Snowden – NSA Secrets


ஸ்னோடென் அறியாத ரகசியம்
– பாலாஜி

ஹவாய் தீவுகளின் எரிமலைகளுக்கு நடுவில் அந்தக் கட்டிடம் இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) இருக்கும் இடத்திலிருந்து நாற்பதே நிமிடத்தில் வைகிகி கடற்கரைக்கு சென்றுவிடலாம். பூமிக்கு அடியே பதுங்குகுழி மட்டுமே முன்பு ஒயாஹு தீவில் வைத்திருந்தார்கள். வளர்ந்து வரும் ஆசிய புலிகளையும் வளர்ந்து விட்ட சீனப்புலியையும் வேவு பார்ப்பதற்கு அத்தனை சிறிய நிலவறை போதாது என்பதால் 358 மில்லியன் டாலர் செலவில் சென்ற ஆண்டுதான் விஸ்தரித்து திறக்கப்பட்டது. அமெரிக்கா உளவு பார்ப்பதைப் போட்டுக் கொடுத்த எட்டப்பன் எட்வர்டு ஸ்னோடென் இங்கேதான் வேலை பார்த்தார்.

எட்வர்டு ஸ்னோடென் நேரடியாக என்.எஸ்.ஏ.விற்கு வேலை பார்த்தவர் இல்லை. அந்த நிறுவனத்தில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தர். பூஸ் அலன் ஹாமில்டன் (Booz Allen Hamilton) மூலமாக என்.எஸ்.ஏ. அலுவலகத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். என்.எஸ்.ஏ. ஊழியர்கள் போல் இல்லாமல் முப்பது வயதாகியும் முக்கிய வேலைகளில் இடம் கிடைக்காததால் மனம் வெந்து வெளியேறியவர். கணினியில் நிரலி எழுதுபவர் எவருமே தங்களுடைய சுயவிவரங்களை ஊட்டமாகவே சொல்லித் திரிவோம். நாலு நாள் ப்ராஜெக்ட் என்றால் நாற்பது மாதம். எட்டு வரி பி.எச்.பி. வினைச்சரம் என்றால் எட்டாயிரம் அடி சி++ ஆக்கம் என்போம். அது போல் ஸ்னேடென் தகவல்கள் இன்னும் மாயமானாகவே உறைந்திருக்கிறது.

புதிய ஊழியர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் நிறுவனத்தின் கழிப்பறை எங்கே இருக்கும், எங்கே காபி கிடைக்கும், எப்பொழுது மதிய உணவிற்கு செல்லலாம் போன்ற தகவல்களை பவர்பாயிண்ட் கோப்பாக போட்டு சொல்லித் தருவார்கள். அந்த மாதிரி என்.எஸ்.ஏ. இயக்கும் ப்ரிஸம் (PRISM) குறித்து அறிமுகம் செய்யும் கோப்பை ஸ்னோடென் வெளியிட்டிருக்கிறார். அது தவிர நேம் டிராப்பிங் போல் ஒரு சில அதிரடி விஷயங்களையும் இணைய நிறுவனங்களையும் கார்டியன் நாளிதழ் மூலமாக சொல்லியிருக்கிறார். இதனால் வீரப்பனை பேட்டி எடுத்த நக்கீரன் கோபால் போல் பேரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்ட ஆட்டக்காரர் போல் புகழும் கிடைக்கப் பெற்றிருக்கிறார்.

இந்த ப்ரிஸம் என்றால் என்ன?

இணையத்தில் கிடைக்கும் அத்தனை தகவலையும் தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்வதற்கு பெயர் ப்ரிஸம். ஃபேஸ்புக்கில் போடும் நிலைத்தகவல்களை நீங்கள் நீக்கிவிட்டாலும், ஃபேஸ்புக்கே நீங்கிவிட்டாலும் கூட ப்ரிசம் தனக்கென்று ஒரு பிரதி வைத்திருக்கும். மைரோசாஃப்ட் ஹாட்மெயில் எல்லாம் அழித்துவிட்டாலும் கூட ப்ரிஸம் தங்களுக்கென்று ஒரு ஜெராக்ஸ் போட்டு பாதுகாத்திருக்கும். வைய விரிவு வலையில் ஒவ்வொருவரும் பரிமாறும் ஒவ்வொரு தளத்தில் இருந்தும் விஷயங்களை அமெரிக்கா எடுத்து பதுக்கி வைத்திருப்பதற்கு பெயர் ப்ரிஸம்.

இதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?

ஒற்றரை அனுப்பி வைத்துவிட்டு, அதற்குப் பிறகு அந்த ஒற்றனையே வேவு பார்க்க இன்னொரு ஒற்றனை அனுப்பி, அவனையும் நம்பாமல் இராஜாவே பின் தொடர்ந்து சென்று உளவு பார்ப்பது அக்பர் காலத்து முறை. தொலைபேசியை ஒட்டுக் கேட்பது இந்திரா காந்தி காலத்து ஒற்றர் முறை. இன்றோ போராளிகளும் ஸ்கைப் மூலம் அரட்டை அடிக்கிறார்கள். தீவிரவாதிகளும் மின்னஞ்சல் மூலம் திட்டங்களைப் பரிமாறுகிறார்கள். இவர்களின் நண்பர்கள் யார், எப்படி இவர்களின் உண்மையான அடையாளத்தைக் காணலாம் போன்றவற்றுக்கு ட்விட்டர், கூகிள் கை கொடுக்கிறார்கள். எத்தனை முகமூடிகள் போட்டாலும், பெயரில்லாதவர்களாக அனாமதேயங்களாக உலவினாலும், எங்காவது இணையத்தை தொட்டிருப்பார். அதில் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அறியவும் குண்டுவெடிப்புகளைத் தடுக்கவும் கணினியே கற்று கொள்வதற்கு ப்ரிசம் தகவல்களைத் தந்து உதவுகிறது. (தொடர்புள்ள பதிவு: இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை – http://solvanam.com/?p=28216)

ஏன் என்னுடைய தகவல்களையும் எட்டி பார்க்கிறார்கள்?

ஒவ்வொருவராகப் போய், ‘நீங்கள் தீவிரவாதியா? உங்களுக்கு பயங்கரவாதியோடு தொடர்பு இருந்ததுண்டா?’ என்று அன்னியோன்யமாக வம்பு பேச முடியாது. எனவே, எல்லோருடைய விஷயங்களையும் எடு. அவற்றில் எது புகையுதோ அதை மட்டும் விலாவாரியாக ஆராய்வாய். தேவையில்லாததை குப்பையில் போட வேண்டாம். என்றாவது, எதற்காகவாவது, எப்படியாவது உபயோகப்படலாம். இப்பொழுது வன்பொறி வட்டுக்கள் மிக சல்லிசாகக் கிடைக்கிறது. அதுவும் இல்லாவிட்டால், மேகத்தில் சேமித்து வைத்துக் கொள். வேண்டுமென்னும்போது சஞ்சீவி மலையாக இறக்கிக் கொள்ளலாம்.

அப்படியானால் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் எல்லோருமே கூட்டுக் களவாணிகளா?

இந்த உளவு வேலை எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்த சட்டசபையும் சரி… உள்விஷயமறிந்த வல்லுநர்களும் சரி… வலைவணிக நிறுவனங்களுக்கு இந்த உளவில் நேரடித் தொடர்பு இல்லை என்கிறார்கள். கம்பியில் போகும் தகவலை அமெரிக்கா உருவிக் கொள்கிறது. கூகிள் போன்ற பெருநிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டுப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ‘முடியாது’ என்று விட்டார்கள். கூகிளுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. அவர்களிடம் அறிவு சொத்தைப் பகிர்வதில் பிரச்சினையில்லை. ஆனால், அது ‘அனானிமஸ்’ போன்ற கொந்தர்களாலும் ஆப்பிள் போன்ற போட்டி நிறுவனங்களாலும் திருடு போகும் என்பது மைக்ரோசாஃப்ட்களின் அத்தியாவசியமான கவலை. மேலும், சீராக ஒழுங்குமுறை செய்யப்பட்ட தரவுகளை ஒவ்வொரு வலைஞருக்கும் எல்லா நிறுவனங்களிடமிருந்தும் வாங்கிக் கொண்டால் இந்த அண்ட சராசரமும் சில்லு வைத்தாலும் தாங்காது. எனவே, தங்களுக்கு மிக மிக முக்கியமான நபராகப் படுபவர்களின் தரவுகளை மட்டுமே கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள்.

குழம்புதே! சற்று முன் எல்லாத் தகவலையும் சுருட்டுவதாக சொன்னீரே?

இளையராஜாவின் பாட்டில் மானே, மயிலே இருப்பது போல் தியாகராஜரின் பாடலில் குருகுக வருவது போல், பயங்கரவாதிகளின் உரையாடலில் முத்திரை அம்சம் இருக்கும். அதை கவனிக்கிறார்கள். ”வானம் நீலமா இருக்கு இல்ல…” என்பது போன்ற சங்கேத மொழிகளினால் இதை கூட நிவர்த்தி செய்து விடுவார்கள் புத்திசாலி காரியஸ்தர்கள். ஆனால், அதே புத்திசாலி காரியஸ்தர்கள், எத்தனை பேருடன் அதே பிரயோகத்தை உடனுக்குடன் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதை ஆராய்கிறார்கள். சாதாரணமாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் உரையாடிக் கொண்டிருக்கிறார்களா என்னும் சரித்திரத்தை ஆராய்கிறார்கள். என்ன சொன்னோம் என்பதை விட, எப்பொழுது சொன்னோம் என்பதையும், எப்படி சொன்னோம் என்பதையும், எவ்வளவு பேரிடம் சொன்னோம், எங்கிருந்து சொல்கிறோம் என்பதையும் சேமிக்கிறார்கள். நேற்று வரை தகவலை சும்மா அனுப்பிக் கொண்டிருந்தவர் திடீரென்று தகவலுக்கு கடவு முத்திரை இட்டு மறைச்சொல்லிட்டு அனுப்பித்தால் விழித்துக்கொள்கிறார்கள்.

அப்படியானால் இனி யாதொரு பயமும் கிடையாதா? தீவிரவாதத் தாக்குதல் என்னும் பேச்சுக்கே இடமில்லையா?

அப்படி அறுதியிட்டு நம்பிக்கை கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே அறியலாம். அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேவு பார்க்க இன்னும் ஏக கெடுபிடி இருக்கிறது. நீதிமன்றத்தை அணுக வேண்டும். அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லி வைக்க வேண்டும். நீதிபதியின் ஒப்புதல் வேண்டும். அதற்குப் பிறகு அவுட்லுக், யாஹூ போன்ற நிறுவனங்களிடம் இருந்து இரகசியத் தரவுகளை வாங்க வேண்டும். வந்த தரவுக்குறிப்புகளை அலச வேண்டும். இவை எல்லாம் செய்த பின் உள்ளூர் காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கு புரியவைத்து, பின்னணியை விளக்கி, காரியத்தை தடுத்தாட்கொள்ள வேண்டும்.

தகவலை எல்லாம் தானே எடுத்துக் கொண்டபின், எதற்கு ஜிமெயில் துணை வேண்டும்?

உங்களின் கடவுச் சொல் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாஹுவிடம் அந்தக் கடவுச்சொல் 84bd1c27b26f7be85b2742817bb8d43b என்பது போல் விநோதமாக உறைந்திருக்கும். அந்த மந்திரச் சொல்லும், மந்திரச் சொல்லை மறைத்து வைத்திருக்கும் வினைச்சரத்தின் மூலமும் யாஹூ-வோ, ஜிமெயில்.காம்-ஓ தெரிவிக்காவிட்டால், உங்கள் அடையாளத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளே நுழைய முடியாது. உங்கள் அடையாளத்தில் நீங்களாக நுழைந்து, நீங்கள் சொன்னது போலவே, உங்கள் தோழர்களிடம் பொய்த்தகவலை அனுப்பி, நிஜ விஷயங்களைக் கறக்க மைரோசாஃப்ட் ஹாட்மெயில், ஸ்கைப் உதவ வேண்டும்.

ஸ்னோடென் சொல்லித்தான் இதெல்லாம் நமக்குத் தெரியுமா?

நியூ யார்க் நகரின் மையப்பகுதி. நல்ல கோடை காலம். 1920ஆம் ஆண்டு. ஜூலை முதலாம் தேதி. முப்பதுகளை இப்பொழுதுதான் தொட்டிருந்தாலும் வழுக்கையாகும் ஹெர்பெர்ட் யார்ட்லீ மான்ஹட்டனுக்கு குடிபுகுகிறார். பழுவேட்டையரின் சதியாலோசனை நடந்தது போன்ற நான்கு மாடி பங்களா வீடு. ‘கறுப்பு மண்டபம்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஒவ்வொரு தந்தியையும் படிக்க வேண்டும். சட்டபூர்வமாக முடியாது. தந்தியை அனுப்பிய வெஸ்டர்ன் யூனியன் திட்டத்திற்கு தலையாட்டுகிறது. ஜனாதிபது உட்ரோ வில்சனும் ஆசி நல்குகிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் இது மறைமுகமாக, ஆனால் அதிகாரபூர்வமாக தொடர்ந்திருக்கிறது. ஆள் மாறுகிறார்கள். நிறுவனங்கள் தகவல் தருகின்றன.

ஆனாலும், ஸ்னோடென் தானே இதை வெளிக் கொணர்ந்திருக்கிறார்?

ஏழாண்டுகளுக்கு முன்பே மார்க் க்ளீன் இதையெல்லாம் சொல்லிவிட்டார். ஏடி அண்ட் டி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சாதாரணமாக வேலை பார்த்தவர் வீட்டில் திடீரென்று உளவுத்துறை வந்தது. முக்கியமான வேலைக்குப் பொருத்தமானவர்தானா என்று சோதித்த பின் சேர்த்துக் கொண்டது. இருந்தாலும், மார்க் பொறுக்க மாட்டாமல், அவர் செய்த உளவு வேலைகளின் இரகசியங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டுவிட்டார். ஒரு கம்பி நிறுவனத்திற்கு… அதே கம்பியின் ஜோடி அரசாங்கத்திற்கு. ஏடி அண்ட் டி எதையெல்லாம் கம்பி வழி கொண்டு செல்கிறதோ அதெல்லாம் அரசிற்கும் ஒரு காப்பி. இதற்கான தொழில்நுட்பத்தை செய்தவரே பேட்டி கொடுத்து, ஒளிக்க வேண்டியதை வெளிச்சத்திற்கு எடுத்து வந்துவிட்டார்.

அப்படியானால், ஸ்னோடென் என்னதான் செய்தார்?

மார்க் முன்மொழிந்ததை வழிமொழிந்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் வெளிப்படையான செயல்பாட்டை கேள்விக்குறியாக்கி இருக்கிறார். ஊரெங்கும் மூடுமந்திரப் பேச்சுக்களை உரையாடலில் தோற்றுவித்திருக்கிறார். உயிருக்கு உத்தரவாதமில்லாத துரோக செய்கையை தைரியமாக முன்னெடுத்திருக்கிறார். இன்னும் அவரிடம் எந்த பிணையத்தில் எந்தளவு கசிவு இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் இருக்கிறதோ என்ன அச்சத்தை விதைத்திருக்கிறார். Tailored Access Operations (TAO) எனப்படும் வலையமைப்பின் முகவரிகளை வெளியிட்டால் இரான், சீனா, சிரியா போன்ற நாடுகள் விழித்துக் கொண்டு தங்கள் இணையத்தின் ஓட்டைகளை அடைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமெரிக்காவின் உளவாளிதான் ஸ்னொடெனோ என்று ரஷியாவையே சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கும் திறமை வைத்திருக்கிறார்.

ஸ்னோடெனுக்கு நன்றி!!! ஏன்?

’இனிமேல் யாருமே என்னைப் படிக்க மாட்டேங்கிறாங்க’ என்று வருத்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் மர்மமாக கிறுக்குவதைக் கூட நிச்சயம் அமெரிக்காவும் சீனாவும் திருட்டுவாசல் வழியாக வாசித்துக் கொண்டேதான் இருக்கிறது.

வாழ்க ஸ்னோடென்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.