, அன்றைக்கு இதனை நினைத்துப் பார்க்கவே முடியாதுதான்.
    ….

    சைவ உணவு, பசுவின் பால், நெய் ஆகியவை உயர்சாதி அடையாளத்தையும், அசைவ உணவு, குறிப்பாக மாடு, பன்றி இறைச்சி உணவு போன்றவை கீழ்ச்சாதி அடையாளத்தையும் சுட்டின. சாதி இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்பில் ஓரிரு வயது முதலாகவே எவை எவை தீட்டுக்கள், எவரெவர் தீண்டத்தகாதவர் ஆகியவை உணவு அடிப்படையில் சொல்லித் தரப்படுகின்றன.

    பசுவோடு தொடர்புடையவை சுத்தமானவை என்றும், நாய், பன்றியோடு தொடர்புடையவை அசுத்தமானவை என்றும் உணர்த்தப்படுகின்றன.

    ‘பசுவாலைப் பிடித்தபடியே நதியைக்
    கடக்கலாம்; நாய்வாலைப் பிடித்தபடி
    நதியைக் கடக்க முடியுமா ?’

    என்று அறநெறிச்சாரம் என்ற நீதி நூலும்,

    ‘எலும்பைத் தின்று செமிக்கிற நாய்க்குப்
    பசுவின் நெய்யுண்டு செமிக்க முடியுமா ?’

    என்று நீதி வெண்பா என்ற நீதி நூலும் கேட்கும் வினாக்கட்கு அடியில் பசு / நாய் என்ற ரீதியில் சுத்த / அசுத்தப் பாகுபாடு இருப்பது தெரியும். பழைய புறநானூறு போன்ற இலக்கியங்களிலும், பசு, பார்ப்பார், பத்தினிப் பெண் என்று பசுவின் வரிசையில் பார்ப்பனரையும், ஒருவனுக்கே உடலைத் தரும் பெண்டிரையும் சேர்த்திருப்பதைக் காணலாம். வேளாள / பார்ப்பன பக்தர்கள் இறைவனிடம் கசிந்துருகும்போது,

    ‘சீலமில்லாத புலையன், நாயன்’ என்றும்,
    ‘நாயடியேன், புலையடியேன்’ என்றும்

    தங்களைத் தாழ்த்திக் கொள்ளுகிறபோது, தாழ்ச்சியின் இறுதி எல்லையாக நாயும், புலையன் என்ற தலித்தும்தான் வாய்த்தார்கள்.
    ….

    எல்லாவித அதிகாரங்களும், குடும்ப அமைப்பில் தனிமனித அளவில் உளவியல் ரீதியாக உள்வாங்கப் படுவது பாலியல் அடிப்படையில்தான். தலித்கள் சாதி, பொருளாதார அதிகாரங்களைத் தகர்ப்பது போல, குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்ப்பது கடமை.

    ஆண் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தையும், அதன் வழியே உயர்சாதி ஆதிக்கம் கொண்ட சாதியமைப்பையும் இவை இரண்டையும் நிரந்தரப்படுத்துகின்ற மத நிறுவனத்தையும் உடைக்கின்றபோது தான் மொத்த சமுதாயத்தோடு தலித்களும் விடுதலை பெறுவது சாத்தியமாகும். எத்தனை அரசியல் – பொருளாதார மாற்றங்கள் நடந்தாலும் முழு விடுதலை என்பது சாதிய, பாலியல் ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் சாத்தியமில்லை.

    வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றைச் செய்து கொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். ‘தலித்’ ஒன்றுக்குத்தான் சாதி இல்லை, மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்குக் கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக்காக்க மதங்கள் இல்லை. சாதியையும் மதத்தையும் ஆண்மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விததில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழங்க முடியும்.

    தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்ப்வர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, ம்தக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும் நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும். அது வரை?

    நன்றி: தலித்திய விமர்சனக் கட்டுரைகள் :: ராஜ் கௌதமன் – காலச்சுவடு


    | |

    La Sa Ramamirtham

    அடையாளங்கள் – லா.ச.ரா.

    தருணத்தின் தர்க்கத்தினின்னு இன்னும் மீளவிலை. தேடினால் வராது; ஆனால் எதிர்பாராத சமயத்தில் பின்னால் வந்து தோளை தொடும் தருணத்தின் ஸரஸம்.

    எண்ணத்தோடு, அதனினும் மஹத்தான இன்னொரு எண்ணம் இழையும் ரஸாயனத்தில், மனம் நித்யத்வத்துடன் உராய்கையில், வேறு ரோமாஞ்சலி, நெஞ்சடைப்பு, தனக்குத்தானே தனிழப்பு, பயம், கணமேயுகம். யுகமே கணம் – கோடுகள் அறிந்த நிலையில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஒரு ஆனந்தம் – ஆனால் நொடி நேரமே தாள முடியாது. ஆனால் அதில் அமுதம் உண்டு விட்டேனே! அதற்காக அலைகிறேன்.

    தரிசனத்துக்கு ஆதாரம் அன்புதான். அன்பின் பெருக்கு. அன்புக்கேற்றபடி ஆவாஹனம் ஆவாஹனத்துக்கு ஏற்றவாறு தரிசனம். தரிசனம் என்பது என்ன? அன்பின் அலைச் சிகரத்தில் சமயத்துக்கேற்றவாறு அவள் தோன்றுவிதம், ரூபம். இங்கு அரூபமும் ரூபம்தான்; ஆமாம் யார் அவள்?

    நித்யத்வத்தில், மானிடப் பரம்பரை வழிவழி. நம்பிக்கையின் தீவிரத்தில் செதுக்கப்பெற்று, அதே வழிவழி பக்தியில் ஊறி, இலக்கியமென்றும் இசையென்றும் கலை, ஞானம், விஞ்ஞானம், தியானம் என்றும் பல்வகை வழிபாடுகளில் செழித்தவள்.

    அவள் எங்கும் நிறைந்த சக்தி ஆதலால் அவளை தனி உருவத்தில் முடக்குவதற்கில்லை.

    வான் நீலம் அவள் நிறம்.

    வாழை மரத்தில் ஆடும் தலைவாழையிலை அவள் பச்சைப் பட்டுப்பாவாடை.

    அதோ செம்பருத்திச் செடியில் எட்டா உயரத்தில் என்னப் பார்த்து நாக்கை நீட்டிச் சிரிக்கிறாள்.

    துளும்பிய கண்ணீர்த் துளியில், குமுறும் இடியில் நிறைந்த மனதில், இருவரிடையே தேங்கும் மௌனத்தில்.

    பூவரச மரத்தினின்று தானே சுழன்று சுழன்று உதிரும் இலையின் காவிய சோகத்தில்.

    கிணறுள், அதோ ஆழத்தில் சுரந்து கொண்டேயிருக்கும் தாரைகளில்,

    கோபுர ஸ்தூபி உச்சியில் உட்கார்ந்து சிறகைக் கோதி, உடனே பறக்கும் பச்சைக் கிளியின் சொகுஸில்,

    அடுத்த சமயம் அதே ஸ்தூபி மேல் கழுகின் சிறகு விரிப்பில்.

    சொல்லிக் கொண்டே போகலாம். உவமைகளில், உருவங்களில், அடையாளமாய்த் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். உள்ளத்தின் நெகிழ்ச்சியில் அவள் நடமாட்டம்; மௌனத்தின் உச்சிதான் அவள் வாழுமிடம்.

    திரிகரண சுத்தியில் எப்பவுமே இருக்க முடியாது. சுத்தமாயிருக்க ப்ராயத்தனம் தான் செய்ய முடியும். அழுக்கு சேர்ந்து கொண்டே தான் இருக்கும்.

    ஆனால் சில அபூர்வ சமயங்களில், முகூர்த்த வேளைகள் என்றே சொல்லலாம். தருணங்கள்; நான் என் பாசாங்குகளைக் களைந்து, பொய்மையில் மூழ்கிக் கிடந்த என் நாணயம் தானே மேல்வந்து, நான் யாருடனும், எதனுடனும் விரோதமில்லாமல் புவனத்தின் ஜீவஸ்ருதியோடு இழைந்துபோன வேளையில், இதயத்தின் அமுத கலசம் பொங்குகையில், தன் ஸஹிக்க முடியாத சௌந்தர்யத்தில் அவள் தோன்றுகிறாள். என் உள்ளத்தின் சதுப்பில் இறங்கி நடக்கிறாள். மார்பை இருகைகளாலும் பொத்திக் கொள்கிறேன். அவள் பாதச்சுவடுக்ளின் இன்பம் தாங்க முடியவில்லை. அதோ அவள் கொலுசு சப்தம் கேட்கவில்லை?

    அவள் தருண்யை.

    தெய்வம் வேண்டாம். ஆனால் தரிசனம் கட்டாயம் வேண்டும்.

    வார்த்தைகள் கிளிஞ்சல்கள்.

    அடையாளங்கள் (கட்டுரையின் சில பகுதிகள்) – லா.ச.ரா. (லா. ச. ராமாமிருதம்)


    | |

    Chat Meet – Icarus Prakash

    இகாரஸ் அல்லது ஐகாரஸ் பிரகாசு என்னும் ஜெயப்பிரகாஷ் குறித்து நிறைய எழுதலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சலக்கு சலக்கு நடையில் மண்டையின் ஓரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் எழுத்தின் கர்த்தா.

    சாம்பிளுக்கு பழைய ராயர் காபி கிளப்பில் இருந்து ஆவி பறந்த மெனுவில் சில:

  • Entrance with a Bang – சுய அறிமுகம்
  • முதல் கதை (1) | (2)
  • அறிவுஜீவிகளும் அற்பாயுளுக்கும் …் (ஆதவன்)
  • ஓ…. கல்கத்தா இன்ன பிற
  • ஜெ.ஜெ. சில குறிப்புகள்

    முழுவதையும் சாப்பிட வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும், ருசி பார்க்கத் தவறவிடக் கூடாத…

  • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் செயப்பிரகாசா
  • 1. கில்லியின் இலக்கு/வெற்றி என்று எதைக் கருதுகிறீர்கள்?

    கில்லியை, ஒரு personal project ஆக நினைத்துத்தான் துவக்கினேன், community service ஆக அல்ல. இப்போதும் அப்படியே தான் நினைக்கிறேன். ஆகவே, இலட்சியம், இலக்கு என்றெல்லாம் பெரிதாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு எழுதுவதை விட, படிப்பதிலும், அதை பகிர்ந்து கொள்ளுவதிலும் ஆர்வம் அதிகம். சுவாரசியமான விஷயம் ஏதேனும் தென்பட்டால், அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுவது வழக்கம். அதை பொதுவான இடத்தில் வைத்துச் செய்தால், தொலைபேசிக்கு ஆகும் பணத்தையும், தனி மடல் பரிமாற்றங்களுக்குச் ஆகும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று நினைத்துத்தான் கில்லியைத் துவக்கினேன்.

    2. ஆங்கிலப் பயன்பாடை கில்லி அதிகரிக்கிறது; கில்லியில் சிலரை பரிந்துரைப்பதே இல்லை; இவரை சுட்டினால்,அந்தப் பக்கத்தில் இருந்து ஒருவரை சுட்டி சமநிலை பாதுகாக்கிறார்கள்; என்றெல்லாம் குற்றச்சாட்டு எழவில்லை:-) வந்தால் எப்படி பதில் கொடுப்பதாக உத்தேசம்? பரிந்துரைகளினால்,பதிவுகளினால் வரும் எதிர்பார்ப்புகளை எப்படி சமாளிக்கிறீர்?

    இப்படிப் பட்ட குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்கிறது.

    ஆங்கிலப் பயன்பாடு : கில்லியின் நோக்கம் மொழி வளர்ச்சி அல்ல, அதே சமயம் மொழியைக் கொலை செய்வதுமல்ல. தமிழ் மொழி பேசுபவர்களுக்கு அப்பீல் ஆகும் என்று நினைக்கிற விஷயம், ஆங்கிலமோ, தமிழோ, இந்த இரண்டில், எந்த மொழியில் இருந்தாலும், அது கில்லியிலே இடம் பெறும். உருப்படியான சங்கதிகள் எந்த மொழியில் இருந்தால் என்ன? தேவைப்படும் போது மொழிபெயர்த்துக் கொண்டால் போயிற்று.

    சிலரைப் பரிந்துரைப்பதே இல்லை : கில்லி, ஒரு exhaustive aggregator அல்ல. சிறந்ததையே கொடுப்போம் என்றோ, எல்லாப் பதிவுகளையும் கண்காணிக்கிறோம் என்றோ, சொல்வதில்லை. அப்படிச் செய்யவும் இயலாது. நிமிடத்துக்கு எத்தனை பதிவுகள் ஆரம்பிக்கப்படுகின்றன என்கிற புள்ளிவிவரம், கூகிளில் தேடினால் கிடைக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், எல்லாப் பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பது மனித யத்தனத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். மேய்கிற போது, கண்ணில் படுகிற, சுவாரசியமான விஷயத்தை இணைக்கிறோம். இணைக்கப்படுகிற அனைத்து விஷயங்களும், கில்லியின் தொகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பு, ரசனையைச் சார்ந்தே அமைகிறது.கில்லி தொகுப்பாளர்கள் அனைவரும், கிட்டதட்ட ஒத்த அலைவரிசையில் இயங்குவதால், இப்படிப் பட்ட கேள்விகள் எழுகின்றன. புதிதாக வேறு யாராவது உறுப்பினர் வந்தால் கில்லியின் நிறம் மாறலாம்.

    பரிந்துரைகள் : பரிந்துரைகள் அதிகம் வருவதில்லை. அப்படி வந்தாலும், அதை வாசித்து விட்டு, பிடித்திருந்தால் தான் இணைக்கிறேன். இது வரை யாரும், ” நான் பரிந்துரை செய்தேன், ஏன் போடலை? ” என்று கேட்டதில்லை. இனி யாராவது அப்படி கேட்டால், அது பாலாஜியின் டிபார்ட்மெண்ட் , அவரைக் கேட்டுங்க” என்று சொல்லலாம் என்று உத்தேசம்.

    3. மற்ற இடங்களில் கிடைப்பதுதானே கில்லியிலும் இருக்கிறது என்று வலைப்பார்வையாளர் விலகிச் செல்லும் அபாயம் இருக்கும் தற்போதைய கில்லிப் பதிவுகளை, மாற்றும் எண்ணம்
    இருக்கிறதா? எக்ஸ்க்ளூசிவ்கள் வரவாய்ப்புண்டா? வருங்காலத்தில் எவ்வாறு வளர்ச்சி அடையும்?

    சீரியஸாகச் சொல்கிறேன். வாசகர் வட்டம், ப்ராண்ட் லாயல்ட்டி என்று எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஒரு நாளைக்கு இத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்று கிடைக்கிற புள்ளிவிவரம், கொஞ்சம் திருப்தியைத் தருகிறது. அவ்வளவே. வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும், வீச்சை அதிகப்படுத்த வேண்டும் ஏன்பதற்கான திட்டம் ஏதும் இல்லை. உதாரணமாக, இது போன்ற முயற்சி ஒன்றை இணையத்தில் துவங்கினால், அதை பிரபலப்படுத்த என்று சில வழிகள் வழிகள் இருக்கின்றன. அதிலே மிக மிக எளிமையானது, என்னுடைய அட்ரஸ் புஸ்தகத்தில், இருக்கிற நண்பர்களின் முகவரிக்கு ஒரு மெயில் தட்டிவிடுவதுதான். அதைக் கூட நான் செய்ய வில்லை. ஏனெனில், இதை நானாகச் சென்று பிறருக்கு அறிவிக்கும் போது, அதிகமான பொறுப்புணர்ச்சியுடன் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை நான் விரும்பவில்லை. அலுவலகப் பணி, விற்பனை இலக்கு, டெட்லைன், என்கிற அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் முகமாக, தளைகளில்லாத, ஜாலியான ஒரு பணியாகவே கில்லியை நான் கருதுகிறேன். ‘வெத்தான பதிவுகள் இடம் பெறுகின்றன, தரம் கூடிவிட்டது அல்லது குறைந்துவிட்டது’ என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வருவதற்கு காரணம், இதுதான்.

    ” இதப்பாருங்க சார்/மேடம், நான் எனக்குப் புடிச்சதை இங்கே லிங்க் கொடுக்கிறேன். அது எதைப் பத்தினதுங்கறது ஒரு சின்ன லீடும் கொடுக்கிறேன். புடிச்சிருந்தா கிளிக் செஞ்சு படிங்க, இல்லாட்டி விடுங்க..டைம் கிடைச்சா நாளைக்கு நைட் வந்து பாருங்க, ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு புடிக்கும். படிச்சுட்டு, ஏதாச்ச்சும் சொல்லணும்னு தோணினா, இங்கே பின்னூட்டம், கொடுக்கணும்னு கட்டாயமே இல்லை, அந்தப் பதிவிலேயே போய் சொல்லுங்க”

    இதைத்தான், நான் அடிக்கடி, நேரிலே பார்க்கிற நண்பர்களிடம் சொல்வது. no-obligation-from-either side. இதுதான் கில்லியின் மாடல்.

    புதுசு புதுசாக ஏதாச்சும் ஐடியா வர வர, செஞ்சு பார்த்துக்கிட்டே இருப்போம். ஆகவே வருங்காலத்தில் கில்லியில் மாற்றமும் வளர்ச்சியும் இருக்கும். ஆனால், அது வாசிக்கிற அனுபவத்தை மேம்படுத்துகிற மாதிரியும், கில்லியின் தெரிவுகளில் நம்பிக்கை வைத்து, ஆசையாக வந்து படிப்பவர்களுக்கு, இன்னும் அதிகம் தீனி போடுகிற மாதிரியும் தான் இருக்கும்.

    4. கில்லியினால் தங்களின் சொந்தப் பதிவில் இடுகைகள் குறைந்து, கிட்டத்தட்ட நிறுத்தவேப் பட்டுவிட்டது? உங்களின் எழுத்தார்வம் எப்படி இருக்கிறது? புத்தகம் எல்லாம் போடும் எண்ணம்
    உண்டா…

    எனக்கு எழுதுவதைவிடவும் படிப்பதிலே தான் ஆர்வம் அதிகம். எதையாவது எழுதினேன் என்றாலும் கூட, அதும் அந்த நேரத்தில் படித்தது, பார்த்தது , கேட்டது ஆகியவற்றின் எதிர்வினையாகத்தான் அமையும். சுயமாக ஒரு விஷயத்தை என்னால் உருவாக்கவே முடியாது என்பது, எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக, அவ்வப்போது எழுதி, பின்னூட்டங்கள் மூலமாக பிடரியில் அடியும், பூங்கொத்தும் பெறுவது வேறு. எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்கி, consistent ஆக செயல்படுவது என்பது வேறு. பின்னது எனக்கு வராது.

    சொந்தப்பதிவு இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது, சொந்தப் பதிவில் நீளமாக எழுத வேண்டும் என்று நினைப்பதைத்தான், கில்லியிலே சுருக்கமாக எழுதிவிடுகிறேன். கில்லிக்குள் அடங்காது என்று நினைப்பதை சொந்தப் பதிவில் எழுதுவேன்.

    எழுத்தார்வம்? இருக்கிறது. ஆனால், அது, எதிர் வீட்டு அம்மாவின் ஆஸ்துமா போல அடிக்கடி வந்து வந்து போகும். முன்பெல்லாம், ஆர்வக்கோளாறில் சிலதை எழுதிக் கொண்டிருப்பேன், இப்போது அதை எல்லாம் குறைத்து விட்டேன். அப்படியும், வெட்ட வெட்ட, சில சம, பை பை அடலசன்ஸ் ‘ என்று முளைத்துவிடுகிறது 🙂

    புத்தகம் போடும் எண்ணம் ? இருக்கிறது. ஆனால், இது வரை எழுதியதில், புத்தகம் போடுகிற அளவுக்கு ஒன்றுமே தேறவில்லை. பிசினஸ் புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று ஆசை இருக்கிறது. என்னுடைய அனுபவங்களை அடிப்படையாக வைத்து, கொஞ்சம் கற்பனை கலந்து, சென்னை போன்ற வளரும் மாநகரத்திலே ஒரு மீடியம் லெவல் பிசினஸ் செய்வதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை, உபதேசங்கள், புள்ளிவிவரங்கள், பின்னிணைப்புகள் ஏதுமில்லாமல், entertainment value அதிகம் உள்ள மாதிரி ஒரு ஜாலியான புஸ்தகம் எழுத வேண்டும் என்று எண்ணம் உள்ளது. அதிலே இடம் பெற இருக்கும் ஒரு அத்தியாயத்தை [ recruitment process இல், ரிசப்ஷனிஸ்ட்டைத் தேர்வு செய்யும் போது நடக்கும் கூத்துக்கள் ( உண்மை +கற்பனை) ], ஏழாவது முறையாக அடித்துத் திருத்தி சீராக்கி, நண்பர்களிடம் ( வலைப்பதிவு பக்கமே வராதவர்கள்) காண்பித்த போது, கிடைத்த reaction நம்பிக்கை தருவதாக இருந்தது. என்னுடைய வேகத்துக்கு, எப்படியும் முடிக்க இன்னும் ஆறுமாசமாவது ஆகும். பதிப்பகத்துக்கு பேர் கூட தேர்வு செய்துவிட்டேன். oneBookWonder. புஸ்தகம் போட முப்பதாயிரத்து சொச்சம் செலவாகும் என்கிறார்கள்.அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது 🙂

    5. கிரிக்கெட் போல் பதினொன்று ஆட்டக்காரர்களாக மாறும் வரை பங்களிப்போர் எண்ணிக்கை உயருமா? விகிதாசாரப் பிரதிநித்துவம் உண்டா? யார், யார் அடுத்து சேர்கிறார்கள்.

    எந்த திட்டமும் கிடையாது. கில்லி என்கிற ஐடியா முந்திய நாள் இரவு தோன்றியதும், அடுத்த நாள் இரவு பாலாஜியிடம் கேட்டேன். ‘சரி வரேன்’ என்றார். பத்ரியிடம் கேட்டேன். ‘சரி, ஆவட்டும் பாக்கலாம்’ என்றார் காமராஜர் மாதிரி. பிறகு வந்தார். திடீர்னு ஒரு நாள் வெங்கட் கிட்டே கேட்டேன். சரின்னார். wa வும் அப்படியே. சில பேர் இயலாமையைச் சொல்லி மறுக்கவும் செய்தார்கள். இனிமே யார் வருவாங்கன்னு எனக்கே தெரியாது. ப்ளான், ஸ்ட்ராடஜின்னு எதுவும் கிடையாது. கோட்டு சூட்டு போட்டு, கண்ணாடி அறைக்குள்ளே நடக்கிற conference ஐ விட, barCamp மாதிரியான un-conference க்குத்தான் இப்ப மவுசு ஜாஸ்தி. மூளை ஒழுங்கா வேலை செய்யற வரைக்கும், தோணின படியெல்லாம் செஞ்சுகிட்டே போவோம். நல்லா இருந்தா நாலு பேர் வந்து படிப்பாங்க. இல்லைன்னா, வேற நாலுபேர் சேர்ந்து, கில்லிக்கு பதிலா, கபடின்னு ஒண்ணு ஆரம்பிப்பாங்க. இதானே யதார்த்தம்?


    | |

    Jerk Off

    கைமைதுனம் (masturbation) என்னும் பாடம் எட்டாவது படிக்கும்போது தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்தது. காலையில் வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று unscientific-ஆக நிறைய axiom-களை திரு.வி.க. சொல்லிக் கொண்டே சென்றிருந்தார். அதில் மனதில் மிகவும் பதிந்தது: ‘கைமைதுத்தனம் செய்வதால் உடல் சக்தி விரயம் (உண்மை); பிற்காலத்தில் நலக்கேடு வரும் (ஃபில்டர்ட் பொய்).

    தண்டமிழ்க் கொண்டல் சுவாமிநாதனிடம் பாடத்தை நடத்தும்படி வேண்டிக் கொண்டாலும், இதை விட உங்களுக்கு சீதையின் வர்ணனை சுவாரசியமாய் இருக்கும் என்று காலாண்டுத் தேர்வுக்கு இடம்பெறாத, கம்பராமாயணத்தில் இருந்து இலக்கியரசத்துக்குக் கொண்டு போய் விட்டார்.

    ‘ஒரு தடவை கையடிச்சா தப்பா? வாரத்துக்கு ஏழு தபா, கண்ணாலம் கட்டிக்கற வரைக்கும் கையடிச்சா தப்பா?’ என்று அன்னியன் மாதிரி கேள்விகள் ‘டெபோனேர்’-இல் வருஷத்துக்கு எட்டு தடவை விதவிதமாக இடம்பெறும்.

  • ‘நான் நடிகையைப் பார்த்து செய்து கொள்கிறேன். தவறா?’
  • ‘அம்மா பக்கத்திலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் செய்ய ஆவல் எழுகிறது? என்ன செய்யலாம்?’
  • ‘எதிர் வீட்டு சித்ரகலாவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். ஆனால், அவளை நினைத்து நான் கையடிக்கிறேன். இது உண்மையான காதலா?’
  • ‘எனக்கு வயதானவர்களைப் பார்த்தால் உணர்வு மேலிடுகிறது. அவர்களை நினைத்து வெளிவருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் என்னை விட பத்து வயது பெரியவளை திருமணம் செய்து கொள்ளலாமா?’

    கேள்விகளை நிஜங்கள் எழுதினார்களோ… உதவி ஆசிரியரே எழுதினாரோ… பதில்களை விட முக்கியமானவை.

    வலையகத்துக்காக டெம்பிளேட் தேடிக் கொண்டிருந்தபோது, Why Spouses Masturbate படிக்க நேரிட்டது. தனிமடலில் கல்லூரி நண்பன் ரகுவிற்கு அனுப்பி வைத்துவிட்டு விஷயத்தை மறந்தே போனேன்.

    ‘இதை ஏன் நீ மொழிபெயர்க்க கூடாது’ என்றபோது ‘என்னுடையது “அப்படிப்பட்ட” பதிவில்லை‘ என்று சொல்ல மொழிபெயர்த்தே மின்னஞ்சலில் அனுப்பியும் விட்டான்:


    கைமுஷ்டி ஏன் ?

    பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பொதுவான சந்தேகம், சமயங்களில் ஆண்கள் தங்களுடன் உறவு வைத்துக்கொள்வதை விட ஏன் கைமுஷ்டி வேலை செய்கிறார்கள் ? என்னதான் தாங்கள் தங்கள் துணையுடன் உறவு வைத்துக்கொள்ள தயாராக இருந்தாலும் அவர்கள் கைமுஷ்டியே ஏன் நாடுகிறார்கள் ?

    இப்படி குறைப்படும் பெண்கள், தங்கள் துணைவர்கள் தங்களுடன் போதுமான அளவு உறவு வைத்துக்கொள்வதாகவும், அதில் அவர்கள் திருப்தியுடன் இருப்பதாகவும் கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறார்கள். இவ்வளவு இருந்தும் கைவேலை ஏன் என்ற கேள்விக்கு அவர்களுக்கு விடை தெரியவில்லை.

    இதனால் சிலர் தங்கள் துணை தங்களை நிராகரிப்பதாக நினைத்துக்கொண்டு பெரும் சோகத்திலும், மனக்குழப்பதிலும் இருக்கின்றனர்.

    “என்னிடம் என்ன குறை ? என்னிடம் என்ன இல்லை ?”

    “கைவேலைக்கு பதில் என்னிடம் உறவு வெத்தால் என்ன ?” போன்ற கேள்விகள் அவர்கள் மண்டையைக் குடைகின்றன.

    இதற்கு ஒரே பதில் “அவர்களுக்கு விளங்காது / புரியாது”. ஏன் புரியாது … புரியாது.

    பிரசவம், மாதவிடாய் பிரச்சனைகள் பற்றி ஆயுசுக்கு படித்தாலும் எப்படி ஆண்களால் அதன் வலியை புரிந்து கொள்ள முடியாதோ அதே போல் பெண்களால் கைவேலை பற்றி புரிந்துகொள்ள முடியாது.

    ஆனால் பெண்களுக்கு சிலவற்றை சொல்லியே ஆக வேண்டும்…

    பெரும்பாலான ஆண்கள், தங்கள் துணையோடு உறவு வைத்துக்கொள்ள எவ்வளவு ஏங்குவார்களோ அதே அளவு கைவேலைக்கும் ஏங்குவார்கள்.

    கைவேலை தரும் திருப்தியை உறவு தர இயலாது, அதே போல் உறவின் போது ஏற்படும் இன்பம்,நெருக்கத்தை கைவேலை தர இயலாது.

    இரண்டும், வெவ்வேறு வகையான இன்பங்கள். ஒன்றோடு ஒன்றை ஒப்பிட முடியாது. இவை இரண்டுமே பெரும்பாலான ஆண்களுக்கு தேவையாவைகள்.

    முழுவதுமாக உறவில் ஈடுபட முடியாத ஆண்கள்தான் இது போன்ற வழிகளை தேர்ந்தெடுப்பதாக பெண்கள் கருதுகிறார்கள். இது சில சதவீதம் உண்மையென்றாலும், ஆண்களுக்கு கைவேலையில் கிடைக்கும் இன்பமே வேறு. இதைப்பற்றிய பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்னவென்றால், “தன் துணையுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருக்கும் ஆண்களே, உறவில் இல்லாத ஆண்களை விட அதிக அளவு கைவேலையில் ஈடுபடுகின்றனர்”.

    கைவேலை செய்வதனால் ஆண்கள் தங்கள் துணையை வெறுக்கிறார்கள் என்றோ, அவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றோ அர்த்தம் கிடையாது. அதே சமயம் அவர்களுக்கு வேறு சிந்ததையே இல்லை என்றும் கிடையாது. நல்ல கணவனாக / துணைவனாக இருப்பது வேறு இது வேறு.

    முடிவாக ஆண்கள் ஏன் செய்கிறார்கள் ?

    கைவேலை செய்வது ஆண்களின் தேவை. இதை சொல்லி புரிய வைக்க முடியாது, மாற்றும் சொல்ல முடியாது.

    ஆக பெண்களே, உங்கள் துணையின் கைவேலை பற்றி தெரியவந்தால் அதை பெரிது படுத்தாதீர்கள். திருப்தியோடு இருக்கும் உங்கள் துணை உங்களை மேலும் ஆழமாக நேசிப்பார்.

    ஆண்களே ! உங்கள் துணையோடு இது பற்றி பேசுங்கள். அவர்களுக்கு உங்கள் தேவையை விளக்க முயற்சியுங்கள்.

    முடியாவிட்டால் இந்த கட்டுரையை ஒரு முறை படிக்க சொல்லுங்கள்.


    திருமணத்திற்குப் பின் உறவு குறித்து முன்பு படித்தது:

    மாப்பிளையின் மாமா, கல்யாணப்பரிசாக தம்பதியருக்கு ஒரு 64 அவுன்ஸ் கூஜாவைக் கொடுத்திருந்தார். பையனை தனியை அழைத்து சென்று, ஒவ்வொரு முறை உறவு வைத்துக் கொள்ளும்போதும் ஒரு கல்லை அதில் போட்டு வருமாறு சொல்லியிருந்தார்.

    முதல் வருடம் கழிந்தது.

    விருந்துண்ண வந்திருந்த மாமாவிடம் கூஜாவைக் காட்டினான். கற்களால் நிரம்பி, வழியும் தருவாயில் இருந்தது. ‘இனி ஒவ்வொரு முறை வச்சுக்கும்போதும் ஒரு கல்லை எடுத்து வெளியே எறிந்து வா’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

    பத்து வருடம் கழித்து குழந்தைகளுடன் மாமாவைப் பார்க்க வந்தவன், கூஜா இன்னும் காலியாகாத சோகத்தை சொன்னான். ‘இங்கே வா’ என்று அழைத்துக் கொண்டு பாதி நிரம்பிய தன்னுடைய கூஜாவை வறட்சியாகக் காண்பித்தார் மாமா.


    | |