தொடர்புள்ள பதிவு:
Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs
அ.அமலோர்ப்பவமேரி, ஆத்தூர்.
உங்கள் இலக்கியப் பயணத்தில் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
‘தினமணி கதிரி’ல் சுதாங்கன் ஆசிரியராயிருந்தபோது, ‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்ற ஒரு தொடரை இலக்கிய ஆர்வலர் சிவா எழுதி வந்தார். தலைப்பைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் மூத்த முன்னோடிக் கவிஞர் ஒருவர் தீப்பிழம்பாய்ச் சினந்தெழுந்தார். ஒரு சிறு பத்திரிகையில் எதிர்ப்பறிக்கையும் எழுதி வெளியிட்டார். ‘‘யாரோடு யாரை ஒப்பிடுவது? ‘வள்ளுவர் கடல்’; வைரமுத்து குட்டை’’ என்று முடித்திருந்தார்.
அறிக்கை வந்த அடுத்த வாரம் அதே கவிஞரின் தலைமையில் ஒரு நூல் வெளியீட்டு விழா. நானும் அதில் சொற்பொழிவாளன். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மன்றம் முழுக்க நிலவியது ஒரு மயான அமைதி. நான் எழுந்தேன். ஒலிபெருக்கி முன்னால் முப்பது நொடிகள் மௌனம் காத்தேன்; பிறகு பேசினேன்.
‘‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்று ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அவரவர் உரிமை. அறிக்கை வெளியிடுவது அவரவர் திறமை. ஆனால் அறிக்கையில் பொய் சொல்லக்கூடாது. அறிக்கை வெளியிட்டவர் ‘வைரமுத்து குட்டை’ என்று முடித்திருக்கிறார். நீங்களே சொல்லுங்கள். நானா குட்டை? இங்கிருக்கும் கவிஞர்களில் நான்தானே உயரம்?’’ என்றேன். இறுக்கமாயிருந்த அரங்கம் இன்னிசையாய் சிரித்தது.
சில எதிர்ப்புகள் திருத்திக்கொள்ள; பல எதிர்ப்புகள் சிரித்துக்கொள்ள.
க.சோமசுந்தரம், குடியாத்தம்.
‘‘எச்சத்தால் காணப்படும்’’ என்கிறாரே வள்ளுவர்! அது என்ன எச்சம்?
நீ இல்லாத இடத்திலும், காலத்திலும் உன் பெருமையோ, சிறுமையோ பேசும் நுண்பொருளோ பருப்பொருளோ உன் எச்சம்.
ஜான். புஷ்பராஜ், சீர்காழி.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நீங்கள் கூர்ந்து கவனிக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?
சன் டி.வி. _ சென்றவார உலகம்
ஜெயா டி.வி. _ தேன் கிண்ணம் (கறுப்பு வெள்ளைப் படப் பாடல்கள்)
விஜய் டி.வி. _ நீயா? நானா?
ராஜ் டி.வி. _ செய்திகள்
மக்கள் தொலைக்காட்சி _ நீதியின் குரல்.
என். உஷாநந்தினி, மண்ணச்சநல்லூர்.
கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல்களைச் சொன்னீர்களே… கதாநாயகிகளுக்கு?
பத்மினி _ பூவே பூச்சூட வா (பூவே பூச்சூட வா),
சரோஜாதேவி _ சின்னக்கண்ணா (தாய்மேல் ஆணை),
லட்சுமி _ கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்),
சுஜதா _ தாலாட்டு மாறிப்போனதே (உன்னை நான் சந்தித்தேன்),
ஸ்ரீப்ரியா _ தேர்கொண்டு சென்றவன் (எனக்குள் ஒருவன்),
ராதிகா _ தென்கிழக்குச் சீமையில (கிழக்குச் சீமையிலே),
சரிதா _ கண்ணான பூ மகனே (தண்ணீர் தண்ணீர்),
அம்பிகா _ பாடவா உன் பாடலை (நான் பாடும் பாடல்),
ராதா _ ராசாவே ஒன்ன நம்பி (முதல் மரியாதை),
சுஹாசினி _ நானொரு சிந்து (சிந்துபைரவி),
பூர்ணிமா _ சாலையோரம் சோலை ஒன்று (பயணங்கள் முடிவதில்லை),
ரேவதி _ வான்மேகம் (புன்னகை மன்னன்),
பானுப்ரியா _ நாடோடி மன்னர்களே (வானமே எல்லை),
ஊர்வசி _ சிறிய பறவை (அந்த ஒரு நிமிடம்),
குஷ்பூ கொண்டையில் தாழம்பூ (அண்ணாமலை),
ரோஜா _ ஆசை கேப்பக்களிக்கு ஆசை (தமிழ்ச்செல்வன்),
ஷோபனா _ முத்தம் போதாதே (எனக்குள் ஒருவன்),
நதியா _ அன்புள்ள அப்பா (அன்புள்ள அப்பா),
அமலா _ புத்தம் புது ஓலைவரும் (வேதம் புதிது),
மதுபாலா _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா),
நக்மா _ தங்கமகன் இன்று (பாட்ஷா),
மனிஷாகொய்ராலா _ கண்ணாளனே (பம்பாய்),
ஐஸ்வர்யாராய் _ நறுமுகையே (இருவர்),
சிம்ரன் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாதமனமும் துள்ளும்),
ஜோதிகா _ திருமண மலர்கள் (பூவெல்லாம் உன் வாசம்),
ஷாலினி _ சிநேகிதனே (அலைபாயுதே),
யுக்தா முகி _ யுக்தா முகி (பூவெல்லாம் உன் வாசம்),
ரீமாசென் _ ஆரிய உதடுகள் உன்னது (செல்லமே),
த்ரிஷா _ நீ யாரோ? நான் யாரோ? (ஆய்த எழுத்து),
மீனா _ தில்லானா தில்லானா (முத்து),
சௌந்தர்யா _ நகுமோ (அருணாசலம்),
சுஷ்மிதாசென் _ சோனியா (ரட்சகன்),
கஜோல் _ பூப் பூக்கும் ஓசை (மின்சாரக் கனவு),
மீனாட்சி சேஷாத்ரி _ குளிச்சாக் குத்தாலம் (டூயட்),
ஷில்பாஷெட்டி _ தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை (மிஸ்டர் ரோமியோ),
சிநேகா _ காடுதிறந்தே கிடக்கின்றது (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்),
மீராஜாஸ்மின் _ சண்டக்கோழி (ஆய்தஎழுத்து),
அசின் _ மனமே மனமே (உள்ளம் கேட்குமே).
சட்டென்று நினைவுக்கு வந்தது இவ்வளவுதான்; விட்டுபோனவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..
கே: வாழ்க்கை என்பது?
ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.
கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்?
ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”
கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?
ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்;
காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்;
அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்;
நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்;
கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்;
மூத்த சவரத் தொழிலாளி;
விதவைகளின் மாமியார் மற்றும்
விலைமகளின் தாயார்.
பிங்குபாக்: Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs | Snap Judgment