Daily Archives: ஓகஸ்ட் 25, 2009

Tamilmanam

‘தமிழ்மணம்’ காசி உரையாடல்

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?

எதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்

  • (ஒருங்குறி எழுத்துக்களை அடிப்பது,
  • தூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,
  • ஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)

போன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.

கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

கணினிக் கிடைக்கப் பெற்றவர்களை

  1. அயலகத் தமிழர்,
  2. தமிழ்நாட்டினர்

என்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.

தமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.

இவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.

  1. ஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.
  2. நடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.
  3. இளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

Digital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

நான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)

மின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)

பள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.

நல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.

தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு? இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு? உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? என்றெல்லாம் புள்ளிவிவரம் அடுக்கியிருப்பார்.

அவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.

காப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்?

பேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

அ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.

ஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.

இ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.

புதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:

அ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.

ஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.

இ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.

கட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:

1. பதிவர் டிப்ஸ்

2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

ட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்!

ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.

ஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…

1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.

2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.

3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.

4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.

5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.

இளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்!’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க!