Jaya joins issue with Stalin on desalination project
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எனது அரசு நிறைவேற்ற முடியாததற்கு முதல்வர் கருணாநிதியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாவும் தான் காரணம் என்றும் இந்த விஷயத்தில் எனது அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் எனது அரசு ஏற்கனவே செய்து முடித்து விட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜா அந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டியதுதான் பாக்கி. அதைச் செய்ய அவருக்கு கருணாநிதி உத்தரவிட வேண்டும்.
பழத்தை உரித்துக் கொடுத்து விட்டேன். எடுத்து சாப்பிட வேண்டியதுதான் பாக்கி என்று ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து அறிக்கை விட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், பழத்தை உரித்து வைத்து விட்டு அதை 3 ஆண்டுகளாக ஏன் சாப்பிடவில்லை ஜெயலலிதா என்று கிண்டலடித்து பதில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் அறிக்கை போர்:
ஸ்டாலினின் பதிலுக்கு தற்போது ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க உதவும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 1,000 கோடி நிதியுதவி அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். ஆனால் சொன்னபடி தமிழக அரசுக்கு நிதி வந்து சேரவில்லை.
காத்திருந்து காத்திருந்து ஏமாந்த எனது தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின் உதவி இல்லாமலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அந்த முடிவின்படி, திட்டத்தை வடிவமைத்து, நிர்மாணித்து, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் செயல்படுத்த சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டது.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் டெண்டர்கள் வந்து சேர வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. 26 ஒப்பந்தகாரர்கள் டெண்டர் விண்ணப்பம் வாங்கியிருந்தும் 2 பேர் மட்டுமே டெண்டரை, கடைசி நாளன்று சமர்ப்பித்தனர்.
ஆனால் இரு ஒப்பந்தகாரர்களுமே உரிய டேவணித்தொகையை செலுத்தத் தவறியதால் 2 டெண்டர்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர் 2003ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியை கடைசி நாளாக கொண்டு 2வது முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டது.
இப்போது 3 நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. இதில் உரிய டேவணித் தொகையை செலுத்திய ஒரு நிறுவனத்தின் டெண்டர் மட்டும் பிரிக்கப்பட்டது. ஆனால், டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்ட இரு நிறுவனங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் அரசுக்கு சாதகமாக இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது.
இருப்பினும் பிரிக்கப்பட்ட டெண்டருக்குரிய நிறுவனத்தினர் சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாத காரணத்தால் அந்த டெண்டரை அரசு நிராகரித்து விட்டது.
பின்னர் 3வது முறையாக 2005ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியை கடைசி நாளாகக் கொண்டு டெண்டர் விடப்பட்டது. இப்போது 7 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் குøந்த தொகைக்கு டெண்டர் கேட்ட ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
டெண்டர்கள் பணிகள் முடிந்த நிலையில், 2005ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை நான் தொடங்கி வைத்தேன். தினசரி 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாதான். திட்டத்திற்கு அனுமதி கொடுப்பதை விட்டு விட்டு தேவையில்லாத பல கேள்விகள், சந்தேகங்களைக் கேட்டு திட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தார் ராஜா.
திமுக தலைவர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் இத்திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போட்டார் ராஜா. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 1000 கோடி ரூபாய் உதவி தருகிறது மத்திய அரசு என்று சொல்லிச் சொல்லி வந்தாரே தவிர ஒரு பைசா கூட தமிழக அரசுக்கு இன்று வரை வரவில்லை என்பதே உண்மை.
இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்களாகவே அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தோம். எங்களுக்காக ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்லது செய் வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தோம். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியும், அவரது கட்சி அமைச்சர் ராஜாவும் சேர்ந்து இத்திட்டத்தை தடுத்து நிறுத்தி விட்டனர்.
உண்மை இப்படி இருக்க நான் வேண்டும் என்றேதான் இத்திட்டத்தை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தினேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெ. பச்சை பொய்ஸ்டாலின்:
இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது ஏன் என ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் சரி, ஆட்சியிலிருந்து இறங்கி விட்ட நிலையிலும் சரி, பச்சை பொய்களை அறிக்கைகளாக வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றி திசை திருப்புவதையே தனது வாடிக்கையாகக் கடைபிடித்து வருகிறார்.
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பரிசீலனை செய்வதற்கு 2003 முதல் 2005 வரை ஏற்பட்ட 3 ஆண்டு கால தாமதத்துக்கு தற்போது ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு பிரச்சனை சென்றதால் தான் தாமதம் என்று சொல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஏனென்றால் அந்தப் பிரச்சனை நீதிமன்றத்துக்குச் செல்லக் காரணமே ஜெயலலிதா தான்.
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி ஜெயலலிதா கையெழுத்திட்டது நன்னீர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் தான். ஆனால் அனுபவம் மிக்க ஜெயலலிதா வெறும் ஒப்பந்தம் கையெழுத்தானயே திட்டச் செயலாக்க நடவடிக்கை என்று சொல்லிக் கொள்வதை நிர்வாக நடைமுறை தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இது வரை எந்த அரசும் செய்ய முன்வராத சலுகைகளை ஜவிஆர்சிஎல் என்ற ஒப்பந்த நிறுவனத்துக்கு ஜெயலலிதா செய்திருப்பது பற்றி எனது அறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிப்பதன் மர்மம் என்ன?
இந்த பின்னணியை விளக்கி விட்டு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைப் பற்றி மேலும் பேசுவது அனுபவம் வாய்ந்தவருக்கு அழகாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.