சொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்


சொல்வனம் பத்திரிகைக்கு என் கண்டனங்கள்!

தமிழரின் நாயகன், தமிழ் மக்களின் இதயத் துடிப்பான ரஜினியை புகைக்கு அடிமையானவர் போல் சித்தரித்து அதை அவர்களின் சிகரெட் கட்டுரைக்கு படமாகப் போட்டிருக்கிறார்கள்.

ரஜினி இப்பொழுதெல்லாம் பொதுவில் புகை பிடிப்பதே இல்லை. சினிமாவில் கூட எந்திரனாக நடிக்க ஆரம்பித்து விட்டதால் அவரிடம் இருந்து புகை வந்தால் அது மின் கோளாறினால் மட்டுமே.

நடிகனையும் கதாபாத்திரத்தையும் நாம் நிஜத்தோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. ராணி முகர்ஜியை முத்தம் கொடுக்கிறான் என்று பார்க்காமல், தன் மனைவியை சாகேத் ராம் உதட்டோடு உதடு கவ்வுகிறான் என்று பார்க்க வேண்டும். இது எப்போது தமிழ இலக்கியகர்த்தாக்களுக்கு உதயமாகி மனதில் நிலை நிற்குமோ?

எம் எஸ் சுப்புலஷ்மி வாயில் தம் வைத்துக் கொண்டிருப்பதாக காட்சியளித்தாரே… சிவாஜி எத்தனை படங்களில் இப்படி வந்தார்! அதை எல்லாம் முன்னுதாரணமாக இந்தப் பத்தியின் ஆசிரியர் துணை கொள்ளவில்லை. இதற்கு ஆசிரியர் குழு முழு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வ்வொரு படத்திற்கு அடியிலும், எந்த வருடன் வந்த திரைப்படம், யாராக நடித்த படம் என்று போட வேண்டும்.

மேலும் இந்தப் பதிவில் “எலி” போன்ற சமீபத்திய படங்கள் குறித்த பதிவுகளும் இல்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. அதில் வடிவேலு சிகரெட் கடத்தல்காரர்களை எம்ஜியார் போல் துரத்திப் பிடிப்பார். அது தமிழ் சினிமாவின் மைல்கல். கருத்தும் சித்தாந்தமும் கொண்ட கோலிவுட் காவியம். அதை ஏன் ஆசிரியர் இருட்டடிக்கிறார்?

”பத்த வச்சுட்டியே பரட்ட” என்பவர் கவுண்டமணி.

மாணிக்கம் புகை பிடித்ததில்லை; பாட்ஷா என்பது அவரின் மாற்று உருவம்; அதாவது இருமுனை சீர்குலைவு.பந்தயத்திற்காக வெறுமனே வாயில் பத்து முறை தூக்கிப் போட்டு பிடித்தவர் ”நினைத்தாலே இனிக்கும்” Roald Dahl – அதைக் காப்பியடித்த கே பாலச்சந்தர்.பொங்குவோம்! பொங்க வைப்போம்!!

அது கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே: “சார்… நீங்க அந்த வெண்குழல் சாம்பல் கூட்டை உதிர்ப்பதே அழகு”னு சொல்பவர்களுக்காக மட்டுமே – அவர் உதட்டை வத்தி தொடுவதில்லை. போதையும் உள்ளே செல்வதில்லை.

சுருக்கமாக பரமானந்தம்! பரபிரும்மம்!!

எண்பதுகளில் வறுமையின் காரணமாக பீடி பிடிப்பவரை குறிவைக்காதது ஏன்?

ரஜினி என்பவர் காசுக்காக புகை பிடிப்பவர்! காசு கொடுத்து புகை பிடிக்கும் ஒபாமாவை ஏன் சொல்லவில்லை?

சார்மினார், வில்ஸ் என்று விளம்பரத்திற்காக ஆடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏன் குறிவைக்கவில்லை…

கண்டிப்போம்!

கதாநாயகிகள் கால் மீது கால் போட்டுக் கொண்டு புகை பிடிப்பதை “லைட்ஸ் ஆன்” வினோத் என்றோ எழுதியிருக்கிறார். இந்த மாதிரி சரித்திர துணுக்குகளும் இந்தப் பதிவில் இல்லை. இப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்பட வேண்டும். என் வக்கீல்களை உசுப்பி விட்டிருக்கிறேன். அவர்கள் உங்கள் சார்பாக ஒவ்வொரு நாட்டிலும் இப்பொழுதே மானநஷ்டம் கோருவார்கள்.

ரவி நடராஜன் இவ்வாறு பரிந்துரைத்தார் என்றால் அவருக்கும் என் கண்டனங்கள். ரஜினி ரசிகர் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். அனைவரும் பொங்குங்கள். கொதித்தெழுங்கள். கறுப்புக் கொடி காட்டுங்கள். எங்கே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்? வாருங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.